0,00 INR

No products in the cart.

ஒரு  தேசியின் டைரி குறிப்பு

சுஜாதா தேசிகன்                       

 

டைரி எழுதும் பழக்கம் எனக்கு (இதுவரை) இல்லை.

நேற்று என் மனைவி எதையோ தேடும்போது “நீங்கள் வாங்கும் படிக்காத புத்தகங்கள் மாதிரி எதற்கு இவ்வளவு  புது டைரிகளை கொலு மாதிரி அடுக்கி வைத்திருக்கிறீர்கள்?  கல்கி கடைசிப் பக்கத்தில் எதையாவது எழுதுவது போல, இதிலேயும் எதையாவது கிறுக்க வேண்டியது தானே?” என்று இ.அறிவுரை கொடுக்க, 2021 முடியும் தறுவாயில் நல்ல அழகான டைரியை எடுத்து எழுதிய குறிப்பு இது.

வருடத்தின் கடைசி நாள்! என் முதல் டைரி குறிப்பு வெளிநாட்டு வைன் பாட்டில் போன்ற அழகான  டைரியில் எழுதிவிட்டு, அதை யாரும் படிக்கவில்லை என்றால் என்ன பிரயோஜனம் ?  அதனால் ரகசியம் இல்லாத என் முதல் குறிப்பு இந்த வாரக் கல்கி கடைசிப் பக்கமாக.

நான் திருட்டுத்தனமாகப் படித்த டைரி என் தாத்தாவுடையது. இங்க் தொட்டு எழுதும் அந்தக் காலப் பேனாவில் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார். ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதியிருந்தார். அந்தரங்க விஷயம் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.

…..காலை மோர்குழம்பு, பருப்பு உசிலி, மோர் மிளகாய் ( உப்பு அதிகம் ).. என்று ஆரம்பித்து இராமாயணத்தில் வாலி வதம் பற்றிக் குறிப்புடன் முடித்திருந்தார். பக்கங்களைப் புரட்டிய போதும் அதே கிச்சன் முதல் கிஷ்கிந்தா வரை சமாசாரங்கள்தான். தினமும் மோர் மிளகாய் காலை மெனுவில் இருக்க, என் பாட்டியை நினைத்துக்கொண்டேன்.

“எனக்கும் டைரியில் எழுத வேண்டும்” என்ற ஆசை வந்தது. தாத்தாபோல அம்மாஞ்சி விஷயமாக இல்லாமல்,  புதுக்கவிதை (படித்தாலும் சட்டென்று யாருக்கும் புரியாது!)  எழுத உத்தேசித்தபோது….

“புதுக்கவிதை பற்றி சற்று பேசலாம். புதுக் கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம் பரவி இருக்கிறது. “அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கு சின்னமாய்க் கொடுத்தால் என்ன?” என்ற வாக்கியத்தை ஐந்தாக பிரித்து கவிதையாகப் பதிப்பித்திருக்கிறார்கள்.  என்னய்யா விளையாடுகிறீர்களா? என்று எழுத்தாளர் சுஜாதா புதுக் கவிதை பற்றிக் கூறியிருந்ததைப் படித்த பின் புதுக்கவிதை ஆசையைக் கைவிட்டேன். பிறகு டைரியில் ஆயுள் காப்பீடு எப்போது கட்ட வேண்டும், வீட்டுச் செலவு கணக்கு, வண்டி என்ன மைலேஜ் தருகிறது, நான் பார்க்கும் சினிமா.. என்று எழுத ஆரம்பித்து அதைப் படித்தபோது, என் தாத்தாவின் மோர்க்குழம்பு ராமாயணமே சுவாரசியமாக இருந்தது.

(அடுத்த பக்கம் பார்க்க)

பிறகு  எனக்குக் கிடைத்த நல்ல டைரிகளில் ’முக்கியமாக’ எதையாவது எழுதலாம் என்று பாதுகாத்து வைத்து அவற்றில் இதுவரை எழுதியதே இல்லை.  புது டைரியில் எழுத ஏன் நமக்கு மனசு வருவதில்லை என்பதில்  உளவியல் காரணங்கள் இருக்கலாம். வழவழப்பான நல்ல காகிதத்தில் இருக்கும் புத்தகத்தை ஏன் கிறுக்கி குட்டிச்சுவராக்க  ( கு.கை.பூமாலை )  வேண்டும் என்பது ஒரு முக்கியமான காரணம்.

எனக்குக் கிடைத்த முக்கியமான இரண்டு டைரிகளை பற்றி நிச்சயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

( கடைசிப் பக்கத்துக்கு இன்னும் 175 வார்த்தைகள் தேவை ! )

ஒரு முறை எழுத்தாளர் சுஜாதாவை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது “தேசிகன் நீங்க டைரி எழுதுவீர்களா?” என்று கேட்டார்.

“வருடா வருடம் எதையாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். இதுவரை எழுதியதில்லை”

“இருங்க” என்று உள்ளே சென்றவர், ’காபி-டேபிள்’ புத்தகம் மாதிரி ஒரு காட்ஸில்லா சைஸ் டைரி ஒன்றை என்னிடம் கொடுத்து “இதை மடியில் வைத்துக்கொண்டு எழுதினால் தொடை வீங்கிவிடும்” என்று கொடுத்தார். அதை கையில் வாங்கிக்கொண்ட போது கல்யாண ’விளையாடல்’ தட்டு போல இருந்தது.

வழக்கம் போல என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது அது பழசாகி, சுஜாதாவும் மறைந்துவிட்டார். பிறகு அதன் முதல் பக்கத்தில்  ”சுஜாதா கொடுத்த டைரி” என்று எழுதி அதில் குறிப்புகள் எழுத உபயோகித்துக்கொண்டு இருக்கிறேன்.

சுஜாதா மறைந்தபோது அவருக்கு ஓர் அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்து கிளம்பியபோது ஓர் இளைஞர் என்னிடம் வந்து “சார் நானும் உங்களைப்போல சுஜாதாவின் தீவிர வாசகன்,  சுஜாதா குறித்து நீங்கள் பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது. பெங்களூருக்கு எப்போது கிளம்புகிறீர்கள் ?” என்றார். சொன்னேன்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு அதே இளைஞர் என் இருக்கை ஜன்னல் கதவைத் தட்டினார். பேருந்திலிருந்து கீழே இறங்கினேன்.

“சார் உங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. இதை வாங்கிக்கொள்வீர்களா என்று தெரியவில்லை” என்று  ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார். நான் பொட்டலத்தை வாங்கிக்கொள்ள அவர் என் நன்றியை வாங்கிக்கொண்டு கையசைத்துவிட்டு கூட்டத்தில் மறைந்தார்.

பேருந்து கிளம்பிய பின், அவர் கொடுத்த பரிசைத் திறந்து பார்த்தேன்.

அழகான டைரி!

நாளை ஜனவரி 1, காலெண்டர் குறித்து எழுதத் திட்டம்.

(ஹலோ எங்கே ஓடுகிறீர்கள் … ?)

கல்கி
கடைசிப் பக்க வாசகர்களுக்கு
இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துகள்!

 

2 COMMENTS

  1. பூத்து குலுங்கும் மலர்கள் அழகாகக் காட்சித் தருவது பாே ல் “கல்கி ” யின் அழகே அழகு. அழகு தமிழில் அறிவுக்கனி யினை வாரந் தாே றும் தரும் கல்கிக்கு
    புத்தாண்டு வாழ்த்துகள்.
    அன்புடன் வாசகர்
    து.சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் செய்தித்தாளில் தினமும் சாவைப் பற்றிய செய்திகள், நினைவு அஞ்சலி என்று சிரஞ்சீவியாக இருப்பது மரணம் என்று நினைக்கிறேன். எனக்கு யாரைக் கண்டாலும் பயமே இல்லை என்று சொல்லுபவர்கள் சாவிற்குப்...

“கில்லி விஜய் மாதிரி இந்த வேலை எல்லாம் எதற்கு உங்களுக்கு ?”

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு வார்த்தை ! சில நாட்கள் முன் இந்த செய்தி கண்ணில் பட்டது. “ராணிப்பேட்டை அருகே, தெரியாமல் பைக்கில் இடித்த கார்.. நண்பர்களை வரவழைத்து காரில் இருந்தவரை சரமாரியாக தாக்கிய நபர்’ இது...

சைடு பெட்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் நான் பள்ளிச் சிறுவனாக  படித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை நேற்று படித்துக்கொண்டு இருந்தேன்.( நம்புங்கள் இன்னும் என்னிடம் இருக்கிறது! )  சிறுவனாக அன்று படித்த அதே அனுபவம் நேற்றும்...

இன்னும் எத்தனை காலம் தான் ….

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் தலைப்பை படிக்கும் போது ‘ஏமாற்றுவார்’ என்ற வார்த்தை உங்கள் மனதில் இந்நேரம் உதித்திருந்தால் தொடர்ந்து படிக்கலாம். சென்ற ஆண்டு ‘ஹர்ஷிதா’ என்ற பெண் பழைய சோபாவை ஆன்லைன் மூலம் விற்பனை...