0,00 INR

No products in the cart.

வாஞ்சிநாதன்

 


சாந்தி சந்திரசேகரன்

                                    

 

வைகறையிலேயே வானம் நட்சத்திரங்களற்று மேகமூட்டமாய் இருந்தது. இலைகள் சிலைகள் போல அசைவின்றி  இருந்தன. ஜன்னல்கள் திறந்திருந்தும் புழுக்கம் வாட்டியெடுக்க, விடியலுக்கு முன்னரே எழுந்து விட்டார் மலையூரின் தற்காப்புக் கலை ஆசான் வாஞ்சிநாதன்.

உள்ளத்தின் புழுக்கம் உடலையும் உறுத்த, புறவாசல் கிணற்றில் நீர் இறைத்துக் குளியலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி அழகம்மை, மாடத்தில் விளக்கேற்றிவிட்டு செம்பு நீருடனும், துண்டுடனும் புறவாசலுக்கு வந்தார்.

“ஏன்ய்யா… தூக்கம் புடிக்கலிங்களா…? கருக்கல்ல எந்திச்சி குளுந்த தண்ணில குளிச்சிருக்கீங்க..! ஒரு சத்தம் குடுத்துருந்தா வெண்ணி (வெந்நீர்) கலந்துருப்பேனுங்களே…? காப்பித் தண்ணி  கொண்டாரட்டுமா?” என்றார்.

“இல்ல அழகம்ம(மை)… தோட்டத்துல கொஞ்சம் கரச்சல் இருக்கு. கருக்கல்ல தம்பிடி  வர்றதா சொல்லிருந்தான். மணியக் கூட்டிட்டு போயாறேன்..! நீ தேவகிகிட்ட சாப்பாடு குடுத்தனுப்ப வேணாம். நானே வந்துடுவேன்.” வாயைக் கொப்பளித்தவர், செம்பு நீரையும் அன்னத்தில் படாமல் ஒரே மிடராய் குடித்து முடித்தார்.

பூஜையறையில் தன் குலசாமியை வணங்கி, தன் மனதை உறுத்தும் பிரச்னைக்கு தீர்வளிக்க மனமுருக வேண்டினார். திருநீறைப் பட்டையாக அணிந்து தன் கேசத்தை நேர்பட முடிந்து கொண்டார்.

வெள்ளிக் காப்புகள், புலிப்பல் சங்கிலி, சட்டையணியாத உடம்பில் கால் தொடும் நீளமுள்ள தோள் சரடு, காலில் வெள்ளித் தண்டை, காவலுக்கு எடுத்துச் செல்லும் குறுவால் கம்புடன், அவர்  தோட்டத்துக் காவல் நாயான  மணியையும் அழைத்துக் கொண்டு ராஜ நடையிட்டு வீதியில் செல்வதைப் பார்த்த அழகம்மைக்கு “தன் குல தெய்வம் கார்மேகசாமி வேட்டைக்குச் செல்வதாகவேப் பட்டது.” தன் கண்ணே பட்டுவிட்டதெனத் துணுக்குற்றவர், தூரத்தில் சென்ற கணவர் திசை நோக்கி  நெட்டி முறிந்துவிட்டு, அடுக்களை சென்று தன் பணியைத் தொடரலானார்.

அறுபது வயதை நெருங்கிய வாஞ்சிநாதனை, அவரது கட்டுமஸ்தான தேகம்,  சுருக்கங்களற்ற தெளிந்த முகம்,  மிடுக்கான மீசை, வாரி முடிந்த கருமையான கேசத்தைப் பார்க்கும் யாரும் ஐம்பது வயதைக் கடந்தவராகக் கூட சொல்ல மாட்டார்கள்.

ஊருக்கே அறிவுரை கூறும் ஆசான். அவரது முகம் அன்று புதுமழையில் கலங்கிய சேறு போல தெளிவற்றிருந்தது.

தோட்டத்திற்கு வந்தவர் குறுமணலில் இடது கை ஊன்றி, வலது கால் குத்திட்டு அதன் மீது வலது கை தாங்கலாக வைத்து விழிகள் விண்ணை நோக்க, தன் மகள் தேவகியைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போனார்.  அதைப் புரிந்ததுபோல மணியும் அவருடன் அமைதியாக  நின்றது.

தான் பெற்றெடுத்த ஆறு பிள்ளைகளைக் கொள்ளைப் பிணிக்கு பலிகொடுத்த போதும் கலங்காத  வாஞ்சிநாதன், இன்று வழி தெரியாது தவித்தது, ஆண்டாள் போன்ற அழகு தேவதையான தேவகிக்காக. பெண் பிள்ளையானாலும் ஒரே பிள்ளையென தேவகியின் ஆசைக்காக அவளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தது, தன் புத்தகங்களைப் படித்து பல்வேறு சித்தாந்தங்களையும் அவளுடன் உரையாடியது, வாதம் புரிந்தது, இன்று வினையாக முடியுமென்று அவர் அறிந்திருக்கவில்லை. ஆகையால்தான் அழக்கம்மை ‘பொம்பளைப் புள்ளைக்கு எதுக்குங்க இந்த ஆகாத பொழப்பு’ என்று எடுத்துக் கூறியபோதும்  சட்டை செய்யவில்லை.

சென்ற முறை கோயில் திருவிழாவின் கணக்கு வழக்குகள் முழுமையும் தேவகி ஒருத்தியாய்  நிர்வகித்துத் தர, ஊரே அவரை மெச்சியது. அழகம்மையிடம் தன் மகளின் அறிவைப் பற்றி பெருமை பீற்றிக் கொண்டார். ஆனால், அவர் மனதில் உயர்த்திய கோபுரம் இப்படி நொடியில் சரியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

கடந்த வாரம் மேல வீதி மிடாசுதாரரின் மகன் குமணனுக்கு தன் மகளை வரன் கேட்டு வர மிகவும் மகிழ்ந்து போனார். கண்ணுக்கு நிறைவான பையன். நல்ல குடும்பம். செல்வச் செழிப்பிற்கு குறைவில்லை.

“பொண்ணு பாக்க லட்சணமா இருக்கா. என் மகனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க,”என்றார் குமணனின் தாய்.

“பொண்ணுக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்?” என்றார் குமணனின் அத்தை.

சமையல், பூக்கட்டுதல், பாட்டு, பரதம் என எதிர்பார்த்தவர்களுக்கு “புஸ்தகம்ன்னா உசிரு… படிக்கறதுன்னா ரொம்பவும் பிடிக்கும்ங்க” என்று விழிகள் விரிய ஆசையாசையாய் தேவகி கூறிய பதில் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அதெல்லாம் வேலைவெட்டி இல்லாத பயலுவ பண்ற வெட்டி வேலைன்னு நினைக்கிறவன் நானு … அதுவுமில்லாம பொண்ணுக்கு எதுக்கு தாயி பொஸ்தகம்..?” என்றார் குமணனின் தந்தை.

“சமையல் செய்வியாம்மா..?”

“ஆத்தாவுக்கு ஒத்தாசையா அதுவும் செய்வேன்-ங்க” என்று கூறி சமாளித்தாலும், அவரது வார்த்தை அவள் மனதை முள்ளெனத் தைத்தது. வீட்டிற்குச் சென்று தகவல் அளிப்பதாகச் சொல்லிச் சென்றனர்.

நேற்றிரவு “தப்பா எடுத்துக்காதீங்க ஐயா… படிச்ச பொண்ணு எங்க குடும்பத்துக்கு வேணாமுன்னு ஐயன் சொல்லிட்டாருங்கய்யா…” என்று தகவல் சொல்லிச் சென்றான் குமணன்.

ஆவணி வந்தால் தேவகிக்கு அகவை பதினேழு. அவள் தோழிகள் பலருக்கும் பதினைந்து வயதில் திருமணமாகியிருக்க வாஞ்சிநாதன் தன் மகளுக்கு கல்வியறிவை ஊட்டினார். எதார்த்தத்தை எடுத்துக் கூறிய அழகம்மைக்கு “அழகோட அறிவும் சேர்ந்து நம்ம மவ பௌர்ணமி நிலவாட்டம் ஜொலிப்பா. அவள கட்டிக்க மாப்பிள்ளை கூட்டம் வரிசைல நிக்கும்…”என்று தன் மீசை முறுக்கிப் பெருமிதத்துடன் தான் கூறிய கூற்று எத்தனை முட்டாள்தனமானது என்று விசனப்பட்டார்.

வீட்டில் இத்தகவலை எப்படி தெரிவிப்பது என்றுதான் இப்போதுவரை அவரது மனம் பதைபதைத்தது. ‘அன்னிக்கே தலப்பாடு அடிச்சி சொன்னேனே… கேக்கலியே’ எனும் அழகம்மையிடம் என்ன சொல்லித் தேற்றுவது? என்று பரிதவித்தார்.

இருளை விரட்டியவாறு ஆதவன் தன் செங்கதிர்களால் வாஞ்சிநாதனை அரவணைக்கும் வேளையில், மணி குரைத்து விருந்தாள் வருவதாக அறிவுறுத்தியது. அவரிடம் சிலம்பம் பயின்ற பண்ணையாரின் மகன் அகிலன் தன் தந்தையுடன் அங்கு வந்தான்.

“ஐயா  வணக்கம்” என்ற அகிலனின் குரல் அவரது எண்ணச்சுழலிலிருந்து அவரை மீட்டெடுத்தது.

“அடடே… அகிலனா… பண்ணையாரய்யா நீங்களுமா…? என்ன விசேஷம்ங்க ரெண்டு பேரும் சேந்து வந்திருக்கீங்களே..? வாங்க வாங்க… இப்படி கயத்துக்கட்டில்ல உக்காருங்க… எழனி எதும் வெட்டியாரச் சொல்லட்டும்ங்களா?”படபடத்தார் வாஞ்சிநாதன்.

“இருக்கட்டுங்க… அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம்… நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா… ஒரு விவரம் தெரிஞ்சிக்கலாமா?” நேரடியாக விசயத்திற்கு வந்தார் பண்ணையார்.

“எதுக்குங்க பெரிய வார்த்தைலாம்… கேளுங்க…”

“உங்கப் பொண்ணுக்கு எழுதப் படிக்கன்னு நிறைய கத்துக் குடுத்திருக்கீங்களோ..? அன்னிக்கு நம்ம மிடாசுதாரு சொல்லிட்டு இருந்தாரு!”

மீண்டும் கலக்கமானவர் “அது… அது வந்துங்க… ரொம்பன்னு இல்லீங்க… ஏதோ கொஞ்சமா… அது ஏதோ என் கிரகம்… புள்ளைக்கு தேவையில்லாதத தினிச்சிருப்பேன். அதெல்லாம் வேண்டாம்ன்னா எம்மவ உட்டுருவாங்கய்யா… இந்தத் தகவலை யார்ட்டவும் சொல்லிக்க வேணாம்… வரன் ஏதும் இதனால தடங்கலாகிட வேண்டாம்ன்னு தான்…” என்னும் போது இடைவெட்டினார் பண்ணையார்.

“அடடே… நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. எனக்கு சொத்து சொகம்… தோட்டம் தொறவு… வயலு வரப்புன்னு ஏகப்பட்ட ஆஸ்தி இருக்குதுங்க. ஆனா ‘படிப்பு என்னத்துக்கு?’ன்ற என் தப்பான வைராக்கியத்துல என் மூணு மவனுங்களுக்கும் படிப்பு வாசமே இல்லாமப் பண்ணிட்டேன். இப்ப திருவிழாவுக்கு உங்க மவ கணக்கெழுதினதுக்கும்… என் கணக்குப்பிள்ளை எழுதுனதுக்கும் பத்தாயிரம் ரூவா வித்தியாசம் வருதுன்னு பட்டணத்துக்கு குடுத்து அனுப்பிருந்தேன்ங்க. அப்பத்தான் தெரிஞ்சது… பல வருசமா பல லட்ச ரூவா ஏமாந்துருக்கேன்னு.

உங்க மவள என் மவனுக்கு கட்டிக் குடுத்தீங்கன்னா என் மருமவக்கிட்டருந்து என் புள்ளைங்களும் கணக்கு வழக்கு கத்துப்பாங்க. பேரப்புள்ளைன்னு வந்தாலும் படிப்பு வாசம் உங்க மவகிட்ட இருந்து வந்துரும்.  நீங்க சம்மதிச்சா, எங்க குடும்பம் மட்டுமில்லாம, எங்க சந்ததியே உங்களுக்கு கடமை பட்டுருக்கும். அவசரம் ஒன்னும் இல்லங்க. யோசிச்சி வீட்ல பேசிட்டு, நல்ல முடிவா சொல்லியனுப்புங்க. போய்ட்டு வரோம்” என்றார் பண்ணையார் இருகரம் கூப்பி.

மாலை நேரத்து தாமரை போல மலர்ந்த முகத்துடன், மகளிடமும் மனைவியிடமும் அவர் சங்கதியைத் தெரிவிக்க, அழகம்மை கண் மூடி தன் குலசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

விளக்கேற்ற அழகம்மை பூஜையறைக்கு செல்ல…

“பையன் படிக்கலன்னு ஏதும் வருத்தப்படுறியா தாயி…?” என மகளிடம் வாஞ்சிநாதன் கேட்க…

“அப்பா நிரந்தரமில்லாத அழகைவிட… நிலையான அறிவுக்கு மரியாதை குடுக்கிற குடும்பம். உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்” என்று கண்ணங்கள் சிவக்க பதிலுரைத்த மகளுக்கு நல்ல வரன் அமைந்த மகிழ்ச்சியில் பண்ணையார் வீடு நோக்கி நடந்தார் வாஞ்சிநாதன்.

உள்ளும் புறமும் புழுக்கம் நீங்க… குழுமையான காற்றுடன் மழை தூரலிடத் துவங்கியது.

1 COMMENT

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...