0,00 INR

No products in the cart.

தேவமனோகரி -18

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

 

னோகரி ஆச்சரியத்துடன் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவளும் இனியாவும் வந்து அரைமணி நேரம் ஆகிறது. ஆனால் ஐந்து நிமிஷம் கூட தொடர்ந்து மீனாட்சியால் இவர்களுடன் பேசமுடியவில்லை.

“ஹரே முன்னா! க்யா பேட்டா? க்யா கர்த்தே ஹோ?” என்று தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் இரண்டு வயது முன்னாவை சமாளித்துக் கொண்டிருந்தாள்.

முன்னா ஒரு இடத்தில் உட்கார மறுத்தான். இங்கும் அங்குமாக ஓடுவதும், சோபாவில் ஏறி குதிப்பதுமாக அவன் சேட்டை வீடு முழுக்கப் பரவியிருந்தது.

“எதிர் வீட்டுல புதுசா குடிவந்திருக்காங்க மனோகரி. முன்னா என்கிட்டே ஒரே வாரத்துல ஒட்டிக்கிட்டான். எப்பவும் இங்கேதான் விளையாட்டு. எனக்கும் நல்லா பொழுது போகுது.”

“எங்கிருந்து வந்திருக்காங்க?”

“அமெரிக்காவிலிருந்து. ஒரு வருஷம் இங்கே இருப்பாங்களாம். பிறகு மறுபடியும் அமெரிக்கா போகணுமாம்.”

மனோகரிக்கு திக்கென்றது. இப்போதுதான் பழைய உற்சாகம் மீண்டதுபோல் தெரிகிறாள் மீனாட்சி. ஒரு வருஷத்துக்குப் பிறகு இவளுக்கு என்ன ஆகும்?

தேவையற்ற சிந்தனை எதற்கு? வாழ்க்கையில் தருணங்கள் முக்கியமானது. இந்த தருணம் மீனாட்சியின் முகத்தை பூவாக மலர வைத்திருக்கிறது. இதுதான் முக்கியம்.

தானும் சற்று நேரம் பந்தை வீசி முன்னாவுடன் விளையாடினாள் இனியா.

துருதுருப்பான அவன் முகமும்,  செப்புவாய் சிரிப்பும் எவரையும் தொற்றிக் கொள்ளும்.

முன்னாவின் அம்மா வந்து அவனை சாப்பிட அழைத்துக் கொண்டு போனாள். மழை ஓய்ந்ததுபோல் வீடு அமைதியாயிற்று.

“திவ்யா உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கா. இப்பதான் நேர்ல பார்க்கிறேன் இனியா.”

உள்ளே போய் இருவருக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள் மீனாட்சி.

முதல் மாடியில் குடியிருந்த பெண் கையில் குங்குமச்சிமிழுடன் உள்ளே வந்தாள்.

“எங்க பெண்ணுக்கு அடுத்த வாரம் நிச்சய தாம்பூலம், அவசியம் வரணும்” என்று மீனாட்சியை அழைத்தாள்.

மனோகரியின் பக்கம் திரும்பியவள் தயக்கத்துடன் அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

“மனோகரியை ஞாபகம் இருக்கா?”

“நல்ல ஞாபகம் இருக்கு. முன்னே இங்கே குடியிருந்தவங்கதானே? உங்க பையன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சம்பிரதாயமாக விசாரித்துவிட்டுக் கிளம்பினாள்.

மனோகரியை அவள் அழைக்காதது மீனாட்சியை முகம் சிறுக்க வைத்தது. சங்கடத்துடன் மனோகரியைப் பார்த்தாள்.

ராஜன் போனபிறகு தன் சமூக வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்று மனோகரிக்குத் தெரிந்ததுதான்.

மங்கல நிகழ்வுகளில் தான் புறக்கணிக்கப்படுவதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் அவளுக்கென்று ஒரு தீர்மானம் இருந்தது.

நிச்சயமாக புலம்பக்கூடாது. புறக்கணிப்பவர்களைக் குற்றம் சொல்லவும் கூடாது.

முன்பெல்லாம் பெண்களுக்கு சமூக மதிப்பு என்று இது ஒன்றுதான் இருந்தது. இப்போது அப்படியா? படிப்பும் வேலையும் எவ்வளவு பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது!

“ஒரு வார்த்தை உன்னை அழைச்சா என்னவாம்?” பொருமினாள் மீனாட்சி.

“இதிலே வருத்தப்பட ஒண்ணுமில்லை மீனாட்சி. கிடைக்காததையெல்லாம் அப்படியே ஏத்துக்கிறதுதான் கிடைச்ச அந்தஸ்துக்கு நாம் செய்கிற மரியாதை.”

முன்னா இறைத்துப் போட்டிருந்த பொம்மைகளையும், பந்தையும் அதற்கான கூடையில் அடுக்கி வைத்தாள் இனியா.

“என்ன சிஸ்டர் நல்ல இருக்கீங்களா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார் மீனாட்சியின் கணவர்.

“உனக்கு விஷயம் தெரியுமா மனோகரி? இவர் ஃப்ரெண்ட் ஒருத்தர் கல்யாணம் செஞ்சுக்கப் போகிறாராம். இரண்டாம் கல்யாணம். வயசு என்ன தெரியுமா? அறுபத்தி அஞ்சு.” மீனாட்சியின் குரலில் கேலி தொனித்தது.

“ஏன் செஞ்சுகிட்டா என்னவாம்? அவர் என்ன சின்னப் பெண்ணையா கல்யாணம் செஞ்சுக்கப் போறாரு? பொண்ணுக்கும் வயதுசு அறுபது ஆகுது. இரண்டு பேருமே விவாகரத்து ஆனவங்க.”

“குழந்தைங்க இருக்காங்களா?” என்று கேட்டாள் மனோகரி.

“அந்த அம்மாவுக்கு இல்லை. அவருக்கு ஒரு பொண்ணு. கல்யாணம் ஆகி கல்கத்தாவில் செட்டில் ஆகியிருக்கு. அந்தப் பொண்ணுக்கும் இதுல சம்மதம்தான்.”

“எல்லாம் கலிகாலம்” என்றாள் மீனாட்சி.

“பத்தாம்பசலி மாதிரி பேசாதே மீனாட்சி. இதுல என்ன தப்பு இருக்கு? உன் பொண்ணும், பேரனும் பக்கத்துல இல்லேன்னதும் எதிர் வீட்டுக் குழந்தையை சீராட்டணும்னு உனக்குத் தோணுது இல்லே? அது மாதிரிதான் இதுவும்.”

மீனாட்சிக்குத் துருதுருவென்று கோபம் வந்தது. ”அதுவும் இதுவும் ஒண்ணா?”

“பாசத்துக்கும் பந்தத்துக்கும் ஏங்கறதும், யாராவது கிடைச்சா ஏத்துக்கிறதும் மனுஷ சுபாவம். அந்த வகையில் எல்லாம் ஒண்ணுதான்.” அடித்துப் பேசிய கணவரை முறைத்தாள் மீனாட்சி.

இனியா எதிரில் இருந்ததால் அவளால் தொடர்ந்து தர்க்கம் செய்யமுடியவில்லை.

மீனாட்சியும், அவள் கணவரும் பேசிக்கொள்வதை ரசித்து கவனிப்பாள் மனோகரி. இரண்டு செல்லப் பிராணிகள் பிராண்டிக் கொள்வதுபோல் இருக்கும்.

“உனக்கு சம்மர் லீவுதானே இப்போ? நாம எல்லோரும் ஒரு வாரம் கொடைக்கானல் போய்வரலாமா மனோகரி?”

“என்னால வரமுடியாது மீனாட்சி. இந்த சம்மர் லீவை இனியாவுக்கு டெடிகேட் செஞ்சிருக்கேன். அவளுடைய பி.எச்.டி தீஸிஸ் ரெடியாயிட்டிருக்கு. அது முடியற வரையில் எங்க வீட்டுல தங்கிக்கச் சொல்லியிருக்கேன்.”

சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் மனோகரி.

அன்று மாலை வாக்கிங் போனபோது இனியாவும் இணைந்து கொண்டாள்.

வழியில் அம்மன் கோயிலுக்குப் போனார்கள். குருக்கள் குங்குமம் தந்தபோது அதை பெற்றுக்கொண்டு நெற்றியில் தரித்துக் கொண்டாள் மனோகரி. அவளையே கவனித்துக் கொண்டிருந்தாள் இனியா.

எவராவது தந்தால் இயல்பாக ஏற்றுக் கொள்கிறார் மேடம். தரவில்லையென்றால் மனசு சுருங்குவதும் இல்லை. சமன்பட்ட மனநிலை என்று இதைதான் சொல்கிறார்களோ!

• • • • •

றுநாள் மீனாட்சியிடமிருந்து ஃபோன் வந்தது. சிரிப்புக்கு நடுவே அவள் பேசியது ஒன்றும் மனோகரிக்குப் புரியவில்லை.

“சிரிச்சு முடிச்சுட்டு பிறகு பேசு மீனாட்சி” என்றாள்.

“தன் நண்பருடைய கல்யாண ஏற்பாட்டுல இவர் இருக்காருன்னு நேத்திக்கு சொன்னேன் இல்லையா? இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா?”

“என்ன ஆச்சு?”

“ரெஜிஸ்டார் ஆபீசுல கல்யாண மாப்பிள்ளை, பொண்ணு இரண்டு பேரும் அவங்க அப்பா, அம்மாவைக் கூட்டிகிட்டு வரணும்னு சொல்றாங்களாம். மாப்பிள்ளையோட பெத்தவங்களை மேல் லோகத்திலேருந்து தான் கூட்டிகிட்டு வரணும்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் மீனாட்சி.

“சாதாரணமா ரெஜிஸ்டர் கல்யாணத்துல இதுதான் நடைமுறை மீனாட்சி. பெத்தவங்க சம்மதம் இருக்கான்னு செக் பண்ணுவாங்க. ஆனா இளம் வயசுக்காரங்களுக்குத்தான் பொருந்தும்.”

“அட! நீ எல்லாத்துக்கும் ஸீரியசா விளக்கம் சொல்லாதே. இவரு சொல்றாரே எல்லாம் மாறிகிட்டு இருக்குன்னு, அது உண்மையில்லை. ரெஜிஸ்டார் ஆபீஸ் நடைமுறைகூட இன்னும் மாறலை.”

உண்மைதான். இங்கே மனிதர்கள் மாறும் வேகத்துக்கு நிறுவனங்கள் மாற மறுக்கிறது.

“இங்கே வந்து பாரு! இவரு மூஞ்சி விளக்கெண்ணெய் குடிச்சது மாதிரி இருக்கு.”  மறுபடியும் சிரித்தாள் மீனாட்சி.

மனோகரிக்கும் அந்த சிரிப்பு தொற்றிக்கொண்டது.

• • • • •

ரண்டு வாரமாக ஆராய்ச்சியில் மூழ்கியதில் இருவருக்குமே அசதியாக இருந்தது. ஒரு மாறுதலுக்கு சினிமாவுக்குப் போகலாம் என்று தீர்மானித்தாள் மனோகரி.

பாப்கார்னை கொறித்துக் கொண்டு சினிமா பார்க்கிற அனுபவத்தை ரசித்தாள் இனியா. முகத்தில் பழைய சிரிப்பு வந்து உட்கார்ந்துக் கொண்டது.

இந்த சினிமாவில் பாடல்கள் எல்லாமே ஏற்கெனவே பிரபலமாகியிருந்தது. கதையும் வலிமையாகத்தான் இருந்தது. ஆனால் வழக்கமான தமிழ் சினிமா பாணியில் முடிவு இருந்தது.

“இந்த மாதிரி சினிமா எடுக்கிறவங்களுக்கு தைரியமே இல்லை மேடம். கதாநாயகியை காதலனோடு சேர்த்து வைக்காம அவளைக் கைவிட்டுப் போன கணவனோடு சேர்த்து வெச்சிடறாங்க” என்றாள் இனியா.

“கணவனோ காதலனோ,  அது அந்தப் பெண்ணுடைய தேர்வாக இருக்கவில்லை. அதை கவனித்தாயா? காதலன் சொல்கிறான், நீ கணவனோடு போவதுதான் சரி என்று. இவளும் புறப்பட்டுப் போகிறாள்.”

“பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இறுதியாக ஆண்கள்தான் முடிவு செய்கிறார்கள். இதைத்தானே நீங்க சொல்றீங்க?”

“ஆமாம். சில சினிமாக்களில் பெண்களே முடிவெடுப்பதாக காட்டுறாங்க. ஆனால் அந்த வசனத்துக்குப் பின்னால ஒரு ஆண் இயக்குனர்தான் இருக்காரு.”

“இதெல்லாம் மாறணும்னா பெண்களே கதை எழுதி இயக்கினாதான் முடியும்.”

“அப்படின்னு நான் நினைக்கலை. யாராவது ஒரு பெண் அப்படி எடுத்தா உடனே மேஜிக் மாதிரி எல்லாம் மாறிடுமா என்ன?”

இனியாவுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை.

“கேமராவுக்குப் பின்னால இருக்குற டைரக்டர் முதல் திரைக்கு முன்னால இருக்குற ரசிகர்கள் வரை நிறைய மாறியாகணும்.”

“அதுக்கெல்லாம் ரொம்ப காலம் ஆகும் மேடம்.”

• • • • •

ரவு ஒன்பது மணிக்கு மனோகரியின் செல்போன் ஒலித்தால் அநேகமாக அது சிவநேசனின் அழைப்பாகத்தான் இருக்கும். வாரம் இரண்டு மூன்று முறையாவது அழைத்துவிடுகிறார்.

இலக்கியம்,  தத்துவம், கல்வித்தரம் என்று பல விஷயங்களைத் தொட்டு உரையாடல் வளரும்.

மனோகரிக்கு இது ஒரு புதிய அனுபவம். அவளுடன் வேலைபார்க்கும் எவரும் இவ்வளவு விஷய ஆர்வத்துடன் பேசுவதில்லை. இப்போதெல்லாம் சிவநேசனின் அழைப்பை அவளே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த கேள்வியையும் அவர் கேட்பதில்லை. இது மனோகரிக்கு சௌகரியமாக இருந்தது. இவளும் அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை.

சிவநேசனுடன் விவாதிக்கும் விஷயங்களை மறுநாள் இனியாவிடமும் பகிர்ந்து கொள்வாள்.

இனியாவுக்கோ வேறு கவலை. இப்போதெல்லாம் மணிகண்டன் முன்புபோல் பேசுவதில்லை. என்ன காரணம் என்றும் அவளுக்குத் தெரியவில்லை.

ஒரு நல்ல நண்பன் விலகிப்போவதன் வலியை அவ்வப்போது அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். மாரிமுத்து செல்போனில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

விஷயம் என்னவாக இருக்கும் என்பதை மனோகரியால் ஊகிக்க முடிந்தது. ஆனால் அவள் இனியாவிடம் அதை சொல்ல விரும்பவில்லை. நடப்பதை ஒரு மௌன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...