அனலை அள்ளி வீசும் அக்னி வெயில்!

அனலை அள்ளி வீசும் அக்னி வெயில்!

ந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் கடந்த நான்காம் தேதியன்று தொடங்கியது. அனைவரையும் வாட்டி எடுக்கும் அக்னி வரும் இருபத்தி எட்டாம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளிலும் அக்னி வெயிலானது ஏறு முகம் கொண்டு எல்லோரையும் அதிகபட்ச வெயிலினால் வெறுப்படைய வைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும் கோடை காலத்தின் மிக அதிகமான உச்சபட்ச வெயிலின் தாக்கமும், கொடுமையும் இந்த வெயில் அக்னி நட்சத்திரம எனப்படும் கத்திரி வெயில் காலத்தில் மட்டுமேதான். ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் வெயில், மே மாதத்தில் அதன் உச்சத்தைத் தொடும். தமிழ்நாட்டின் வெயில் நகரமான வேலூரை சற்று பின்னுக்குத் தள்ளி சென்னை உட்பட மற்ற நகரங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. நேற்று செவ்வாய் மட்டும் சென்னை மீனம்பாக்கத்திலும், அரக்கோணத்திலும் உச்சபட்சமாக நூற்றி ஒன்பது டிகிரி அளவுக்குக் கடும் வெயில் அடித்து எல்லோரையும் மிரட்டியுள்ளது.

இந்த அக்னி நட்சத்திரத்தினை எவ்விதம் கணக்கிடுகிறார்கள்? பஞ்சாக அடிப்படையில் பார்த்தால் சித்திரை மாதம் மேஷ ராசியில் இருந்து பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரைக்குமாக சூரியன் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திரக் காலம் ஆகும். சுமார் இருபத்தைந்து நாட்கள். அப்போதுதான், வெளியே தலை காட்டாத அளவுக்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும். நமது தலையில் படுகின்ற நேரடி வெயிலினால் பித்தம் அதிகரித்து ஒற்றைத் தலைவலி, பார்வைக் கோளறு மற்றும் முடி உதிர்தல் போன்றவைகள் ஏற்படும். சிலருக்கு மூளை நரம்புகள், பார்வை நரம்புகள் பாதிப்பு ஏற்படும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்ச்சுருக்கு, உடலில் கொப்புளங்கள், அம்மை, அக்கி போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

உச்சபட்ச வெயிலில் வெளியே சென்று வருவது குறைத்துக் கொள்ள வேண்டும். குடை பிடித்துச் செல்வது வெயிலின் தாக்கத்தில் ஓரளவு தப்பிக்க உதவும். அதுவும் ஓரளவுதான். நண்பகல் பதினோரு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரைக்கும் வெளியே வெயிலில் “உலா” சென்று வர வேண்டாம். இளநீர், மோர், நீர்மோர் ஆகியன இது போன்ற நாட்களில் மிகச் சிறந்த பானங்கள். தண்ணீர் எவ்வளவு வேண்டும் ஆனாலும் நம் வயிறு ஏற்றுக் கொள்ளுமளவுக்குக் குடிக்கலாம். உடலில் நீர்ச்சத்து அப்போது தான் சமன்படும். குறைந்தது ஒருவர் இந்த வெயில் காலங்களில் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு ரொம்ப பெஸ்ட்.

கடந்த கால அக்னி நட்சத்திர ஆண்டுகளில் கடந்த 2௦௦3ல் சென்னையிலும் வேலூரிலும் அதிகபட்சமாக 113 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 2017ல் திருத்தணியில் அதிகபட்சமாக 114  டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், போகிற போக்கினைப் பார்த்தால், கடந்த கால வரலாற்றுச் சாதனைகளின் உச்சங்களையும் இந்த அக்னி வெயில் தாண்டி விடும் போல் தெரிகிறது. அக்னி பகவானே உனது அந்த வரலாற்று உச்சங்களையும் தாண்டி விட வேண்டாம். பொதுமக்களை வாட்டி வதைத்து வறுத்தெடுக்கவும் வேண்டாம் எனக் கெஞ்சத் தோன்றுகிறது. அப்பா சூரியனே கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ளீஸ்....

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com