0,00 INR

No products in the cart.

கடவுள் கண்மூடிக்கொள்ளும் தருணம்

ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  – 18

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

வனை நாம் முரளி என்று அடையாளப்படுத்திக் கொள்வோம். கதையின் நாயகன் இன்றும் என் சொந்த ஊரான ‘செம்பில்’ இருப்பதால்தான் பேரை மாற்ற ஆசைப்படுகிறேன். என் பால்ய கால நினைவுகளில் இன்னும் முரளி அழிந்து போகாமலிருக்கிறான். பள்ளிக்கு  அபூர்வமாகவே முரளி வருவான். சில நேரங்களில் முரளி தன் அப்பாவுடன் சேர்ந்து அவனைவிட மிகப் பெரிய கோலால் தேங்காய் நாரை அடித்துக் கொண்டிருப்பான். இல்லையென்றால் கயிரைச் சுமந்தபடி அதை விற்பதற்குப் போவான். அதுவுமில்லையென்றால் கூலி வேலைக்குப் போவான். இதில் எந்த வேலையும் இல்லை என்றால்தான் முரளி எங்களோடு பள்ளிக்கு வருவான். இதற்கிடையில் இடைவெளியின்றி ஒவ்வொரு வருடமும் முரளியின் அம்மா பிரசவித்துக் கொண்டே இருக்கும் குழந்தைகளையும் அவன் பார்த்துக் கொள்வான்.

ஒவ்வொரு வருடமும் முரளி பழனிக்குப் போவான். பழனிக்குப் போவதென்பது ஒரு மாதம் முழுக்க மொத்த ஊரையும்  சுற்றி அலைந்து திரிந்து பிச்சை எடுத்து  சேகரித்தப் பணத்தில் பழனிக்குப் போவான். கேரளாவிலிருந்து பழனிக்குப் போக முடியாத எத்தனையோ பேருடைய பிரார்த்தனைகளையும் வழிபாடுகளையும் அவர்கள் சார்பாக கொண்டுபோய் முருகனிடம் முரளிதான் சேர்த்தான். அந்த வருடமும் அவன் மஞ்சள் வேட்டி கட்டி, விபூதி பூசி பழனிக்குப் போக தயாரானான். அந்த நாட்களில் அவன் நண்பர்களுடன் அதிகம் பேச மாட்டான். நாங்களும் பயபக்தியுடன்தான் அவனை நெருங்குவோம்.

பிச்சையெடுத்து காசு சேர்த்து போனால்தான் அதிக அருள் கிடைக்குமென்று முரளி சொல்வான். நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரிடமும் கேட்பான்.  காலையிலிருந்து மாலை வரை பிச்சைக்காக நடந்து திரிவான். தட்டில் காசு போட்டால், கருணையுடன் கூடிய முகத்தோடு அவர்களுக்கு முரளி ஒரு துளி விபூதி கொடுப்பான். அந்த விபூதி கற்பூர வாசனையுடன் இருக்கும். இந்துக்கள் அல்லாதவர்கள்கூட முரளிக்குப் பணம் கொடுப்பார்கள். அது கடவுளின் கருணை வேண்டியோ அல்லது அவன் மீதுள்ள கரிசனத்திலோ என்பது தெரியாது. கடவுளின்  அருளுக்கு ஜாதி பேதமில்லையே!

முரளி பழனிக்குப் போனால் நான்கைந்து நாட்கள் கழித்துதான் வருவான். வரும்பொழுது மொட்டை அடித்திருப்பான். பழனியிலிருந்து திரும்பி வந்த பிறகும் கேட்பவர்களுக்கு அருளோடு விபூதி பூசிவிடுவான்.

இந்த வருடம் முரளி பழனிக்குப் போனவுடன் நான் தனிமையை உணர்ந்தேன். எப்போதும் அவனுடனேயே இருந்த எனக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனியாகச் சுற்றிக் கொண்டிருந்த நான் அவனுடைய வருகையைத் தெரிந்துக்கொள்ள அவன் வீட்டிற்குப் போனேன்.  அவனுடைய வீட்டில் எங்கும் போவதற்கான சுதந்திரம் எனக்கிருந்தது. எங்கும் என்றால் மொத்தத்தில் ஒரு படுக்கை அறையும், வராந்தாவும் முன்னாலும் பின்னாலும் கொஞ்சம் காலி இடத்துடன் கூடிய கூரைவீடு அது.

முரளி பல விஷயங்களில் எனக்குக் குருவாக இருந்தான். தூண்டில் போட, படகு ஓட்ட, பழக்கமில்லாத வழிகளை அறிமுகப்படுத்த என்பதில் தொடங்கி பல காரியங்களுக்கும் முரளிதான் என் துணை. நமக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பவன் என முரளிமீது எனக்கு மரியாதையே உண்டு. முரளிக்கோ ‘பெரிய வீட்டு’ப் பையனான என்னை, தான் கிழித்த கோட்டில் நிறுத்தி வைக்க முடிவதில் சிறிய கர்வமும் உண்டு. என்னை நிலைநிறுத்திக் கொள்ள நான் அதைச் சகித்துக் கொண்டேன். என்றைக்காவது ஒருநாள் அந்த கர்வத்தைத் தகர்க்க நானும் காத்துக் கொண்டிருந்தேன்.

அவனைப் பார்க்கலாமென சட்டென வீட்டினுள் நுழைந்த என்னை முரளி சற்றும் எதிப்பார்த்திருக்கவில்லை. தலையை மொட்டை அடித்திருந்த முரளி சப்பணமிட்டு அமர்ந்து கஞ்சி குடித்துக் கொண்டிருந்தான். வெளுத்துப்போன முகத்துடன் என் கண்களை நேரிட்டான்.

“என்னடா நீ பழனிக்குப் போகல?”

முரளி பேசவில்லை.

“அப்ப மொட்டை எப்படிடா?”

அப்போதும் முரளி பேசவில்லை. அவன் பழனிக்குப் போகாமலேயே கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறான் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தது. இந்த ஏமாற்று வேலையைத் தகர்த்து தூளாக்குவது என்ற முடிவோடு அவன் வீட்டு வாசலை வேகமாகக் கடந்தேன். யாரிடமெல்லாம் இதைச் சொல்ல வேண்டுமென்ற பட்டியல் மனதில் ஓடியது. ஆனால் ஓடிவரும் நதிக்கு அணையிடுவது போல முரளியின் அம்மா என்னைத் தடுத்து இடறின குரலில் பேசினார்.

“தயவு செய்து மோன் இதை யாரிடமும் சொல்லக்கூடாது. அவனோட அப்பா படுத்த படுக்கையாக இருப்பது உனக்குத் தெரியுமில்லையா? பத்து நாளா எனக்குக் கூலி வேலை கிடைக்கல. அவருக்கு மருந்து வாங்கக் காசில்ல. குழந்தைகள் எல்லாம் பட்டினி. அவருக்கு ஒடம்பு ரொம்ப முடியாத நாட்களில் வேலை கெடச்சாலும் என்னால போக முடியல. முரளி பிச்சை எடுத்திட்டு வர்ற காசில்தான் ஒரு மாசமா நாங்க அரை வயித்து கஞ்சி குடிக்கிறோம். அடுத்த மாசம் வேலை கெடக்கற வரைக்கும் எங்களுக்கு வேற வழியில்லை.”

இரண்டு கைகளையும் கூப்பி, கண்ணில் நீர் ததும்ப தன் மகனொத்த பையனிடம் இறைஞ்சுகிறோமே என்ற துக்கம் மேலிட, பேசிய அந்தத்தாயின் உருவமும் வார்த்தைகளும் என் நினைவிலிருந்து இன்றும் அகலாதது. நான்கைந்து நாட்கள் வீட்டில் ஒளிந்திருந்த பின் முரளி திரும்பி வந்தான். பலருக்கும் பிரசாதமும் கொடுத்தான். பிறகு அதைப் பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை. இதுவரை நான் யாரிடமும் பகிர்ந்து கொண்டதுமில்லை. ஆனால் முரளிக்கும் எனக்குமான பந்தம் கயிறுபோல மேலும் மேலும் இறுகித் திடமானது.

பழனி வழியாக என் பயணம் அமையும் போதெல்லாம் நான் முரளியைப் பற்றி யோசிப்பதுண்டு. முருகன் ஒருபோதும் முரளியைச் சபிக்கமாட்டார் என்றே நான் இன்றும் நம்புகிறேன். மனிதனின் அத்தியவாசியத் தேவையான உடைக்கும், உணவுக்குமாக கடவுளே காட்டிய எளிய வழிதான் அதென்றும், அவருடைய கருணையே அவனுடைய தட்டில் விழுந்த சில்லறையாகவும் நான் பார்க்கிறேன்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு நான் முரளியையும் அவன் குழந்தையையும் என் சொந்த ஊரில் சந்திக்க நேர்ந்தது. இப்போது குடும்பம் நல்ல நிலையில் இருந்தது. வேலையும் தகுந்த கூலியும் கிடைக்கிறது. குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறான். பழைய பொய் சொல்லிப் பிழைக்க வேண்டிய தரித்திரமில்லை. ஆனாலும் முரளி மஞ்சள் வேட்டி கட்டி திருநீறு பூசியிருந்தான்.

“இதென்னடா இப்பவும் பழனிக்குப் போறீயா?”

“ஆமான்டா. அன்றைய சம்பவத்திற்குப் பிறகு நான் ஒரு வருடம்கூட பழனி முருகனைத் தரிசிக்காமல் இருந்ததில்லடா. இப்பவும் பிச்சை எடுத்துதான் போகிறேன். இந்தத் தடவை பையனும்கூட வரான். கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியா போகுது.”

இத்தனை வருடங்கள் கழிந்தும் வேண்டுதலுக்காகவும் மனதிருப்திக்காகவும் இப்போதும் பிச்சை எடுத்துதான் போகிறேன் என்று முரளி சொன்னபோது பக்தியால் உருகிய  அவன் இதயத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது. பிராயச்சித்தத்தைத்  தரிசிக்கத் தேடிப்போகும் மனதை என்னால் உணர முடிந்தது.

இப்படி கரைந்து கடவுளை நேசிக்கவும், சமர்ப்பிக்கவுமுள்ள மனது எனக்கும் வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

(தொடரும்)

 

1 COMMENT

  1. தன் பால்ய நண்பன் முரளி பற்றி மம்முட்டி நினைவு கூர்ந்தது, சுவாரஸ்யம் பிளஸ் சத்து மிக்கதாகவும் இருந்தது. அதில் உண்மையான கலைஞனின் ஈரம் மிகுந்த கருணை உள்ளத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. சபாஷ் தொடர்!

    நெல்லை குரலோன்
    பொட்டல்புதூர்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...