ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
Published on

தலையங்கம்

திர்பார்த்துக் காத்திருந்த 2022 இன்று பிறந்திருக்கிறது. உலகையே இருட்டில் ஆழ்த்திய "கொரோனா" கொடுந்தொற்று மெல்ல விலகி நம்பிக்கையாகத் தோன்றிய மெல்லிய ஒளிக்கீற்றையும் "ஒமைக்ரான்" என்ற உருமாறிய தொற்று மறைத்தது. கடந்த நவம்பர் 18-ந் தேதி தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டோரியாவில்  "ஒமைக்ரான்" என்ற உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவர் மூலம் ஒமைக்ரான் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

"ஒமைக்ரான் பரவல் என்பது 3 மடங்கு வேகமாக இருக்கும்" என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தப் பரவல் வேகத்தைத் தடுக்க 3 மடங்கு எச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்திருப்பது புத்தாண்டை வரவேற்கும் நம்பிக்கையைத் தருகிறது. கடந்த இரண்டாண்டுகளில் கற்ற பாடங்களும் கைகொடுக்கின்றன.

அதே நேரத்தில் இந்தத் தொற்றைத் தடுப்பதற்கு மிகச்சிறந்த வழி, முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுதான்" என்ற அறிவுரைகளை ஏற்காமல் பொது இடங்களில் பலரைக் காணும்போது "மீண்டும் இந்த ஆண்டும் இருளில் தள்ளப்பட்டுவிடுவோமோ" என்ற அச்சம் எழுகிறது.

பொதுமக்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட அறிவுரைகளை முறையாகக் கடைப்பிடிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும். ஒமைக்ரான் பாதிப்பால் கொரோனா அளவுக்கு உயிரிழப்போ, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையோ இருக்காது என்றாலும், தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும். இனியொரு ஊரடங்கு, பொது முடக்கம் என்றால் மாநிலத்தின் பொருளாதாரமும் தாங்காது, மக்களின் வாழ்வாதாரமும் தாங்காது.

மிகுந்த கவனத்துடனும் நம்பிக்கையுடனும் மகாகவி சொன்னதுபோல இந்தக் கொரானாவை
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
என விரட்டி புத்தாண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com