கருத்துச் சுதந்திரத்துக்கும் கண்ணியம் காப்பதற்கும் வித்தியாசம் அறியாதவர்கள்

கருத்துச் சுதந்திரத்துக்கும் கண்ணியம் காப்பதற்கும் வித்தியாசம் அறியாதவர்கள்
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

?  'பொய்ச் செய்திகளைப் பரப்பும் யுடியூப் சேனல்கள், இணைய தளங்கள்  அதிகரித்துக்கொண்டிருக்கிறதே?
– ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

! கருத்துச் சுதந்திரத்துக்கும் கண்ணியம் காப்பதற்கும் வித்தியாசம் அறியாதவர்கள் விளைவிக்கும் விபரீதம் இது.  செய்திகள் மட்டுமில்லாமல் ஆபாசப் படங்கள், தனிமனிதத் தாக்குதல்கள்,  நாட்டு நலனுக்கு எதிரான மத உணர்வுகளைத் தூண்டும் செய்திகள்,  செய்திகளைத் திரித்து வெளியிடும் போக்கு  அதிகரித்துக் கொண்டிருக்கிறது. "ஒரு செல்போனும் 100ரூ மதிப்புள்ள ஒரு மைக்கும்  இருந்தால் போதும், நாம்  விரும்புவதை யூடியுபில் போடலாம்"  என்று நம்பும் இளைஞர்களால் தினமும் பல யூடியுப் சானல்கள் உருவாகின்றன. இந்த ஆபத்தான போக்கைத் தடுக்க ஒன்றிய அரசு அண்மையில் 30க்கு மேற்பட்ட சானல்களைத் தடை செய்திருக்கிறது. ஆனாலும், பிரச்னை தொடர்கிறது.

? அமெரிக்காவின் இன்றைய பிரதான பிரச்னை?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! கடந்த 30 ஆண்டுகளாகச் சந்திக்காத பணவீக்கம், அதன் விளைவாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம். அமெரிக்க பொருளாதாரத்தின் வெற்றியே  மிகத் திறமையான செயல்பாடுகளால் பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது தான். அது மெல்ல சரிய ஆரம்பித்திருப்பதுதான் பிரதான பிரச்னை.

? ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்வது கூட்டாட்சி சுயாட்சிக்கு எதிரானது என்கிறாரே ஸ்டாலின்?
– சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

! உண்மைதான். இப்போது இருக்கும் விதிகளின் படி ஐ ஏ எஸ் அதிகாரிகளை மத்திய அரசு தங்கள்  தேவைகளுக்கு அழைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் புதிய விதிகள் அதற்கான அவசியமில்லை. ஒன்றிய அரசு எப்போது வேண்டுமனாலும் அழைக்கலாம் என்கிறது  இது  மாநில உரிமைகளைப் பறிக்கும் விஷயம் தானே. 

? குடியரசு தின- பாசறை திரும்பும்  நிகழ்வில் மகாத்மா காந்தியின் விருப்பத்திற்குரிய பாடல் நீக்கம் என்பது சரியா?
– மதுரை குழந்தைவேலு, சென்னை
! குடியரசு தின விழாக்கள் முடிந்து 3 நாட்களுக்குப்பின் நடைபெறும்  அவசியமில்லாத ஒரு  ஆடம்பர  சம்பிரதாய சடங்கின் பெயர் Beating Retreat. , Beating Retreat என்பதன் பொருள்,  போரில் இறங்கிய ராணுவம் மாலையில் போரை நிறுத்திவிட்டு முகாமுக்குத் திரும்புவதுதான். t 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்த வழக்கத்தை இப்போதும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். நமது வீரர்கள் எந்தப் போருக்குப்  போனார்கள்? எங்கிருந்து திரும்பினார்கள்? பெயரையாவது மாற்றியிருக்கலாம்.

இந்த விழாவில் ராணுவ வாத்திய இசைக்குழு தங்கள் திறனைக்காட்டப்  பாடல்களை வாசித்துக் காண்பிப்பார்கள்  அதில் அண்ணல் காந்தி விரும்பிய பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.

குடியரசு தினத்தின் கம்பீரத்துக்கு சம்பந்தமே இல்லாத  மிக சோகமான, 'அபைட் வித் மீ' என்ற ஸ்காட்லாந்து கவிஞர் ஹென்றி பிரான்சில் லைட் 1847ல் இயற்றிய இந்தப் பாடல், மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதாலேயே  ஆண்டுதோறும் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலை நீக்கியதில் தவறில்லை. ஆனால் ஒரு இந்தியக் கவிஞனின் பாடலைச் சேர்க்காமல் ஒரு ஐரோப்பியப் பாடலைத்தான் இத்தனை நாள்  வாசித்தார்கள்  என்பதுதான் சோகம்.

? குடியரசுதின அணிவகுப்பு ஊர்திகளில் தமிழக அரசின் ஊர்தி  இடம்பெறவில்லையே?
– நரசிம்மன், திருச்சி
! தமிழக ஊர்தியில் இடம்பெற்றவர்களை வெளிநாட்டவருக்குத் தெரியாது என்பது தேர்வாகுதற்கு  ஒரு காரணமாகச்  சொல்லப்படுகிறது.  "இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களையும், சமூக முன்னேற்றத்துக்காகப் போராடிய தலைவர்களையும், வெளிநாட்டவருக்குத் தெரிந்தால்தான் இடம்பெற செய்யவேண்டுமென்பது இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களையே அவமதிப்பதற்குச் சமம்!"

இந்த ஆண்டுக்கான கருத்து  இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள். மையக்கருத்துக்கும் பொருத்தமான ஊர்திகளைத்தான் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும். தமிழ்நாட்டு ஊர்தி அதை நிறைவு செய்யவில்லை என்பது மற்றொரு காரணம்

கர்நாடக மாநில ஊர்தியில் இடம்பெற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கும், உத்தரப்பிரதேச மாநில ஊர்தியின் காசிவிஸ்வநாதர் கோயில், உத்தரகாண்ட் மாநில ஊர்தியின் பத்ரிநாத் கோயில், சத்தீஸ்கர் ஊர்தியின் கோமாதா,  "இவற்றுக்கும் இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளுக்கும் என்ன சம்பந்தம்" என்று தேர்வு செய்த ராணுவத்துறை விளக்க வேண்டும்.

? அண்மையில் தராசார் ரசித்த படம்?
– ரம்யா கண்ணன், சென்னை
! ஒரு விஸ்காம் மாணவர் அனுப்பியிருந்த இந்தப் புகைப்படம்தான்.

? புத்தக வெளியீட்டுவிழாக்கள், அதிகரித்து வருகிறதே? படிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதா?
– தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி
! வெளியீட்டு விழாவிற்கு வருபவர்கள் அனைவரும் புத்தகங்கள் வாங்குவதில்லை. வாங்குபவர்களில்  சிலர் அதைப் படிப்பதில்லை. சென்ற புத்தக காட்சியில் வாங்கியவற்றையே இன்னும் படிக்கவில்லை எனப் பெருமையாகச்சொல்வோர் எண்ணிக்கைதான்  அதிகரித்துக் கொண்டிருக்கிறது

? உ.பி. தேர்தல் முடிவுகள் வெளியீடு வந்த பின்னர்தான் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவாராமே?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்
! அந்த கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலை எழும் என்பதை அவர்களே நம்பவில்லையோ?

? சுபஶ்ரீ தணிகாசலம் QFR வீடியோக்களைப் பார்க்கிறீர்களா?
– வழுதி, திருவண்ணாமலை

! கொரோனா காலத்தில் தங்கள் இசைக்குழுவினருக்கு  அரங்க நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பில்லாது போனதால் காணொளியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்கும் நல்ல  வரவேற்பு. இன்று 400 எபிசோடுகளைத் தாண்டியிருக்கிறது. உலகின் பல பகுதிகளிலிருக்கும் கலைஞர்களை இணையம் வழியாக  இணைத்து அருமையான நிகழ்ச்சியை வழங்குகிறார். சுபஶ்ரீ தணிகாசலம். சிறந்த பாடகர்கள், சிறந்த வாத்திய கலைஞர்களை அவர் பாராட்டுவதுடன் அந்தப் பாடலின் சிறப்பு, அது பதிவு செய்யப்பட்டபோது நிகழ்ந்தவை, பாடலைப்பற்றிய புள்ளி விபரங்கள்  நிகழ்ச்சிக்குச் சுவை கூட்டுகின்றன. சுபஶ்ரீ, ஆழ்ந்த இசைஞானமும், சின்னத்திரை நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் நீண்ட அனுபவமும் கொண்டவர்.

? மாநில தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில் கச்சா எண்ணெய் உலக மார்கெட்டில் குறையும் நேரத்தில் கூட இங்கு பெட்ரோல் விலை குறையவில்லையே ! என்ன காரணம்?
– ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்
! நம் ஒன்றிய அரசு இந்தியாவில் பெட்ரோலின் விற்பனை விலைக்கும் சர்வ தேச கச்சா எண்ணெய் விலைக்கும் சம்பந்தமில்லாத ஒரு வினோத விலைக்கொள்கை முறை கடைப்பிடிப்பதின் விளைவு இது. தேர்தல் நேரங்களில் விலை குறையும் என்பது உண்மைதான். வாக்களிப்பு தொடங்கும் நேரம் வரை காத்திருங்கள்.

? கிருஷ்ணர்  தன் கனவில் வந்து "சமாஜ்வாதிதான் ஆட்சி அமைக்கும்" என்று சொல்லி ஆசி வழங்கியதாக அகிலேஷ் யாதவ்  சொல்லுகிறாரே?
– வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு
! யோகி ஆதித்யனார் கனவில் இராமர் வந்து என்ன சொன்னார் என்று  தெரியவில்லையே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com