0,00 INR

No products in the cart.

‘‘வள்ளி வள்ளி வழி வனந்தனிலே;கிள்ளிக் கிள்ளி கிழங்கெடுப்போம்…!’’

 

நேர்காணல் , படங்கள், வீடியோ: கா.சு.வேலாயுதன்

 

‘‘வள்ளி வள்ளி வழி வனந்தனிலே; கிள்ளிக் கிள்ளி கிழங்கெடுப்போம்…!’’

தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுடன் ஒரு சந்திப்பு:

மூன்றாண்டுகளுக்கு முன்பு பேட்டி எடுத்தபோது எப்படியிருந்தாரோ அப்படியே இருக்கிறார் நஞ்சம்மா. அதே கலகலப்பு. வார்த்தைக்கு வார்த்தை வெடிச்சிரிப்பு. ஒரு பாட்டுப் பாடுங்க என்றதும் அப்படியே யோசித்து லயித்து மனதால் ஒன்றி அந்தப் பாடலைப் பாடுகிறார்.

‘‘களக்காத்தா சந்தனமேரம் வெகுவேகோ பூத்திருக்கோ… பூப்பறிக்க போகிலாமோ விநோநாட்டு பத்திலமோ… தாலேலோ லாலைலாலோ லாலேலோ தாலைலோ, தாலைலாலோ, லோலோ…!’’

‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் இந்தப் பாடலை பாடியவர் நஞ்சம்மா. பாடியது மட்டுமல்ல, இதை இயற்றியவரும், படத்தில் பாடி நடித்திருப்பவரும் நஞ்சம்மா. இந்தப் படத்தில் மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் நஞ்சம்மா. அதற்காகத்தான் அந்த ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அட்டப்பாடியில் உள்ள இவரது கிராமம் மறுபடியும் ஒரு கோலாகல துள்ளாட்டத்தில் ஆழ்ந்திருக்கிறது. அடுத்தடுத்து வரிசையாய் மலையாள, ஆங்கிலச் சேனல்கள், பத்திரிகை நிருபர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இவரின் சின்ன ஓட்டுக்கூரை வீட்டோடு, இவர் வைத்திருக்கும் ஆடுகளோடு, பால் கறக்கும் பசுமாடுகளோடு. இவர் வைத்திருக்கும் ஆட்டுப் பட்டியோடு எல்லாம் கேமரா படம் பிடிக்கிறது.

கோவையிலிருந்து மேற்கே 28 கிலோமீட்டர் தூரம் ஆனைகட்டி. தமிழக கேரள எல்லை. அங்கிருந்து மன்னார்காடு சாலையில் பயணித்தால் சுமார் 25 கிலோமீட்டர் அகளி. இங்கே கேட்டால் போதும். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஞ்சம்மாவின் சிறு வீடு சிறு பிள்ளைக்கு கூட தெரிந்து விடுகிறது. ‘கூழிக்கடவு தாண்டி இரண்டாவது பெட்ரோல் பங்க். அதுக்குப் பக்கமேதான் அவர் வீடு!’ என்று சொல்லி விடுகிறார்கள். மூன்று ஆண்டுகளாக களகாத்தா சந்தன மேரம் பாட்டு அவரை விட ரொம்ப பிரபலம்.

கொஞ்சமும் மாறாத சிரிப்பு. நாம் சென்ற போது சி.பி.ஐ.எம். கட்சியின் உட்பிரிவான மகிளா அமைப்பின் பெண்கள் ஐம்பது பேருக்கு மேல் பேருந்தில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முகம் எல்லாம் ஏக பூரிப்பு. ஏதோ தானே தேசிய விருது பெற்றது போல் சிரிப்பும், கும்மாளமுமாக செல்கிறார்கள். மெயின் ரோட்டிலேயே ஓட்டு வீடு. பதினொன்றுக்கு பதினாறு ஹால். உள்ளே ஆறுக்கு எட்டடி அளவில் சின்னதாக சமையல் அறை. வீட்டின் முன்புறமும், பின்புறமும் ஒரு ஐந்தாறு அடி நீளத்தில் ஒரு திண்ணை. அரசு பழங்குடி மக்களுக்காக கட்டிக் கொடுத்த குடியிருப்பு வீடுகள் அதன் பின்னே. அதில் கடைகோடியில் காடு. தோட்டம், மலைகள், மலைகள், அங்கேதான் நஞ்சம்மாவை சேனல்காரர்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பெண்கள் வருவதற்கும் அவர்கள் பேட்டி முடிவதற்கும் சரியாக இருக்கிறது. நடந்து ஓடோடி இந்தப் பெண்களை நோக்கி கும்பிட்டபடி வருகிறார். ‘வரணும். வரணும். எண்ட மகள்க, பேத்திக எல்லாம் வரணும்!’’ என்கிறார். பெண்கள் ஆளாளுக்கு அரவணைக்கிறார்கள்.

ஆளாளுக்கு சால்வை போர்த்துகிறார்கள். கையைப் பிடித்து வாழ்த்து சொல்கிறார்கள். நம்மைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்கிறார். அடடா அவர் முகத்தில்தான் என்ன மகிழ்ச்சி. என்ன சிரிப்பு. கோயமுத்தூரல்லோ. நான் சினிமையில பாடினப்ப வந்து இண்டர்வியூ கண்டவர் அல்லோ? ஓடி வருகிறார். கையைப் பிடித்துக் கொள்கிறார். பரவசமாகிறார். அந்தப் பெண்களுக்கும் கூட நம்மை அறிமுகப்படுத்துகிறார். ‘‘நீங்க அவங்களை எல்லாம் பார்த்து முடிச்சுட்டு வாங்கம்மா பேசலாம்!’ என்கிறோம். அவரும் அவர்களுடன் அளவளாவுகிறார். ஒரு அரை மணிநேரம் அமர்க்களப்படுகிறது.

‘‘எனக்கு வல்லிய சந்தோஷம். இந்த விருது எனக்கு மட்டுமல்ல. என் லோகத்துல உள்ள மக்களுக்கு மக்களே கொடுத்துட்டது. நீங்கள் எல்லாம் இப்படி கூட்டம் கூட்டமாப் பார்க்க வருது. அத்தனை பேரும் சந்தோஷப்படுது. ரெண்டு திவசமா (நாளா) நிற்க நேரமில்லை. அத்தனை பேருக்கும் அத்தனை சந்தோஷம். இதைவிட பெரிய பேறு எனக்கு எந்தூ வேணும். இந்த அட்டப்பாடி நஞ்சம்மா ஆடு மேய்ச்ச நஞ்சம்மாவை ஈ லோகத்துக்கே அறிமுகம் செய்தது அய்யப்பன் கோஷியின் டைரக்டர் சச்சி சாரு. அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினது இந்த பழனிசாமியானு. அவர்தான் இப்பவும் எனக்குத் துணையிருக்கிறார்!’’ சொன்னவர்

‘‘சச்சி சாரு இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கும். அவர் மாதிரி இதுக்கு சந்தோஷப்படறதுக்கு ஆளே இருக்காது!’ என்று சொல்லும்போது இமையோரம் சின்னதாய் நீர்த்துளி. டைரக்டர் ‘சச்சி’ என்கிற சச்சிதானந்தம் இரண்டு ஆண்டுகள் முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். அதற்கான கண்ணீர்த்துளி.

‘‘நமக்கும் அதுதான்னே. இந்தக் குழிக்குள்ளே போயிட்டா யாருக்கு யார் பேசுவா. இப்ப இந்த நஞ்சம்மாவோட பாட்டுப் பேசும். செத்த பின்னாலயும் நிறைய பேசும். லோகமே பேசும்!’’ என்கிறார்.

வந்த பெண்கள் அவரை அமைதிப்படுத்துகிறார்கள். சட்டென்று சிரிப்புக்கு மாறுகிறார். சேனல்கள், பெண்கள் குழு எல்லாம் நீங்கிக் கழிந்த பின் நம்மிடம் பேசுகிறார்.

நம்முடன் வந்திருந்த கோவையைச் சேர்ந்த சங்கமம் குழுவினர் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கிறார்கள். அவர் பாடிய பாடலைச் சொல்லச் சொல்லி கேட்கிறார்கள். அவரும் இரண்டு பாடல்கள் பாடுகிறார்.

ஒன்று களக்காத்தா சந்தன மேரம் சில வரிகள் பாடுகிறார். இன்னொரு பாடல். உங்களுக்குப் பிடித்த பாடல் பாடுங்களேன் என்கிறார்கள். ரொம்ப யோசித்து மலைமக்களின் விவசாயம் குறித்து ஒரு பாடலைப் பாடுகிறார்.

‘‘வள்ளி வள்ளி… வழி வனந்தனிலே… வழி வனந்தனிலே… வள்ளி வனந்தனிலே… கிள்ளிக் கிள்ளி கிழங்கெடுப்போம்… கிள்ளிக் கிழங்கெடுப்போம்… வள்ளிக்கிழங்கெடுத்தா கிள்ளிக் குளிர்தனிலே… லாலேலோ லாலேலாலோ…!’’

அவரிடம் ‘மண்ணும் விவசாயமுமாகவே இருக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம்மா. இப்படி உங்களுக்கு எத்தனை பாட்டு தெரியும்?

கேட்கிறோம்.

‘‘கொஞ்ச பாட்டெல்லாம் தெரியும்’’ என்கிறார்.

‘‘கொஞ்சம்ன்னா எத்தினி. ஒரு நூறு பாட்டு தெரியுமா?’’

‘‘இல்லே… அவ்வளவு எல்லாம் தெரியாது!’’ என்கிறார் குழந்தையைப் போல.

‘‘அப்ப எவ்வளவுதான் என்றால் ஒரு அம்பது அறுபது பாட்டுத் தெரியும்!’’

‘‘உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?’’ என்று கேட்டால்

‘‘அது எதுவும் தெரியாது’’ என்றவர், ‘‘நம்ம ஜனித்த காலத்தில ஸ்கூல் எல்லாம் இங்கே இல்லே. எப்படி படிக்கும்? என்று திருப்பிக் கேட்கிறார்.

‘‘கொஞ்ச காலம் முன்பு நம்மளு வயசு ஆளுக கூட சேர்ந்து படிச்சுட்டு இப்ப எல்லாம் என்றெ பேரு எழுதுவேன்!’’ மீண்டும் சிரிப்பு.

‘‘சரி இப்படிப் பாட்டு எங்கே எப்படி படிச்சுப் பாடி பழகீட்டீங்க. அம்மாகிட்டவா பாட்டிகிட்டவா?’’

‘‘எல்லாம் எங்க அம்மா கிட்டத்தான். நான் நம்ம தமிழ்நாட்டுல ஜனிக்கும்போது அவிட இருந்து அட்டப்பாடிக்கு வந்தேன். பதிமூணு வயசுல பாட்டு சத்தம் கேட்டா எங்கேன்னாலும் ஓடிருவேன். ஒரு கூட்டம்ன்னாலும் போயிடுவேன். அம்பலம் (கோயில்)ன்னாலும் ஓடிருவேன். அங்கே ரோடு, தெரு எல்லாம் பாடி, ஆடி தெருவுல கழிச்சுச் பாடி வந்தேன்!’’

‘‘இப்ப நீங்க சினிமாக்காரர் ஆகிட்டீங்க. சினிமா சான்ஸ் கேட்டு யாருகிட்டவாவது இப்ப போறதுண்டா.

‘‘இல்லே இல்ல. எல்லாரும் அவங்க என்னைத் தேடித்தான் வர்றாங்க. நான் போறதில்லை. அப்படித்தான் இப்ப அஞ்சாறு படத்துல நான் பாடியிருக்கேன். என் சொந்தப்பாட்டு அதுல பல இருக்கு. சில பாட்டுகள் அவங்க எழுதிப் படிச்சு சொல்லிக் கொடுப்பாங்க. அதை நான் கேட்டு மனசுல வாங்கி பாடியிருக்கேன்!’’ என்கிறார்.

எல்லாம் சரி. இப்படியான நஞ்சம்மா இப்படி சினிமா பாடல்களை பாட வந்தது எப்படி?

‘‘எனக்கு  காட்டுல ஆடு மாடு மேய்க்கிறது,  துவரை, அவரை விதைக்கிறது, பறிக்கிறதுதான் வேலை. எங்க ஊட்டுல, சொந்தத்துல சீர், இழவுன்னா பாட்டுக்கட்டி பாடுவோம்.  ஆடு, மாடு மேய்க்கறப்ப, காட்டு வேலை செய்யறப்ப, இழவு வீட்ல அழறப்ப, வூட்டு சீர் சிறப்பு செய்யறப்ப தானா பாட்டு வரும். என் பாட்டு எல்லோருக்கும் ரொம்ப இஷ்டம். திரும்ப திரும்ப பாடச் சொல்லி கேட்பாங்க. எதிர்பாட்டும் பாடுவாங்க. அப்படி பாடிட்டிருந்தப்ப  பதினஞ்சு வருஷம் முன்னால ‘அகாட்ஸ் சொஸைட்டியில’  (அட்டப்பாடி மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் சொஸைட்டி ) கூப்பிட்டாங்க. போய் பாடினேன்.  அதுலயே ஒரு மியூசிக் குரூப் வச்சாங்க. இருபது இருபத்தஞ்சு பேரு. அதுக்கு பொறுப்பு இந்த பழனிசாமிதான்.  கேரளத்தில் உள்ள பதினாலு ஜில்லாவுக்கும் போய் நாங்க பாடியிருக்கோம்.   ரெண்டு  தடவை டெல்லியில போயும் பாடியிருக்கேன். அப்படி இருந்தப்ப எங்களை ஆர்கனைஸ் செய்த பழனிசாமியிடம் இப்படி ஒரு ஆதிவாசி பழங்குடிகளோட பாட்டு வேணும்ன்னு அய்யப்பனும் கோஷியும் பட டைரக்டர் சச்சி கேட்டிருக்கார். பழனிசாமி அவர்கிட்ட என்னைக் கொண்டு போய் நிறுத்தீட்டார். அப்படித்தான் நான் சினிமாவுக்குள்ளே வந்தது’’

மீண்டும் பெரிய சிரிப்பு. கைகூப்பி கும்பிடு சந்தோஷமாய் விடைகொடுக்கிறார் சிரிப்புத் தாரகையும், அட்டப்பாடி ஆதிவாசிகளோட மண் மணக்கும் பாடலுக்குத் தாயுமான நஞ்சம்மா. அவரை விட்டு விலகி வந்த பின்பும் கூட அட்டப்பாடி மண்ணும், அம்மொழியும் நஞ்சம்மாவின் குரலில் நம்முள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘‘வள்ளி வள்ளி. வழி வனந்தனிலே. வழி வனந்தனிலே. வள்ளி வனந்தனிலே. கிள்ளிக் கிள்ளி கிழங்கெடுப்போம். கிள்ளிக் கிழங்கெடுப்போம். வள்ளிக்கிழங்கெடுத்தா கிள்ளிக் குளிர்தனிலே. லாலேலோ லாலேலாலோ…!’’

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...