0,00 INR

No products in the cart.

தேவமனோகரி -1

தொடர் கதை

ஓவியம் : தெய்வா

பாரதி

 

தோட்டத்தில் பூத்திருந்த செம்பருத்தியை ரசித்துப் பார்த்தாள் இனியா. இளம் ஆரஞ்சு வண்ணத்தில் அடுக்கடுக்காக பூத்திருந்தது. ஆரஞ்சு என்று சொல்லிவிட முடியுமா என்ன? உற்றுப் பார்த்தால் மஞ்சளும் இளஞ்சிவப்பும் தெரிகிறதே?

முன்பெல்லாம் வண்ணங்களை இப்படி பகுத்துப் பார்க்க அவளுக்குத் தெரியாது. எல்லாம் சூரியமூர்த்தி ஸாரிடம் கற்றுக் கொண்டது.

வெண்தாடியும், வளைந்த முதுகுமாக அவர் உருவம் நினைவில் எட்டிப் பார்த்தது.

இவள் படிக்கும் கல்லூரியில் நுண்கலைத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். ஒரு பயிற்சி வகுப்பில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடியதை இவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“வானம் என்ன நிறம்?”

“நீலம்” மாணவர் கூட்டம் ஒரே குரலில் பதில் சொன்னது.

மறுப்பாகத் தலையசைத்தார் சூரியமூர்த்தி.

”நீலம் மட்டும்தானா? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்”

“வெள்ளை”

“ஆரஞ்சு”

“இளஞ்சிவப்பு”

“மஞ்சள்”

“ஊதா”

என்று பட்டியல் நீண்டது.

“நீலம் அடர்த்தியாக தெரிவதாலேயே அது மட்டும்தான் என்று நினைத்துவிட முடியாது” என்று தத்துவ விளக்கம் போல் அவர் பேசுவதை ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் இனியா.

“கொஞ்சம் கடலை உருண்டை இருக்கு. எடுத்து வைக்கட்டுமா?” என்று அம்மாவின் குரல் அவளைக் கலைத்தது.

இன்று மாலை அவள் சென்னைக்குக் கிளம்பியாக வேண்டும். அண்ணிக்கு இரண்டாவது பிரசவம் ஆகியிருக்கிறது. எற்கெனவே இரண்டு அக்காக்களுக்கு பிரசவம் பார்த்து ஓய்ந்து விட்டாள் அம்மா. இவள் உதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தகவல் சொல்லியனுப்பினாள்.

மனோகரி மேடத்திடம் அனுமதி வாங்குவது அவ்வளவு சுலபமாக இல்லை. அரைமனதுடன்தான் சம்மதித்தார். இதோ வந்து பதினைந்து நாள் ஓடியே போயிற்று. இனி கிளம்ப வேண்டியதுதான்.

மலைச்சரிவில் இருந்த இந்த கிராமத்தில் வருஷத்தில் சில மாதங்கள்தான் குளிர்ச்சியை அனுபவிக்க முடியும். வெயில்தான் நமக்கு நிரந்தரம் என்று எப்போதோ மனதை தேற்றிக் கொண்டாகிவிட்டது. பிப்ரவரி மாதம் முடியப் போகிறது. இன்னும் கூட காற்றில் குளிர்ச்சி இருப்பது அதிசயமாகத்தான் இருக்கிறது.

கைக்குழந்தைக்கு காலையிலிருந்து வயிற்றுப்போக்கு. அம்மா சொன்னபடி வசம்பு இழைத்துக் கொடுத்துவிட்டு தோட்டத்துப் பக்கம் உலாவிக் கொண்டிருந்தாள் இனியா.

ஒரு வருஷத்துக்கு முன்பு வந்தபோது அப்பா பேசிய கடுமையான வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. இதேபோல்தான் அன்றும் தோட்டத்தில் பூக்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஊர் பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் அப்பாவுக்கு சிநேகிதர். அவருடன் உலா போய்விட்டு வந்த அப்பாவின் முகம் இறுகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது நின்று ஒரு கணம் இவளை உற்றுப் பார்த்துவிட்டு நகர்ந்து போனார். அவருடைய பார்வையிலிருந்த கடுமையோ, வெறுப்போ ஏதோ ஒன்று இனியாவைத் தாக்கியது.

குளித்து விட்டு சாப்பிட வந்தபோது கூட எதை சாப்பிடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இயந்திரத்தனமாக சாப்பிட்டார்.

துண்டால் கையைத் துடைத்தவாறு “வாத்தியார் மகள் திருச்சிக்கு படிக்க போச்சில்ல? அங்கே யாரோ ஒரு பையனை காதலிக்குதாம். வாத்தியார் இடிஞ்சு போயிருக்கிறாரு” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் இவளை கூர்ந்து பார்த்தார்.

“படிக்க அனுப்பினா படிக்கறதோட நிறுத்திக்கணும். அதுதான் பெத்தவங்களுக்கு மரியாதை. நீயாவது எங்க மரியாதையை காப்பாத்து தாயி” குரலின் கடுமை இனியாவைத் தாக்கியது.

ஒரு வருஷத்தில் இங்கு எதுவும் மாறவில்லை என்று தோன்றியது. பக்கத்து வீட்டு செல்லாயி அக்கா வாசலிலிருந்து குரல் கொடுத்தாள்.

”ஊருக்குக் கிளம்பறியாமே புள்ள? மல்லிச்சரம் தொடுத்து கொண்டாந்திருக்கேன். தலை நிறைய வெச்சுகிட்டு கிளம்பு”

அரும்பு மல்லிச்சரம் நேர்த்தியாக தொடுக்கப்பட்டிருந்தது. கதவுக்கு வெளியில் நின்று கொண்டு செல்லாயி கொடுத்ததை வாங்கிக் கொண்ட போது பூவும் மனசும் கனத்தது.

”நல்லா படிச்சு நம்ம ஊருக்கு கலெக்டராகணும் புள்ள” என்றாள் செல்லாயி.

என் படிப்புக்கு கலெக்டரெல்லாம் ஆக முடியாது. இது வெறும் ஆராய்ச்சி படிப்பு என்று சொல்ல வந்தவள் சொல்லாமலேயே புன்சிரிப்புடன் தலையசைத்து வைத்தாள்.

இந்த செல்லாயி அக்கா அம்மாவுக்குதான் எவ்வளவு உதவியாக இருக்கிறாள்! ஆனாலும் வீட்டுக்குள் வர முடியாது. வரவும் கூடாது. மெல்லிய குமுறல் இனியாவை முகம் சிவக்க வைத்தது.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மஞ்சள் வாசனை வீட்டை நிறைத்தது. பக்கத்துக் காட்டில் மஞ்சள் விளைச்சல் அமோகம் போலிருக்கிறது. கொதிக்கும் தண்ணீரில் அவற்றைப் போட்டு வேகவைக்கும் போது வரும் வாசனை இனியாவுக்கு பிடித்தமானது.

வேகவைத்த மஞ்சளை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தி சந்தைக்கு அனுப்புவார்கள்.

இரண்டு வருஷமாகவே சல்லடை போட்டு இவளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார் அப்பா. ஒருவனும் கிடைக்கவில்லை போலிருக்கிறது! இப்போதெல்லாம் கல்யாணப் பேச்சே எடுப்பதில்லை. அதை நினைத்து ரகசியமாக சிரித்துக் கொண்டாள் இனியா.

”அந்த கணக்கு வாத்தியார் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிட்டுதா அண்ணி? இப்ப எப்படி இருக்கா?”என்று மெல்ல விசாரித்தாள்.

”அதை ஏன் கேட்குற? அது திருச்சியில ரெஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிச்சாம். அன்னிக்கு தகவல் வந்தபோது வாத்தியாருக்கு நெஞ்சு வலி வந்திடுச்சு. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருந்தார்.  இப்ப பரவாயில்ல”

”நான் வாத்தியாருக்கு என்ன ஆச்சுன்னு கேட்கல. அந்த பொண்ணு எப்படி இருக்கா?”

”ஆங்..…..அது……விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. நான் எங்க பார்த்தேன்? ஏதோ கேள்விப்படற விஷயம்தான்”

அண்ணிக்கு சுவாரசியமாக சொல்ல விஷயம் எதுவும் கிடைக்கவில்லை என்று புரிந்தது.

மறுபடியும் தோட்டத்துக்குப் போய் இருப்பு கொள்ளாமல் சுற்றி வந்தாள் இனியா.  அரசமரத்தில் இலைகளின் சரசரப்புடன் பச்சைக் கிளிகளின் கீச்சிட்ட குரல்கள் போட்டியிட்டன. அண்ணாந்து கிளிகளைப் பார்த்தாள் இனியா.

தூரத்தில் அப்பா கணக்கு வாத்தியாருடன் வந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டது. வாத்தியார் அவருக்கே உரிய அட்டகாசமான சிரிப்புடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் பெண்ணைப் பெற்று அதனால் ஏதோ ஒரு சமூக அவமானத்துக்கு ஆளானவர் போல் கொஞ்சம் கூடத் தெரியவில்லை.

இவள் ஊருக்குக் கிளம்புவதால் அம்மா கத்திரிக்காய் காரக்குழம்பும், வெங்காய வடையுமாக சாப்பாடு வைத்திருந்தாள். இனியாவுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொருவர் ருசியும் தெரிந்து வைத்திருப்பவள் அம்மா. ஆனால் அந்தப் புரிதலெல்லாம் வெறும் சாப்பாட்டோடு நின்று விடுகிறது. அதுதான் வருத்தம்.

”இங்கே நிறைய கிராமப்புறத்து மாணவர்கள் இருக்கிறீர்கள். உங்களின் படிப்பும், அனுபவமும் எப்படியும் உங்களை முன்னேற்றி விடும். தொலைதூரத்தில் இருக்கும் உங்கள் பெற்றோர் அப்படியே பின்னுக்கு நின்று ஒரு கட்டத்தில் உங்களையும் கட்டி இழுக்கும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் வளரும் போது அவர்களையும் உங்களோடு சேர்த்து இழுத்துக் கொண்டு வரவேண்டும் மாணவர்களே! அது மிகவும் முக்கியம்” என்று கல்லூரியில் ஒரு விழாவில் பேசிய எழுத்தாளரின் பேச்சு அவளுக்கு நினைவுக்கு வந்தது.

பெற்றோர்களிடம் எப்போதும் ஒரு உரையாடல் ஏன் அவசியம் என்று அவர் விளக்கியது இனியாவுக்கு பிடித்திருந்தது. இனியாவும் பலமுறை தன் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறாள்.

”செல்லாயி அக்காவை வீட்டுக்குள் அனுமதித்தால்தான் என்ன? அவுங்களைப் போல பாசமா இருக்கிற ஒரு மனுசியை இந்த ஊர்ல காட்டுங்க எனக்கு” என்று கூட கேட்டிருக்கிறாள்.

அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் மௌனமாக பார்த்துக் கொள்வார்கள். பதில் எதுவும் வராது. காற்று நுழையக்கூட இடம் கொடுத்துவிடாத இறுக்கம் ஒன்று இங்கே படர்ந்திருக்கிறது. அதை உடைப்பதோ,  ஊடுருவுவதோ அவ்வளவு சுலபமில்லை.

அம்மா கட்டி வைத்த தின்பண்டங்களை சுமந்து கொண்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு மெயின் ரோடு வரை வந்தார் அப்பா. பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்கள்.

”யாரம்மா அந்தப் பையன்?“

அப்பா கேட்டபோது இனியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

”அடிக்கடி உனக்கு ஃபோன் வருதாமே?”

யார் சொல்லியிருப்பார்கள்? அண்ணிதான் சொல்லியிருக்க வேண்டும். அவள்தான் குழந்தைக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்தால்கூட இவள் செல்போன் ஒலித்தால் எம்பிப் பார்ப்பாள். இதை அண்ணி தன்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கலாமே. அம்மாவிடமோ அண்ணனிடமோ சொல்லித்தான் இப்போது அப்பா வரை வந்திருக்கிறது விஷயம்.

இனியாவுக்குள் குபீரென்று சிரிப்பு எழுந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இவளுடன் படிக்கும் மணிகண்டன்தான் நாலைந்து முறை போன் செய்திருந்தான். பல்கலைக்கழகத்தில் ஏதோ புதிய விதிமுறை வந்திருக்கிறதாம். அதற்கான விண்ணப்பத்தை இவளுக்கும் சேர்த்து வாங்கி வைத்திருக்கிறானாம். விஷயம் அவ்வளவுதான்.

இந்த அற்ப விஷயத்துக்கு இப்படி கை, கால் முளைக்கும் என்று இனியா எதிர்பார்க்கவில்லை.

”யாராயிருந்தாலும் பரவாயில்ல. காலம் மாறிட்டுதானே இருக்குது. நானும் எல்லாத்துக்கும் தயாராயிட்டுதான் இருக்கேன். நம்ம வாத்தியார் மருமகன் மாதிரி நல்ல பையனா இருந்தா போதும்”

அப்பாவா பேசுவது? எதுவும் மாறவில்லை என்று நினைத்தாளே? இப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கிறதே? இன்ப அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள் இனியா.

தொலைவில் பஸ் வந்து கொண்டிருந்தது.

”முதல்ல செல்லாயி அக்காவை வீட்டுக்குள்ள அனுமதியுங்க.  மத்ததையெல்லாம் பிறகு பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு சட்டென்று பஸ்ஸில் ஏறினாள். மெல்லிய படபடப்புடன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது அப்பாவின் முகத்தில் எந்த உணர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொலைதூரத்தில் அவர் உருவம் மெல்ல மறைந்தது.

தொடரும்

1 COMMENT

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...