0,00 INR

No products in the cart.

5ஜி அலைக்கற்றைகளும் அமெரிக்க விமானங்களும்

– சுஜாதா தேசிகன்                             

 

சென்ற வாரம் நடிகர்களின் விவாகரத்து செய்தியால் ஓரத்தில் ஒளிந்துகொண்ட ‘அமெரிக்கா செல்லும் விமானங்களை 5ஜி காரணமாக ரத்து’ என்ற பெட்டி செய்தியை நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள்.

5ஜிக்கும் விமானத்துக்கும் என்ன தொடர்பு ? விமானங்களில் உயரம் காட்டும் கருவி (அல்டிமீட்டர்) என்ற ஒரு வஸ்து இருக்கிறது. தரையிலிருந்து விமானம் எவ்வளவு தூரத்தில் பறக்கிறது என்று சொல்லும். இதன் உதவியால் விமானி  போகிக்குப் புகை போட்டாலும் சடன் பிரேக் போடாமல் சரியான வேகத்தில் தரையிறக்குவார்.

இந்த உயரம் காட்டும் கருவிக்குப் பயன்படும் அலைவரிசையும், அமெரிக்காவில் தொலைப்பேசி நிறுவனங்களின் 5ஜி அலைவரிசைக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல், பக்கத்துப் பக்கத்தில் இருப்பதால் விமானத் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தால் விமானச் சேவை ரத்தானது. விமான, தொலைப்பேசி நிறுவனங்கள் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் 5ஜியால் நமக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது என்று அடுத்த பத்து வரிகளில் பார்க்கலாம்.

இன்னும் ஒரு வருடத்தில், இந்தக் கிரகத்தில் உள்ள ஒரு நபருக்கு சராசரியாகத் தன்னிடம் இருக்கும் கணினி, மொபைல் இல்லாமல் ஏழு முதல் எட்டுச் சாதனங்களுக்கு நெட்வெர்க் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான வேகமும், நெட்வெர்க் வசதியை 5ஜி கொடுக்கப் போகிறது.

விரைவில்  360 டிகிரி லைவ் வீடியோ போட்டு எல்லோரும் நம்மைப் படுத்த போகிறார்கள். அடுத்த சிக்னலில் எத்தனை நொடியில் பச்சை கிடைக்கும் என்று வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் போது நமக்கு தெரியப்படுத்தி, 500 அடி தூரத்தில் உங்கள் நண்பர் உங்களுக்கு பின் 60 கி.மீ. வேகத்தில் வருகிறார் என்ற கொசுறு தகவலையும் கூறும். அது மட்டும் இல்லை, காரை நீங்கள் ஓட்டவே வேண்டாம், தானே இயங்குகிற வாகனங்கள் வந்துவிடும். 2050ல் மூளையை அப்படியே பதிவேற்றம் செய்து ’அழியாத டிஜிட்டல் ஆத்மாக்களாக’ பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று யோசிக்க வைக்கும்.

இதையெல்லாம்  வியக்கும் சமயம், இந்த 5ஜியினால் நம் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று உலக அளவில் பட்டிமன்றம் நடக்கிறது.

செல்பேசிகள் ஒரு சிறிய அளவு மின்காந்த கதிர்வீச்சை ரேடியோ அலைகள் வழியாகச் சிக்னல்களாக வெளியிடுகிறது. ’நெட்வர்க் வீக்’ அல்லது ’4ஜி’ ஆன் செய்திருந்தால்  அதிக கதிர் வீச்சு இருக்கும். அதனால் தான் உங்கள் கைப்பேசி சூடாகிறது.

பொதுவாக நாம் செல்பேசிகளில்  காதுக்குப் பக்கம் வைத்துப் பேசும்போது துரதிருஷ்டவசமாக நம் மூளை அதன் பக்கம் இருக்கிறது. நம் தலையில் இருக்கும் திசுவுடன்(tissue) நேரடியாகத் தொடர்பு கொள்கிறது. நம் திசுக்கள் கதிர்வீச்சை உறிஞ்சும் சக்தியைக் கொண்டது. கதிர்வீச்சினால் உறிஞ்சும் சக்தியை மில்லிரெம்ஸில்(millirems) என்று அளக்கிறார்கள்.

செல்பேசி வாங்கிய அட்டைப் பெட்டியில் SAR(Specific absorption rate) என்று கடுகு அளவில் கூடவே  ஒன்று ஒரு நம்பர் கொடுத்திருப்பார்கள்.  கதிர்வீச்சு வெளிப்படும்போது நம் திசுக்கள் எவ்வளவு உறிஞ்சுகிறது என்ற அளவீடு அது. அரசாங்கம் 1.6 கீழே இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது.

அலைப்பேசி கதிர்வீச்சால்  நமக்கு பாதிப்பு இல்லை. ஆனால் தொடர்ந்து உபயோகித்தால் ? ’அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா?’ என்ற சுஜாதா வசனம் போலத் தினமும் 20 நிமிடம் கைப்பேசியில் பத்து வருடம் பேசினால் ? நிச்சயம் பாதிப்பு உண்டு.

இது எல்லாம் சும்மா கப்சா என்று சொல்லுபவர்கள், மார்பிள், கிரனைட்டில் கூடக் கதிர் வீச்சு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?

சலவைக்கல் கருங்கல், ஆகியவற்றில் கதிரியக்கமுள்ள மூலப் பொருட்கள் (Radioactive elements) வெவ்வேறு விகிதத்தில் இருக்கின்றன. உடனே ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் யுரேனியம் போல நினைக்காதீர்கள். ஒரு கிலோ கருங்கல்லில் சுமார் அறுபதிலிருந்து எழுபது அணுக்கள் யுரோனியமும் பத்து அணுக்கள் தொரேனியமும் இருக்கின்றன. அதனால் அதில் கதிர்வீச்சு விநாடிக்கு விநாடி இருக்கிறது. காற்று, தண்ணீர், ஏன் உங்கள் மனைவியிடம் கூடக்  கதிர்வீச்சு இருக்கிறது!

சண்டைபோடாமல், எட்டு மணி நேரம் மனைவி பக்கத்தில் படுத்துத் தூங்கினால் 2 mrems பாதிப்பு உங்களுக்கு உத்திரவாதம்.  நம் உடலில் இருக்கும் பொட்டாசியத்தால் இது ஏற்படுகிறது. அணுமின் நிலையத்திலிருந்து ஐம்பது மைல் தூரத்தில் இருப்பவர் 0.009mrems அளவிற்கு கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்படுகிறார்; சொத்தைப் பற்களுக்குப் போடும் மூடி மற்றும் பற்களை வெண்மையாகக் காண்பிக்கும் மருத்துவப் பொருட்களில் யுரேனியம் கலந்திருக்கிறது. நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால் ஒவ்வொரு 1000 மைல்களுக்கு 1 mrem;

CT ஸ்கேன் எடுக்கும்போது  அதன் கத்திவீச்சால் நம் உடலில் சில செல்கள் செத்து மடிகிறது. அந்தச் செத்த செல்களை நம் உடல் ரிப்பேர் செய்துவிடும். ஆனால் ஏதோ காரணத்தால் அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை என்றால் ”அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்பது போல இந்தச் செல்களால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் வருகிறது. ’ஆபத்துக்குப் பாவம் இல்லை’ என்று ஆபத்தான சமயங்களில் CT ஸ்கேன் செய்யலாம். எதற்கும் ஒரு  ’CT ஸ்கேன்’ செய்துவிடுங்கள் என்று மருத்துவர் அடுத்த முறை கூறினால் யோசித்துவிட்டுச் செய்யுங்கள்.

பல விஷயங்களுக்கு அறிவியலில் விடை இல்லை. ஆனால் மின்காந்தக் கதிர்வீச்சு உயிரினங்களைப் பாதிக்கிறது என்பது எல்லா அறிவியல் படித்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயம்.

புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மற்றும் உலக சுகாதார அமைப்பு(WHO) அனைத்து ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுகளையும் (அதில் அலைப்பேசி சிக்னல்கள் ஒரு பகுதியாகும்) “புற்றுநோயை உண்டாக்கலாம்(Possibly carcinogenic to humans) என வகைப்படுத்தியுள்ளது.

“பாதிப்பு இருக்கா” என்று தெரியப் பல காலம் ஆகும். பாதிப்பு இருந்தால் திரைப்படத்தின் ஆரம்பத்தில் ’புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு’ என்பதுடன் ’அதிக 5ஜி உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்’ என்று ஒரு வரி சேர்த்துவிடுவார்கள். அந்த சமயத்தில் நாம் உலகத்திலிருந்து ரிடையர் ஆகியிருப்போம்.

 

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

காதும் காதும் வைத்த மாதிரி

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   பொதுவாக உடல் உபாதைகளை எழுதுவதில்லை. சற்று யோசித்துவிட்டுத் தான் இதை பொதுவில் எழுதுகிறேன். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அடித்து, முகக்கவசம் மாமூலாகி, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ‘ஆன்லைன் வகுப்புகள்’...

சுஜாதாவும் வெளிநாடும்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   ‘வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு’ என்று இந்தியாவைத் துறந்து அமெரிக்கா செல்லும் இளைஞர்களைப் பற்றி சுஜாதா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இன்று சென்னை, பெங்களூர் மாதிரி நகரங்களில் திரியும் அத்தனை...

தலை வாழை

கடைசிப்பக்கம்   சுஜாதா தேசிகன் சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி விஜயத்தின் போது திடீரென்று பூவன் பழம் நினைவு வந்து அதைத் தேடிச் சென்றேன். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. “அடுத்த கடையில் கேட்டுப் பாருங்கள்” என்று...