
அடிப்படையில் நடனக்கலைஞரான உங்களுக்கு நாடகத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
"நான் எனது ஆறு வயதிலிருந்து நடனக் கலையை பயின்று வந்தேன். எனது குரு V.P தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் ஆகியோரிடம் எட்டு வருடங்களாக நடனக் கலையை கற்றுக் கொண்டேன். அதன் பிறகுஶ்ரீமதி. ராதா மற்றும் கலைமாமணி ஶ்ரீமதி. ஊர்மிளா சத்யநாராயணன் என்பவரிடம் நடனக்கலை பயின்றேன். அவரோடு பல விழாக்களிலும், சபாக்களிலும் மேடைநடன நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டேன். எனது திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லவேண்டிய நிர்பந்தத்தால் நடனக்கலையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. பின்னர் 2013ல் நான் இந்தியாவிற்கு திரும்பிய பிறகு நாடகத்துறையில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு நாடகத்துறையில் இருந்த ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக தொடர்ந்து அதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினேன்."
நாடகத்துறையில் உங்கள் அறிமுகம் எப்படி அமைந்தது? உங்களை இத்துறையில் அறிமுகப்படுத்தியது யார்?
"நாடகத்துறையில் திரு மாலி அவர்களின் "மன்னிக்க வேண்டுகிறேன்" என்ற நாடகத்தில்தான் முதன்முதலாக இத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தேன். இந்த நாடகம் எனக்கு ஏராளமான பாராட்டுதல்களையும் அழகான ஒரு வரவேற்பினையும் பெற்றுத் தந்தது. எனது முதல் நாடகத்தில் எனது நடிப்புத் திறன் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தனது 'அமுதசுரபி' இதழில் கவர் ஸ்டோரி எழுதி வெளியிட்டது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு
'காத்தாடி' ராமமூர்த்தி குழுவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தேன்.இப்போது திரு கோமல் சுவாமிநாதன் அவர்களின் மகள் திருமதி. தாரணி கோமல் அவர்களின் நாடகங்களிலும் நடித்து வருகிறேன்."
நீங்கள் மனோரமா ஆச்சிநடித்த வேடத்தில் இப்போது நடித்து வருகிறீர்கள் எப்படியிருக்கிறது இந்த அனுபவம் ?
"மனோரமா ஆச்சி நடித்து கோமல் சுவாமிநாதன் இயக்கிய
"என் வீடு என் கணவன் என் குழந்தை" நாடகம் மிக புகழ் பெற்றது. மனோரமா ஆச்சியால் 300 முறை மேடையேறிய இந்த நாடகம் பலரின் வரவேற்பினையும், பாராட்டுதல்களையும் பெற்றிருந்தது. தற்போது கோமலின் மகள் தாரணி அவர்கள் தனது தந்தையின் கோல்டன் ஜூப்ளி விழாவிற்காக இதனை மறுபடியும் மேடையேற்ற விரும்பினார். அதில் மனோரமா ஆச்சி நடித்த கேரக்டரில் "அன்னபூரணி" யாக நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினார். அப்படித்தான் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அதை என்னால் சிறப்பாக செய்யமுடிந்ததற்கு காரணம் ம்னோராமா அச்சியின் ஓவ்வொரு அசைவையும் மனதில் நிறுத்திக்கொண்டு அதை என்பாணியில் சில் இடங்களில் என் பாணியில் இம்புருவைஸ் செய்து கொண்டது தான். நடிகை மனோரமா நடித்த வேடத்தில் நடித்ததற்காக டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் அவர்களிடம் மேடையிலேயே பெற்ற பெரும் பாராட்டு வாழ்வில் மறக்கமுடியாதது."
நீங்கள் பல்வேறு விருதுகளைக் பெற்றுள்ளீர்கள்… அது குறித்து?
"திரு நாணு அவர்களின் "இப்படிக்கு நந்தினி" என்ற நாடகத்தில் நந்தினியாக நடித்ததில் சிறந்த நடிகைக்கான விருதினை மதிப்புமிக்க மைலாப்பூர் அகாதமியிலிருந்து பெற்றுக்கொண்டேன்.
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருதினை காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் "நீயா நானா"விற்காக 2016 ஆம் ஆண்டு ஒருமுறையும், "நன்றி மீண்டும் வாங்க" நாடகத்திற்காக 2019ல் இரண்டாவது முறையும் பெற்றுக்கொண்டேன். மீண்டும் "நீயா நானா" விற்காக மைலாப்பூர் அகாதமியின் சிறந்த நடிகை விருதினை இரண்டாவது முறையாகவும் பெற்றேன்.
நாடகத்துறையைச் சிறப்பு செய்தமைக்காக 2019 ஆம் வருடம் performance excellence award கிடைத்தது. அதே ஆண்டு சிறந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் விருதினையும் பெற்றுக்கொண்டேன்.
நாடகத்தில் உங்களுக்கு கிடைத்த மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் குறித்து…
'தில்லா ன மோகனம்பாள்' படத்தில் வரும் 'ஜில் ஜில் ரமாமணி' கதாபாத்திரத்தில் நடித்தது பல்வேறு முன்னணி பத்திரிகையில் என்னைக் குறித்து எழுத வைத்தது. காஞ்சி பெரியவரின் வாழ்க்கையை சொல்லும் 'தெய்வத்துள் தெய்வம்' நாடகத்தில் திருமதி. பத்மா சுப்ரமணியம் கதாபாத்திரத்தில் நடித்தது பலரின் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது.
கோமல் தியேட்டரின்" பெண்ணின் நவரசங்களில்" ஆண்டாள், கண்ணகி, சீதா திரௌபதி, ராணி மங்கம்மாள் என பல்வேறு கதாபாத்திரங்களைச் செய்தது எனது நாடக வாழ்வில் பல்வேறு வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தது.
நாடகத்துறையில் கிடைத்த வரவேற்பு உங்களுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு வந்ததா?
"நாடகத்தில் எனது சிறப்பான நடிப்பைக் கண்டு பலரிடமிருந்தும் சின்னத்திரை மற்றும் பெரியத்திரை வாய்ப்புகள் நிறைய வந்தது. 'தாராளப்பிரபு' என்ற திரைப்படத்தில் சின்ன கலைவாணர் விவேக் அவர்களுடன் ஒரு சிறிய கதாபாத்திரம் செய்திருந்தேன். இதைத்தவிர பல்வேறு சபாக்களில், கச்சேரிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஆனால் எனக்கு சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிக்க ஆர்வமில்லாததால் என்னால் அதனைத் தொடர முடியவில்லை. நாடகத்துறையில் முழுநேர நடிகையாக தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறேன்."
நாடக கலைஞராகயிருக்கும் நீங்கள் சொந்த நாடக குழுவைத் தொடங்கப்போவதாக் செய்திகள் வருகின்றனவே? …
" உண்மைதான். எனது சக கலைஞரான பிரேமா சதாசிவம் அவர்கள் தலைமையில் நானும் நண்பர்கள் மகேஷ்வர் மற்றும் சுப்பு அவர்களும் இணைந்து "ஓஹோ புரொடெக் ஷன்" என்ற சொந்த நாடக குழுவை தொடங்கியுள்ளோம். அதில் முதன்முதலாக வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நாரத கான சபாவில் கோடை நாடக விழாவில் திரு. ஶ்ரீவத்சன் எழுதிய "டைட்டில் " என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறோம். சென்னை வாழ் கல்கி வாசகர்களை வந்து பார்த்து கருத்துகளைச் சொல்லும்மாறு அழைக்கிறேன்.
மேடை நாடகங்களுக்கு போதுமான வரவேற்பு கிடைக்காத இக்காலகட்டத்தில் எப்படி புதிய நாடகக் குழு அமைக்கும் எண்ணம் வந்தது?
"நமது பொக்கிஷம் போன்று சிறந்து விளங்கும் நாடக்கலையை அடுத்த தலைமுறைக்கு நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்தது தான் "ஓஹோ புரொடெக் ஷன்". இன்றைய இளைய தலைமுறையினரை நாடகத்திற்கு வரவழைக்க வேண்டுமென்பதே எங்களது லட்சியம். ஆனால், "நாடகத்துறைக்கென போதுமான விளம்பரதாரர்களோ, வருமானங்களோ கிடைப்பதில்லை" என்கிற கசப்பான உண்மையை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது.நலிந்து வரும் நாடகத்துறையை ஊக்கப்படுத்த அரசும் பல்வேறு விருதுகளை அமெச்சூர் நாடகக் குழுவிற்கு வழங்கினால் நாடகத்துறை சிறப்பான வளர்ச்சிபெறும்.
லாவண்யாவின் புதிய குழு ஒஹோ புரொடக்ஷன் ஓஹோ என்று வளர வாழ்த்து சொல்லி விடைபெறுகிறோம்.