மீண்டும் ஒரு பாரதி பிறந்து வர வேண்டும்!

செப்டம்பர் 11 தேசியகவி பாரதியார் நினைவு நாள்!
மீண்டும் ஒரு பாரதி பிறந்து வர வேண்டும்!

1882 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 11ஆம் தேதி எட்டயபுரத்தில், பாரத தேசத்தின் தென் கோடியில் பிறந்த இந்த மகாகவி, தமிழில் கவிதை எழுதினாலும் தேசிய சிந்தனையை மனதில் நிறுத்தியவர். அவர் பாடல்களில் பாரத நாட்டின் விடுதலை, சமுதாயச் சிந்தனை, பெண்கள் உரிமை, சாதி மறுப்பு, இறை வணக்கம் என பல கருத்துக்கள் இடம் பெற்றன.

பதினான்கு மொழிகள் அறிந்தவர் பாரதியார். தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வங்க மொழி, ஆங்கிலம், ப்ரென்ச் அவற்றில் அடக்கம். மொழி வல்லுநர் ஆனதால் ஆங்கிலம், ப்ரென்ச் மொழியில் வந்த கட்டுரைகளை தமிழில் மொழி மாற்றம் செய்து அவர் நடத்திய பத்திரிகையில் பதிப்பித்தார். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்ற அவர் பாடலுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடிய பாரதியார், மற்ற மொழிகளை மதிக்கத் தவறவில்லை. தாய் மொழியை உண்மையாக நேசிப்பவன் மற்ற மொழிகளை மதிக்க வேண்டும் என்பதற்கு பாரதியார் உதாரணம். சுந்தரத் தெலுங்கு என்று வர்ணித்தார் தெலுங்கு மொழியை. வங்க மொழியில் எழுதப்பட்ட பங்கிம் சந்தர சட்டர்ஜியின் “வந்தே மாதரம்” பாடல் 1905 ஆவது வருடம் விடுதலை இயக்கத்தில் மக்களை ஒன்றினைக்கும் மந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேசிய விடுதலை இயக்கத்திற்கு “வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்” என்று பாடினார்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்று எழுதியவர் பாரதத்தை நேசித்தார். “பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு” என்றவர் பாரத தேசம் என்ற இந்த நாட்டிற்கு ஈடானது வேறெதுவுமில்லை என்று முழங்கினார்.

ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் கவிதைகள் மீது மோகம் கொண்ட பாரதியார் தனக்கு “ஷெல்லி தாசன்” என்று பெயர் சூட்டிக் கொண்டார். 1916 இல் அயர்லாந்த் இலக்கிய மேதை ஜேம்ஸ் எச். கசின்ஸ் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த நான்கு கவிஞர்களில் பாரதியாரும் ஒருவர் என்று குறிப்பிட்டார். மற்ற மூவர் ரவீந்திரநாத் தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு.

உலகின் மற்ற பகுதிகளில் அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராக நடந்து கொண்டிருந்த புரட்சிகள் பற்றிய செய்தியை ஆங்கில அரசு இந்தியாவில் அனுமதிக்க வில்லை. பாண்டிச்சேரியில் இருந்த பாரதியார், தான் நடத்தி வந்த தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் அந்த செய்திகளை வெளியிட்டு தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளுக்குக் கிடைக்க வழி செய்தார். சோவியத் ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சி வீழ்ந்ததை “யுகப் புரட்சி” என்று வர்ணித்தார்.

இந்திய சுதந்திரத்தை மனக் கண்ணில் கண்டு “ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” பாடினார். சுதந்திர இந்தியாவில் தேசியக் கொடி பறப்பதை “தாயின் மணிக்கொடி பாரீர்” என்று மானசீகமாகப் பாடிய அவர் அந்தக் காட்சியைக் காண உயிரோடு இல்லை. ஆனால், இன்றும் சுதந்திர தினக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் “தாயின் மணிக்கொடி பாரீர்”, “வந்தே மாதரம் என்போம்” பாடல்கள் அந்தக் கவியை நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வியும், தொழிலும் முக்கியம் என்று கருதிய பாரதியார் “ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்” என்றார்.  நதி நீர் இணைப்பு பற்றி “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார்.

“சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்திய பாரதியார் “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கு பெண் இளைப்பில்லை” என்று முழங்கினார். “வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்” என்று பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தார். தாய் மொழியில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த தேசியக் கவிஞன் மறைந்த போது அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் இருபது பேர் மட்டுமே. “நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்”, என்ற பாரதியாரின் வரிகள் பொய் இல்லை.

அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்த போது சாதி, மதம், மொழி பேதமின்றி பாரத நாடு எங்கள் நாடு, நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு நடந்தது சுதந்திரப் போராட்டம்.

ஆனால் இன்று............

மாநில உணர்ச்சிகள் தேசிய உணர்வைப் பின் தள்ளுகின்றன. நாட்டுப் பற்றைப் பின் தள்ளி மதம், சாதி, மொழி பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் கூட்டம் பல்கிப் பெருகி விட்டன.

மீண்டும் ஒரு பாரதியார் பிறந்து வந்தால் தான் இந்த நிலைமை மாறுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com