0,00 INR

No products in the cart.

ஒழுக்கம் உயர்விற்கு வழி என்பது சொல்லாமலே சொல்லப்பட்டது.

உலகக் குடிமகன் –  5

– நா.கண்ணன்

 

ப்படி என்னுள் நிகழும் நுண்ணிய மாற்றங்களை பேராசிரியர் ஆப்ரஹாம் கவனிக்கவில்லை. அவருக்கு நான் கூர்தலற பாடத்தில் முதல்வனாக வர வேண்டும். அதுவே என் முழு கவனத்திற்கும் இலக்காக அமைய வேண்டும் என்பது அவரது ஆசை. அந்த ஆசையில் நான் மண்ணைப் போடவில்லை. யுனிவர்சிடி ரேங்க் மாணவனாகத் தேர்வுற்றேன். முதுகலை மானுட கூர்தலற பாடத்தேர்வில் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆயினும் அவருக்கு நான் சுய கட்டுப்பாடு கொண்ட ஒழுக்கமுள்ள ஓர் மாணவனாக வரவேண்டும். அதுவே நடுத்தர வகுப்பில் பிறந்துவிட்ட எனது விதியை மாற்றும் என நம்பினார். அதற்காக கடுமையான பயிற்சிகள் கொடுத்தார். கடவுளை நம்பாதே உன்னை நம்பு. உலகம் கூர்தலறம் சார்ந்து இயங்குகிறது, இறைவனை நம்பி அல்ல எனும் சிந்தனைகளை விதைக்க முற்பட்டார். அமெரிக்கன் கல்லூரி பசுமையான கல்லூரி. புல், பூண்டு, தாவரங்கள் மிகுதியாக உள்ள நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்ட வளாகம். மாணவர்கள் கல்லூரியில் இங்கும் அங்கும் குறுக்குத் தாவலாக நடை பயில்வது இயற்கை. ஆனால் ஆப்ரஹாம் சார், என்னை குறுக்காக எங்கும் தாவக்கூடாது என்றார். அது குறுக்கு புத்தியை வளர்த்து ஒழுங்கைக் குறைக்கும் என்றார்.

நான் ஆசிரியருக்கு, குடும்பத்திற்கு கட்டுப்பட்ட மாணவனா? என சோதிக்க ஒவ்வொரு ஞாயிறன்றும் அமெரிக்கன் கல்லூரி வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களை பேட்டி எடுத்து வரச் சொல்வார். அமெரிக்கன் கல்லூரிக்குள் ஓர் தேவாலயம் இருப்பதால் ஞாயிறு அன்று வழிபாடு உண்டு. அதற்கு வெளியே இருந்தும் மக்கள் வருவர். அவர்களிடம் பிச்சை கேட்கும் ஒரு கூட்டமும் வரும். இவர்களை நான் பேட்டி காண வேண்டும். வெட்கம் பிடிங்கித் திண்ணும். நான் பிச்சைக்காரர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதை என் சகாக்கள் பார்த்தால் என்ன நினைப்பர்? ஏன், என் சகோதரிகளோ, உறவுகளோ பார்த்தால் என்ன ஆகும்?மானம் போய் விடாதா? ஆனால் ஆப்ரஹாம் என்னை வலுக்கட்டாயமாக அடிபணியச் சொன்னார்.

உண்மையில் அவர் எதிர்பார்ப்பது போன்ற ஓர் கட்டுபட்டியான பையனை என் வீடு எதிர்பார்க்கவில்லை. பெரிய அக்கா வீட்டில் என்னைத் தவிர அவளின் பிள்ளைகள் மூன்றுண்டு. அவை என் சகோதரர்கள் போல. எனவே வீட்டில் சுதந்திரமாக விளையாடிக் கொண்டிருப்போம். என் சகோதரிகள் என்றும் என் வழியில் நின்றதில்லை. எனக்கு எப்போதுமே ஆதரவுதான். எவ்வாறு எனச் சொல்வதற்கு ஒரு சுவாரசியமான கதையுண்டு. இது நான் ஆய்வாளராக மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது நிகழ்ந்தது.

நான் ஐந்து சகோதரிகளுடன் பிறந்து விட்டதால் பெண்களை அணுகுவதிலோ, அவர்களோடு கலகலவெனப் பேசுவதிலோ எனக்கு என்றும் கூச்சம் இருந்ததில்லை. இப்படித்தான் நான் என் பெண் சகாவுடன் மதுரைத் தெருவில் போய்க்கொண்டு இருப்பதைக் பார்த்த என் சகோதரியின் தோழி, என் அக்காவிடம் என்னைப்  ‘போட்டுக் கொடுக்க’ முயன்றிருக்கிறாள். “உனக்குத் தெரியுமா? உன் தம்பி கண்ணன், எப்போதும் கருப்பான ஒரு பெண்ணோடு மதுரைத் தெருவில் அடிக்கடி உலாவுகிறான். அது நல்லதாய் படவில்லை. எதற்கும் உன் தம்பியிடம் சொல்லி வை!” என்று போட்டுக் கொடுத்து இருக்கிறாள். தாய் ஸ்தானத்தில் என்னைக் கவனிக்கும் என் சகோதரிக்கு நான் யார் என்று தெரியாதா என்ன! எனவே சிரித்துக்கொண்டு அவளும் பதில் சொல்லியிருக்கிறாள், “நல்லா பாத்தியா? அவன் கருப்பான ஒரு பெண்ணோடு சுற்றுவதை?” எனக் கேட்டிருக்கிறாள். தோழிக்கு உற்சாகம், “ஆமாண்டி! அதான் நான் சொல்றேனே! உன் தம்பியோ ஹான்சம்மா நல்ல சிகப்பு. இந்தப் பெண்ணோ குட்டையா, கருப்பு. என்ன செலக்ஸனோ” எனச் சொல்லியிருக்கிறாள். எங்க அக்காவிற்கு சிரிப்புத் தாங்கவில்லை.  “கருப்போ, சிகப்போ? அது முக்கியமில்லை, ஒரு பொண்ணோட சுத்தறான் என்பதுதான் புரியவில்லை” என்றிருக்கிறாள். அவள் தோழிக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது, “நீ என்னை நம்பலேல்ல? ஒரு பொண்ணோட சுத்தறதை நான் என் கண்ணாலே பார்த்தேன்” என அடித்துச் சொல்லியிருக்கிறாள். என் சகோதரி பதிலுக்கு “அதில் தான் என் சந்தேகமே! அவன் என்றும் ஒற்றைப் பொண்ணோடு சுற்றியதாக வரலாறு கிடையாது. குறைந்தது நான்கு பெண்களோடாவதுதான் சுற்றுவான். அதான் சந்தேகத்திற்குக் கேட்டேன்” என்று பதில் உரைத்திருக்கிறாள். அவள் தோழிக்கு வெறுப்பாகிவிட்டது, “உன்னிடம் வந்து சொன்னேன் பாரு! என்னை செருப்பால் அடிக்கணும்!” என்று சொல்லிப் போய்விட்டாள்.

ஆப்ரஹாம் வாத்தியார் எதிர்பார்த்தது போன்ற கட்டுப்பெட்டியான குடும்பம் அல்ல என்னுடையது. கலகலப்பாக ஒருவரை ஒருவர் காலை வாரிக்கொண்டு சிரித்து மகிழும் குடும்பம். எங்கள் பெற்றோரை இழந்தது எங்களை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வைத்திருந்தது. பாரதி சொல்வது போல் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” எனத் தெரிந்திருந்த குடும்பம் அது. ஆனால், ஆப்ரஹாம் தன்னுள் கண்ட மத்திமக் குடும்ப வகையில் நாங்கள் விழவில்லை. பெற்றோர் அற்ற என்னைத் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துக் கவனித்துக் கொள்ள முயன்றார் என நம்புகிறேன். ஆனால் அவரது விழுமியங்கள் வேறு, நான் வளர்ந்த சூழல் வேறு. உண்மை, பெற்றோரை இழந்து பரிதவிக்கும் குடும்பம்தான். ஆனால் அம்மா கொடுத்த இலக்கு எங்கள் அனைவருக்கும் தெளிவாய் இருந்தது. கல்வி கேள்வியில் எப்போதும், எச்சந்தர்பத்திலும் முதலாவதாக இருக்க வேண்டும். ஐந்தும் பெண்ணாய் போய் விட்டதால் குடும்ப மானம் என்பது முக்கியமாக கருதப்பட்டு குடும்ப மானமே முதல் இடத்தில் இருந்தது. எனவே மானம் போகும் செய்கையில் என்றும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்பது கோகிலத்தம்மா காட்டிய வழி. கட்டுப்பாடு இருந்தாலும், சுதந்திரமும் இருந்தது. அம்மா, என்றும் பாலியல், ஜாதீய தராதரம் பார்த்ததில்லை. அக்காமார்களை தன் சக ஆண் மாணவர்களோடு பழக விடுவாள். ஆனால் அவள் கண்காணிப்பில் வீட்டிற்குள். என்னையும் அத்தெருவில் எல்லோரோடும் பழக விடுவாள். எனக்கு பள்ளிக் காலங்களில் ஆதரவாக இருந்த இரண்டு உற்ற நண்பர்களும் தலித் மக்கள். அவர்கள் வீட்டிற்கு வந்து போவதை, நான் அவர்கள் வீடுகளுக்குச் செல்வதை என் அன்னை ஒரு போதும் தடுத்ததில்லை. நற்பண்பு என்பது எவ்வகையிலோ இயல்பாக எங்களுக்கு புகட்டப்பட்டது. ஒழுக்கம் உயர்விற்கு வழி என்பது சொல்லாமலே சொல்லப்பட்டது. இதை ஆப்ரஹாம் சார் அறியாமல் என்னைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.

முதுகலை மாணவியரோடு நான் சகஜமாகப் பழகுவதை அவர் கண்காணித்து வந்திருக்கிறார். நான் பெண் மாணவியர் விடுதிக்குப் போவதும் அங்கு தோழிகளோடு பேசி மகிழ்வதும் அவருக்கு எரிச்சலூட்டி இருக்கிறது. காரணம் அவர் கல்யாணமே செய்துகொள்ளாத வறட்டு நாத்திகர். அவர் வழியில் நான் செல்ல வேண்டுமென எதிர்பார்த்தார். பகுத்தறிவு என்பது இயற்கையாகவே அறிவியல் படிக்கும் எனக்குள் இருந்தது. அதற்காக இறைமையை மறுக்க வேண்டுமென எனக்குத் தோன்றவே இல்லை. அப்பர் பாடிய பாடல் மிகத்தெளிவாக இயற்கையும், இறைவனும் வேறு வேறு அல்ல. தூய்மையான மனது தூய்மையான சூழலை விரும்பும், அதைப் பராமரிக்கும் என்றுதான் அப்பாடல்சொல்கிறது. அதுவே இறைமை என்றும் சொல்கிறது. இதில் முரண்பட என்ன உள்ளது? ஒருமை நோக்கிச் செல்லும் அறிவியலும் ஒருமை சொல்லும் ஆன்மீகமும் வேறு வேறு அல்ல எனக்கு அப்போதே புரிந்தது. நான் பரி பக்குவப்பட்டிருந்தேன். ஆனால் என் பேராசிரியர் பக்குவமடையவில்லை. ஒரு நாள் என்னைத் தனியாக அழைத்து மிரட்டியே விட்டார், “நீ பெண் பிள்ளைகளோடு பழகுவது எனக்குப் பிடிக்கவில்லை. அது படிப்பிலிருந்து உன் கவனத்தை மாற்றும். எனவே அவர்கள் சகவாசத்தை நீ துண்டிக்க வேண்டும்” என்றார்.

விருந்தொன்று அமைத்து அதை உண்ண வேண்டாம் எனச் சொல்வது எத்தகைய பாவம்? இவர் கிறிஸ்தவ பாதிரியார் கூடக் கிடையாது. இவரோர் நாத்திகர். இவருக்கேன் இப்படியொரு வக்கிரம் என எண்ணத்தோன்றியது. வாழ்வின் இளவேனில் பதின்ம பருவம். வெளிநாடுகளில் பள்ளிக் காலங்களிலேயே மாணவ, மாணவியர் நன்கு பழகி உலகை அறிந்து கொள்கின்றனர். நான் அமெரிக்காவில் நாஷ்வெலெனும் நகரில் பின்னால் கண்டது இவ்வுண்மையைச் சுட்டும். அதுவோர் பிள்ளையார் கோயில். பெரிய கோயில். கோயில் நம்மவூர் கோயில் என்றாலும் அங்கு வரும் பதின்ம வயதினர் தமிழகத்தில் வாழவில்லை. அவர்கள் வாழ்வது விடுதலை கொண்ட ஓர் அமெரிக்க சமூகத்தில். அங்கு நியதிகள் வேறு. எனவே அக்கோயில் நிர்வாகிகள், அக்கோயில் வளாகத்திலேயே பெண், ஆண் பிள்ளைகளுக்கு “டேட்டிங்” என்றால் என்ன? பாலியல் கல்வி என்றாலென்ன?கலவி கொண்டாலும் கருத்தரிக்காமல் இருப்பது எப்படி? நாம் பள்ளியில் சந்திக்கும் பையன், பெண் இந்தியர்களாக இருக்கப்போவதில்லை, அவர்கள் வெள்ளையனாக இருந்தாலும் கருப்பனாக இருந்தாலும் மனத்தளவில் பதின்ம வயதினர். பதின்ம வயதினருக்கான குணாம்சங்கள் கொண்டுதான் இருப்பர், அவ்வாறெனில் அதை எப்படிக் கையாளுவது! என்றெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் மதுரையில் வாழ்கிறேன். எனக்கு அத்தகைய கல்வி இல்லை. டேட்டிங் கலாசாரம் இன்னும் வரவில்லை. ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் பாலியல் சுதந்திரமற்று ஒரே சமூக கட்டுப்பாட்டில்தான் வாழ்கின்றனர். இதில் இவர் எதை நினைத்து கவலைப் படுகிறார்? ஆனால் அவரிடம் சொல்லும் தைர்யம் எனக்கு இன்னும் வரவில்லை!

(தொடரும்)

 

1 COMMENT

  1. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவர் வாக்கை வாழ்க்கை நெறியாக கடைபிடிக்கும் கண்ணன் பாராட்ட பட வேண்டியவர்
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறைவனுக்கு உகந்த செயல்கள்

உத்தவ கீதை - 22 - டி.வி. ராதாகிருஷ்ணன் கண்ணா...இந்த யோகம் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத சாதாரணமானவர்களுக்கு மிகவும் கடினமானது என எண்ணுகிறேன். மிகப்பெரிய யோகிகள் மனத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியை அடைகிறார்கள். ஆகையால், முக்தி...

தேவமனோகரி – 22

0
தொடர்கதை                                               ...

அந்த பையன் இதோ என் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்.

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 22 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா நோன்பின் நினைவு படப்பிடிப்பிற்காகத்தான் அந்த ஃபாக்டரிக்குப் போயிருந்தேன். ஷெட்டில் இரண்டு புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. என் மனதில் லேசான பொறாமை பொங்கி எழுந்தது. “எவன்டா இங்க...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...