0,00 INR

No products in the cart.

சரயு என்ன செய்வாள்? 

சிறுகதை

ஓவியம் : தமிழ்

– ஜெ. பாஸ்கர்

 

ப்பிள் பச்சை நிற பிளாஸ்டிக் திரையைத் தள்ளி வெளியே வந்தாள் டாக்டர் மனோன்மணி. கையுறையை உரித்து அருகிலிருந்த குப்பைக் கூடையில் எறிந்தாள். மனதின் கேள்விகள் அவள் முகத்தில் கோடுகளாய் வளைந்தன. சுடிதாரைச் சரி செய்தவாறே அவள் பின்னால் வெளியே வந்த சரயுவைப் பார்த்து, ‘உனக்கு மூணு மாசம் கர்ப்பம்’ என்றாள்.  எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் தட்டையாக ஒலித்தது அவள் குரல்.

சரயுவின் முகத்திலும் அதிர்ச்சியோ, அச்சமோ தெரியவில்லை.

“இர்ரெகுலர் பீரியட்ஸ். சரியாத் தெரியலை மேடம்.”

“பன்னிரண்டு, பதினாலு வாரம் வளர்ந்திருக்கு. ஆப்பரேஷன் செய்துதான் கலைக்கமுடியும் – கவனமா இருக்க வேண்டாமா?”

ஒரு நிமிடம் அமைதி. பிறகு நிதானமாகச் சொன்னாள் சரயு. “கலைக்க வேண்டாம் மேடம். மனசு கேக்கலை.”

“என்ன சொல்ற நீ? திருமணமாகாம ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது அவ்வளவு சாதாரணமா?”

டாக்டர் மனோன்மணிக்கு சரயுவை கடந்த ஒரு வருடமாகத்தான் தெரியும். சரயு இந்த ஊருக்கு வேலைக்கு வந்ததுமுதல், ஒரு நல்ல சிநேகிதியாய் டாக்டர் மனோன்மணி பழகி வந்தாள். தங்கள் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வது வரை அந்த நட்பு இறுக்கமானது.

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். திரும்பி வந்து பேசுகிறேன் மேடம்.”

சரசுவின் பிடிவாதமும், நிதானமாக முடிவு எடுக்கும் குணமும் மனோன்மணி அறிந்ததே என்றாலும், இந்த நிலையில் அவள் என்ன செய்வாள் என்று புரியாமல் குழம்பினாள் அவள்.

சென்ற வருடம் புதுவருடக் கொண்டாட்டத்தின் போதுதான் சரயுவும் சங்கரும் சேர்ந்து வாழ முடிவு செய்தார்கள்! அப்படி வாழ்வது ஒரு அமைதியான, அழகான, சுவாரஸ்யமான கலை – அதற்குத் தேவை பொறுமையும், சுதந்திரமான சிந்தனைகளும்தான் என்று இருவரும் நம்பினார்கள். திருமணமின்றி சேர்ந்து வாழ்வதில் இருக்கும் ‘த்ரில்’ அவர்களை கவர்ந்திழுத்தது.

சங்கர் பெரிய இடத்துப் பிள்ளை. கல்கத்தாவின் முதல் பத்து செல்வந்தர்களில் ஒருவரின் செல்லப் பிள்ளை. எதிர்காலம், வாழ்க்கை என்பதெல்லாம் ‘இன்று’ வாழ்வதில்தான் இருக்கின்றது; நேற்றும், நாளையும் பற்றிய சிந்தனைகள் எல்லாம் ’அநாவசியம்’ என்ற கொள்கையுடையவன். சுதந்திரமாக விருப்பப்படி வாழ்வதற்காகவே, தான் வேலை பார்க்கும் கம்பெனியின் அருகிலேயே ஃப்ளாட் ஒன்றை வாங்கியிருந்தான். பணம், இளமை, புத்திசாலித்தனம் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, கவலையில்லாத மனம், எப்போதும் நண்பர்கள் கூட்டம் என இனிமையாக இருந்தது அவன் வாழ்க்கை.

தமிழகத்தின் தென் கோடியில் ஒரு சின்ன டவுனிலிருந்து வந்து, அந்தக் கம்பெனியில் சேர்ந்தவள் சரயு. நடுத்தர வர்கத்தினருக்கே உரிய அறிவு, கவனமான அணுகுமுறை, வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்ளும் மனம் என வளர்ந்தவள். அழகு, சிரித்த முகம், இயல்பான பேச்சு, துணிச்சல் எனப் பார்த்தவுடன் ஈர்க்கும் வசீகரம் கொண்டவள்.

பார்த்தமாத்திரத்தில் சங்கரும், சரயுவும் நண்பர்களானார்கள். வயதிற்கேற்ற துள்ளலும், கேலியும், சிரிப்பும் இருவரையும் மிகவும் நெருக்கமாக்கின.

நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு ‘புது வருட வாழ்த்துகள்’ சொல்லி அனைவரும் கை கொடுத்துக்கொண்டார்கள். கட்டி அணைத்துக்கொண்டார்கள். சிலர் முதன் முறையாக முத்தம் கொடுத்துக்கொண்டார்கள் – சங்கரும் சரயுவும் போல!

“சரயு, ‘திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது’ பற்றி நீ என்ன நெனக்கிறே?”

“ஒரு ஐடியாவும் இல்லே. எனக்குத் திருமணம் பற்றியே சில எதிர்மறையான அபிப்ராயங்கள் உண்டு. அது ஒரு சிறை மாதிரி, கட்டிப்போட்டா மாதிரி, பரிபூரண சுதந்திரம் இல்லாத வாழ்க்கைன்னு தோணும். என் அம்மா, அவங்களோட அம்மா அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தாலே எனக்கு அப்படித்தான் தோணும்.”

“ஆமாம். அதுதான் என் நினைப்பும். ‘எல்லாத் திருமணங்களும் மகிழ்ச்சியாகத்தான் தொடங்குகின்றன. அதன் பிறகு சேர்ந்து வாழ்வதுதான் கடினமானது’ என்பதுதான் இன்றைய நிதர்சனம். இன்றைக்கு மகிழ்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கை. இரண்டு நண்பர்கள் சேர்ந்து வாழ்வது போல, ஒருத்தருக்கொருத்தர் துணையா, அதே சமயம் தனித்தனியா தன் இயல்புப்படி வாழறது – லிவிங் டுகெதர் -எனக்குப் பிடிச்சிருக்கு. ஒரு டூர் போறா மாதிரி, இரண்டு பேர் போகின்ற டூர், அடுத்தவர் சுதந்திரத்துல குறுக்கிடாத வகையில் வாழ்வது எவ்வளவு அழகானது. சரியா வரலைன்னா, பிரிந்து,  நண்பர்களாகவே இருந்துவிடுவது என்கிற கான்செப்ட் ரொம்ப பிராக்டிகலாகவும், நல்லாவும் இருக்கு”

“ஆரம்பத்துல அபத்தமாகவும், அசிங்கமாகவும் தெரியும். இது எல்லோர்கிட்டேயும் பரவினாத்தான் நல்லா இருக்கும். அது ஒரு ‘த்ரிலிங்கான’ வாழ்க்கை!”

“நாம இரண்டு பேரும் அப்படி வாழ்ந்தா என்ன?”

சரயு ஒரு நிமிடம் மெளனமானாள். அவள் அம்மா, அப்பா, தம்பி, அந்த ஓட்டு வீடு, தெருமுனைப் பிள்ளையார் எல்லாம் ஒரு முறை ஏனோ ஒருமுறை மனதில் வந்து போனார்கள்!

“நாளைக்கு சொல்றேன் சங்கர்.”

மறுநாள் காலை அழைப்பு மணிக்குக் கதவைத் திறந்த சங்கர், கையில் பெட்டியுடன் நின்றுகொண்டிருந்த சரயுவைப் பார்த்தபோது, அவன் காதுகளில் மங்கள வாத்திய ஒலி கேட்டது!

“வாவ், வாட் எ சர்ப்ரைஸ் – உள்ளே வா. வலது காலோ, இடது காலோ பரவாயில்லை. தடுக்காம படியைத் தாண்டி வா”

“வரவேற்பே பலமா இருக்கே சங்கர். என்னை எதிர்பார்த்தாயா?”

“நிச்சயமா எதிர்பார்த்தேன்; ஆனா இவ்வளவு சீக்கிரமா இல்லே!”

சுறுசுறுப்பாக காபி மேக்கரில் காபி தயாரித்து, இரண்டு கப் கொண்டு வந்தான். சோஃபாவில் அவளருகில் அமர்ந்து அவளுடன் காபியை உறிஞ்சினான். முதல் காபி, வீட்டில் அவளுடன் தனியாக; தொடங்கியது விரும்பிய வாழ்க்கை!

ஆளுக்கொரு அறை. பொதுவான ஹால், சமையலறை, ஃப்ரிஜ், டி.வி (வேண்டுமானால் அறையில் தனி டி.வி வைத்துக்கொள்ளலாம்!). பால்கனியில் தொங்கிய பிரம்பு ஜூலாவில் ஆடிப்பார்த்தாள் சரயு. வெளியே நீலவானம் பளீரெனத் தெரிந்தது.

புரொவிஷன், கரண்ட், வீட்டு மெயிண்டெனன்ஸ் எனப் பொதுவான செலவுகள் தவிர, மற்ற செலவுகள், சேமிப்பு பற்றி மற்றவர் தலையிடக்கூடாது. வீட்டிற்கு வருவதும், வெளியே செல்வதும் அவரவர் விருப்பம். வீட்டில் சேர்ந்து இருக்கும்போது, சிரித்து, பேசி, டி.வி. பார்த்து, உணவு உண்டு, சுத்தம் செய்து, ஆடிப் பாடி, விருப்பம்போல் உறவு கொண்டு…. இனிமையாக இருந்தது இருவருக்கும்.

’திருமணம்’ என்ற சடங்கு, ’தாலி’ என்ற விலங்கு இல்லாத சுதந்திர வாழ்க்கை – இல்வாழ்க்கை – எதற்கும் தடையில்லாத, பொங்கும் புதுப் புனல் போன்ற வாழ்க்கை!

“சங்கர், இப்படி வாழறது நல்லா இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் எல்லா வகையிலும் புரிஞ்சிக்க முடியுது. ஒரு வருடம் முயற்சி பண்ணலாம். பிடிச்சிருந்தா, அப்படியே தொடரலாம். பிடிக்கலைன்னா, அப்படியே நண்பர்களாகவே பிரிஞ்சிடலாம்.”  கடைசி வார்த்தை வெளிவருமுன், சரயுவை அணைத்து இதழ் பதித்தான் சங்கர் – பிரிவைப் பற்றி நினக்க விரும்பாதவன் போல!

காதல் உண்டு, கல்யாணம் கிடையாது;

உறவு உண்டு, வாரிசுகள் கிடையாது;

சேர்ந்து வாழ்வோம், சேர்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை;

இணைந்திருப்போம், வேண்டாமெனில் பிரிந்திடுவோம் – புதுக்கவிதை எழுதினாள் சரயு.

சாதியையும், மதத்தையும்தான் ஒழிக்க முடியவில்லை. ஆண், பெண் வித்தியாசத்தையாவது அழித்து, பந்தங்களை அறுத்திடுவோம்! நிகழ்காலம் ஒளிரட்டும்….  அதுவே எதிர்காலத்திலும் நிகழ்காலமாக மிளிரட்டும் … லல்லா…லல்லா…லா…லல்லா…லல்லா…  சேர்ந்து வாழ்வதே இன்பம்… திருமணம் இன்றி சேர்ந்து வாழ்தல் பேரின்பம்… லல்லா..லலா…. பாடி ஆடினான் சங்கர்!

“சரயு ஈவினிங் சீக்கிரம் வந்துவிடு. பீட்டரும் அல்லியும் வருகிறார்கள்”

“ஓகே சங்கர். நாலு பேருக்கும் டின்னர் ஆர்டர் பண்ணிடலாம்”

“ட்ரிங்க்ஸ் நான் ஸ்பான்சர் பண்ணிடறேன்!”

“சைட் டிஷ் நான் ஸ்பான்சர்’ கண்ணடித்தாள் சரயு. சொக்கிப்போன சங்கர் தாவி வந்து அணைக்க, அதே வேகத்தில் சோஃபா மேல் விழுந்து இருவரும் சிரித்த சிரிப்பு, முத்தத்தில் அடங்கியது!

மாலை வீடு களை கட்டியது. மேற்கத்திய இசை கசிந்து கொண்டிருந்தது. குப்பியில் ஸ்காட்ச் விஸ்கி சிறிது சிறிதாகக் குறைந்தது. இரவு உணவு, பாஸ்தா, சிக்கன், மீன், முட்டை, ஐஸ் கிரீம் என விரிந்தது. பாட்டும் ஆட்டமும் சேர்ந்து நான்கு பேரும் மயங்கிக் கட்டிலில் விழும் வரை இரவு நீண்டது. காலையில் எழுந்த போது பீட்டர் சோஃபாவிலும், அல்லி சரயு அறையிலும், சரயு சங்கர் அறையிலும் தூங்கியது புரிந்தது!

“சங்கர், இன்று மாலை என் அப்பாவும் அம்மாவும் என்னைப் பார்க்க இங்கே வருகிறர்கள். நான் இங்கு உன்னுடன் தங்கியிருப்பது தெரியும். ஆனால்…..”

“சரயு.. டோண்ட் பாதர். எனக்குப் புரியுது. எல்லாத்தையும் நீட்டா வெச்சிட்டுப் போறேன் – நீ தனியா, நான் தனியா வாழறோம்னு அவங்களுக்குப் புரியறா மாதிரி! உன் பேரண்ட்ஸ் கூட நீ மகிழ்ச்சியா இரு. நான் பீட்டர் வீட்டில் இன்று இரவு தங்கி, நாளைக் காலையில் ஆபீசில் உன்னைப் பார்க்கிறேன். ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ கூட சேர்ந்து வாழ்வதில் அடக்கம்தானே..!”

சரயு நெகிழ்ந்து போனாள்; எவ்வளவு புரிந்து கொள்கிறான் சங்கர்.

வீட்டிற்கு வந்த அப்பாவும் அம்மாவும் சரயுவின் வீட்டைப் பார்த்து மகிழ்ந்து போனார்கள். சங்கர் அறை, ஹால், சமையலறை எல்லாம் அழகாகத் தனித்தனியாக உபயோகிப்பது கண்டு திருப்தி பட்டுக்கொண்டனர். இன்றைய இளைஞர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை அந்தக் காலத் தம்பதியினரால்!

“காலைல மொத பஸ்ஸுல கிளம்பறோம் நாங்க. வழியிலே உங்க அத்தை வீட்டுக்குப் போய்ப் பேசிட்டுப் போகணும். உன் அத்தான் சந்துருவுக்குத்தான் உன்னைக் கொடுக்கணும்னு ரொம்ப நாளா உன் அத்தைக்கு ஆசை”

“இல்லப்பா… இப்பதானே வேலைல சேர்ந்திருக்கேன். ஒரு வருஷம் போகட்டும்..பா. பிறகு கல்யாணம் பற்றிப் பேசலாமே…”

“இப்போவே பேசி வெச்சுட்டா, எப்போ வேணுமினாலும் கல்யாணத்த வெச்சுக்கலாம். சரி..சரி.. நீ கொழந்த. நாங்க பெரியவங்க பார்த்துக்கறோம். சங்கர் தம்பியத்தான் பார்க்க முடியலெ.. பரவாயில்லே, இன்னொரு தரம் வரும்போது பார்த்துக்கலாம். விஜாரிச்சேன்னு சொல்லிடும்மா.”

வெள்ளந்தியாகப் பேசிவிட்டு, விடை பெற்றுக்கொண்டனர் பெற்றோர்!

‘டேட்டிங் என்பதின் நீட்சியே லிவிங் டுகெதர்’

‘வாழ்க்கையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்’

‘எதிர்காலம் சந்ததியில்லாமல் போய்விடும்… நல்லதுதான்’

‘இப்படிப்பட்ட ஃப்ரீ சொசைட்டி எங்கு போய் முடியுமோ?’

‘நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்?’

எனப் பலவாறான பட்டிமன்றப் பேச்சுகள் அலுவலகம் முழுவதும் விரவியிருந்தன. சங்கர், சரயு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!

“சரயு இதை இப்போது எதிர்பார்க்கவில்லை. ஒரு வருடம் முடிந்த பிறகு சங்கரிடம் பேசி, திருமணம் செய்து கொள்ளலாம்” என்ற எண்ணம் இருந்தது. இது தன்னுடைய அஜாக்ரதையினால் வந்த குழப்பம் என்று தன் மீதே அவளுக்கொரு கோபம் வந்தது. சங்கரிடம் இது பற்றி பேசுவதற்குத் தயக்கமாகக் கூட இருந்தது. ஆனாலும் இந்த சிசுவைக் கலைப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அது என்ன பாவம் செய்தது?

“சரயு உளறாதே. லிவிங் டுகெதரில் இதற்கெல்லாம் இடமில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு வருடம் கழித்து எடுக்க வேண்டிய முடிவு – உன் அஜாக்ரதையினால இப்போவே எடுக்க வேண்டியிருக்கு. நான் சொல்வதைக் கேள். டாக்டர் மனோன்மணியிடம் சொல்லி, கலைத்துவிடு. அவங்க சொல்றாப் போல இதுக்கு லீகல் பாதுகாப்பு கிடையாது. இட்ஸ் டூ எர்லி டு டிசைட். அதுக்குள்ள குழந்தையா… சான்சே இல்லே”

சங்கரை சரயு நன்கறிவாள். அவன் பிடிவாதம், காரணத்துடன் விவாதித்து ஜெயிக்கும் புத்திசாலித்தனம், வாழ்க்கை குறித்த அவன் பார்வை எதையுமே அவன் மாற்றிக்கொள்ள மாட்டான். மிகத் தெளிவாகக் கூறிவிட்டான். “நான் திருமணத்திற்கு இப்போது, எப்போதுமே தயாரில்லை. வாழ்க்கையில் ஒரு கமிட்மெண்ட் இருக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். உனக்கு குழந்தையைப் பிரிய மனமில்லையென்றால் நாம் நண்பர்களாகப் பிரிவதுதான் முடிவு.”

விபரம் கேள்விப்பட்ட அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் அழுது, அத்தைக்கு என்ன சொல்வது எனத் திகைத்தனர்.

டாக்டர் மனோன்மணியிடம் சரயு தன் முடிவைச் சொன்னாள். சரயுவைப் புரிந்துகொள்ள மனோன்மணிக்குச் சிரமம் இல்லை. தானே தருவித்துக்கொண்ட ஒரு சிக்கல். அதனைத் தன் வழியிலேயே எதிர்கொள்ளும் சரயுவின் உறுதி மனோன்மணியை நெகிழ்த்தியது.

சரயு முடிவு செய்து விட்டாள் – ”குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வது, நட்புடன் சேர்ந்து வாழ்வது, கணவனுடன் சேர்ந்து வாழ்வது என்று வாழ்க்கை எப்போதும் சேர்ந்து மட்டுமல்ல, சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. நான் என் குழந்தையுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்துவிட்டேன்! அவனோ, அவளோ – யாரையும் சார்ந்திராமல், சுதந்திரமாக அதன் வாழ்க்கையை வாழட்டும் – பிறர் வாழ்க்கையில் குறுக்கிடாமல்.”

இன்று புதுவருடம் பிறக்கிறது. கொண்டாட்டத்தில் சரயு இல்லை – ஓய்வெடுக்க மனோன்மணி அறிவுரை! சங்கர், பீட்டர், அல்லி, இவர்களுடன் இந்த முறை ஸ்டெல்லவும் சேர்ந்துகொள்ள, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வழக்கம்போல் ஒளிர்ந்தன!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...