0,00 INR

No products in the cart.

உலகக் குடிமகன் 1

நா.கண்ணன்

 

அறிமுகம்

தொடரைத்தொடங்கு முன் நான் உங்களுக்குச்  என் கதையை சொல்லியாக வேண்டும். உலகில் எதுவும் காரண காரியமின்றி நிகழ்வதில்லை. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். ஆனால் அதைக் கண்டு சொல்லும் திறம் வேண்டும்! ஆள் வேண்டும்!
69 வயதில் இதை நானே கண்டு சொல்ல கல்கி எனக்கோர் வாய்ப்பளித்திருப்பது எனக்குள் ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் உண்டாக்குகிறது. நான் என்னை ஓர் மூன்றாவது மனிதனாக பாவித்து என் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். எப்படி நாம் பிறந்த காலம், அதன் சூழல், சமூகம் தரும் வாய்ப்புகள், தன் முயற்சி, தன்னம்பிக்கை இவை ஓர் இந்தியனின், தமிழனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்கும் தொடர் இது. நான் உருவாகும் காலத்தில் இதை நான் அறிந்தேனில்லை.

இன்று உங்கள் முன் நிற்க எனக்கு என்ன தகுதி? கல்விதான்! அதுவே என்னை உங்கள் முன் நிறுத்தியுள்ளது. அறிவியல் இளங்கலை, முதுகலை, முனைவர் என உயர்ந்துள்ளேன். இருமுறை முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். ஒன்று மதுரையில் மற்றொன்று ஜப்பானில். என் ஆய்வு என்னை ஓர் உலகம் சுற்றும் வாலிபனாக ஆக்கி விட்டது. முதல் ஐந்து வருடம் ஜப்பானில், அடுத்த 16 வருடங்கள் ஜெர்மனியில், அடுத்த 8 வருடங்கள் கொரியாவில், பின் ஏழு வருடங்கள் மலேசியாவில் என்று என் வாழ்வு கழிந்திருக்கிறது. நான் ஜப்பானில் இருந்த போது ஹாங்காங், அமெரிக்கா சென்றிருக்கிறேன். ஜெர்மன் வந்த பிறகு பிரான்சு, நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, போலந்து, இத்தாலி, எகிப்து, அமெரிக்கா, கானடா போன்ற நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறேன். கொரியாவில் வேலை பார்த்த போது சீனா, தாய்லாந்து, கம்போடியா, தைவான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மலேசியாவிலிருந்து இந்தோனீசியா, அமீரகம், ஓமன் போன்ற நாடுகளுக்கு போய் வந்துள்ளேன். வட துருவ வட்டம் வரை வடக்கே. தெற்கே அண்டார்டிக் கண்டம் செல்ல வாய்ப்பிருந்தும் நான் முயலவில்லை. பசிபிக் மாகாசமுத்திரத்தை ஆய்வுக் கப்பலில் கடந்திருக்கிறேன். அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் அங்கமான வடகடல், பால்டிக் கடல்களில் ஆய்வுகள் செய்திருக்கிறேன். ஜப்பானின் அங்கமான சேத்தோ உள்நாட்டுக் கடல், ஜப்பான் கிழக்குக் கடலில் ஆய்வுகள் செய்துள்ளேன்.

சூழல் வேதியியல், சூழல் நச்சுவியல் எனும் துறைகளில் உலகின் ஆகச்சிறந்த முதல் பத்து பேராசிரியர்களுள் ஒருவனாக இருக்கிறேன். உலகின் நோபல் நாயகர்களின் தரத்தில் என் ”எச்” அலகு நிற்கிறது (அது என்னவென்று தொடரில் விளக்கயுள்ளேன்).

இது சுயபுராணமல்ல. கீழடி திருப்பூவணம் கிராமத்தில் பள்ளி இறுதி வரை தமிழில் படித்து உயர்ந்த ஓர் மாணவனின் கதை இது. அவனை எது இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றது? என்பதே இத்தொடரின் சாராம்சம். “வல்லமை தாராயோ? இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!” என்பது பாரதி தாரக மந்திரம். இத்தொடர் சிலருக்கேனும் பயனளித்தால் மகிழ்வேன். என்னை இத்தருணத்தில் கண்டு கொண்ட கல்கிக்கு நன்றி.

நா.கண்ணன்,
பெர்லின்,
டிசம்பர் 21

 

மீனாட்சி அம்மன் கோயில் மிகப்பெரியது. இதைக்கட்டிய காலத்தில் மதுரையின் ஜனத்தொகை மிகக்குறைவாகவே இருந்திருக்கும். மிகக்குறைந்த மக்கள் மிகப்பிரம்மாண்டமான திட்டங்களை முன்னெடுத்துச் செய்திருப்பது அதிசயிக்க வைக்கிறது. இறைமை என்பது இப்பிரம்மாண்டம் என்று சொல்ல விழைவது ஓர் நோக்கு என்றாலும், வருகின்ற தலைமுறை இப்பண்பாடு கண்டு வியக்கவும், அதைப் புரிந்து பின்பற்றவும் செய்ய வேண்டும் எனுமோர் சீரிய எண்ணம் மறைமுகமாக இருந்திருக்க வேண்டும்.

தந்தையுடன் கோயிலுக்குள் நுழையும் அக்கிராமத்து சிறுவனுக்கு அங்கிருக்கும் எல்லாமே ஆச்சர்யப்படுத்தின. மாபெரும் கோபுரங்கள், வியக்க வைக்கும் சிற்பங்கள், ஆயிரம் கால்கள் கொண்ட மண்டபம், இசைக்கும் கற்தூண்கள், கல் யானைக்குக் கரும்பு கொடுக்கும் சித்தர் என அனைத்தும் வியக்க வைத்தன. நுழையும் முன் இருக்கும் அறிவிப்புப் பலகை இந்த வியப்பை அப்பள்ளிச் சிறுவனுக்கு மேலும் கூட்டியது, “தெய்வீகத்தாலும், இராஜ்ஜீயத்தாலும் ஏற்படும் தடங்கல்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல” எனும் வாசகம்தான் அது. அவனுக்கு இராஜ்ஜீயத் தடங்கல் என்றால் என்ன? தெய்வீகத் தடங்கல் என்றால் என்ன என்று புரியவில்லை. விளக்குவார் யாருமில்லை.

தந்தை இவனுக்கு திருவிளையாடல் புராணச் சிற்பங்களை விளக்கிச் சொல்வார். பிட்டிற்கு மண் சுமந்த கதை, பாண்டியனுக்கு மதுரையின் எல்லை காட்டியது என்று. அதில் சிவன் பாம்பு ரூபமெடுத்து தலையை திருப்பூவணத்தின் அக்கரையில் (அதாவது வைகை ஆற்றின் அக்கரையில்) வைத்து ஒரு சுற்றுக் காட்டிவிட்டு வாலைத் தலை இருந்த இடத்திற்கே கொண்டு வந்தார் எனும் புராணம் இவனுக்குப் பிடிக்கும் ஏனெனில் இவனது ஊர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவதில் வரும் மகிழ்ச்சி.

இவன் குடும்பம் பெரிது. ஐந்து அக்காமார்கள். ஒரு தாத்தா. ஒரு சித்தி. இரண்டு சித்தியின் பிள்ளைகள். இக்கூட்டுக் குடும்பத் தலைவர் இவன் தந்தை. சிறிய வருமானத்தில் அப்பெரும் குடும்பம் எப்படியோ நடந்தது. தேசாந்திரம் போயிருந்த சித்தப்பா அப்போதுதான் மீண்டு வந்திருந்தார். அவர் வழி வழியாய் வரும் பெருமாள் கோயில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன் வாழ்நாள் கோயிலுக்கு என்று இருந்துவிட்டார். ஆத்து அம்மா (அகத்து அம்மா) என இவனது தாயே பார்க்கப்பட்டாள். அவள்தான் அச்சிறு வருமானத்தில் குடும்பத்தை நடத்தினாள். அவளும் தன் வாரிசுகள் எதிர்காலத்தில் பிழைத்துக் கொள்ளும் வழி பற்றி சிந்தித்தாள்.

கல்வி ஒன்றுதான் அதற்கான வழி என அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அசாதரணமாக இருந்ததினால் முதல் இரண்டு சகோதரிகள் அதிகம் படிக்கவில்லை. மூன்றாவது சகோதரி பள்ளி செல்லும் காலத்தில் திருப்பூவணம் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி எனும் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு எழுத முடியாத ஓர் நிலை. மானாமதுரை சென்றுதான் பரீட்சை எழுத வேண்டும். நான்காவது, ஐந்தாவது அக்காமார் காலத்தில் திருப்பூவணத்திற்கு ஓர் அரசு உயர்நிலைப்பள்ளி வந்துவிட்டது. எனவே பள்ளி இறுதித்தேர்வு திருப்பூவணத்திலேயே எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

காலை நாலரை மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்கள். பிரம்ம முகூர்தத்தில் படித்தால் பாடம் மனதில் நிற்குமென்று. படிப்பு, படிப்பு. வேறு தெரியாது. பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணவியாக இவன் சகோதரி தேறினாள். அதுவே இவனுக்கு உந்து சக்தியாக மாற இவனும் பள்ளி முதல்வனாக ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை தேறினான். பள்ளியில் இவனுக்குப் பிடித்த பாடம் உலகப் புவியியல். உலக நாடுகளும் அதன் சரிதமும் இவனை ஆச்சர்யப்படுத்தின. ஆங்கில, பிரெஞ்சுப் போர்களும் அதில் ஆங்கிலேயரின் வேற்றியும் இவனைப் பெருமைப்படுத்தின. ஆங்கில கப்பற்படைத் தளபதி நெல்சன் இவனது ஹீரோ ஆனார். இரண்டாம் உலகப் போரில் படு தோல்வி அடைந்த ஜப்பானும், ஜெர்மனியும் இவன் கவனத்தைக் கவர்ந்தன.

எப்படி மண்ணைக் கௌவிய இந்த இரண்டு நாடுகளும் பீனிக்ஸ் பறவை போல் அழிவிலிருந்து மீண்டு, உலக அரங்கில் நிமிர்ந்து நிற்க முடிந்தது என்பது இச்சிறுவன் மனத்தில் எழுந்த கேள்வி, வியப்பு. அவனுக்கு அப்போது தெரியாது இந்த இரண்டு நாடுகளும் இவன் வாழ்வில் மிக முக்கிய பங்களிக்கப் போகின்றன என்று. திருப்பூவணம் எங்கே? தோக்கியோ, பெர்லின் எங்கே? இவன் தந்தை அந்த மாவட்டத்தைத் தாண்டி பயணப்பட்டது கூடக் கிடையாது. சென்னைப் பட்டினம் என்பது கேள்விப்பட்டதுதான். போனது கிடையாது. இவனது தாயார், படி தாண்டாப் பத்தினி! கோயிலிக்குக் கூட வெளியே போக மாட்டாள்.

இந்தியா விடுதலை அடைந்து சில ஆண்டுகளே ஆகியிருந்தன. ஊர் இன்னும் வளரவில்லை. மின்சாரம் கூட இன்னும் வந்து சேரவில்லை. வீதிகளின் ஓரத்தில் அகல் விளக்கு இருக்கும். அதை மாலையில் ஏற்றி வைக்க ஓர் ஆள் வருவார். எனவே கிராமத்து வாழ்க்கை என்பது மாலை 6 மணியோடு முடிந்துவிடும். இரவில் வெளியே போவது பயமுறுத்துவதாக இருந்தது. பேருந்துகள் நகர, என்சினை பெரிய சாவி கொண்டு சுழற்ற வேண்டி இருந்தது. இரயில் வண்டி போல் அப்பேருந்துகள் புகை கக்கின. அதற்கென பெரிய புகை போக்கிக் குழாய்கள் இருந்தன. ஆற்றைக் கடக்க பாலமில்லை. சிவகங்கை, பரமக்குடி போக ஆற்றைக் கடந்து பூவந்தி சென்றுதான் பேருந்தைப் பிடிக்க வேண்டும். அவ்வப்போது வைகையில் வெள்ளம் வரும். அப்போது போக்குவரத்து நின்றுவிடும். ஒருமுறை ஆறு பெருக்கெடுத்து வீதிவரை வந்தது.

பெண்கள் விளையாட பல்லாங்குழி, தாயக்கட்டம், பாண்டி தாவுதல், ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்தது எனும் விளையாட்டு. அது கூட அதிகம் விளையாட முடியாது. வீட்டு வேலை என்று கூப்பிட்டு விடுவார்கள். பசங்களுக்கு பம்பரம், கபடி அவ்வளவுதான். பணக்கார வீடுகளில் ஜப்பான் பொம்மைகள் இருக்கும். அவை இவர்கள் காணாதது, கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. எனவே பொழுது போகாத நேரத்தில் கொடுக்காப்புளி விதையை கிழிக்காமல் கருப்பு மேல் தோலை உரித்து வெள்ளைச் சட்டையுடன் வைப்பது ஓர் நுணுக்கமான விளையாட்டு. சதுரங்கம் போல் இதற்கும் பொறுமை வேண்டும். நுணுக்கமான அணுகுமுறை வேண்டும். நகம் கூர்மையாய் இருந்தால் உள் தோல் கிழிந்துவிடும். நாம் தோற்றுவிடுவோம். அயலகம் என்பது அப்போதைக்கு பர்மா. பர்மாக்கார அம்மா என்று ஓர் சமூக சேவகி. வெள்ளை உடை உடுத்தி வந்து அவர் சொல்லும் கதைகள் ஆச்சர்யத்தை ஊட்டும். சில பேர் சிலோன் பற்றிப் பேசுவர், சிங்கப்பூர் பற்றிப் பேசுவர். பெரும்பாலும் செண்டு விற்க வரும் பாய், சிங்கப்பூர் சரக்கு என்பார். அப்போதைக்கு இவர்களுக்கு மதுரையே மாநகர். சென்னை கூட அறியாதது.

மாற்றங்கள் மெல்ல, மெல்ல அங்கும் வரத்தொடங்கின. மதுரை நகரப் போக்குவரத்தை டி.வி.ஸ் கம்பெனி எடுத்துக் கொண்டு திறமையாக நடத்தியது. பெட்ரோலில் ஓடும் வண்டிகள் வரத்தொடங்கின. திருப்பூவணத்திலிருந்து மதுரைக்கும், மானாமதுரைக்கும் பேருந்தில் போக முடிந்தது. கிழக்கே போகும் இரயில் இராமேஸ்வரம்வரை திருப்பூவணம் வழியாகப் போனது. மிக முக்கியமாக மின்சாரம் வந்தது. அதனால் இரவில் வெளியே நடமாட முடிந்தது. மின்சாரம் அபாயகரமானது என மக்களுக்கு உணர்த்த அவ்வப்போது கிராமத்தில் சினிமா போட்டுக் காண்பித்தார்கள். அவை நடமாடும் சினிமா. தெருப்பொட்டலில் நடக்கும். பின் திருப்பூவணத்திற்கு எவரெஸ்ட் டூரிங் டாக்கீஸ் வந்தது. இளைஞர்களுக்கு எம்.ஜி.ஆர், பெரிசுகளுக்கு, பெண்களுக்கு சிவாஜி என்றாகிப் போனது.

இவன் மட்டும் தந்தையோடு அடிக்கடி மதுரை போவான். இவனது சகோதரிகள் அதிகம் பயணப்படுவதில்லை. இவன் மட்டும் உறவுக்காரர்கள் வீடுகளுக்கு தந்தையோடு, அண்ணனோடு செல்வான். தவறாமல் மீனாட்சி கோயில் செல்வான். அப்போது இவன் தந்தை சிவகங்கை தேவஸ்தான அறக்கட்டளை அலுவலகத்தில் பகுதி நேர ஊழியராக இருந்தார். எனவே மீனாட்சி கோயிலின் வெளிப்பிரகாரங்கள் இவன் விளையாடும் திடலாக மாறிப்போயின. மீனாட்சி கோயில் உள்ளே போவதும் வருவதுமாகவே காலங்கள் கழிந்தன. அம்மாவிற்கு மீனாட்சி. அப்பாவிற்கு இலட்சுமி. இவனுக்கு சரஸ்வதி. அம்மாவிற்கு மீனாட்சி, ஏனெனில் மதுரையில் மீனாட்சி ஆட்சி. இவள் குடும்பம் இவள் ஆட்சியில். அப்பாவிற்கு இலக்குமி, ஏனெனில் “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி” என்பது பழமொழி. இவருக்கு செல்வம் வேண்டும். ஆனால், நம்ம ஹீரோவின் இராணி சரஸ்வதி. மீனாட்சி கோயிலில் சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி உண்டு என்று பலருக்கும் தெரியா வண்ணம், சுவாமி சந்நதி உள்சுற்றில், ஓர் அறியா இடத்தில் கலைவாணி வீற்றிருப்பாள். அவள் இவனது பெருந்தெய்வமானாள்.

அவளே இவனைக் கல்வியில் தேற்றி வெளி உலகைக் காணச் செய்தாள் என்பதுதான் கதையின் தொடக்கம்!

3 COMMENTS

  1. Very beautiful narrative I wonder his ability to narrative in Tamil in spite of having been outside the country.I wish can also do having on assignments in different countries an finally settled in US
    Refreshing my Tamil with online Kalki classics

  2. ‘உலகக் குடிமகன் – 1 ‘ தொடரின் கட்டுரையாளர் நா.கண்ணனின் அறிமுகம் தொடரை தொடர்ந்து படிக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது. தனது பால்ய கால கிராம சூழலை விளக்கியது, கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களின் பசுமை நாட்களை மனதில் மலர செய்கிறது. கிராம வாழ்க்கை என்பது மாலை ஆறு மணிக்கே முடிந்து விடும் அன்றைய சூழலில், அதிகாலை 4.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பதை வழக்கப்படுத்திக் கொண்ட (காலை எழுந்தவுடன் படிப்பு – மகாகவி பாரதி) கட்டுரையாளரை தான் கற்ற கல்வியே தன்னை உயர்த்தியது என்ற அறிமுகத்திற்கு சாட்சியாக நிற்கிறது. இளம் வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது, மீனாட்சி அம்மனின் ஆசீர்வாதம். தொடரை, கற்கிறேன்.

    ஆ. மாடக்கண்ணு
    பாப்பான்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

0
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...