காங்கிரஸ் காப்பாற்றப்படவேண்டும்

 காங்கிரஸ் காப்பாற்றப்படவேண்டும்
Published on

தலையங்கம்

ந்திய அரசியலில் தவிர்க்கமுடியாத வலுவான ஒரு சக்தியாக இருந்த காங்கிரஸ் கட்சி இன்று பரிதாபமான நிலையில் நிற்கிறது.

நேரு, இந்திரா, ராஜீவ்காந்திக்குப் பிறகு பெரிய அளவில் எழுச்சி பெற முடியவில்லை என்றாலும்,  2004 முதல் 2014 வரை தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருக்க முடிந்தது. அதன்பின்  இன்று வரை அத்தனை தேர்தல்களிலும்  சரிவு. 2019 மக்களவை தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்ததால் தலைவர்  பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். புதிய தலைவர் இன்று வரை தேர்வு செய்யப்படவில்லை. உடல்நலக்குறைவு இருந்தாலும் சோனியாதான் தலைவர். கட்சிக்குள் நேரு குடும்ப தலைமைக்கு எதிர்ப்புக்குரல் ஆங்காங்கே எழுந்து குழுக்கள் உருவாகியிருக்கின்றன.  பலர் பதவி ஆசைக்காகவும் சொந்த லாபங்களுக்காகவும்  விலகிவிட்டார்கள். தலைமை மாலுமி இல்லாத கப்பலாக  முன்னே செல்ல முடியாமல் இருக்குமிடத்திலேயே  சுழன்று கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

மத்தியப்பிரதேசம், அருணாச்சலம், கோவா போன்ற மாநிலங்களில்  ஒரு சிலர்  தங்கள் பதவி ஆசையால் காங்கிரஸ் ஆட்சியையே கவிழ்த்து  விட்டார்கள்.

இந்த நிலையில்  இந்திய தேர்தல்களில் புதிய வியூகங்களை வகுத்துப் பல மாநிலங்களில் தேர்தல் வெற்றிக்கு உதவிய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கு உதவ முன்வந்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரசில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சை முதல் பிரசார யுக்திகள் அத்தனையும் தெரிவித்தார். 800 பக்க அறிக்கை,  ராகுல், பிரியங்கா, சோனியாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.  "காங்கிரஸின் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது" என்ற நம்பிக்கை கீற்று வெளிப்பட்டது. தொண்டர்கள் மாநில தலைவர்கள் மகிழ்ச்சியாயிருந்தனர்.

ஆனால், காங்கிரசில் சேர விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்காததால்  மீண்டும் காங்கிரஸ் கட்சி இருந்த நிலைக்கே திரும்பியிருக்கிறது. காங்கிரஸ் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள விரும்புகிறது. அவர் கட்சி சார்பற்ற ஆலோசகராக மட்டும் இருக்க விரும்புகிறார்.

இது காங்கிரஸ் கட்சியின் பிரச்னை என்று மட்டும் ஒதுங்க முடியவில்லை. தேசம் முழுவதும் வியாபித்த ஒரு கட்சி திடீரென சரிவதும், வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் தவிப்பதும், அதுவும் இன்றைய சூழலில் ஜனநாயகத்திற்கு ஆபத்து.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பத் தலைவர்கள் தங்கள் தலைமையை கெளரவ பிரச்னையாகப் பார்க்காமல்  விலகி கட்சியைக் காப்பாற்ற  வேண்டும்.

ஜனநாயகம் வலுப்பெறக் காங்கிரஸ் கட்சி  இந்த தலைவர்களுக்குத் தேவையோ… இல்லையோ…  இந்தியாவுக்கு நிச்சயம் தேவை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com