0,00 INR

No products in the cart.

இதுதான் என் சொர்க்கம்

சிறுகதை

– V.V.S.மணி
ஓவியம் : தமிழ்

 

Dr.ராம்கி ஆயாஸத்துடன் காரின் பின் ஸீட்டில் நன்றாகச் சாய்ந்துக் கொண்டார். டாக்ஸி குண்டும் குழியுமாக இருந்த அந்த ரோடில் குதித்துக் குதித்துப் போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை டாக்ஸி  பள்ளத்தில் விழுந்து வெளியே வரும் பொழுதும் அவர் வயிற்றை கையில் பிடித்துக்கொண்டு  சபித்துக்கொண்டிருந்தார். சொல்லமுடியாத அசதி அவருக்கு. இருக்காதா பின்னே? அவருடைய ஊரான ஸான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து  22 மணி நேர விமானப் பயணத்துக்குப்பின் அவரும், மனைவி நித்யா, பெண் ரஷ்மி, பிள்ளை ரோஷன் ஆகியோரும் அன்று காலைதான் பெங்களூர் வந்து இறங்கி இருந்தனர். நித்யாவும் குழந்தைகளும் பெங்களூரிலேயே தங்கிவிட்டனர், அவளுடைய பெற்றோர்கள் அங்கு இருப்பதால். ராம்கி இண்டிகோ பிளைட் பிடித்து கோவை வந்தார். விமான தளத்தில் ஒரு டாக்ஸி பிடித்து இதோ கீரனூர் நோக்கிப் போய் கொண்டிருக்கிறார். ஆம்… அங்குதான் அவருடைய 70 வயதான அம்மா சிவகாமி இருக்கிறாள். அவள் நினைவு வந்தவுடன் அவருக்கு ஒரு குற்ற உணர்வு. அத்துடன் கோபமும் வந்தது. யார் மீது என்றில்லாத இனம் தெரியாத கோபம் அது. டாக்ஸி  டிரைவர் அவருடைய எண்ண ஓட்டத்தைத் தடுத்து, “ஸார், கீரனூரில் எங்கு போக வேண்டும்”?

ராம்கி தன்னையே கேட்டுக்கொண்டார் “கீரனூரில் எங்கே போக வேண்டும்?”அவருக்கே தெரியாது. ஏதோ “அடைக்கலம்” என்கிற முதியோர் இல்லமாம். கீரனூர் என்ன மன்ஹாட்டனா? விலாசம் கண்டுபிடிக்க முடியாமலா போய்விடும்? இருந்தாலும் இப்படி வசதியற்ற குக்கிராமத்திற்கு தன்னை கட்டி இழுத்த அம்மாவின் மீது கோபம் கோபமாக வந்தது. ஆனால், ‘அம்மா வரச்சொல்லவில்லை, தானாகத்தான் போகிறோம்’ என்ற நினைவு வந்ததும் அவர் கோபம் தன் மீதே வெறுப்பாகத் திரும்பி இருந்ததை உணர்ந்தார். உடனே, ‘தான் கீரனூரில் எப்படி நித்யா இல்லாமல் தனியாக சமாளிக்கப்போகிறோம்’ என்ற கவலை தோன்றியது? நித்யா தானே அவருடைய எல்லா தேவைகளையும் பார்த்துப்பார்த்து செய்பவள். அவள் இப்பொழுது இல்லாதது அவருக்கு ஒரு கை ஒடிந்தது போல் இருந்தது. நித்யா கீரனூருக்கு வந்திருக்கலாம். பாவம்… அம்மாவுக்கும் ‘தன்னுடைய மருமகள், பேரக் குழந்தைகளை பார்க்க வேண்டும்’ என்ற ஆசை இருக்காதா? எத்தனை வருடங்கள் ஆயிற்று அம்மாவைப்பார்த்து!! ரஷ்மி – ரோஷனை அவள் இன்னும் பார்த்ததில்லை. நித்யாவை கல்யாணம் செய்து கொண்டபின் ஒரு முறை மாமா வீட்டில் அவளைப் பார்த்தது. இந்த முதியோர் இல்லத்திற்கு வந்தது சமீபத்தில்தான்.  நித்யா இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாதவளா? கிளம்புவதற்கு முன்பு ஸிஸ்கோவில் நடந்த அந்த நிகழ்ச்சி அவர் மனக்கண் முன் வந்தது. நித்யாவுக்கும் அவருக்கும் அப்பொழுது ஒரு பலத்த வாக்குவாதம் நிகழ்ந்தது. பெங்களூரை அடைந்த உடன் எங்கு போவது என்பது பற்றித்தான் அவ்வளவு வாக்குவாதமும். அதன் முடிவில் எள்ளளவு சந்தேகத்துக்கும் இடமின்றி  நித்யா சொன்னது நினைவுக்கு வந்தது.

இன்று நீங்கள் கம்பெனியில் மிகப்பெரிய பதவியில் இருக்கிறீர்கள். அந்த கம்பெனிக்கு அடுத்த CEO ஆக வாய்ப்பு இருக்கிறது. Artificial Intelligence (AI) ஆராய்ச்சியில் இன்று உலகம் உங்கள் காலடியில். இப்படி இருக்கும் பொழுது “அந்த பட்டிக்காட்டுக்கு போவேன்” என்று நீங்கள் பிடிவாதம் பிடிப்பது மடத்தனம். அங்கு குடிக்க நல்ல தண்ணீர்கூடக் கிடைக்காது. உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்வீர்கள்? உங்களுடைய அம்மாவை மாமா வீட்டில்தான் பாதுகாப்பாக விட்டிருந்தோம். தேவைக்கு அடிக்கடி பணமும் அனுப்பி வந்தோம். அவர் பொறுப்பை தட்டிக்கழித்து உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார். உங்க அம்மா இதைப்பற்றி நம்மிடம் மூச்சு விடவில்லை. பிறகு நீங்கள் எதற்காக அங்கு போக வேண்டும்?  பெங்களூரில் நமக்கு நிறைய வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. என் அப்பாவை டாக்டரிடம்  காட்ட வேண்டும். அம்மா மூட்டு வலியில் அவதிப்படுகிறாள். அதற்கு அர்ஜெண்டாக ஏற்பாடு செய்யவேண்டும். அடுத்த மாதம் நம்ம ரஷ்மியின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஸிஸ்கோவில்  நடக்க இருக்கிறது. அவளுடைய குரு அரங்கேற்றத்துக்கு வேண்டிய ஒரு பெரிய லிஸ்டே கொடுத்திருக்கிறாள். அதையெல்லாம் வாங்கவே டைம் போதாது. இந்த அழகில் எங்களை அந்த குப்பை மேட்டிற்கு வரச்சொல்கிறீர்கள்” என்று பொரிந்து தள்ளி  அவர் வாயை அடைத்து விட்டாள். வழக்கம்போல் அவர் அவளிடம் சரணாகதிதான். “கீரனூருக்கு யாரும் போவதில்லை” என்று முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் மனம் அலை பாய்ந்தது.

விமானப்  பயணத்தின்போது அவருடைய இளமைக்கால நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் மனத்திரையில் வந்து போயின. சிறுவனாக இருந்தபோது அம்மாதான் அவர் உலகம். சிவகாமி காதலித்து கலப்புத்திருமணம் செய்து கொண்டதால் இரு வீட்டார்களும் கைவிட்டுவிட்டனர்.ராம்கி பிறந்தவுடன் அவனுடய அப்பா ஒரு சாலை விபத்தில்  இறந்து போனார். இளம் விதவை சிவகாமி துவண்டு விடவில்லை. அதிகப் படிப்பு இல்லாததால் பெரிய வேலை ஒன்றும் கிடைக்கவில்லை.அவளுக்கு கை வந்த சமையற்கலை அவளுக்கு வாழ்வாதாரம் ஆகியது. பல செல்வந்தர்கள் வீட்டில் சமையல் வேலை செய்து ராம்கியை ஆளாக்கினாள். அவள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை? அனுபவித்த சிறுமைகளுக்குத்தான் கணக்குண்டா? அவள் சிரித்து சந்தோஷமாக இருந்ததைப் பார்த்த நினைவே இல்லை ராம்கி. உழைப்பு, ஓயாத உழைப்புதான். ராம்கி படித்து பெரிய நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் அவள் வாழ்க்கையின் லட்சியம் ஆகியது. அந்த லட்சியத்தை அடைய ஒரு வெறியுடன் செயல்பட்டாள் தன்னையே வருத்திக்கொண்டு. ராம்கியும் அவளை ஏமாற்றவில்லை. பள்ளியிலாகட்டும் கல்லூரியிலாகட்டும் ஒரு ‘நல்ல மாணவன்’ என்ற பெயர் எடுத்திருந்தான்.
IIT சென்னையில் தங்கப் பதக்கத்துடன் அவன் பட்டம் பெற்ற பொழுது சிவகாமி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். இனி, ஒரு நல்ல வேலையில் அமர்ந்து தன்னைக் காப்பாற்றுவான் என்று மனக்கோட்டை கட்டினாள். ஆனால் அவனிடம் சொல்லவில்லை. அவன் ‘மேல்படிப்புக்கு அமெரிக்கா போகிறேன்’ என்றவுடன் அவளுடைய மனக்கோட்டை தூள் தூளாகியது. ஆனாலும் அவள் முகம் சலனமற்று இருந்தது அவனுக்கு விடை கொடுத்த போது. அவளுடைய சகோதரன் கொடுத்த ஆதரவுக் கரத்தை பற்றிக்கொண்டாள்.

மேதைகளை கபளீகரம் செய்யும் அமெரிக்கா ராம்கியையும் விட்டு வைக்கவில்லை.எல்லா முன்னணிப் பல்கலைக்கழகங்களும் அவனுக்கு சிகப்புக் கம்பளத்தை விரித்தன. அவனும் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ‘அதி மேதை’ என்ற புகழ் அடைந்தான். அவனுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெறாத அறிவியல் ஊடகங்கள் கிடையாது என்றாகியது. தொழில்நுட்பத்தில் அவனுடைய கண்டுபிடிப்புகளுக்காக அவனுக்கு கிடைத்த  patentகள் கணக்கில் அடங்கா. அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகைக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறை சம்பந்தமாக ஆலோசனை வழங்க அவனை வரவழைப்பதும் வழக்கமாகிவிட்டது.

இதற்கிடையில்தான் ராம்கி தன் கல்லூரித்தோழி நித்யாவைக் காதலித்து கல்யாணமும் செய்துக்கொண்டான். ஆரிய சமாஜ முறைப்படி ISCKON கோயிலில் ஆடம்பரம் இல்லாது நடைபெற்ற அந்தத் திருமணத்தில் நித்யாவின் பெற்றோர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டனர். ராம்கிக்கு ‘தன் அம்மாவையும் வரவழைத்து அவளுடைய ஆசியைப் பெறவேண்டும்’ என்ற ஆவல் கொஞ்ச நஞ்சமில்லை. ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. ‘தன்னுடைய ஏழ்மையான கடந்த காலம் வெளிப்பட்டுவிடுமே’ என்ற பயமா? அல்லது ‘அம்மா சிவகாமியின் பட்டிக்காட்டு பழக்க வழக்கங்களை கண்டு நவநாகரிகத்தில் திளையும் அவனது நண்பர்கள் எள்ளி நகைப்பார்களே’ என்ற வெட்கமா? காரணம் எதுவானால் என்ன? அவனை இந்த மேல் நிலைக்கு கொண்டு வந்தவளுக்கு இனி  அவன் வாழ்க்கையில் இடமில்லை. அவள் ஒரு இடைஞ்சலான, தவிர்க்க முடியாத உறவு மட்டுமே.

இந்த நினைவு வந்ததுமே  விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ராம்கியின் கண்கள் பனித்தன. அதுவும் சமீபத்தில் சிவகாமியை அவள் அண்ணன் ‘ஏழ்மையின் காரணமாக ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார்’ என்று அறிந்த பொழுது ராம்கி கூனிக்குறுகிப்போனார். செல்வச்செழிப்பில் இருக்கும் மகன் அவனைப் பெற்றெடுத்து ஆளாக்கிய தாயை அடுத்த வேளை சாப்பாட்டிற்குக் கை ஏந்தும் நிலைக்கு தள்ளிவிட்டால் அதற்கு என்ன பெயர்? பஞ்சமா பாதகம். இந்த எண்ணம் வந்தவுடன் ராம்கியின் உடல் நடுங்கியது. “இல்லை… இல்லை” என்று தழுதழுத்த குரலில் முணுமுணுத்தார். உடனே திடுக்கிட்டு அருகில் அமர்ந்திருந்த நித்யாவைப் பார்த்தார். அவள் ஏதோ ஒரு பத்திரிகையில்  மும்முரமாக இருந்தாள். அந்த நிமிடம் Dr. ராம்கி ஒரு முடிவுக்கு வந்தார்.

பெங்களூர் விமான நிலையத்தில் நித்யா அவளுடைய அப்பாவின் கார் டிரைவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, ராம்கி  உள்நாட்டு பயண முனையத்தை நோக்கி நடந்தார். அவரை வியப்புடன் பார்த்த நித்யா, அவர் மனதில் வீசிக்கொண்டிருந்த சூறாவளியை உணர்ந்து அவரைத் தடுக்கவில்லை. அதன் பலன் இதோ அவர் டாக்ஸியில் கீரனூர் போய்க்கொண்டிருக்கிறார்.

டாக்ஸி “அடைக்கலம்” விடுதியை அடையும் பொழுது மாலை நேரமாகிவிட்டது. இடிந்த நிலையில் இருந்த அந்தக் கட்டிடத்தின் முகப்பு அறையில் ஒரு முதியவர் மேஜைக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். இந்த இல்லத்துக்கு மானேஜராம். அவரிடம் ராம்கி தான் யார் என்று கூறியபோது அவர் அடைந்த வியப்பை விவரிக்க இயலாது. அந்த வியப்பே ராம்கியைக் கூனிக்குறுக வைத்தது. சிறிது மௌனத்துக்குப்பின் முதியவர் பேசினார்.

“சிவகாமி அம்மா இந்த இல்லத்துக்கு செய்யும் சேவையை விவரிக்க இயலாது. தனக்கு 70க்கு மேல் வயதாகியும் மற்ற வயதானவர்களுக்கு இரவு, பகலாக சேவை செய்து வருகிறார். இப்பொழுது கூட அருகில் இருக்கும் அநாதைக் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு பாடம் நடத்தப் போயிருக்கிறார். நீங்கள் இங்கேயே இருங்கள். சிறிது நேரத்தில் வந்துவிடுவார்” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.

ராம்கி அந்த இல்லத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். அந்தப் புராதான கட்டிடத்தில் அநேக அறைகள். 15×10 அறையில் நாலு பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் அருகே ஒரு சிறிய மேஜை. சுற்றி வந்த ராம்கியை ஒரு மேஜை கவர்ந்தது. அதில் அவருடைய போட்டோ – மாலையும் கழுத்துமாக, அவருடைய திருமணத்தின்போது எடுத்தது. அருகே அம்மாவின் இஷ்ட தெய்வமான குமர குருபரனின் படம்- “யாமிருக்க பயமேன்” என்ற வாசகங்களுடன். மேஜைக்கு கீழே ஒரு தகரப்பெட்டி. அவளுடைய ஆஸ்தியே அதில் அடக்கம். ராம்கியின் நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிடித்தது போல் இருந்தது. பித்துப்பிடித்தவர் போல் இன்னும் சுற்றி வந்தார். பலருடைய மேஜைகளில் அலுமினியத்தட்டில் பகல் உணவு அப்படியே இருந்தது. ஈ மொய்த்துக்கொண்டிருந்தது. சிலர் அவரை வெரிக்கப் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தக் கண்களில் உயிரும் இல்லை உணர்வும் இல்லை. பலர் தங்களுடைய இறுதிக் கட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்தவர்கள் போல் தோன்றியது. “கடவுளே! இதைவிட ஏழ்மையின் கொடூரம் இருக்க முடியுமா? இப்பேர்பட்ட சூழ்நிலையிலா என்னுடைய அம்மா இருக்கிறாள்?” என்று ராம்கியின் மனம் அழுதது. ஒரு பெரிய உண்மையும் தெரிந்தது. அவருடைய அம்மாவைப்போல பல பெற்றோர்கள்  இந்த ஏழ்மைச் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.மேலும் பார்க்க இயலாது ராம்கி ஆபீஸ் அறைக்குத் திரும்பினார்.

சிறிது நேரத்தில் சிவகாமியும் வந்து விட்டாள். ராம்கியும் சிவகாமியும்,
ஒருவரையொருவர் வெறித்துப்பார்த்தபடி சிலைபோல் அசைவற்று நின்றனர். எத்தனை வருடங்கள்?!! ராம்கிக்கு உடல் சிலிர்த்தது. அமைதி தேவதைபோல் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அவனையே பார்த்தபடி இருந்தாள் சிவகாமி. முதுமையும் ஏழ்மையும் அவளுடைய மனோ திடத்தை குலைக்க முடியவில்லை. சில வினாடிகளுக்கு பிறகு கனிவான குரலில் “ராமு! நல்லா இருக்கியாடா கண்ணா?!” என்றாள் சிவகாமி. அதைக் கேட்டவுடன் “அம்மா” என்று கதறியபடி ராம்கி ஓடிச்சென்று அவளை அணைத்து கொண்டார். அவருடைய கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர். 20 வருடங்களாக மனத்தின் அடித்தளத்தில் தேங்கி இருந்த பாசம், பச்சாதாபம், குற்ற உணர்வு எல்லாம் மடை திறந்த வெள்ளம்போல் கண்ணீரும் விம்மலுமாக வெளிப்பட்டது. அமைதியாக சிவகாமி அவனுடைய துயரத்துக்கும், சந்தோஷத்துக்கும் ஒரு வடிகாலாக இருந்தாள்.

தன்னை ஓரளவு சுதாரித்துக்கொண்ட ராம்கி உணர்ச்சியுடன் “அம்மா! இனிமேலும் உன்னை இந்த நிலையில் விட்டுச்சென்றால் என்னைப்போன்ற கொடியவன் இருக்க முடியாது. நாளை காலை நான் இங்கிருந்து கிளம்பும் பொழுது உன்னையும் அழைத்து செல்லப்போகிறேன்.  நாங்கள் US போகும்போது நீயும் எங்களுடன் வருகிறாய்” – அன்பு கலந்த கண்டிப்புடன் ராம்கி சொன்னார்.

“பார்க்கலாம்.இன்று நீ களைப்பாய் இருப்பாய்.போய் rest எடு.மற்றவற்றை நாளை பேசிக்கலாம்” என்று சிவகாமி பதிலளித்தாள். ராம்கி “அடைக்கலம்” அளித்த எளிய உணவையே இரவு சாப்பிட்டார். மானேஜர் வெளியே போக நேர்ந்ததால் அவருடைய அறையிலேயே படுக்க அனுமதித்தார்.சிவகாமியுடன் பேசுவதற்காக அவள் வருகைக்காகக் காத்திருந்தார் ராம்கி.எல்லா வயதானவர்களுக்கும் தொண்டு செய்து விட்டு சிவகாமி வரும்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. அவள் வந்தவுடன் ராம்கி தழுதழுத்த குரலில் ”அம்மா… உன் மடியில் சிறிது நேரம் படுத்துக் கொள்ளவா?” என்று கெஞ்சினார். புன்முறுவலுடன் மடியில் படுத்திருந்த பிள்ளையின் தலைமுடியை வாஞ்ஜையுடன் தடவிக்கொடுத்தாள் சிவகாமி. சந்தோஷத்தில் ராம்கிக்கு தொண்டை அடைத்தது. தான் அமெரிக்காவிலேயே பிரபலமான விஞ்ஞானி என்பது மறந்து விட்டது. மீண்டும் திருநாகேஸ்வரத்தில் கோவில் பிரசாதத்தை வாங்கி அம்மாவுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு விட்டு அவள் மடியில் தலை வைத்து தூங்கிய 12 வயது ராமுவாகவே மாறிவிட்டார். அந்த சுகத்தில் எப்பொழுது தூங்கினாரோ, எப்பொழுது சிவகாமி படுக்கப்போனாளோ!!

மறுநாள் பொழுது புலர்ந்ததுமே ராம்கி கிளம்புவதற்குத் தயாராகி விட்டார். முந்தய தினம் வந்த அதே டாக்சியும் வந்து விட்டது…..ஆனால் சிவகாமி எங்கே காணோம்? அவருக்கு ஒரே படபடப்பு. அம்மா அம்மா என்ற அவர் குரல் “அடைக்கலம்” முழுவதும் எதிரொலித்தது. அப்பொழுதுதான் சிவகாமி அவர் எதிரே வந்தாள்.அவளைச்சுற்றி ஐந்தாறு சிறுவர்களும்,தொண்டு கிழவர்களும் கெஞ்சுவது போன்று பரிதாபமாக அவரை பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.

“என்னம்மா… நேரமாகிறதே… நீ இன்னும் புறப்படவில்லையா? நாம் சென்னை போய் உங்களுக்கு அமெரிக்க விசா  வாங்க வேண்டுமே ? ராம்கியின் குரலில் பதட்டம். வெகு நேர அமைதிக்குப் பிறகு சிவகாமி ’இல்லை’ என்பது போல் தலை அசைத்தாள்.

கெஞ்சுவதுபோல் ராம்கி ”அம்மா… நீ என்னுடன் அமெரிக்காவுக்கு வரப்போவதில்லையா?”

சிவகாமி, அந்த முதியோர்களையும் சிறுவர்களையும் அணைத்தபடி நிதானமாக பதிலளித்தாள் “இல்லை ராஜா, இதுதான் என் சொர்கம்.”

“அம்மா…ப்ளீஸ் என்னை தண்டிக்காதே. உன் காலில் விழுகிறேன்” அவரைத் தடுத்து நிறுத்தி அமைதியாக சிவகாமி சொன்னாள் – “இல்லை ராமு, உன் மனதைப் புண்படுத்த இப்படி நான் செய்யவில்லை. நான் இல்லாவிட்டால் இவர்கள் அநாதரவாகி விடுவார்கள். அந்த நினைவு நான் எங்கிருந்தாலும் என்னை வதைத்தெடுக்கும். இந்த சரீரம் சொகுசு வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.தொண்டு செய்யத்தான் இதற்குத் தெரியும். அதுவுமில்லாமல் நான் அநாதையாக நின்ற பொமுது இந்த “அடைக்கலம்” தான் கை நீட்டி என்னை வரவேற்றது. அதற்கு என் நன்றிக்கடனை செலுத்த வேண்டாமா? அதுதான். எனக்கு எந்தக் குறையும் இல்லை. நீ சந்தோஷமாகப் போய் வா. நித்யாவுக்கும், குழந்தைகளுக்கும் என் அன்பைத் தெரிவி.” கண்ணீர் வடிய தயங்கி நின்ற ராம்கியிடம், ” இந்தா இதைப் பெற்றுக்கொள். உன் அம்மாவின் சிறிய அன்பளிப்பு” என்று சொல்லி அவனிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தைக்  கொடுத்தாள். அதைப் பிரித்துப் பார்த்த ராம்கி நெகிழ்ந்து போனார். அது முழுவதும் “அடைக்கலம்” இல்லத்தில் இருந்த ஆதரவற்ற சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள். விலை மதிப்பற்ற புதையலை பாதுகாப்பதுபோல் அந்த அன்பளிப்பை பெட்டியில் வைத்துப்பூட்டினார் ராம்கி.

அவர் ஏறிச்சென்ற டாக்சியையே பார்த்தபடி  நின்று கொண்டிருந்தாள் சிவகாமி. இப்பொழுது அந்த டாக்சி தெரியவில்லை. மறைத்தது அந்த டாக்சி கிளப்பிய புழுதியா அல்லது அவள் கண்ணில் பெருக்கெடுத்த கண்ணீரா?

 

2 COMMENTS

 1. அந்தத் தாய் சிவகாமி எடுத்தது புனிதமான முடிவு
  தான் என்றாலும் பெற்ற பிள்ளை ராம்கிக்கு ஏற்
  பட்ட ஏமாற்றம் நெஞ்சில் வலியை ஏற்படுத்துகிறது.

 2. பெற்ே றார்களை முதி ே யார் இல்லத்தில்
  சேர்க்கும் நிலை மாற ஏதாவது நல்ல வழி பிறக்க ே வண்டும். ராம்கியின் மனம் அம்மா சிவகாமி மீது இரக்கப் படுவது இயற்கை. அதே சமயத்தில் அம்மாவின் மனம் தன்னைக் காத்த இல்லத்தில் சேவை
  பணிஆற்ற நினைப்பது சரியே. மணியின் கதை நெஞ்சைத் ெ தா ட்டது. வாழ்த்துகள்.
  து.சேரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...