0,00 INR

No products in the cart.

மஞ்சள் நிறத்தொரு பூனை

சிறுகதை

ஓவியம் : தமிழ்

எழில் மொழி

 

“ஹலோ… இது வேலைக்குப் போகும் உங்களுக்கான நேரம்… காலைல வேலைக்குப் போற அவசரத்துல இருப்பீங்க… இந்தப் பாட்டு உங்க டென்ஷன குறைக்கறதுக்காக…”

பாட்டு வருவதற்குள் தொடர்ந்த விளம்பரம் இன்னும் பதற்றம் கூட்டிற்று. மணி எட்டு முப்பத்திரண்டு என்று கடிகாரம் காட்டிற்று. பிள்ளைகள் பள்ளிக்குப் போய்விட்டிருந்தனர். எட்டேமுக்காலுக்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்தால் ஒழிய இருபத்தேழாம் எண் பேருந்தைப் பிடிக்க இயலாது.

பண்பலை வானொலியை அணைத்துவிட்டு, வீட்டைப்பூட்டி, பையை மாட்டிக் கொண்டு நடையில் வேகம் கூட்டினேன். ஐந்து நிமிட நடையில் பேருந்து நிறுத்தம் வர… அதிசயமாய் பேருந்து கூட்டமில்லாது இருந்தது.

யப்பா… இன்றைய பொழுது இனிதாய் துவங்கிற்று என மனம் மகிழ்ந்து போயிற்று.

அலுவலகத்துக்குள் நுழைந்தபோது புதிதாய் இருவர் அலுவலகத்தில் இருந்தனர்.

“வணக்கம் சார்…” என்றேன் மேல் அலுவலரிடம், அவர் திரும்ப வணக்கம் சொல்லுவதில்லை. தலையை மட்டும் ஆட்டிவிட்டு…

“இவங்க… சென்னை அலுவலகத்துல இருந்து வந்திருக்காங்கம்மா… இன்னிக்கு மாலைக்குள் இந்த வருடத்து வரவு செலவையெல்லாம் பாத்து முடிக்கணும்னு வந்திருக்காங்க…”

அவர்களுக்கும் வணக்கம் சொன்னேன். இன்று மாலைக்குள் என்பது வயிற்றில் புளியைக் கரைத்தது.

“சார்… இவங்க நறுமுகைச் செல்வி. உங்களுக்குத் தேவையான உதவியெல்லாம் செய்வாங்க… பாத்துக்கம்மா…” என்றபடி நகர்ந்தார் மேல் அலுவலர்.

இருவரில் ஒருவரின் முகம் கனிவாய் இருந்தது. இன்னொருவர் முகத்தில் கள்ளமிருந்தது.

“நறுமுகைச் செல்வின்னா என்னம்மா அர்த்தம்…?” கேட்டுவிட்டு அதுவாய் சிரித்துக் கொண்டது. சிரிக்கையில் சிகரெட் வாசனை வீசிற்று.

“எப்படிம்மா… இவ்வளவு சின்ன வயசுல கவர்மென்ட் வேலைக்கு வந்த…?”

மீண்டும் அதுவாய் சிரித்துக் கொள்ள எனக்குள் இடறிற்று.

“அவர் வேலைல இருக்கும் போதே இறந்துட்டாரு…” அதற்கு மேல் ஏதும் சொல்லாது மௌனமானேன். ‘அவரின்’ மேல் வீசும் சிகரெட் வாசனை மனதுக்குள் அடித்தது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். அவரோடு கடைசியாக பேசியது நினைவில் ஆடிற்று.

“எங்க மாமா இருக்கீங்க… இன்னும் வீட்டுக்கு வரலியா…”

“இதோ… வந்திட்டேன் செல்வி…”

இதுதான் அவர் கடைசியாக பேசியது. ஆனால் அவர் வரவேயில்லை. லாரி மிதித்து நொறுங்கிப் போன அவரின் மோட்டார் சைக்கிள் மட்டும்தான் வந்தது.

மாலை வரை கள்ள முகத்தின் இம்சை தொடர்ந்தது. மனம் உளைச்சலாயிற்று. தொடர்ந்து அந்தப் பதிவேட்டை எடு இந்தப் பதிவேட்டை எடு என்றும் கணிப்பொறியில் தட்டச்சு செய்கையில் அருகில் நின்றும், அதுவாய் சிரிப்பதும் அடிக்கடி… “இந்த சின்ன வயசுல…” என்பதையே சொல்லிக் கொண்டும்… எனக்கு இடுப்பு மடிப்பிலும் கழுத்து சதையிலும் கூசிற்று.

மாலை ஐந்தே கால் ஆன பிறகும் முடியாது பணி தொடர்ந்தது. ஐந்தரைக்கு பேருந்தைப் பிடித்தாக வேண்டும்.

“சரிம்மா… நாளைக்குப் பாத்துக்கலாம்… புறப்படு…” என்றார் மேல் அலுவலர்.

“நாங்க இங்கேயே தங்கிடறோம்… காலைல ஒரு ஏழு மணிக்கு ஆரம்பிச்சா… ரெண்டு மணி நேரத்துல முடிச்சுறலாம்…” என்று கள்ள முகம் பல்லை இளித்தது.

“ஏழு மணிக்கெல்லாம் யார் சார் வருவாங்க…” என்று தன்னை அழைத்தது போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மேல் அலுவலர்.

நான் நகர்ந்து வெளியேறி பேருந்தைப் பிடித்தேன்.

மாலை ஆறே காலுக்கு வீட்டுக்குள் நுழைந்தேன். ஐந்து நிமிடத்தில் பிள்ளைகளிரண்டும் பள்ளி முடிந்து, தனி வகுப்பு முடிந்து வந்து சேர சரியாய் இருந்தது.

எனக்கு என்னவோ என்னையே யாரோ உற்றுப் பார்ப்பது போல் இருந்தது. சன்னலைத் திறந்துவிட காற்று முகத்தை விசிறிவிட்டுப் போயிற்று. கொஞ்ச நேரம் நின்று கொண்டு இருந்தேன். இடுப்பு மடிப்பில், கழுத்து சதையில் வியர்த்து அழுக்கு இறுகியிருந்தது. குளித்தால்தான் அழுக்கு என்னைவிட்டு போகும் போல் தோன்றிற்று.

குளித்துவிட்டு வெளியே வந்து நிற்கையில்…

“அம்மா… இங்க பாரு…”

பிள்ளைகள் மடியில் புரண்டு கொண்டிருந்த அந்தப் பூனைக்குட்டி அத்தனை அழகாய் இருந்தது. மஞ்சளாய் சிறு வட்டங்கள், அத்தோடு பொன்னும், வெண்மையும் கலந்த வண்ணத்தில்… ரொம்பவும் குட்டியாக இல்லாமல் சற்று வளர்ந்து…

“எங்கடா இருந்தது… யாராவது திட்டப் போறாங்க…”

“இல்லம்மா… அதுவாதான் வந்தது…”

“பால் ஊத்தட்டுமாம்மா…”

“சர்க்கரை போட்டுக்குமா… போட்டுக்காதா…”

“யேய்… அதுக்கென்ன தாத்தாவுக்கு இருக்கறமாதிரி சர்க்கரை வியாதியா…”

பிள்ளைகள் அதுவாய்ப் பேசி முடிவு செய்து பிளாஸ்டிக் தட்டில் பால் வைக்க… பூனை குடித்துக் களைத்து சிறிது நேரம் தூங்கிற்று.

பெரியவள் மடியிலும், சின்னவள் மார்பிலும் மாறி மாறித் தூங்கிற்று. எனக்கும் என்னவோ உற்சாகம் பொங்கிற்று.

மேல் கழுத்தின் சதையைக் கிள்ளுவது போல் பிடித்து பூனையைத் தூக்கினேன். அது கால்களைச் சுருட்டியபடி சொக்கிப் போய் தொங்கிற்று.

“அம்மா… அதுக்கு வலிக்கும்மா…”

பிள்ளைகள் அலறினார்கள்.

“இல்லடா… இதனோட அம்மா இத இப்படித்தான் தூக்கும்…” பாசம் காட்டிய பிள்ளைகளுக்கு பூனைகள் தன் குட்டியை எப்படித் தூக்கி…எப்படி நடக்கும்… என்று கதை சொல்லி… இரவு உணவு முடிந்து உறக்கம் தழுவிற்று.

பிள்ளைகள் இருவர்க்கும் இடையில் சுருண்டபடி உறங்கிற்று அந்தப் பூனை. இரவு இரண்டு மணியிருக்கும். பூனை கத்திற்று. எதற்குக் கத்துகிறது என்று புரியாது அது கத்திற்று… பால் வைக்க குடிக்க மறுத்து சுற்றிச் சுற்றி கத்திற்று.

விழித்துக் கொண்ட பிள்ளைகளின் உறக்கம் கலைந்து போயிற்று.

“அம்மா… டாக்டர் ஆண்ட்டிகிட்ட கேட்டு இதுக்கு ஒரு மாத்திரை வாங்கித் தரலாம்மா…”

எதற்குக் கத்திற்று என்று புரியவில்லை. பால், ரொட்டி, கேக் என்று எதை வைத்தாலும் உண்ணாது அலறிற்று. இறுதியாய் கொஞ்சம் தண்ணீர் வைக்க குடித்துவிட்டு அமைதியாயிற்று. கண்களைக் கொஞ்சம் உறக்கம் இழுக்க… அரைமணியிருக்கும். மீண்டும் அலறத் துவங்கிற்று அப் பூனை.

எனக்குள் பொறுமை இல்லாது போயிற்று. தூக்கி பின் கதவின் வெளியே விட்டுவிட்டு இழுத்து மூடினேன். கதவின் வழி அப் பூனையின் குரல் கசிந்து வழிந்தது.

“அம்மா… தெருநாய் கடிச்சிட்டா…”

“அப்படி எதுவும் கடிக்காது…   பேசாம தூங்குக…”

“தெருநாய் கடித்துவிட்டால் என்ன செய்வது” என்று எனக்கும்தான் பயமாய் இருந்தது.

எல்லோரிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தலே வாழ்க்கை எனில் அன்பு செய்ய இயலாது நேரம் துரத்துகிறதா? அல்லது என் மனம் மரமாகிவிட்டதா?

அல்லது பயம் வருகிறதா? பூனையின் மேல் அன்பு காட்ட என்ன பயம்? எவரிடமேனும் சிரித்துவிட்டால் மனதின் கட்டுபாடுகள் கழன்றுவிடுமோ என்ற பயத்தின் இன்னொரு முகம்தானா இந்த உயிரின் மீதும் வெறுப்பு வரக் காரணம்?

அல்லது இருபத்து ஆறு வயது இளமையை மட்டுமே வெறித்துப் பார்க்கும் கள்ளத்தனம் நிறைந்த உலகம் மட்டும்தான் என் கண்களுக்கு தெரிகிறதா? கண்களை மூடிக் கொண்டு உலகமே இருண்டு கிடக்கிறதென்னும் பூனையாகிவிட்டேனா நான்…

கேள்விகள் தூங்கவிடாது துரத்த தூங்கிப் போனேன்.

உறக்கம் தப்பிப் போனதில் காலை எழ முடியாது தத்தளித்தேன். பிள்ளைகளும் தாமதமாய் எழ… ஒரு வழியாய் மணி எட்டு இருபது ஆகியிருந்தது. இன்னும் இருபது நிமிடத்தில் பேருந்து நிறுத்தம் போய் சேர வேண்டும்.

உடையணிந்து, தலைவாரி சமையலறைக்குள் நுழைய அடுப்புத் திட்டில் அமர்ந்திருந்தது அந்தப் பூனை. சப்தம் ஏதும் செய்யாது அமைதியாய் கண்களை உருட்டிக் கொண்டிருந்தது. கீழே பால் டம்ளர் உருண்டு கொண்டிருந்தது. பால் தரையெங்கும் வழிந்திருக்க… மெல்ல நகர்ந்து, இரண்டு சொட்டு குடிப்பதும், பின் முகத்தைத் தடவுவதும், பின் புரள்வதுமாய்…

“என்ன குட்டி… வந்துட்டியா… பால் வேணும்னா என்னைக் கேட்டிருக்கலாமே…”

கையிலெடுத்துக் கொஞ்சினேன். அதன் பிளாஸ்டிக் தட்டில் கொஞ்சம் பால் ஊற்றினேன். அது தன் மீசையெங்கும் ஒட்டிக்கொள்ள உறிஞ்சிக் குடித்துவிட்டு குதித்து உற்சாகமாய் ஓடிற்று, ஜன்னல் மேல் நின்று என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு குதித்து மறைந்தது. அதன் துள்ளல் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை எனக்குள் பரப்பிற்று.

மெலிதாய் எனக்குள் பாட்டு கிளம்பிற்று.

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…ம்..ம்…” என்று குறுநகையோடு பாடியபடி கைப்பையை மாட்டிக் கொண்டு கிளம்பும் போதுதான் மணி எட்டு முப்பத்தைந்து என்று கடிகாரம் உணர்த்திற்று. எத்தனை வேகமாய் நடந்தும் எட்டு நாற்பது பேருந்தைப் பிடிக்க முடியவில்லை.

இனி ஷேர் ஆட்டோதான். வந்த ஒரு ஆட்டோவில் ஏற எதிர் வரிசையில் ஆண்களும் என் வரிசையில் பெண்களுமாக அமர்ந்தோம்.

எதிர் வரிசையில் இருந்த ஒருவர்,

“எங்க மேடம் வேலை செய்யறிங்க…”

அலுவலகத்தின் பெயரைச் சொன்னேன்.

“எப்படி இவ்வளவு சின்ன வயசுல வேலைக்கு வந்தீங்க…?”

என்றபடி அவரின் குரல் கேட்டு,

எனக்கு கழுத்து சுருக்கத்தில், இடுப்பு மடிப்பில் வியர்க்கவில்லை. அனிச்சையாய் அழுத்தித் துடைத்தும் அழுக்கு ஏதும் வரவில்லை.

பூனைக்குட்டி நினைவுக்கு வந்தது. அதன் துறுதுறுப்பும் பிரகாசிக்கும் கண்களும் மனதை சுண்டிற்று. எத்துனை நம்பிக்கை மனிதர்கள் மீது? எப்படி உணர்கிறது மனிதர்களை என்பது எனக்கு வியப்பாய் இருந்தது. அடிக்க வருபவனாயினும் அணைக்க வருபவனாயினும் ஒரே மாதிரியான சப்தத்தில் மட்டுமே தன்னை உணர்த்தத் தெரிந்த அந்த சின்ன உயிரின் மனதில் எத்தனை நம்பிக்கை இருக்க வேண்டும்!

எனக்கு வியப்பு கூடிற்று. அதே நம்பிக்கையை நானும் சக மனிதன் மீது கொள்ளுதலே வாழ்க்கையின் உயிர்ப்பு என்பதை அந்தப் பூனையின் உயிர்ப்பு எனக்கு அந்த நொடியில் உணர்த்திற்று.

மஞ்சள் நிறப் புடைவையில் கலைச் சூரியனின் ஒளிபட்டுத் தெரிக்க…

குறுநகை சிதற எதிர் இருக்கையில் கேட்டவரிடம் நம்பிக்கையோடு புன்னகைத்தேன். அலைபேசி அழைக்க, மேல் அலுவர் பேசினார்.

“வணக்கம்… சார்… பஸ்..ச விட்டுட்டேன்… வந்துட்டு இருக்கேன்… சார்…”

“பரவால்லாம்மா… நான் ஏழு மணிக்கே வந்துட்டேன்… நீ மெதுவா வா…”

என் பாதுகாப்புக்காக, காலை முதல் வந்து காத்திருக்கும் அவரின் மனித நேயம் என்னை மலர்த்திற்று. மனம் மஞ்சள் நிறப் பூனையாய் அதன் மொழியில் ‘மியாவ்’ என்று நன்றியைச் சொல்லிற்று.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வியாபார மொழி

1
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...

பேரம்

"பாய்! பாய்! வந்தவாசி கோரைப் பாய் ஜோடி முன்னூறு ரூவா!" தொண்டை கிழிய கத்திக்கொண்டே சைக்கிளில் போனான் பாய் விற்பவன். "வெயில் காலம் வந்துருச்சே! கீழே படுத்துக்க கோரைப்பாய் இருந்தா குளுமையா இருக்குமே!" என்று...

  நினைவு நல்லது வேண்டும்!

1
ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தேன். ‘காலைப் பொழுதினிலே கண்விழித்து, மேனிலை மேல், மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே’ என்ற பாரதியின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. இரவில் பெய்த மழையில், வீதியில், ஆங்காங்கே...

“கண்ணான கண்ணே!”

4
“அப்பா! இந்த வயசுல உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுப்பா! கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேள். இதனால ஒங்களுக்கு மட்டும் கஷ்டமில்லப்பா! உங்க ஒருத்தரால, வீட்டுல இருக்கிற எல்லாரும் அவதிப்படணுமா?...

சூது கவ்வும்

2
திலிபனுக்கு அவசரமாக பணம் தேவையாயிருந்தது. அதிக பணம்... நைட் டூட்டி முடிந்து, கண்ணெரிச்சலுடன் ரூமுக்கு வந்து படுத்தவனை செல்போனில் கூப்பிட்டு எழுப்பியது தயாளன்தான். இந்த முறை வழக்கத்தைவிட பேச்சில் வந்து விழுந்த...