
திவ்யா ஒருநாள் மனோகரியைத் தேடிக்கொண்டு காலேஜுக்கே வந்தாள். அப்போது அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கவில்லை. வரன் பார்க்கத் தொடங்கியிருந்தாள் மீனாட்சி.
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஆன்ட்டி. எங்கேயாவது வெளியில் போகலாமா?"
துறைத்தலைவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு திவ்யாவுடன் புறப்பட்டாள் மனோகரி.
காரை ஸ்டார்ட் செய்தவாறே "எங்கே போகலாம் திவ்யா? நீயே சொல்லு."
அமர்த்திஸ்ட்டில் குளிர்ச்சியான மரங்கள் சூழ்ந்த இடத்தில் இடம் தேடி உட்கார்ந்தார்கள். காபியும் கேக்கும் ஆர்டர் செய்தாள் திவ்யா.
அவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் மனோகரி. 'என்ன பிரச்னையாக இருக்கும் இவளுக்கு?'
அவளாகவே பேசட்டும் என்று காத்திருந்தாள்.
"எங்க அம்மாவைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"
இந்தக் கேள்வியை மனோகரி எதிர்பார்க்கவில்லை.
"ஏன்? உங்க அம்மாவுக்கு என்ன? நல்ல மனுஷிதான். என்னுடைய சிநேகிதியும் கூட."
"ஆன்ட்டி, நான் ஸீரியஸா கேட்கிறேன். அவங்ககிட்ட எந்த குறையையுமே நீங்க கவனிச்சதில்லையா?"
"எந்த மனுஷங்ககிட்டதான் குறையில்லை திவ்யா? சரி, நீ கேட்கிறதால சொல்றேன். சில குறைகளை கவனிச்சிருக்கேன். ஆனால் அதெல்லாம் எங்க நட்பை பாதிக்கிற விஷயமா பெரிசா எதுவும் இல்லை."
"ஆனா என்னை பாதிக்குது ஆன்ட்டி."
நுரை மகுடம் சூட்டிக்கொண்டு இரண்டு குவளை நிறைய காபி வந்தது. வாசனையே காபியின் தரத்தை தம்பட்டம் அடித்தது. கூடவே ப்ளம் கேக்குகளும்!
"அம்மா என் மேலே ரொம்ப பொஸஸிவ்வா இருக்காங்க ஆன்ட்டி."
"ஆமாம். நானும் கவனிச்சிருக்கேன். நீ அவளுக்கு ஒரே பெண் குழந்தை இல்லையா? அதனால்கூட இருக்கும். நிறைய பேர் அப்படிதான் இருக்காங்க."
"உங்களுக்கும்தான் நவீன் ஒரே பிள்ளை. ஆனால் நீங்க அப்படி இல்லையே?"
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்? சொன்னால் நன்றாகத்தான் இருக்குமா? மனோகரி புன்னகைத்தாள். அது ஒரு சமாளிப்பு புன்னகை.
மனோகரிக்கு இந்தப் பெண் என்ன சொல்லப்போகிறாள் என்பது புரிந்துவிட்டது. இவளும் ஆரம்பத்திலிருந்து பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள்.
"உன் பையனை நீ ரொம்ப கண்டிப்பாக வளர்க்கிறாய் மனோகரி" என்று மீனாட்சியால் இவளைப் பார்த்து முகத்துக்கு நேராக சொல்லமுடிந்தது.
"நீ உன் பெண்ணை ரொம்ப சலுகை கொடுத்து வளர்க்கிறாய் மீனாட்சி" என்று இவளால் அன்றைக்கு சொல்லமுடியவில்லை.
சொல்வதில் பயன் இல்லை என்பதும் தெரியும். மீனாட்சி காதுகொடுத்தும் கேட்கமாட்டாள்.
திவ்யாவுக்கு லேசாக சளி, தும்மல் வந்தால்கூட பதறிப் போவாள் மீனாட்சி.
திவ்யா சாப்பிட அடம்பிடிப்பதையும், மீனாட்சி ஊட்டிவிடுவதையும் பலமுறை கவனித்திருக்கிறாள் மனோகரி. அப்போது திவ்யா ஒன்றும் குழந்தையில்லை. பத்து வயது சிறுமி.
மொட்டைமாடியில் ஃப்ளாட் குழந்தைகள் சேர்ந்து விளையாடுவார்கள். மூன்றாவது மாடிவீட்டுப் பையனை திவ்யா கீழே தள்ளியதில் அவனுக்கு முழங்கையில் காயம் பட்டுவிட்டது. அவனுடைய அம்மா திவ்யாவை கடிந்து கொண்டாள்.
"அதெப்படி அவங்க என் பெண்ணைத் திட்டலாம்?" என்று ஆவேசப்பட்டாள் மீனாட்சி.
"நம்ம திவ்யா செஞ்சதும் தப்பில்லையா?" என்றார் மீனாட்சியின் கணவர்.
"தப்பு என்னதுதான் அம்மா" என்று திவ்யா சொல்லியும்கூட மீனாட்சியின் ஆவேசம் அடங்கவில்லை.
"இருக்கட்டுமே. அவங்க என் கிட்டே சொல்ல வேண்டியதுதானே? உன்னைத் திட்டுறதுக்கு அவங்க யாரு?"
மனோகரிக்குப் புரிந்துவிட்டது. பெண் மீதான பாசம் மட்டும் இல்லை இது. உடமை உணர்வு. தன் பெண் மீது எல்லா உரிமையும் தனக்கு தான்! தனக்கு மட்டுமே! கண்டிக்கும் உரிமை உட்பட!
அம்மா பார்க்காத சமயம் மூன்றாவது மாடிக்குப்போய் திவ்யா ஸாரி சொல்லிவிட்டு வந்ததையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் மனோகரி.
மீனாட்சி எப்படி இருந்தால் என்ன? சின்னப் பெண்ணாக இருந்தாலும் திவ்யாவுக்குள் ஒரு நியாய உணர்வு இருக்கிறது. அதுபோதும் என்று நிம்மதியாயிற்று.
திவ்யாவின் கல்யாணப் பேச்சு தொடங்கியதிலிருந்தே மீனாட்சிக்குள் மெல்லிய பதற்றம் உருவாகிவிட்டிருந்தது.
"அதென்ன மனோகரி, பையனைப் பெத்தவங்க கொம்பு முளைச்சது போல நடந்துக்கறாங்க? என்னென்னவோ கண்டிஷன் போடறாங்க? இதுவரைக்கும் ஆறு வரன்கள் வந்தது. ஒண்ணுகூட சரியில்லை" என்று புலம்பினாள்.
"ஆமாம், நீ மட்டும் கண்டிஷன் போடலையா? பையன் இதே ஊரில் நிரந்தரமாக இருக்கணும். அவனுக்கு அக்கா, தங்கையே இருக்கக்கூடாது. அம்மா அப்பா இல்லாவிட்டால் இன்னும் கூட நல்லது" என்று பட்டியலிட்ட கணவரை முறைத்துப் பார்த்து கண்களால் அடக்கினாள் மீனாட்சி.
மனோகரிக்கு மீனாட்சியின் எண்ணம் ஒருவாறாகப் புரிந்தது. கல்யாணம் என்ற பெயரில் திவ்யாவைப் பிரியத் தயாராக இல்லை மீனாட்சி. பெண் கேட்டு வருபவர்களை ஒருவித எதிர்ப்புடன் பார்க்கிறாள். எடை போடுகிறாள். பிறகு நிராகரிக்கிறாள்.
கணவரும் மகளும் செய்வதறியாமல் இருக்கிறார்கள்.
"திவ்யாவைத் தனியாக அழைத்துப் பேசவேண்டும்" என்று நினைத்திருந்தாள் மனோகரி. இதோ இப்போது திவ்யாவே இவளை தேடிக்கொண்டு வந்திருக்கிறாள்.
"நானே உன்கிட்டே ஒரு விஷயம் பேசணும்னு இருந்தேன் திவ்யா."
"என்ன விஷயம் ஆன்ட்டி?"
"உன் கல்யாண ஏற்பாட்டை உங்க அம்மாகிட்டே விடறது சரியில்லைன்னு தோணுது திவ்யா. முடிவு எடுக்கிறதுக்கான தெளிவு இப்போ அவளுக்கு இல்லை."
"எனக்கும் அப்படிதான் தோணுது ஆன்ட்டி. நானும் அதைப்பத்தி பேசத்தான் வந்திருக்கேன்."
"ஏற்கெனவே உன் விஷயத்துல அவ பொஸஸிவ். இப்ப மெனோபாஸ் பிரச்னை வேறு அவளுக்கு இருக்கு. சிடுசிடுன்னு இருக்கா. இன்ஸெக்யூரா இருக்கா. இந்த மனநிலையில் அவ எடுக்கற முடிவு சரியா இருக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு."
"நீங்க சரியாதான் சொல்றீங்க ஆன்ட்டி. திவ்யாவின் முகத்தில் மெல்லிய கலவரம்."
"தப்பா நினைக்கலேன்னா ஒரு விஷயம் கேட்கலாமா திவ்யா? ஏன் நீயே யாரையாவது தேர்வு செய்யக்கூடாது?"
சட்டென்று தலைகுனிந்தாள் திவ்யா. கண்கள் தாழ்ந்து குறுகுறுவென்று அலைந்தது. "அது வந்து … ஆன்ட்டி …" வார்த்தைகள் தடுமாறியது.
"சரத்னு ஒருத்தர் என்னை விரும்பறாரு. நான்தான் பதில் சொல்லாம தட்டிக் கழிச்சுக்கிட்டு இருக்கேன்."
"ஏன்? உனக்கு அவரைப் பிடிக்கலையா?"
"பிடிக்கலைன்னு சொல்லமுடியாது. ஆனா அம்மா ஒருநாளும் ஒத்துக்க மாட்டாங்க. அதனாலதான் தயக்கமா இருக்கு."
சொல்லும்போதே சரத்தை அவள் விரும்புகிறாள் என்பது மனோகரிக்குப் புரிந்து போயிற்று. திவ்யாவின் கன்னங்கள் சிவந்து, உதடுகள் மலர்ந்து அவளையறியாமல் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டன.
"உன் அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு ஏன் நினைக்கிறே?"
"அவருக்கு வேறு ஊருக்கெல்லாம் மாற்றலாக சான்ஸ் இருக்கு."
திவ்யாவின் தோளில் மென்மையாகத் தட்டிக் கொடுத்தாள் மனோகரி. முகம் முழுக்க பூரிப்புடன் அவளை ஒரு கணம் பார்த்தாள்.
"வாழ்க்கையில் எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். ஒருத்தரோட மட்டும்தான் வாழ்க்கையைப் பகிர்ந்துக்கலாங்கற எண்ணம் வருது. அது அபூர்வமான ஒரு உணர்வு திவ்யா. அந்த உணர்வு உனக்கு இருந்தா அதுக்கு முன்னாடி இதெல்லாம் அற்ப காரணங்கள்."
ஒரு பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியுடன் மனோகரியை நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.
"அந்த உணர்வு உனக்கு இப்போதான் மெல்ல துளிர்விட்டிருக்குன்னு நினைக்கிறேன். அது வலுவடையும்போது கட்டாயம் உன் அம்மாவை கன்வின்ஸ் பண்ணுவாய். எனக்கு உன்மேல் நம்பிக்கை இருக்கு."
ப்ளம் கேக்கின் கடைசி துண்டு நாவில் கரைந்து இனித்தது.
நான்கு மாதம் கழித்து திவ்யாவுக்கும் சரத்துக்கும் திருமணம் நிச்சயமாயிற்று.
சரத்தின் அப்பாவுக்கு சிங்கப்பூரில் வியாபாரம். அம்மா மென்குரலில் பேசும் சாதுவான மனுஷியாக இருந்தாள்.
நிச்சயத்துக்கு அவர்கள் வாங்கி வந்த புடைவையை குறை சொன்னாள் மீனாட்சி.
"இந்தக் கிளிப் பச்சை கலரெல்லாம் திவ்யாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. இதைப்போய் வாங்கியிருக்காங்க."
இது எங்கள் வழக்கம் என்று சரத்தின் அம்மா சொல்லி முடிப்பதற்குள் "எங்களுக்கு வழக்கமில்லை" என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு பதில் சொன்னாள் மீனாட்சி.
தன் மகளை தன்னிடமிருந்து அபகரித்துக் கொண்டு போக வந்தவர்கள் போல் சம்பந்திகளை நினைத்தாள். பங்காளிக் காய்ச்சலுடன் கடுமையாக நடந்து கொண்டாள்.
மீனாட்சியின் கணவர் தர்மசங்கடத்துடன் மனோகரியைப் பார்த்தார். சரத்தின் அம்மாவிடம் தான் பேசிவிடுவது நல்லது என்று மனோகரிக்குத் தோன்றியது.
மீனாட்சியின் இந்த மனநிலை தற்காலிகமானது என்று சொல்லி புரியவைத்தாள் மனோகரி. சரத்தின் அம்மா கொஞ்சம் புரிந்து கொண்டதுபோல்தான் தோன்றியது. ஆனால் சரத்தின் அப்பாவுக்கு சற்று முன்கோபம் துருத்திக் கொண்டு நின்றது.
பல சங்கடமான தருணங்களை திருமண நிகழ்வில் எதிர்கொள்ள நேர்ந்தது. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு நல்லவிதமாய் கல்யாணம் முடிந்து மறுவீடு போனாள் திவ்யா.
மறுநாளே மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு மீனாட்சிக்கு கோளாறு நேர்ந்தது. உபாதை உடம்பிலா, மனசிலா என்று சொல்லமுடியாத அளவுக்கு குழப்பம்.
இரண்டு நாளில் வீடு திரும்பினாள் மீனாட்சி. மருந்துகளின் புண்ணியத்தால் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருந்தாள்.
மெல்ல மெல்ல எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் மனோகரி நினைத்தாள். ஆனால் உளவியல் சிக்கல்கள் அவ்வளவு சுலபத்தில் தீருவதில்லை.
தன் புக்ககத்தாரிடம் ஒரு மெல்லிய கசப்பை அம்மா ஏற்படுத்திவிட்டதாக திவ்யா வருந்தினாள்.
"எல்லாம் போகப்போக சரியாகிவிடும் திவ்யா" என்று ஆறுதலாகச் சொன்னாள் மனோகரி.
"இதற்கெல்லாம் நானும் கூட ஒருவிதத்தில் பொறுப்புதானே ஆன்ட்டி? அம்மாவின் பாசம் என்னை ஆக்கிரமிப்பதை நானும் தானே அனுமதித்திருக்கிறேன்?"
"குழந்தைப் பருவத்தில் நாம் எல்லோரும் எப்படியோ பெற்றோர்களின் உணர்வு குழப்பத்துக்கெல்லாம் ஆட்பட்டு விடுகிறோம். இதெல்லாம் தவிர்க்க முடியாதது திவ்யா. புரிந்துகொண்டால் போதும். விடுபடும் வழியும் தெரிந்துவிடும்."
திவ்யாவுடன் மனோகரி பேசிக் கொண்டிருப்பதை தூணுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதியவள் ஒருத்தி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
மனோகரி அவளை அப்போது கவனிக்கவில்லை.