0,00 INR

No products in the cart.

தெய்வீக ஓவியர் மணிவேல்.

வித்யா சுப்ரமணியம்

 

அண்மையில் அம்பத்தூரிலுள்ள Dot school of design கல்லூரியில் மணிவேல் அவர்களின் அத்தனை ஓவியங்களையும் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.  ஒவ்வொரு ஓவியத்தையும் நுணுக்கமாக ரசிக்க ஒரு magnifying glass தந்து பார்க்கச் சொல்லுகிறார்கள்.  நகைகள், கிரீடம், திருவாட்சி டிஸைன்கள், யாளிகள், அம்பாளின் புடைவைகளின் மின்னும் ஜரிகையின் துல்லியமும், நுணுக்கங்களும், பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொன்றும் அத்தனை அழகுடன் தெய்வீகமாக இருந்தது. அத்தனை தெய்வங்களையும் ஒரே இடத்தில் நின்றபடி கருவறை தரிசனம் செய்த உணர்வு. இந்த ஓவியங்களை வரைந்த ஓவியருடன்  எழுத்தாளர்,ஒவியர்  வித்தியா சுப்ரமணியத்தின் சந்திப்பு:

ந்தவொரு கோயிலாகட்டும், தன் கருவறைக்குள் யார் நுழைய வேண்டுமென்பதை தெய்வமே தீர்மானிக்கிறது. கர்ப்பக்கிரக  தெய்வத்தை நாமெல்லாம் கண்ணாரக் காண விரும்புவோம். கூட்டம் மிகுந்த கோவில்களில் அரை நிமிடம் கூட நின்று நிதானமாக தரிசிக்க விடவில்லையே என்று புலம்புவோம். ஆனால் கூட்டமே இல்லாத கோயில்களில் நாள் முழுக்க கருவறை முன்பு நிற்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நம்மால் அங்கு நிற்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. மிஞ்சிப்போனால் அரைமணி. அதற்குமேல் நம்மை ஏதோவொரு சக்தி அங்கிருந்து நகர்த்திவிடும். அதுமட்டுமல்ல; கருவறை உள்ளே நாம் கண்குளிர தரிசித்து, நம் மனதுக்குள்  பதிந்துவிட்டதாக நினைக்கும் அந்த தெய்வத்தின் திருமுகமும் நம் மனதிலிருந்து மெல்ல அழிந்துவிடும். மீண்டும் மீண்டும் எத்தனை முறை தரிசித்தாலும் நம்மால் அந்த முகத்தை நம் நினைவில் பதித்துக்கொள்ள முடியாது. இதற்கென்ன காரணம் என்று தோன்றும். இதுவே இறைமையின் சக்தி சில நிமிட நேரங்களுக்கு மேல் நம்மால் அதனைத் தாங்க இயலாது என்பதால்தான் நம்மை நகர்த்தி விடுகிறது.

ஆனால், அதே கருவறையில் மணிக்கணக்கில் அமர்ந்து அந்த தெய்வத்தின் திருவுருவை ஒருவர் வரைகிறார் எனில், அவரால் மட்டும் எப்படி மணிக்கணக்கில் அங்கு அமர்ந்திருக்க முடிகிறதென்ற பிரமிப்பு ஏற்படவே செய்யும். தன் கண் முன்னே தரிசிக்கும் அந்த தெய்வத்தையே அதன் எதிரில் அமர்ந்து வரைவதும் இறைவன் கொடுக்கும் வரமல்லாது வேறென்ன? இறைவனின் அனுக்கிரகமின்றி இது நிச்சயம் சாத்தியமில்லை.

ஆம். அவருக்கு இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக இருந்தது. `வா மணிவேல்! வந்து என் முன் அமர்ந்து என்னை அர்ச்சாமூர்த்தியாக வரைந்து கொள் என்று ஆனைக்கா ஆகிலாண்டேஸ்வரியும், காஞ்சி கமாட்சியும், காசி அன்னபூரணியும், மதுரை மீனாட்சியும், மயிலை கற்பகமும்,  இவரை அழைத்து தன்னை வரையுமாறு கூறுவார்களா?

தெய்வத்தின் பூரண அருள் பெற்ற அந்த ஓவியர் திரு மணிவேல் அவர்கள்தான். நுண்கலை அரசு என்று பட்டம் பெற்ற நாகை மாவட்டம் சிக்கலைச் சார்ந்த ஸ்தபதி திரு ஆறுமுக ஆச்சாரிகக்கு 1941 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்து, தந்தையையே தனது குருவாக வரித்துக்கொண்டவர். பொறியியல் படித்து வரைவாளராக உத்யோகம் பார்த்துக் கொண்டிருந்ததவரை, அவரது தந்தை ஒரு சிற்பத்தில் வடித்த செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் வெகுவாய் ஈர்க்க, அதுவே தன்னையும் ஒரு ஓவியராக்கியது என்கிறார்.

காஞ்சி மகா பெரியவரின் அன்பையும், அனுக்கிரகத்தையும் பெற்ற இவரது ஓவியங்களில் ஒவ்வொரு தெய்வமும் வந்து உறைந்து பிரத்யட்சமாக நமக்கும் காட்சி தரும். “நாம் அந்தக் கோயிலுக்குச் சென்று தரிசிக்கவில்லையே” என்ற குறையை இவரது ஓவியங்கள் தீர்த்து வைக்கும்.

எண்பது வயதை நிறைவு செய்துள்ள வாழும் ஓவியரான திரு மணிவேல் அவர்களது அனைத்து ஓவியங்களும்  காஞ்சி  மகா பெரியவரின் ஆசியுடன் ஓரிக்கையிலும், தற்போது அம்பத்தூரிலுள்ள டாட் ஸ்கூல் ஆப்  டிசைனிலும் காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் வந்து அவரது ஓவியங்களைக் கண்டு வியந்து புகழ்ந்தார்கள். கருவறை தெய்வங்கள் மட்டுமல்லாது கோயிலின் வெளிப்புறத்தோற்றம், மண்டபங்கள், அழகிய பிரகாரத் தூண்கள் என்று கருப்பு வெள்ளையில் வரைந்த நுணுக்கமான ஓவியங்களும்sw rdcc பிரமிக்க வைக்கின்றன.

ஓவியங்களின் நுணுக்கங்களைத் துல்லியமாக கண்டு ரசிக்கும் வகையில் பெரிதுபடுத்திக் காட்டும் ஒரு கண்ணாடியும் வழங்கப்பட்டது.  அதன் வழியே பார்க்கப் பார்க்க நம் மனம் பிரமிப்பில் ஆழ்கிறது. தெய்வங்களின் மேனியில் இருக்கும் ஆபரணங்கள் ஓவியமா அல்லது நிஜமான நவரத்தினக் கற்கள் பதித்த தங்க நகைகளோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. தகதகக்கும் கிரீடங்களின் முப்பரிமாண அழகில்  மனம் மயங்குகிறது. பெண் தெய்வங்களின் மேனியில் கட்டப்பட்டிருந்த கண்ணைக்கவரும் புடைவைகளைத் தொட்டுப் பார்க்கலாம் போல கைகள் துருதுருக்கிறது. ஆபரணங்கள் வஸ்திரங்களை விடுங்கள். ஒரு தெய்வத்திருவுருவத்தை வரையும்போது மிக மிக முக்கியமான, பக்திப்பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய திருமுகத்திற்கு வருவோம்.

தெய்வத்தின் ஆசி பரிபூரணமாக இருந்தால் மட்டுமே ஒருவரால் கருவறை தெய்வங்களின் திருமுகத்தை தெய்வீகம் ததும்ப வரைய முடியும். அதுவும் தெய்வத்திற்கு விழி திறப்பதென்பது மிக மிக பக்தியோடு விரதமிருந்து செய்ய வேண்டிய ஒன்று. ஒரு ஓவியத்திற்கு உயிர் கொடுப்பதே முகமும் விழிகளும்தான் எனலாம்.  சிற்பிகள் வடித்த ஒவ்வொரு கருவறை தெய்வத்திற்கும் அதன் ஸ்தல புராணத்திற்கேற்ப ஒவ்வொருவிதமான முக அமைப்பிருக்கும். கருணை பொங்கும் விழிகள், புன்னகைக்கும் இதழ்கள். சாந்தமான முகம், உக்கிரமான முகம், வீரமான முகம், என்று அவை ஒவ்வொன்றையும் அதன் மூலத்திற்கு இம்மியும் பிசகாமல் அப்படியே ஓவியத்தில் கொண்டு வருவதென்பது தெய்வத்தின் பரிபூரண அருளிருந்தால் மட்டுமே முடியும். திரு மணிவேல் அவர்களின் அனைத்து ஓவியங்களையும் பார்த்தால் இது உண்மையெனப் புரியும்.  அந்தந்த கருவறை தெய்வங்களின் முகமும் கண்களும் தத்ரூபமாக இவரது ஓவியத்தில் தெரியும். ஒவ்வொரு தெய்வமும் கருவறை விட்டு இறங்கிவந்து இவரது ஓவியத்தில் குடிக்கொண்டு விட்டதோ என்று தோன்றும்.

தவிர ஒவ்வொரு கோயிலிலும் அந்த கருவறை மூர்த்திக்கு என்னென்ன விலையுயர்ந்த ஆபரணங்கள்  அணிவிக்கப்படுமோ அவை அச்சுப்பிசகாமல் புகைப்படம் எடுத்தாற்போல் வெகு தத்ரூபமாக இவரது ஓவியங்களிலும் காண முடிவதற்குக் காரணம், பல கோயில்களில் ஒரிஜினல் நகைகளையே  இவரிடம் பார்த்து வரைவதற்காகக் காண்பிக்கப்பட்டதாக அறிந்தபோது மனசு சிலிர்த்தது.

இறையருளின்றி இறைவனை வரைந்துவிட முடியாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் ஓவியர் திரு மணிவேல். யாரேனும் இவரிடம் வந்து  குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லி அதனைத் தனக்கு படமாக வரைந்து தருமாறு கோரினால், உடனே அவர்களிடம், அந்த தெய்வத்தின் உத்தரவு தனக்குக் கிடைத்தால் மட்டுமே வரைய முடியும் என்பாராம். அப்படி தெய்வத்தின் உத்தரவு கிடைத்துவிட்டால் உடனே வரைந்தும் கொடுத்திருக்கிறார். தெய்வத்தின் உத்தரவோடு ஒரு படத்தை வரைந்து முடிக்கும்போது மட்டுமே தனக்கு மன நிறைவு கிடைப்பதாகக் கூறுகிறார்.

தெய்வம் எப்படி உத்தரவு கொடுக்கும்? அதுகுறித்து அவர் கூறியவற்றை அவரது வார்த்தைகளில் அப்படியே இங்கு தருகிறேன்.

“ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புனித ஸ்தலத்திற்கு அந்தந்த ஸ்தல தெய்வத் திருவுருவை ஓவியம் வரையச் செல்லும் போதும் அந்த இடத்தில் தங்கியிருக்கும் போதும் அந்த தெய்வம் முதல் நாளே என் கனவில் தோன்றி காட்சி தரும் மகிமையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. என்னவொரு காட்சி! தரிசனம்! `என்னைப்பார்க்க உனக்கு ஏன் இவ்வளவு நாட்கள் நேரமில்லையா?’ என்ற கேள்வியுடன் சேர்ந்து கிடைக்கும் தரிசனம். உரிமையுடன் தாய் மகன் உறவு போலிருக்கும் தரிசனம்” என்பவரது ஒவ்வொரு இறை அனுபவமும் சிலிர்க்க வைக்கிறது.

இவரது ஓவியங்கள் இல்லாத ஆன்மீகப் பத்திரிகைகளும், தீபாவளி மலர்களும் இல்லை எனலாம். ஹவாய் தீவிலிருந்து வெளிவரும் Hinduism Today  என்ற இதழில் கூட இவரது ஓவியங்கள் வெளியாகியுள்ளன. கருவறை தெய்வங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மாதத்தில் வரும் திதிகளின் தேவதைகளைக்கூட ஓவியமாக வரைந்திருப்பது இவரது சாதனையில் ஒன்று.

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஓவியக்கலைக்கு இவர் ஆற்றிவரும் பணியினை சிறப்பித்து 2017 ஆம் ஆண்டு திரு எம்.ஏ.எம் சிதம்பரம் செட்டியார் அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் பரிசளித்து இவரை கௌரவித்திருக்கிறார். இத்தனை தெய்வீகத் திறமையும் சிறப்புகளையும் கொண்டிருந்தாலும், மிக எளிய வாழ்க்கையையே இன்றுவரை இவர் வாழ்ந்து வருகிறார்.

தந்தையே குருவாக இருந்ததால், ஓவியம் வரைவதை வெறும் பொழுதுபோக்காக மட்டும் எண்ணாமல் தந்தை சொல்லிக் கொடுத்தவாறு ஆகம விதிகளின்படி சாஸ்திரம் மற்றும் விரதங்களைக்  கடைப்பிடித்து தூய பக்தியோடு இன்றுவரை தன் ஓவியப்பணியை ஒரு தவம் போல் செய்து வருகிறார் திரு மணிவேல்.

வரைகலையாளர் பணியிலிருந்ததால் இரவு நேரங்களில் மட்டுமே ஓவியம் வரையும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் இவர். பகல் முழுக்க வேலை, இரவில் ஓவியம். எப்படி முடிந்தது? எங்கிருந்து சக்தி? இதற்கும் அவரே கீழ்க்கண்டவாறு பதிலுறுக்கிறார்.

“இரவில் மட்டுமே ஓவியம் வரையும் பழக்கம் எனக்குண்டு. பிறகு விடியற்காலையில் உறங்குவேன். உறங்கியபின் ஏதோவொரு அதிசயம் தினமும் நடக்கும் அனுபவம். உறங்கும்போது யாரோ என்னை மேக வீதியில் உள்ளங்கையில், என் தூக்கம் கலையாமல் என்னைத் தூக்கிச் செல்வதும், தூங்கி எழுவதற்குச் சற்றுமுன் என்னைக் கீழே இறக்கிவிட்டது போலவும் தோன்றும் உணர்வு தினமும் நடக்கும் அதிசயம். சிறிதும் உடல் சோர்வின்றி எழும் நான், இரவு மீண்டும் ஓவியம் வரைவேன். மன அமைதி என்னை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். அந்த தெய்வம் யார்? எனக்கே தெரியாத அதிசயம் இது!”

இப்படி கூறுபவருடன் தெய்வம் எப்போதும் உடனிருப்பதை உணர்த்தும் மற்றொரு சம்பவமும் உண்டு.

இவர் மிகவும் அன்பு வைத்திருக்கும் ஓவியர்களில் ஒருவரான
திரு கே. பாலசுப்பிரமணியன் இவரது நீண்ட கால குடும்ப நண்பரும் கூட. ஒருமுறை திரு பாலசுப்ரமணியம் இவரிடம் எனக்கொரு படம் வரைந்து தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். உனக்கில்லாத படமா? என்ன படம் வேண்டுமென்று சொல் என்றாராம். இவரும் சொல்ல, அவர் வழக்கம் போல தியானத்தில் அமர்ந்து பிரார்த்தித்து விட்டு அண்ணாமலையாரை வரைய ஆரம்பித்திருக்கிறார். வரையத் துவங்கிய சில நாட்களிலேயே திடீரென பக்கவாதம் வந்து இவர் படுக்கையில் விழ, பார்க்காத வைத்தியமில்லை. இனி இவரால் வரைய முடியுமா என்று எல்லோரும் கவலையும் வேதனையும் அடைய, இவரோ  மனம் தளரவில்லை. “இதுவரை உடனிருந்து வரையச் செய்த தெய்வம் தன்னை மீண்டும் வரையச் செய்யும்” என்று நம்பினார். அதேபோல் அனைவரும் வியக்குமளவுக்கு உடல்நிலை மெல்ல மெல்ல தேறி, மீண்டும் தூரிகை பிடித்து அண்ணாமலையாரை இவர் முழுவதும் வரைந்து முடித்து தன் அன்புக்குரிய ஓவியர் பாலசுப்ரமணியத்திற்குக் கொடுத்த அதே நேரத்தில் அவரது மகனுக்குக் குழந்தையும் பிறந்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி அவர் வரைந்த அண்ணாமலையார் ஓவியத்தையும் இங்கு காணலாம். தெய்வத்தின் பரிபூரண ஆசியைப் பெற்றவர்கள் எத்தகைய கஷ்டங்களை எதிர்கொண்டாலும், அவற்றிலிருந்து அவர்கள் விடுபட அந்த தெய்வமே துணை நிற்கும் என்பதற்கு இவரது வாழ்வே சிறந்த உதாரணம் எனலாம்.

இந்த இதழின் அட்டைப்படம் ஓவியர் மணிவேல்

1 COMMENT

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...