மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்.

மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்.
Published on

முகநூல் பக்கம்

சென்னையை விட்டுக் கிளம்பி 24 மணி நேரம் ஆகிறது. கன்னியாகுமரிக்கு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறேன். பயணம் தொடங்கியதிலிருந்து இந்த நாட்டில் ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவரின் துயரங்கள் எங்கு போனாலும் என்னை தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. "ரயிலில் இருக்கும் கழிவறையை ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவர் எப்படி பயன்படுத்த முடியும்" என்று எவ்வாறு யோசித்தாலும் புலப்படவில்லை. அது ஒரு மனித விரோதத்தன்மை கொண்ட டிசைன். ரயிலைவிட்டு இறங்கினால் எங்குபோனாலும் படிக்கட்டுகள். சக்கர நாற்காலி நுழைய முடியாத குறுகலான பாதைகள். கன்னியாகுமரியில் ஒரு கடல் பார்த்த உயர்தர விடுதியில் டீலக்ஸ் ரூம் போட்டிருந்தார்கள். செக் இன் செய்துவிட்டு லிஃப்ட்டில் ஏறிய ஒரு நிமிடத்தில் லிஃப்ட் நின்றுவிட்டது. அந்தரத்தில் முக்கால் மணி நேரம் தொங்கினேன். கடைசியில் ஒரு ஆள் லிஃப்டின் வயிற்றைப்பிளந்து ஒரு சிறிய சதுரத்திற்குள் உடலை பிதுக்கி உள்ளே குதித்தார். என்னென்னவோ செய்துப்பார்த்தார். லிஃப்ட் நகரவில்லை. வெளியே சில முகங்கள் தெரிந்தன "அவரை இந்த ஓட்டை வழியாக தூக்க முடியுமா?" என்று ஒருவர் ஆலோசனை சொன்னார். "என்னய்யா விளையாடுறீங்களா?" என்று கத்தினேன். மிகவும் படபடப்பாகிவிட்டது. பிறகு யாரையோ கூட்டி வந்து என்னவோ செய்து லிஃப்ட் ரெடியானது. நான்காம் தளத்திற்குச் சென்று அறைக்குள் நுழைந்தால் வேறொரு பிரச்னை. டாய்லெட்டிற்குள் வீல் சேர் போகமுடியாதபடி குறுகலான வாயில். கொரோனோ வந்தபோது இந்த துயரத்தை திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுபவித்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக ஒரு மினி வீல் சேரும் கொண்டுவந்திருந்தேன். ஆனால் அத்தோடு என்னை விட்டால் எப்படி? மினி வில் சேர் உள்ளே போனாலும் டாய்லெட்
சிட் அவுட்டிற்கு முன்னால் ஒரு பெரிய படி. என்ன எழவுக்கு அந்தப் படி என்று தெரியவில்லை. அதாவது மினி வீல் சேர் இருந்தாலும் நானாக அந்த படியைக் கடக்கமுடியாது. அந்த 'ஈவில் ஹோட்டலில் தங்க முடியாது' என்று காலிசெய்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். பக்கத்தில் இருந்த ஒவ்வொரு ஹோட்டலாக தேடி அலைந்தோம். எங்கும் சக்கர நாற்காலி செல்லும் சறுக்குபாதை கிடையாது. டாய்லெட்டில் வீல் சேர் போகாது. ஒருவழியாய் 50 சதவிகிதம் பரவாயில்லை என்று தோன்றிய ஒரு ஹோட்டலில் அக்கடா என்று இடுப்பை சாய்த்தேன்.

நான் புரிந்துகொண்டது, இந்த நாட்டில் பெரும்பாலான இடங்கள் என்னைப் போன்றவர்களுக்கானதல்ல. அதேபோல, ரயில் பெட்டி செய்பவர்கள், வீடு கட்டும், மிகப்பெரிய ஹோட்டல்களைக் கட்டும் இஞ்சினீயர்கள் ஒரு குறைந்தபட்ச சென்சிடிவிட்டிகூட இல்லாதவர்கள். ஒரு சக்கர நாற்காலி உபயோகிக்கும் மனிதன் இந்த இடத்தை உபயோகிக்கக்கூடும் என யாருக்கும் எந்த உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை. நியாயமாக இதுபோன்ற ஹோட்டல்களின் லைசென்ஸை அரசு ரத்து செய்யவேண்டும். Inclusiveness பற்றி எவ்வளவோ பேசுகிறோம். ஆனால் அதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

நாளை படப்பிடிப்பில் எனக்கு அழுகிற காட்சி எதுவும் இருந்தால் இதையெல்லாம் நினைத்துக்கொண்டால் போதும், கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் வரும். இரண்டு கால்கள் இருப்பவர்கள் தயவு செய்து அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்.

மனுஷ்யபுத்திரன் முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com