0,00 INR

No products in the cart.

சிலபஸில் மாற்றங்கள்….

 னக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசமாறது. தனிக் குடித்தனம் எல்லாம் போக சான்சே இல்லை. ஏன்னா அவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. எனக்கு அதில் எந்த கஷ்டமுமில்லை. எனக்குக் கொடுத்த சீர் சினத்தியில் குறை ஒன்றுமில்லை என்று என் இன்-லாஸ் சொல்லிட்டாங்க. நான் நடமாடும் குத்து விளக்காம். வீட்டுக்கு வந்த மகாலட்சுமியாம்….கொண்டாடினார்கள். அப்புறம் என்ன இந்த இளவரசியை கையில் பிடிக்க முடியுமா? என் முதலிரவு…என் வாழ்வின் ஆரம்பம் எனக்கு நியாபகம் வருகிறது. புதுத் தாலி என் கழுத்தில் மின்னியது…பார்கவி மாலினி என்னை அலங்காரம்  செய்கிறார்கள். எனக்கு கூச்சமாக இருக்கு….அவர்கள் பேச்சு அப்படி….

“ஏய் பத்மா….காது அவுட்டா? கேட்டுக்கிட்டே இருக்கேன் பேசாம இருக்கே.” அதட்டினாள் அத்தை மகள் பார்கவி.

“அவ எங்க இங்கே இருக்கா? ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் சாச்சசாச்சசா’ ன்னு மனசுக்குள்ளே பாடிட்டு இருக்கா. அவளுக்கு எப்படி காது கேக்கும்?” என்றாள் மாலினி என் சித்தி பொண்ணு.

“என்னங்கடி இது கூத்து? சீக்கிரம் அலங்காரம் பண்ணி கூட்டி வாங்க. நல்ல நேரம் போயிட்டு இருக்கு…” என்று சித்தி அலமேலு தலை நீட்டி அறிவித்து விட்டுப் போனாங்க. “சரி சரி இதோ வந்திட்டே இருக்கா…” பிசாசுகள் பதில் குரல் கொடுத்தன. இந்த குறும்பு பெட்டகங்கள்கிட்டே அகப்பட்டு பீஸ் பீஸ் ஆயிட்டுருக்கேன்.

“பத்மா….இந்தப் பச்சை புடைவையை கட்டிக்க. சிவப்பு நெக்லஸை போட்டுக்க. நீல பொட்டு வச்சுக்க…” என்றாள் பார்கவி.

“என்னடி சொல்றே? மாட்சாவே இல்லே… இதை எப்படி?… காமெடி பீஸா நிக்கப் போறா. பட்டிக்காடுன்னு சொல்லிடப் போறார்.” மாலினியின் பயம்.

“பச்சை புடைவை கிரீன் சிக்னல் காட்டுது. சிவப்பு நெக்லஸ் ஹாண்டில் வித் கேர் அப்படின்னு சொல்லுது. நீல பொட்டு மாப்பிள்ளை ஷர்ட்டில் ஒட்டப் போவுதுன்னு தெரியுது…..மொத்தத்திலே “ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு இல்லாமல் வாழ்வது ஓஓ, ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில் இல்லாமல் போகுது ஓஓன்னு” உருக வேண்டாமா? அதுக்குத்தான் .” மாலினி உளற ஒரே சிரிப்பும் கும்மாளமும்தான். என்னை ஒரு வழியாக அறையில் தள்ளி விட்டார்கள். கேலியும் கிண்டலையும் மூடிய கதவு மௌனமாக்கிவிட்டது. நான் நர்வசாக நின்றேன். அரைச் சிரிப்பும் லேசான வெட்கமும்…

“ஹே பத்மா வா வா… என்ன சிலை மாதிரி நிக்கிறே? மெழுகு டாலு நீ, அழகு ஸ்கூலு நீ…நாம தானே செம ஜோடி…” என்று சந்திரன்…என் கணவன் வரவேற்க, நீங்களுமா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். சினிமா தாக்கம் எப்படி எல்லாம் பரவிட்டு இருக்கு… ஸ்ஸ் அப்பா தாங்கலை…

“உக்காரு உக்காரு. எனக்கு என்னென்ன பிடிக்கும்னு சொல்றேன். கொய்யாப் பழம்…புளிக் காச்சல் சோறு….வடை போட்ட சாம்பார்…”

நான் சிரித்துவிட்டேன். “என்ன சிரிக்கிறே? உனக்குப் பிடிக்காதா? சரி விடு…”

“அதுக்கில்லே… முதல் முதல் தனிமையில் இருக்கோம். இப்படி உணவு பத்தியே பேசறீங்களேன்னு தான்…”

அந்தக் காலத்திலே   ‘முள்ளும் மலரும்’ படத்திலே ஒரு பாட்டு வருமே. அது எனக்கு  ஞாபகம் வருது. ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா’ன்னு நாயகி முதல் இரவில் பாடுவா. தமாஷ். யாராவது முதலிரவில் இப்படி பாடுவாங்களான்னு படம் பார்த்திட்டு வந்து அம்மாவும் சித்தியும் விவாதம் பண்ணினதா சித்தி சொல்வாங்க. இதோ ஒரு எக்சாம்பிள் கண் முன்னேன்னு சித்திக்கிட்டே சொல்லலாமா? வேண்டாம் என் கணவரை லூசுப் பைய்யான்னு நினைச்சிடப் போறாங்க…

சந்திரன் என் வாழ்வின் விடிவெள்ளி. ஜோக்கும் அன்பும் கலந்து அவர் என்னை லவ் பண்ணுவது எனக்கு ஜில்லுன்னு ஐஸ்கிரீமும், சூடா குலோப்ஜானும் ஒண்ணா சாப்பிட்டா மாதிரி இருக்கும்….

மூணு மாசம் இப்படியே குஷாலா போச்சு. இன்னமும் போகும்… ஆனா?

எல்லா சந்தோஷத்துக்கும் இடையில் ஒரு உறுத்தல் என் மனசில் இருக்கு. அது தான் ஹேமந்த் பத்திய சமாசாரம். நான் அவனைக் கல்லூரி நாட்களில் லவ் பண்ணினேன். அவனும் தான். அவன் மும்பையைச் சேர்த்தவன். ஆனா நல்லா தமிழ் கதைப்பான். ஏன்னா அவன் அம்மா தமிழ். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். ஹிந்தி கத்துக்கிறேன் பேர்வழின்னு நானும் சில வார்த்தைகளை அவனிடமிருந்து கற்றேன். அச்சா அச்சான்னு வீட்டிலே நான் சொல்ல ஆரம்பிச்சேன். அப்பா கடுப்பாயிட்டாரு.

“என்ன நீ அச்சா கிச்சான்னு சொல்லிக்கிட்டு. ஒரு தமிழ் விரிவுரையாளர் வீட்டுப் பெண் இப்படி பேசலாமா?….” என்று சொல்லி சொல்லி கொன்னுட்டார். அதுக்கப்புறம் அச்சா சொல்லவே அச்சம் ஆகிவிட்டது.

ரெண்டு வருஷக் காதல்….சினிமா, பார்க், ரெஸ்டாரென்ட் எல்லாம் சுத்தினோம். அப்பா என் ஜாதகத்தை கையில் எடுத்த போது ஹேமந்த் பற்றி சொன்னேன். அவ்வளவு தான் ரஷ்ய ஏவுகணை போல் எரித்து தள்ளிவிட்டார்.

“என்ன நினச்சிட்டு இருக்கே? இத பாரு…..விமான நிலையத்திலே, புகை வண்டி நிலையத்திலே….வங்கியிலே…இப்படி எல்லா இடத்திலேயும் ஹிந்தி தாண்டவமாடுது. வீட்டிலும் என் பேரன் பேத்தி ஹிந்தி பேசிட்டு திரிவதை நான் பார்க்கணுமா? இதெல்லாம் சரிபட்டு வராது…” இப்படி ஒரு டேஞ்சர் என் காதலுக்கு வரும்ன்னு நான் எதிர்பார்க்கவேயில்லே….

“அவர் நல்லா தமிழ் பேசுவாரப்பா…அவர் அம்மா பக்கா தஞ்சாவூர் பக்க தமிழ் பெண்.” இந்த பதிலில் குளிர்ந்துவிடுவார் என்று நினைத்தேன்.

அதெல்லாம் எடுபடவேயில்லை. ‘உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழின்னு’ மெதுவா சொல்லிப் பார்த்தேன்  … மண்ணாங்கட்டின்னு பதில் வந்தது. ரெண்டு வருஷம் போராடிட்டு, ஹேமந்தும் வெறுத்துப் போய் மேல் படிப்புக்கு அமெரிக்கா போயிட்டான். சந்திரனை எனக்கு கட்டி வச்சிட்டாங்க. எல்லாக் காதலும் நிறைவேறுமா என்ன? காதலும் கடந்து போச்சு. இப்ப நான் சந்திரனோடு மகிழ்ச்சியாதான் இருக்கேன். கண்ணீர், காதல் வலி , எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வங்கக் கடலில் எறிஞ்சிட்டேன்.

தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அவர்கிட்டே உண்மையை சொல்லிட்டேன். வேறு யாராவது இவரிடம் சொல்லறதுக்கு முன்னாடி சொல்லிடணும். இல்லேனா தப்பா போயிடும்ன்னு தோனுச்சு…’நடுவிலே வந்த நாலு பக்கம். மறைந்து போன அத்தியாயங்கள். கடல் கொண்டு போன லிமோரியா கண்டம்’ மாதிரின்னு உருக்கமா நிஜத்தை சொன்னேன்.

அவ்வளவுதான். எல்லா ஹாப்பி மூடும் போய், காதல் ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சுட்டார். நீ சிரித்தால் நான் சிரிப்பேன், நீ அழுதால் நான் அழுவேன் ரேஞ் காதல், நீ யாரோ நான் யாரோன்னு ஆகிப் போச்சு.

அப்பா அம்மாவுக்கு தெரியக் கூடாதாம். ஆக்டிங் கொடுக்கச் சொன்னார். காதல் நாடக மேடையில் நடிச்சிட்டு இருக்கோம். கஷ்டம் வலி என்று எதுவும் தெரியாமல் வெற்றி மட்டுமே வாழ்க்கை என்று வளர்ந்து வந்த என் கணவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது எனக்குப் புரிந்தது.

“ப்ளீஸ் சந்திரன். அதெல்லாம் வேண்டாத ஸ்டஃப். மறந்திட்டேன்…” என்றேன்.

“ஒ…வாழ்க்கை என்ன சேனலா? ஒரு சேனல் பிடிக்லைன்னா இன்னொரு  சேனலுக்கு மாத்திக்கிட?…” என்றார்.

“டி.வி. யே ஓட்டையாயிடுச்சு. தூக்கிப் போட்டாச்சு. அப்புறம் எங்க சேனலை மாத்த.? என் மனசுக்கு பிடிச்ச டி.வி இப்போ சந்திரன் டி.வி தான்.”

முறைத்துப் பார்த்தார். பகலில் அலுவலகம் அது இதுன்னு போயிடும்…இரவு அருகருகே இருந்தும்…வெகு தூரத்தில் மனம்.

“எனக்கு உங்களை ரொம்பம் பிடிக்குது சந்திரன். மன்னிச்சிடுங்க ப்ளீஸ். இத பாருங்க…” நோட்டை பிரிச்சுக் காட்றேன். ஐ லவ் யூ சந்திரன் என்று நோட்டு முழுக்க கை வலிக்க எழுதியிருந்தேன். பார்த்தார். சிரிப்பாருன்னு நினைச்சேன். “இப்படித் தானே அவனுக்கும் எழுதிக் காட்டியிருப்பே?” என் மனசு விம்மி கண்ணில் ஜலம் கோத்தது.

டிபன் பாக்சை கையில் எடுத்துக்கொண்டு மூச்சிரைக்க தெரு முனை வரை ஓடி வந்து கொடுக்கிறேன் அவரிடம் “மறந்திட்டு…போயிட்டீங்க மதிய சாப்பாட்டை…” என் கண்ணில் அன்பு தெரியுதா? பாருங்க சந்திரன்…வழக்கம் போல் என் கன்னத்தைக் கிள்ளி லட்டுன்னு சொல்லுங்களேன்….

“நான் மறக்கலை…இப்படித்தானே அவனுக்கும் கொடுத்திருப்பே?” வாங்காமலே போயிட்டார். எனக்கு கோபம் வரலை. மாறாக அவர் கோபத்தை ரசிக்கிறேன். அவர் முகத்தை கையில் ஏந்தி அச்சோ என் மன்னனுக்கு கோபம் வந்திடுச்சான்னு? கொஞ்சனும் போல இருக்கு. மூணு மாசம் சொர்க்கத்தைக் காட்டிட்டு இப்ப அதை ஷட் டவுன் பண்ணிட்டா எப்படி? என்னாலே என் லவ்வின் ஃப்ளோவை கட் பண்ண முடியலையே.!

ஷூ எடுத்துக் கொடுத்து….குளிச்சதும் போட்டுக்க ட்ரெஸ் எடுத்து வைச்சு, பர்சில் கிரெடிட் கார்ட்… அந்தக் கார்ட், இந்தக் கார்ட் எல்லாம் எடுத்து வச்சு… பாரு பாரு என் கல்யாணம் உன்னோடுதான்னு விளம்பரப்படுத்தி, கெஞ்சி மிஞ்சினாலும்…சர்தான் போடி வாயாடின்னு உர் முகத்தோடவே இருக்கார். “ஹேமந்த் எனக்கு யாரோ… அவன் மூஞ்சி கூட மறந்திடுச்சு..” எழுதி அவர் பாக்கெட்டில் வைக்கிறேன்….சாயங்காலம் சொல்றார்…

“ஆனா…அவன் உன்னை மறக்கலையே? எப்படியோ மோப்பம் பிடிச்சு உன்னைப் பார்க்க நாளைக்கு மாலை வரான். அவனுக்கு என்னை எப்படித் தெரிஞ்சுது? விலாசம் எப்படி தெரியும்? நீ தானே கொடுத்தே? ரோமியோ—ஜுலியட் நாளைக்கு சந்திச்சுக்கோங்க….அப்பாவும் அம்மாவும் வெளில போறாங்க. அவனுக்கு விருந்து வை….தேடினேன் வந்ததுன்னு டான்ஸ் ஆடு.”

விஷயம் மேட்ச் பாக்ஸ் குச்சி போல் பத்திக்கிச்சா? அய்யோ என்ன செய்வேன்? அவனை யார் வரச் சொன்னது? நீ வருவாய் என நான் நினைக்கலையே டா பாவி…..மூஞ்சிலே ஆசிட் ஊத்த வரானோ? வந்தேவிட்டான். அதே உயரம், கம்பீரம்… இதுக்கு ஒன்னும் குறை இல்லை.

நீள சோபாவில் அம்சமாக உட்கார்ந்து கொண்டான்.

“ஹே பத்மா…. அப்ப பார்த்த மாதிரியே இருக்கியே? நாம லவ் பண்ணியது சாருக்கு தெரியுமா? இந்தா பேபி உனக்கு பிடிச்ச ஸ்வீட், பாதாம் அல்வா. மறக்கலை பாத்தியா? நீ மறந்திருப்பே…என்ன சமைச்சிருக்கே? சாருக்கு பிடிச்ச மாதிரியா எனக்குப் பிடிச்ச மாதிரியா?…” அமெரிக்கா வாசம் அவனுக்கு இந்தத் துணிவைக் கொடுத்திருக்கா? ஓவரா போறான்.

“அவருக்கு பிடிச்ச மாதிரி தான் சமைச்சிருக்கேன். உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி எனக்கு என்ன? எங்க சந்தோஷத்தை கெடுக்க வந்தியா?”

என்னவர் மௌனமா பார்த்திட்டு இருக்கார். எனக்கு வயத்தை கலக்குது. எப்படியோ சாப்பாடு பரிமாறி…சாப்பிட்டு முடிக்கிறான்.

“ரொம்ப தேங்க்ஸ் வந்ததுக்கு. இனிமே வராதே போயிடு…” என்றேன்.

“கூல்…கூல்…ஒரு முக்கியமான வேலை எனக்கு இருக்கு. அதான் வந்தேன்.  சந்திரன்…நான் நல்லா தமிழ் பேசறேன். ஆனா பத்மாவின் அப்பாவுக்கு அப்பவும் என்னைப் பிடிக்கலை. ரைட் விலகிட்டேன். நான் ஒரு ஃபிரெஞ்ச் பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கேன். அவளுக்கு ஆங்கிலமும் தெரியாது ஹிந்தியும் தெரியாது. எனக்கு ஃபிரெஞ்ச் தெரியாது. ஆனாலும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா வாழறோம். மொழி, நாடு, ஜாதி, சமயம் இதெல்லாம் கணவன் மனைவிக்கு ஒரு பொருட்டே இல்லே. நீங்க ரெண்டு பேரும் ஒரே மொழி பேசறவங்க… ஆனா உங்களாலே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழ முடியலையே? சந்திரன்…பத்மா மனசிலே நான் இன்னும் இருக்கேன்னு நீங்க நினைக்கிறதும்…..நான் அவள் வாழ்க்கையை கெடுக்க வந்திருக்கேனோன்னு, அவள் நினைக்கிறதும்….என்ன இது சிறு பிள்ளைத்தனம்? சிலபஸ் மாறிடுச்சு….புது சிலபஸ். அதுக்கு தகுந்த மாதிரி பிரிப்பேர் பண்ணிக்கோங்க. உங்க தேர்வுக்கு நீங்கதான் கேள்வித்தாள் எழுதறீங்க…அப்ப அதுக்கு பதில் உங்களுக்கு மட்டுமே தெரியும். அடுத்தவங்க கேள்வித் தாளுக்கு விடை தேடாதீங்க….ரெண்டு பேரும் ஹாப்பியா இருங்க. நான் பருந்து இல்லே….உங்க வாழ்க்கையை கவ்விட்டு போக. நான் உங்களைப் பொறுத்தவரை பாஸிங் கிளவுட்ஸ். ஓ.கே. செட்டில் ஆகுங்க. சந்திரன்…உங்க ஃபிரென்ட் ராஜேஷ்தான் சொன்னான், நான் உங்க வாழ்க்கையில் சிக்கலா இருக்கேன்னு. அவன் எனக்கும் ஃபிரென்ட் தான். அதான் தெரிஞ்சுக்கிட்டு, கிளியர் பண்ண வந்தேன்…..” மழை மாதிரி பேச்சு துயோமாய் வந்து விழுது.

அவர் கையையும் என் கையையும் பிடிச்சு ஒன்று சேர்க்கிறான். “குட் லக்” என்றான். விடை பெற்றான். வாழ்கையை எப்படி வாழணும்னு மத்தவங்க கிளாஸ் எடுக்கலாம். அதை நாம தான் புரிஞ்சுக்கணும். நேத்து சாப்பிட்ட அதே உணவு இன்னிக்கும் வேணும்னு கேக்கக் கூடாது. நேத்து உணர்ந்த உணர்வோடுதான் இன்றும் வாழ்வேன்னு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

நா.பிச்சைமூர்த்தி ஒரு புதுக் கவிதையில் சொல்வார்; அவர் எழுதிய ‘வார்த்தை’ என்னும் கூண்டுக்குள் ‘அழகு’ என்னும் கிளி வந்து உட்கார்ந்து கொண்டது என்று.

எங்கள் நெஞ்சக் கூட்டிலும் லவ் பர்ட்ஸ் வந்து உட்கார்ந்துக் கொண்டது. தேங்யூ ஹேமந்த்.

 

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...