0,00 INR

No products in the cart.

நியூ இயர் ஈவ்

சிறுகதை

ஓவியம் : தமிழ்

-ராஜி  ரகுநாதன்

 

ப்படி ராமமூர்த்தி ஐசியுவில் வந்து படுத்துக் கொள்வார் என்று யார் எதிர்பார்த்தர்கள்?

இந்த ஆண்டு சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் நடக்கும் நியூ இயர் ஈவ் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள வேண்டும் என்பதில் ராமமூர்த்தி தீர்மானமாக இருந்தார். கொரோனா தாக்கம் குறைந்து விட்டாலும் இப்போதெல்லாம் முன்புபோல் நேராகச் சென்று துண்டை விரித்து அமர முடியாது. முன்கூட்டியே டிக்கெட் புக் செய்வதோடு அமரும் இடத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். “ஆன்லைன் டிக்கெட் வாங்காவிட்டால் பட்டாசு பார்க்க வரவே வேண்டாம்” என்றுகூட அமைப்பினர் அறிவுறுத்தி இருந்தனர். மகன் பாலாஜியிடம் முன்கூட்டியே வான்டேஜ் பாயிண்டுகளில் டிக்கெட் வாங்கி இடம் பிடிக்கச் சொல்ல வேண்டும். “ஒரு மில்லியன் பேருக்கு மேல் வந்து கூடும் மைதானத்தில் ஜமுக்காளத்தை விரித்து பிக்னிக் தின்பண்டங்களோடு வந்தமர்ந்து ஓபாரா ஹவுசையும் ஹார்பர் பிரிட்ஜையும் பார்த்துக்கொண்டு வாண வேடிக்கைகளை அனுபவிக்க வேண்டும்” என்று ராமமூர்த்தி துடிதுடித்தார். 425 மில்லியனுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி நேரலையில் பார்வையாளர்களைச் சென்றடைகிறது என்றெல்லாம் செய்தி கேட்டு தானும் காண பேராவல் கொண்டார்.

பிரமிக்க வைக்கும் சிட்னி துறைமுகம், புகழ்பெற்ற சிட்னி ஹார்பர் பிரிட்ஜ் மற்றும் பெருமை வாய்ந்த ஓபரா ஹவுஸ் ஆகிய இடங்களில் டிசம்பர் 31ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்து கண்டு களிக்கவும் நள்ளிரவு ஒரு மணிக்கு முக்கிய நிகழ்வாகவும் கண்கவர் வாண வேடிக்கைக் காட்சிகள் நடைபெறும். இந்த தனித்துவமான சிட்னி கொண்டாட்டத்தில் பாலத்தின் மேல் ரிமோட் கண்ட்ரோல் தொழில் நுட்பத்தின் மூலம் பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து நடைபெறும் ‘புத்தாண்டுக்கு முந்திய நாள் மாலை’ என்று பொருள்படும் ‘நீயூ இயர் ஈவ்’ வாண வேடிக்கையைப் பார்ப்பதில் குழந்தையைப் போல குதூகலமாக இருந்தார் எழுபது வயதைத் தாண்டிய ராமமூர்த்தி.

“உனக்கு ஏன் அப்பா இந்த வயதில் வேண்டாத ஆசை?” என்று கேட்டுப் பார்த்தான் பாலாஜி. “பொதுவாகவே ஒன்பது மணி ஷோவுக்கு மதியம் ஒரு மணிக்கே சென்று கார் பார்க் செய்ய வேண்டும். அவ்வளவு தொலைவிலிருந்து வென்யூவுக்கு நடக்க வேண்டும். அதற்காகவே எல்லோரும் ரயிலில் செல்வார்கள். திரும்பும் போது பார்க்க வேண்டுமே… ரயிலைப் பிடிக்க மக்கள் கூட்டம் கடல் அலைபோல் பாய்ந்து செல்லும். குழந்தைகள் காணாமல் போகும் திருவிழாக் கூட்டம் அது” என்றான்.

சிறுவயதில் பார்த்த தேர் திருவிழாவை நினைத்து ராமமூர்த்தி அதே போன்ற ஒன்றை வெளிநாட்டில் கண்டு களிக்க ஆசைக் கொண்டார்.

“இந்தியாவில்தான் தீபாவளிக்கும் கார்த்திகைக்கும் பட்டாசு வெடிக்கிறோமே, அப்பா! அயல்நாடுகளில் வீடுகளில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளது. வெறும் பூத்திரி மட்டும் கொளுத்தலாம். அதனால் ஒன்றாகக் கூடி கம்பூனிடி ஃபயர் ஒர்க்ஸ் என்றதும் ஓடிப்போய் பார்க்கிறார்கள்” என்று சொல்லிப் பார்த்தான் பாலாஜி.

ஆனால் ராமமூர்த்தி பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று தலைவிரித்தாடுவதோடு ஓமிக்ரானும் ஜோடி சேர்ந்து விட்டதால் அவரால் நினைத்தது போல் வெளிநாடு செல்ல இயலவில்லை.

அப்பா அத்தனை ஆசைப்பட்டாரே என்பதற்காக மகனே குடும்பத்தோடு இந்தியா கிளம்பி வந்தான். அதற்கே விசா கிடைக்கப் பெரும்பாடுபட்டான். வீட்டு வாசலிலேயே முப்பத்தொன்றாம் தேதி நள்ளிரவில் பட்டாசு வெடித்து சிறப்பாக புத்தாண்டு கொண்டாடத் திட்டம் போட்டிருந்தார்கள் தந்தையும் மகனும்.

“நியூ இயர் ரிசொல்யூஷனாக என்னப்பா எடுக்கப் போறீங்க?” என்று கேட்டான் பாலாஜி.

“அதுதாண்டா யோசிக்கிறேன்!” என்றார் ராமமூர்த்தி.

“வேளாவேளைக்கு நல்லா சாப்பிடறேன்னு தீர்மானம் எடுங்க!” என்றனர் கல்யாணியும் பாலாஜியும் சேர்ந்து.

ராமமூர்த்தி அவர்களை முறைத்துப் பார்த்தார்.

*** *** *** ***

சிட்னி ஹார்பரில் வாணவேடிக்கை பார்ப்பது போல் கனவு கண்டுகொண்டிருந்த ராமமூர்த்தியை யாரோ தோளைத் தட்டி எழுப்பினார்கள். சிட்னியில் டிசம்பர் மாத வானிலை நல்ல வெயிலோடு சுகமாக இருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தார். ஐசியுவில் படுத்திருப்பது நினைவு வந்தது. ஏசியின் குளிர் தாக்கியதை உணர்ந்தார். அருகில் வெள்ளைக் கோட்டணிந்த டாக்டர் நின்றிருந்தார்.

“இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் நியூரோ சர்ஜன் ஷ்யாம்.

டாக்டரைப் பார்த்ததும் படுத்திருந்த ராமமூர்த்தி பட்டென்று எழுந்து உட்கார்ந்தார்.

“ஐயோ! என்ன சார் இது? இப்படி தடால்னு எழுந்திருக்கிறீங்க! உங்க வயசுக்கு இப்படி எழுந்தால் தலை சுற்றும். சைடாக ஒருக்களித்து படுத்து நிதானமாக எழுந்திருக்கணும்” என்ற டாக்டர், “பேஷண்டோட அட்டென்டரை வரச் சொல்லுங்க!” என்று நர்சைப் பார்த்து உத்தரவிட்டார்.

கதவுக்கு வெளியே பதைபதைப்போடு நின்றிருந்த கல்யாணியும் பாலாஜியும்  ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தனர்.

“இவருக்கு என்ன நடந்ததும்மா?” என்று கேட்டார் டாக்டர்.

“நல்லாத்தாங்க இருந்தாரு…! நேற்று பாதி ராத்திரி ஒரு மணி இருக்கும். பாத்ரூம் போவதற்காக எழுந்தவருக்கு தலை சுத்தியிருக்கு. இவர் எப்போதும் கட்டிலில் படுக்க மாட்டார். தரையில்தான் மெல்லிய மெத்தை போட்டு படுத்திருப்பார். என்னை எழுப்பி சூடாக பால் கலந்து கொடுக்கச் சொன்னார். பாலைக் குடிச்சுட்டு படுத்துகிட்டார். சரி தூங்குறார்னு நினைச்சேன். திடீர்னு கால் நரம்பை சுருட்டி இழுக்குதுன்னு துடிச்சு போய்ட்டார். நான் காலை நீவி விட்டேன். அதற்குள் கண்ணெல்லாம் மேலே சொருகிப் போச்சு. வாய் உளற ஆரம்பிச்சுட்டார். எனக்கு ரொம்ப பயமா போச்சு. எங்கள் மகன் குடும்பத்தோடு பத்து நாள் முன்னால்தான் வந்திருந்தான். அவன் அறைக் கதவைத் தட்டி எழுப்பினேன். அவனும் அப்பாவைப் பார்த்து பதறிவிட்டான். அதற்குள் இவருக்கு கண் மூடிப் போச்சு. வாயும் மூடிகிட்டாரு. மயக்கத்தில் ஆழ்ந்துட்டாரு. சில நொடிகளில் மீண்டும் பேச ஆரம்பிச்சாரு….” என்று மனைவி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமமூர்த்திக்கும் அந்த விவரங்கள் அப்போதுதான் தெரியவந்தன.

*** *** *** ***

னக்கு என்ன ஆச்சு? ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறோம் போன்றவற்றைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்.

“பாலாஜி! உன் மடியில் என் தலையை வெச்சுக்கோடா!” என்று முனகினார் ராமமூர்த்தி.

“இதோ வந்துட்டேம்ப்பா!” அப்பாவின் காலை அமுக்கி விட்டுக் கொண்டிருந்த மகன் விரைந்து வந்து தந்தையின் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.

மீண்டும் மீண்டும் “பாலாஜி! உன் மடியில் என் தலையை வெச்சுக்கோடா!” என்று அதையே முனக ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

“என் மடியில் தாம்ப்பா படுத்திருக்கே!” என்று அவனும் மீண்டும் கூற ஆரம்பித்தான்.

அப்போதுதான் புரிந்தது… அவருக்கு நினைவு தப்பிவிட்டது என்று. நாம் பேசுவது அவருக்குக் கேட்கவில்லை.

சற்றைக்கெல்லாம் ”விஜிக்குட்டி…! விஜிக்குட்டி…!” என்று பேத்தியின் பெயரைச் சொல்லி அரற்ற ஆரம்பித்தார். மருமகள் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது விஜிக்குட்டியை தாத்தாவிடம் தூக்கி வந்து அமர்த்தினாள்.

“ஐயாம் ஸ்லீப்பி தாத்தா!” என்றது குழந்தை.

“தாதாவுக்கு ஹக்கி குடும்மா!” என்றாள் மருமகள். குழந்தை தாத்தாவின் முகத்தை பிஞ்சு விரல்களால் அணைத்துக் கொண்டது.

ஆனால் அவர் தொடர்ந்து, “விஜிக்குட்டி! விஜிக்குட்டி…!” என்று முனகிக் கொண்டே இருந்தார். மீண்டும் பேத்தியை தூக்கிச் சென்று பழையபடி படுக்கையில் படுக்க வைத்தாள் மருமகள்.

நேரம் கடந்து செல்கிறது. இனியும் தாமதிக்க கூடாது… என்று மகன் மொபைலில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் மருத்துவமனை நம்பர்களைத் தேடத் தொடங்கினான். அருகிலிருக்கும் ரகுராம் ஹாஸ்பிடல் நம்பருக்குப் போன் செய்து ஆம்புலன்ஸ் அனுப்பச் சொன்னான்.

“எங்களிடம் இல்லை… ஆனால் இந்த நம்பருக்கு செய்யுங்கள் கிடைக்கும்” என்றார்கள்.

நல்லவேளை அந்த நள்ளிரவிலும் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் பத்து நிமிடத்திற்குள் வந்து சேர்ந்தார். அதற்குள் ஹாண்ட்பாகில் ஒரு தண்ணீர் பாட்டிலும் கார்டும் பணமும் எடுத்து வைத்துக் கொண்டாள் கல்யாணி. தாயும் மகனும் மாஸ்க் அணிந்து கொண்டனர். மயக்கத்தில் இருக்கும் அப்பாவுக்கு எதற்கு மாஸ்க் என்று நினைத்து எடுத்துக் கொள்ளவில்லை.

ஆம்புலன்ஸ் வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே வந்தது. ஸ்டெச்சர் வீட்டு ஹாலுக்கு வந்தது. அதில் பச்சை நிற ரெக்சின் ஜில்லென்று இருந்தது. அதன் மேல் ஒரு போர்வையை விரித்தாள் கல்யாணி. ராமமூர்த்தியை மகனும் டிரைவருமாக தூக்கி படுக்க வைத்து மேலே ஒரு போர்வையை போர்த்தி விட்டனர்.

“என்னை எங்கே தூக்குகிறீர்கள்?” என்று திடீரென்று கேட்ட ராமமூர்த்தி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தார்.

“கேட்டை பூட்டிட்டு உள்ளே பத்திரமா இரும்மா!” என்று மருமகளுக்கு தைரியம் சொல்லிவிட்டு ஆம்புலன்சில் ஏறி அமர்ந்தனர் கல்யாணியும் பாலாஜியும்.

ஆம்புலன்ஸ் யாத்திரையில் கல்யாணி இடைவிடாத மிருத்தியுஞ்ஜெய மந்திரத்தோடு அமர்ந்திருந்தாள். இடையில் ராமமூர்த்தியும் அவ்வப்போது அந்த மந்திரத்தை உடன் உச்சரித்தது வியப்பை அளித்தது.

மருத்துவமனையை அடைந்தபோது மணி விடிகாலை மூன்றை எட்டியிருந்தது. டூட்டி மருத்துவர் முதலில் நோயாளிக்கு மாஸ்க் வாங்கிவரச் சொன்னார். அதை மாட்டிவிட்டபின் டெஸ்ட் எல்லாம் செய்தார். மருந்து வாங்கிவரச் சொல்லி ஊசி போட்டார். எல்லாம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்.

“பேஷண்ட் உடம்புல தெம்பு இல்லாம இருக்காரு. எதுவும் சாப்பிடலையா?” என்று கேட்ட மருத்துவர், கையையும் காலையும் தூக்கி காட்டச் சொன்னார். வாய் பேசாமல் கண் திறக்காமல் அதை எல்லாம் செய்தார் ராமமூர்த்தி.

மேற்கொண்டு டெஸ்ட்களுக்கும் ஐசியுவுக்கும் பணம் கட்டி பில் வாங்கி வரச் சொன்னார். பாலாஜி ஓடி ஓடி எல்லாம் செய்தான். சிடி ஸ்கேன் செய்தபின் ஐசியு.வில் அட்மிட் செய்தார்கள். அப்போது காலை மணி நான்கு இருக்கும். சிடி ஸ்கேன் செய்ய அழைத்துப் போகும் போது இவர்களை உடன் வர டாக்டர் சம்மதிக்கவில்லை. அங்கிருந்து நேரே ஐசியுவுக்கு அழைத்துச் சென்று விட்டனர். அதுவரை ராமமூர்த்திக்கு முழுவதும் சரியாக நினைவு வரவில்லை. ஐந்து மணி வரை கல்யாணியும் பாலாஜியும் மருத்துவமனை ரிசப்ஷனில் அமர்ந்திருந்தனர்.

ஒரு பெண்மணி வந்து ஏதோ பாலாஜியின் காதில் சொன்னாள். அவன் ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். “என்னடா?” என்று பதறிப்போய் கேட்ட தாயிடம், “அட்டென்டர் அம்மா! டூட்டி முடிஞ்சு போறாளாம். டீ காசு கேட்டாள்” என்றான். கல்யாணியிடம் கேட்டால் கிடைக்காது என்று முடிவெடுத்த அவளுடைய மனோதத்துவ ஞானத்தை எண்ணி வியந்தனர் இருவரும்.

ஐந்து மணிக்கு ஐசியுவின் உள்ளே செல்ல அனுமதி பெற்று ராமமூர்த்தியைப் பார்த்தனர். அதற்குள் அவர் நன்றாக விழித்திருந்தார். தலைக்கு மேல் சுவரில் ஈசிஜி மிஷின் பொருத்தியிருந்தது. அவர் நெஞ்சில் எங்கும் ஒயர்கள் ஒட்டியிருந்தது. கையில் சலைன் ஏறிக்கொண்டிருந்தது.

“பாத்ரூமுக்கு நடந்துதான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்” என்று நர்ஸ் முறையிட்டார். காலையில் டைப்பர் கட்ட முயன்றபோது மறுத்து விட்டாராம். பெட் பானிலும் போக மாட்டேன் என்கிறாராம்.

“ஐயாம் கம்ப்ளீட்லி ஆல்ரைட். என்னால் நடந்து பாத்ரூம் போக முடியும். இல்லாட்டா தண்ணியே குடிக்காம இருந்துடுவேன்” என்று சத்தியாகிரகம் ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

அங்கிருந்த டாக்டரிடம் பேசி சம்மதிக்கச் செய்தபின் உடம்பிலிருந்த ஒயர்களையும் ஊசிகளையும் கழற்றி விட்டார் நர்ஸ். பாலாஜி தந்தையை அழைத்துச் சென்றான். “அங்கே பாத்ரூம்ல இருக்கற பைப்ப திறந்து விடுங்க. அந்த சத்தத்துல சீக்கிரம் ஒன்னுக்கு வந்திரும்” என்றார் ஒரு நர்ஸ்.

திரும்ப வந்து படுத்தார் ராமமூர்த்தி. சலைனை மட்டும் மீண்டும் ஏற்றினர்.

“நாங்க போயிட்டு ஏழு மணிக்கு வரோம். இங்கே விசாரித்தோம். எட்டு மணிக்கு டிபன் காபி கொண்டு கொடுக்கலாம்னு சொன்னாங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினர் தாயும் மகனும்.

திரும்ப வந்தபோது நன்றாகவே தெளிவாக இருந்தார். ஐசியுவின் நீல அங்கி அணிந்திருந்தார். அங்கிருந்த டாக்டரோடு தான் செய்யும் உடற்பயிற்சிகள்  குறித்து பெருமை பேசிக்கொண்டிருந்தார்.

“உடை மாற்றி விட்டார்களா?” என்று கேட்டாள் கல்யாணி.

“நானே கீழே இறங்கி பான்ட்டை அவிழ்த்து விட்டு இதை மாட்டிக் கொண்டேன்” என்றார்.

“ஆமாங்க அம்மா. எங்களை எதுவும் செய்ய விடலை” என்றார் நர்ஸ்.

வீட்டிலிருந்து எடுத்து வந்த பேஸ்ட் பிரஷால் அங்கேயே பல் தேய்த்தார். இட்லியும் காபியும் சாப்பிட்டார்.

“இன்று என்ன தேதி? டிசம்பர் முப்பத்தி ஒண்ணு இல்லை? நாம் வீட்டுக்கு போகலாம்” என்றார் ராமமூர்த்தி.

“பதினோரு மணிக்கு நியூரோ சர்ஜன் வருவார். அவர் வந்து பார்த்து என்ன சொல்றாரோ அதன்படி செய்யலாம்” என்றார் டாக்டர்.

ராமமூர்த்தி கழற்றி வைத்திருந்த நைட் பாண்டையும் பனியனையும் கல்யாணி பையில் எடுத்து வைத்துக் கொண்டாள். மீண்டும்  பதினோரு மணிக்கு வருவதாகச் சொல்லி ராமமூர்த்தியை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பினர் தாயும் மகனும்.

*** *** *** ***

நியூரோ சர்ஜன் ஷ்யாமிடம் “டாக்டர்! உங்களைப் பார்க்கத்தான் காத்திருந்தோம். அப்பா இப்போ எப்படி இருக்கார்? வீட்டுக்குப் போகலாம்னு சொல்றாரே!” என்று கேட்டான் பாலாஜி.

“சிடி ஸ்கேன் மற்ற டெஸ்ட்கள் எல்லாம் நார்மலாத்தான் இருக்கு. ஒன்றும் பிராப்ளம் இல்லை. இன்னும் எம்.ஆர்.ஐ. செய்து பார்த்தால்தான் இது ஸ்ட்ரோக் சம்பந்தப்பட்டதான்னு சொல்ல முடியும். மூளைக்கு ஒரு செகண்ட் ரத்த ஓட்டம் நின்றிருந்தால் கூட இவ்வாறு நிகழ வாய்ப்பிருக்கு. ஒரு நாள் தங்கி ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு நாளைக்கு போகலாம்” என்று கூறிய டாக்டர் அங்கிருந்த டூட்டி டாக்டரிடம், “இந்த பேஷண்டை ஜெனரல் வார்டுக்கு மாத்திடுங்க. நல்லா இருக்காரு. எந்த மருந்தும் அவசியம் இல்லை” என்றார்.

ஆனால் ராமமூர்த்தி அப்போதே வீட்டுக்குப் போவதில் குறியாக இருந்தார். நீயூ இயர் ஈவ் அவரை ஆட்கொண்டுவிட்டதை உணர முடிந்தது.

“டாக்டர்! நான் தினமும் விடிகாலை நான்கு மணிக்கே எழுந்து உடற்பயிற்சி, வாக்கிங் எல்லாம் செய்வேன். இரவு சிறுதானிய கஞ்சி மட்டும் குடிப்பேன். எனக்கு எழுபத்துநான்கு வயதாகிறது. இதுவரை ஒரு நோவு என்று எந்த ஹாஸ்பிடலிலும் சேர்ந்ததில்லை. எந்த மருந்து மாத்திரையும் சாப்பிட்டதில்லை. இரண்டு மூன்று நாட்களாக கொஞ்சம் அலைச்சல். நேற்று குழந்தைகளோடு ஏரியில் போட்டிங் போனோம். எக்சிபிஷனில் சின்ன ஜெயின்ட் வீலில் பேரக்குழந்தைகளோடு விளையாடினோம். உப்புமூட்டை தூக்கி, சைக்கிளில் விளையாட்டு காட்டி… ரொம்ப எக்ஜாஸ்ட் ஆயிட்டேன். இரவு டயர்டா இருந்ததால் எதுவும் சாப்பிட மறுத்து தூங்கி விட்டேன். வேறே ஒண்ணும் இல்லை. இப்போ நல்லா இருக்கேன். இதோ… இன்று காலைல ரெண்டு இட்லி சாப்பிட்டேன். காப்பி குடிச்சேன். இன்று கட்டாயம் வீட்டுக்கு போகணும் டாக்டர்! என் மகன் என்னோடு புத்தாண்டு கொண்டாட வந்திருக்கிறான். பேரக் குழந்தைகள் காத்திருப்பார்கள்” என்று மீண்டும் வற்புறுத்தினர்.

கல்யாணியும் பாலாஜியும் கூட அதற்குச் சம்மதித்தனர். ஆனால் மருத்துவமனை அதற்கு அனுமதிக்கவில்லை.

“பேஷண்டை ஐசியு.லேர்ந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றியபின்தான் டிஸ்சார்ஜ் செய்வோம்” என்றார்கள்.

அவர்களோடு மன்றாடியதில், “பில் கட்டிட்டு லாமாவில் சைன் செய்து விட்டு கூட்டிட்டு போங்க…!” என்றார்கள்.

“லாமா என்றால் என்ன?” என்று பாலாஜி கேட்டான்.

“பேஷண்டுக்கு கண்காணிப்பும் சிகிச்சையும் தேவையிருக்குன்னு மருத்துவமனை சொன்னாலும் கேட்காமல் வீட்டார் தங்கள் ரிஸ்கில் அழைத்துச் செல்கிறார்கள் என்று படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். பில் எல்லாம் கட்டி ரெசிப்ட் காட்டிட்டு கூட்டிட்டு போகலாம்” என்றார் மருத்துவர்.

“சரி. போட்ருவாங்க! நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று கூறி மனைவி, மகனை அதில் கையெழுத்து போடச் சொன்னார் ராமமூர்த்தி.

அந்த மருத்துவமனையில் எம்ஆர்ஐ. ஸ்கேன் வசதி இல்லை. எப்படியும் வெளியில் ஒரு லாபில்தான் செய்ய வேண்டும். அதை நாளை செய்து ரிப்போர்ட் எடுத்துவந்து காட்டுவதாக டாக்டரிடம் தெரிவித்தான் பாலாஜி. சம்மரி அப்புறம் வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.

ஐசியுவில் அணிவித்திருந்த நீல நிற கவுனை அவிழ்த்து விட்டுச் செல்ல வேண்டும். அப்போது தான் நினைவு வந்தது…. அவருக்கு உடை எடுத்து வரவில்லை என்று. இப்படி திடீரென்று இன்றே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குக் கிளம்புவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று  எல்லோருக்கும் ஆச்சர்யம். உடனே பாலாஜி விரைந்து சென்று அருகிலிருந்த சிறிய கடையிலிருந்து 300 ரூபாய்க்கு ஒரு நைட் பாண்டும் 75 ரூபாய்க்கு ஒரு ஷர்ட்டும் வாங்கி வந்தான்.

தானே படுக்கையை விட்டிறங்கி கவுனை அவிழ்த்து விட்டு பான்ட் ஷர்ட்டை போட்டுக் கொண்டார். யாரும் உதவுவதற்கு அவர் விடவில்லை. சைஸ் சரியாக இருந்தது. ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் வந்ததால் அவருக்கு செருப்பு இல்லை. கிடுகிடென்று வெறுங்காலோடு கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். நர்சுகள் அவரைத் தடுத்து படுக்கையில் அமர வைத்தனர்.

“இதென்ன சார்! நேற்று ராத்திரி எந்த நிலைமைல வந்தீங்க! இப்போ இப்படி கிளம்புறீங்களே! ஸ்ட்ரெச்சரில் போறீங்களா? வீல் சேர்ல போறீங்களா? நடந்து போக விட மாட்டோம்” என்றார்கள்.

இந்த வித்தியாசமான நோயாளியை எல்லோரும் வியப்போடு பார்த்தார்கள். ஒரு வழியாக வீல் சேரில் அமர சம்மதித்தார். மருத்துவமனைக்கு வெளியில் சற்று தொலைவில் பார்க் செய்திருந்த காரை மகன் எடுத்து வரும்வரை வாசலில் காத்திருக்க அவருக்குப் பொறுமை இல்லை.

“அவனுக்கு போன் செய்து அவனை வீட்டுக்குப் போகச் சொல்லு. குழந்தைகள் காத்திருப்பார்கள். நாம் ஆட்டோவில் போயிடலாம்” என்று மனைவியை அவசரப்படுத்தினார்.

அதற்குள் யாரோ ஒருவர் வந்து, “அம்மா! சாருக்கு சரியாயிடுச்சாங்க?” என்று விசாரித்தார்.

“நீங்க யாரு?” என்று கேட்டார் ராமமூர்த்தி.

“நான் டிரைவருங்க! ராத்திரி உங்க வீட்டுக்கு வந்து ஸ்ட்ரெச்சரில் உங்களை ஏற்றி ஆம்புலன்சுல அழைச்சுட்டு வந்தேன்.!” என்றார்.

“இப்போ நல்லா இருக்காருப்பா. ரொம்ப நன்றிப்பா!” என்று அந்த டிரைவரை கையெடுத்து கும்பிட்டாள் கல்யாணி.

கார் வந்தது.  மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தார் ராமமூர்த்தி. மருமகள் அவருக்கு சிவப்பு நீரால் திருஷ்டி எடுத்தாள்.   திரும்பி வந்த தாத்தாவைப் பார்த்து குழந்தைகள் மகிழ்ந்தனர்.

உணவருந்தியபின் எல்லோரும் வற்புறுத்தியதால் சற்று நேரம் ஓய்வெடுத்தார் ராமமூர்த்தி. தீபாவளிக்கு வாங்கி மீதமிருந்த வெடிகளை அன்று இரவு சிட்னியில் வாண வேடிக்கை நடக்கும் அதே நேரத்தில் மகனோடு சேர்ந்து வெடித்து மகிழ்ந்தார். பேரப் பிள்ளைகளோடு சேர்ந்து அமர்ந்து கண்டு களித்தனர் மாமியாரும் மருமகளும்.

ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது வீடு. அன்று இரவு எல்லோரும் நிம்மதியாகத் தூங்கினர். புத்தாண்டு நல்லபடியாக விடிந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுத்தாயிற்று. மருத்துவமனை சென்று டாக்டர் ஷ்யாமிடம் காட்டினர்.

“எல்லாம் நார்மலாகத்தான் இருக்கு. நீங்கள் சரியா சாப்பிடமாட்டீங்களா? இப்படி அண்டர்வெயிட்டா இருக்கீங்களே! ப்ரோட்டீன் நிறைய எடுத்துக்குங்க. நரம்பு வீக்கா இருக்கு. மூளைக்கு முக்கியமாக புரதம் சேரணும். தினமும் நூறுகிராம் நிலக்கடலை ஊறப் போட்டு காலையில் சாப்பிடுங்க. பன்னீர் வெஜிடேரியனுக்கு நல்ல புரதம். தினமும் மூன்று முட்டை வெள்ளை சாப்பிடுங்க!” என்று அறிவுரை கூறினார் டாக்டர்.

“இதெல்லாம் சாப்பிட்டால் சாப்பாடு சாப்பிட வேண்டாம் இல்லையா, டாக்டர்?” என்று தன் ஐயத்தை மறக்காமல் கேட்டார் ராமமூர்த்தி.

டாக்டர் வியப்போடு கல்யாணியைத் திரும்பிப் பார்த்தார்.

“இதுதாங்க இவருடைய கோளாறு. இரண்டு ஸ்பூன் சாதம்தான் சாப்பிடுவாரு. இரவு எதுவும் சாப்பிடமாட்டார். காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி செய்யணுமாம். டிரிம்மா இருக்காராம். அதுல ஏகப்பெருமை இவருக்கு” என்று கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடிக்காமல் கவலையோடு இடித்துக் காட்டினாள் கல்யாணி.

டாக்டர் அந்த விவாதத்தை நீடிக்காமல் அதோடு நிறுத்தினார். நரம்பு வலுப்பெற விட்டமின் மாத்திரை எழுதிக் கொடுத்தார்.

“நியூ இயர் ரிசொல்யூஷனாக வேளாவேளைக்கு நல்லா சாப்பிடுவதாக தீர்மானம் செய்துக்குங்க, ராமமூர்த்தி!” என்று கூறி டாக்டர் விடை கொடுத்தபோது மூவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை பூத்தனர்.

 

1 COMMENT

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...