0,00 INR

No products in the cart.

விலங்குகளுக்கு தனி மொழி இருக்கிறதா?

? விளையாட்டு நகரம் உருவாகப் போவதாக அறிவித்திருக்கிறார்களே ?
– சண்முக சுந்தரம், ஈரோடு

! ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத்தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அறிவித்திருக்கிறார்.  நமது இளைஞர்கள் ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, தமிழகத்தின் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்றும்  சொல்லியிருக்கிறார். பாராட்டபட வேண்டிய நடவடிக்கைகள்  இது.   தமிழக மாணவர்களுக்கு பல  விளையாட்டுகளில் திறன் இருந்தும் தகுந்த பயிற்சியும் வழிகாட்டலும் இல்லாதால் புதிய உயரங்களைத் தொட முடையவில்லை. அவர்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

? மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். உண்மையில் மின்வெட்டுக்கு யார் தான் காரணம் ?
– எஸ். இராமதாஸ், சென்னை

!”மத்திய தொகுப்பு மின்சாரம் என்பது அனல்மின் நிலையத்தை நம்பித்தான் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 65 முதல் 70 சதவீதம் வரையில் நிலக்கரி மூலமாக அனல்மின் நிலையங்களில் தயாராகி வருகின்றன. இதற்கான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் கொடுக்கிறது. ஓர் ஆண்டுக்கான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து மாதம்தோறும் கொடுத்து வருவது வழக்கம். கப்பல், ரயில் என சரக்குப் போக்குவரத்து மூலம் இவை செல்லும். இதில் மாநிலங்களுக்குத் தேவையான நிலக்கரியை கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், அந்தப் பணிகளின் நிர்வாகம் செம்மையாக இயங்கவில்லை அதனால் தான் அவ்வப்போது செயற்கையான நிலக்கரி தட்டுப்பாட்டு ஏற்படுகின்றன.

? பள்ளி மாணவர்களுக்கு சத்துணவோடு  தேங்காய் கீற்று வழங்கப் போகிறார்களாமே?
– ரஞ்சனிப் பிரியன், ஈரோடு

! “மாணவர்களின் புதிய சிந்தனைத் திறன் வளர மதிய உணவில்  தேங்காய் கீற்று  வழங்கப்படவேண்டும்” என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.  ஆனால் இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படாத விஷயம். மேலும் தமிழகத்தில் இதற்கான அளவு தேங்காய் விளைச்சல்  இல்லை.

? விலங்குகளுக்கு தனி மொழி இருக்கிறதா? அவை அதை எப்படி கற்றுக்கொள்கின்றன?
– சரண்குமார், உடுமலைப் பேட்டை

! தாயிடமிருந்து பறவைக் குஞ்சுகள் எப்படி பறக்க கற்கின்றனவோ அதுபோல் ஒவ்வொரு மிருக இனமும்  அவை எழுப்பும் ஒலிகளுக்குள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்கின்றன. அவற்றை ‘மொழி’ என்றால் தவறில்லை. அடுத்த முறை உங்கள் வீட்டருகில் காகம் கரையும் போது கவனியுங்கள்- எல்லா நேரமும் அவை  ஒரேமாதிரியான  ஒலியுடன் கரைவதில்லை.

? ஏன் எல்லா செல்போன் எண்களும்  10 எண்கள் தானிருக்கின்றன?
– கலச லிங்கம் சுந்திரபாண்டியபுரம்

! எண் கணிதப்படி ஒரு எண்ணைத் தொடர்ந்து  10 இலக்கங்கள் தொடரில் 100 கோடி எண்களை உருவாக்க முடியும். இப்படி 1முதல் 9 வரை எண்களை முதல் எண்ணாக  கொண்டால் 1000 கோடி எண்கள் கிடைக்கும். அதற்குமேல் வேண்டுமென்றால்? கவலைப்படாதீர்கள் A, B, C க்களை  முதல் எழுத்தாக கொண்டு தொடங்குவார்கள்.

? குஜராத் மாநிலத்துக்கு நிறைய திட்டங்கள் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்களே ?
– சம்பத்குமாரி மதுரை

! சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நேரடியாக பணம் கொடுக்கும். அது மாநில பட்ஜெட் அல்லது மாநில கருவூல அமைப்பு மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், குஜராத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நேரடியாக வழங்கப்பட்ட நிதி அளவு 2015 முதல் 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கட்டுப்பாட்டு மற்றும் கணக்காய்வாளர் ஜெனரல் (CAAG) தெரிவித்துள்ளார். அந்த மாநில மக்கள் அதிர்ஷடசாலிகள்.

“அரசியலில் அண்ணாமலை ஒரு
சப் ஜூனியர்” என்ற திருமாவளவனின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?
– இரா. அருண்குமார்,  புதுச்சேரி

! “தனக்கு இணையான நிலையிலிருப்பவருடன்தான் மோதுவேன்” என்கிறார் திருமா. “ஜூனியர்கள் சீனியர்களை ஜெயித்த வரலாறுகள் இருக்கிறது” என்கிறார் அண்ணாமலை.  நடக்கவே போகாத  இந்த ஆட்டத்தை   நினைத்து மக்கள் நகைக்கிறார்கள்.

? பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பாமே?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர் 

! பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேருவது அல்லது காங்கிரசுக்கு தேர்தல் பிரசார நிர்வாகம் செய்வது குறித்த பேச்சுகள் அடிபடுகின்றன. வழக்கம்போல இதுகுறித்தும் ஆதரவு / எதிர்ப்புப் பதிவுகள் வரத் துவங்கி விட்டன.

பிரசாந்த் வருகை இப்போதைய நிலையில் அவசியம் காங்கிரசுக்குத் தேவை. பன்முனை வியூகங்கள், சமூக ஊடகங்கள், நேரடிப் பிரசாரங்கள், சாதனை விளக்க விளம்பரங்கள், தற்காப்பு அரசியலுக்கு பதிலாக தாக்குதல் அரசியல். இதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வது இப்போது காங்கிரஸ்க்கு அவசியமாகயிருக்கிறது. “பிரசாந்த் கிஷோரின் செயல் தந்திரங்கள் வெற்றி பெறுமா” என்று கேட்க முடியாத அளவுக்கு அவர் பலமுறை தன்னை நிரூபித்திருக்கிறார். அண்மையில் மேற்கு வங்கம் உதாரணம். 

? உலகையே ஒரு குடும்பமாக பார்க்கும் பக்குவம் எப்போது உலகுக்கு வசப்படும்?
– மாடக்கண்ணு, பொட்டல் புதூர்

! யாதும் ஊரே யாவரும் கேளிர் (புறநானூறு 192)  என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே  உலகைப் பார்க்கச் சொல்லிக்கொடுத்தவன் ஒரு  தமிழன். ஆனால் இன்றுவரை  கேட்பார்தான் இல்லை.

“ஒரே நாடு ஒரே மொழி” என்பது ஒற்றுமையை வளர்க்கும் நல்ல விஷயம்  தானே,  ஏன் எதிர்க்கிறார்கள்?
– சந்திரா நாகர், கோவில்

! நம்முடைய இலக்கு ஒற்றுமையாக இருக்கலாம். ஆனால், கட்டாயத்தாலோ திணிப்பினாலோ அதைச் சாதிக்க இயலாது. பண்பாடு, மொழி சார்ந்த விஷயங்களில் ஒற்றுமைக்கு ஒரே வழி, நம்மிடையில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதுதான் என்று நம் அனுபவம் சொல்கிறது. வேறுபாடுகளை அழித்து ஒற்றுமையைக் கொண்டுவரப் பார்த்தால் முரணும் கசப்பும்தான் பெருகும். 1948லேயே இதைச் சொல்லியிருப்பவர் : மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை திட்டி தாக்க முயன்ற மாணவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? இப்படிப்பட்ட சமுதாயம் உருவாக யார் காரணம் ?
– இரா. அருண்குமார், புதுச்சேரி – 605001 

! மிகக்கடுமையாக கண்டனம் செய்ய வேண்டிய செயல். பள்ளியிலிருந்து நீக்கம் என்பது மட்டும் தண்டனையாகாது. குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டு நீதிமன்ற தண்டனை வழங்க வேண்டும்.  ஆசிரியர்களை மதிக்காத, படிப்பின் அவசியத்தை உணர்த்தாத ரவுடிகளை ஹீரோவாக்கி காட்டும் நமது சினிமாக்கள் மட்டுமில்லை, மாணவர்கள் தறுதலைகள் ஆவதில் – தெரிந்தோ தெரியாமலோ, பாசத்தாலோ பிள்ளைகளின் மிரட்டலுக்குப் பயந்தோ – பெற்றோர் கொடுக்கும் செல்லம்தான் பெரும் பங்களிக்கிறது என்பதும்  உண்மை.

? தி.மு.க. ஆட்சி வந்தாலே “மின்வெட்டு” என்ற நிலை இயல்பாகவே வந்துவிடுகிறதே?
– ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்.

! “மின்வெட்டினால் ஒருமுறை ஆட்சியை இழந்தவர்கள், இம்முறை ஆட்சியில் அமர்ந்தவுடன்  மின்வெட்டு குறைபாடு ஏற்படாத வகையில்  அதிக மின் உற்பத்திக்கு  திட்டமிட்டிருக்கவேண்டும்.”  தவறிவிட்டார்கள்.

ஐ.பி.எல்.லில்  தல தோனியின் ‘கடைசிப் பந்து’ ? எப்படியிருந்தது?
– இந்திரா சண்முகம், திருச்சி

! சூப்பர்  த்ரில்லர்.  கடைசி பந்து. டென்ஷனின் உச்சம். “இப்பவும் சொதப்பபோறான் …” என்று நண்பர்கள்  புலம்ப ஆரம்பிப்பதற்குள் தோனி பந்தை பவுண்டரிக்கு விரட்ட சென்னை அணி வெற்றி.  அதுவரை  சென்னை அணியைத் திட்டிக்கொண்டிருந்தவர்கள்  சொன்னது “அதான் சொன்னேனே. தோனி இருக்கற வரைக்கும் கவலையில்லைன்னு”  என்று பேச ஆரம்பித்தார்கள்.

கவர்னர்  பயணத்தில் அவரது கார் வரிசை மீது தாக்குதல் நடந்திருக்கிறதே?
– மனோன்மணி, சேலம்

! வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது.
“அவர் மீது ஒரு தூசுகூட விழாமல் பாதுகாத்திருக்கிறோம்”  என்கிறார் முதல்வர். ஆனால் அவர்குழு சென்ற வாகனங்கள் மீது  கருப்பு கொடிகள் எறியப்பட்ட காட்சி அனைத்து தொலைகாட்சிகளிலும் காட்டப்பட்டது கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்பதைக் கொள்கையாகச்  சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தொண்டர்களில் சிலர் ஜனநாயக கடமையைச் செய்வதில் கட்டுபாட்டை இழந்து செயல்பட்டிருக்கிறார்கள்.  கட்சித் தலைமை அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து தங்கள் கண்ணியத்தை காத்துக்கொள்ளவேண்டும்.

2 COMMENTS

 1. வெல்லக்கட்டியில் எல்லா பகுதியும் இனிப்பது மாதியான ஆனந்த அனுபவத்தை அள்ளித் தருகிறது
  தராசாரின் நீங்கள் கேட்டவை பகுதி! இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ‘ பள்ளி மாணவர்களுக்கு சத்துணவோடு தேங்காய் கீற்று வழங்கப் போகிறார்களாமே?” என்ற கேள்விக்கு,
  சப்பைக்கட்டு கட்டாமல், எதார்த்த நெறி நின்று பதில் அளித்த விதம் செம நயம் என்று சொன்னால் மிகை யில்லை!
  நெல்லை குரலோன்
  பொட்டல்புதூர்

 2. உலகத்தரத்திலான கட்டமைப்புகளுடன் தமிழக அரசு அமைக்க உள்ள விளையாட்டு அரங்கம் தராசார் கூறியுள்ளது போல ‘இளைஞர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து அவர்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்து , சாதனையில் புதிய உயரத்தை அவர்கள் எட்ட வழிவகுக்கும்’. பள்ளிமாணவர்களுக்கு சத்துணவில் தேங்காய் கீற்று வழங்குவது, விலங்குகளின் மொழி, பத்து இலக்கத்திலேயே செல்போன் எண் உள்ளது குறித்த கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக தராசார் அளித்துள்ள பதில் அசத்தல் . ‘பிரசாந்த் கிஷோர் தேவை காங்கிரசுக்கு அவசியமாகவுள்ளது’ என்று யதார்த்தத்தை தராசார் கூறியுள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய தயங்குவதும் யதார்த்தத்தின் வெளிப்பாடோ?

  ஆ. மாடக்கண்ணு,
  பாப்பான்குளம்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...