ஆதார் இணைப்பு அவசியமானதே

ஆதார் இணைப்பு அவசியமானதே
Published on

தலையங்கம்

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்- 2021, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்கள் வாக்காளர்களிடம் அவர்களது ஆதார எண்ணைக் கேட்டுப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே  பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு அதிர்வலைகளை எழுப்பின. எதிர்ப்பில்  முக்கியமாக சொல்லப்பட்ட காரணம் ஆதார் இணைப்பின் மூலம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கும்  வாக்களிக்கும் ரகசியம் காக்கப்படாது, அரசு இயந்திரம்  எந்தக் கட்சிக்கு வாக்களித்தவர் யார் என்று கண்டுபிடித்துவிடும் என்பதே.  இதற்கு அடிப்படையாக அவர்கள் சுட்டிக்காட்டுவது தேர்தல் ஆணையம், அரசின் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாமல் தனித்தியங்கும் அதிகாரத்தை அரசமைப்பின் வாயிலாகப் பெற்றுள்ளது; ஆனால்  ஆதார் தரவுகளை நிர்வகிக்கும் ஆணையமோ மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இயங்கிவருகிறது என்பதுதான்.

நம் ஜனநாயக நடைமுறைக்குத் ஒரு துல்லியமான தவறில்லாத வாக்காளர் பட்டியலே தொடக்கப்புள்ளி. அதைச் செவ்வனே செய்யாததால்தான் ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்குரிமை, வெவ்வேறு பெயர்களில் வாக்காளர் அட்டைகள் போன்ற விதிமீறல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

இன்று இதை எதிர்ப்பதுபோல் தான் வாக்காளர் அட்டையில் புகைப்படம் இடம்பெற்றபோதும், எதிர்ப்புகள் எழத்தான் செய்தன. ஆனால், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கள்ள வாக்குகள் போடுவது என்பது ஒழிந்தது.

அதேபோல் வருமான வரித் துறையின் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைத்ததால், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நிர்வகித்துவருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  வரி ஏய்ப்புகள் குறைந்திருக்கின்றன.

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலமாகப் போலி வாக்காளர் பிரச்னைகளுக்கும் முடிவுகட்ட முடியும். 18 வயதாகும் புதிய வாக்காளர்களைப் பட்டியலில் இணைப்பதும் எளிதாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பணிமாற்றங்களினால் வேறு மாநிலங்களில் / நகரங்களில்  பணியாற்றுபவர்கள் எளிதாக அந்தந்த இடத்திலேயே தங்கள் வாக்குகளை அளிக்கும்  வாய்ப்பும் கிடைக்கும்.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது. புதிய முறைகள் அறிமுகப்படுத்தும்போது சந்தேகங்களும்,  எதிர்ப்புகளும் எழுவது இயல்பே. ஆனால், இதேபோல் வாக்கு இயந்திரங்கள் குறித்து நம்பிக்கையின்மையும் சந்தேகங்களும் எழுந்தபோது, வாக்குப் பதிவை உறுதிசெய்துகொள்ளும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்பட்டு வாக்காளர்களின் நம்பிக்கையைத் தேர்தல் ஆணையம் பெற்றது.

அதுபோல, இந்த எதிர்ப்புகள் காலப்போக்கில் மறைந்துவிடும். தவறுகள் நேரும் என்பதற்கு  வலுவான காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டால், அவை சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் அரசின் இந்த முயற்சி வெற்றியடைய  அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com