விரலளவில் முழு உருவங்கள். பார்க்கப் பார்க்க அற்புத கலைப் பொக்கிஷங்கள்!

பூரி, புவனேஷ்வர் பயண அனுபவம்
விரலளவில் முழு உருவங்கள். பார்க்கப் பார்க்க அற்புத கலைப் பொக்கிஷங்கள்!

புவனேஸ்வரிலிருந்து  பூரி சுமார் 60கிலோ மீட்டர் தூரம்.  பெங்களூரிலிருந்து வெள்ளிக்கிழமை 12 ந் தேதி  காலை கிளம்பி 2 மணி நேரத்தில் புவனேஸ்வரை அடைந்தோம்.  மறுநாள் காலை பூரி செல்வதாக முடிவெடுத்ததால் அன்று மாலை புவனேஷ்வரில் பிரசித்தி பெற்ற கோவில்களைக் காணச் சென்றோம். புவனேஸ்வருக்கே டெம்பிள்  சிட்டி என்றே பெயர்.

மிக முக்கியமானது 1000 வருடங்களுக்கு மேலான லிங்கராஜா மந்திர். 180 அடி உயர கலிங்க நாட்டு பாணி  கோபுரம். சிறு சிறு படிகள் அடுக்கடுக்காக ஒன்றன் மீது ஒன்று அமைந்தது போன்ற தோற்றம். மேலே போகப்போக அகலம் குறைந்து கொண்டே போய் பிறகு ஒரு வட்ட வடிவில் விமானமும் கொடி மரமும். கோபுரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும்  மிக நுணுக்கமாக செதுக்கிய சிற்பங்கள். பக்கத் தூண்களில் எல்லாம் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட - ஒரு விரலளவில் முழு உருவங்கள். பார்க்கப் பார்க்க எப்பேர்ப்பட்ட அற்புத கலை பொக்கிஷங்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது.

உள்ளே சுயம்பு லிங்கம்.  சிறிய உருவம். ஆனால் எல்லா லிங்க ரூபங்களின் ராஜா இவர். அதனால் லிங்கராஜா என்று பெயர் என்கிறார்கள். இவருள் விஷ்ணுவும் உறைகிறார் என்பதால் இங்கு மட்டும் வில்வத்தைத் தவிர துளசியையும் சமர்ப்பிக்கிறார்கள். கோவிலின் பெரிய வளாகத்துக்குள்ளேயே சுற்றிலும் சிறு சிறு கோவில்கள். நூற்றுக்கும் மேல் என்றார்கள்.

மறுநாள் சனிக்கிழமை விடியற்காலை 4 மணிக்கு பூரியை நோக்கிப் பயணித்தோம். பூரியை நெருங்குவதற்கு முன் வழியில் 'பாதா மங்களாதேவி' கோவில் வருகிறது.  ஜகன்னாதரை தரிசிப்பதற்கு வழிகாட்டுபவள் என்ற நம்பிக்கையோடு மக்கள் இங்கு வழிபட்டு செல்கிறார்கள்.  நாங்களும்  வண்டியை நிறுத்தி அம்மனை தரிசித்தோம். காலை 6 மணிக்குக் கோவில் திறப்பதால், பக்தர்கள்  அதற்கு முன்பே வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள்.  வருடா வருடம் ஜகன்னாதர், சுபத்திரா, பலபத்திரர் ஆகிய மூன்று தெய்வங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. மிகப் பெரிய உருவத்திலுள்ள மூலவரே உற்சவமூர்த்தியாகவும் ஊர்வலம் வருவது இங்குதான்.

உலகிலேயே மிக ப்ரம்மாண்டமான தேர் இதுதான்.  இதைப் பார்த்து வியந்த ஆங்கிலேயர்கள்   'ஜக்கர்நாத்' (jaggernaut) என்று பெரிய சக்தி  என்னும் பொருளில் ஒரு புது ஆங்கில சொல்லையே உருவாக்கியுள்ளனர்‌ என்பதிலிருந்தே இது எவ்வளவு பெரியது என்று புரிந்து கொள்ளலாம்.  ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் சுக்ல பக்ஷ துவிதியை அன்று ரதோத்சவம் நடக்கிறது . தேரோட்டம் முடிந்ததும் அந்தத் தேர் உடைக்கப்பட்டு, அடுத்த வருடம் புதிதாகச் செய்யப்படுகிறது. இந்த வருடம் ரதோத்சவம் ஜுன் 20ந்தேதி நடைபெறும். அக்ஷய திருதியையிலிருந்து நூற்றுக்கணக்கான தச்சர்கள் தேர் உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். அதைப் பார்ப்பதற்காகவும் மக்கள் வெய்யிலையும்  பொருட்படுத்தாமல்  (அங்கு கோடை கடுமையானது) வருகிறார்கள். ஆக அன்று நல்ல கூட்டம். கோவிலில் எல்லோருக்கும் ஒரே வரிசைதான். எந்தவித கட்டண தரிசனமும் கிடையாது.  நேரத்தையும் கூட்டத்தையும் பொருத்து இரண்டு முதல் நான்கு மணி நேரம் ஆகும். கருவரையில் நிற்காமல் நகர்ந்து கொண்டே செல்வதால் ஒரு சில வினாடிகளே மூவரையும்- ஜகன்னாதர், சுபத்ரா, பலபத்ரரையும் தரிசிக்க முடிகிறது. மிகப் பெரிய மர உருவில்  அருள்பாலிக்கின்றனர். தூண்களில் தசாவதாரம் மற்றும் பல வித சிற்பங்கள். கோபுரத்திலும் சுற்றுச் சுவர்களிலும் அற்புதமான நுண்ணிய வடிவமைப்புகள்.

பகவான் விஷ்ணு பத்ரிநாத்தில் தியானத்திலும், ராமேஸ்வரத்தில் ஸ்நானத்திலும், பூரியில் விருந்திலும், துவாரகாவில் துயிலிலும் ஈடுபட்டிருப்பதாக ஐதீகம். எனவே ஜகன்னாதர் கோவில் பிரசாதம் மிகப் பிரசித்தியானது. ஒரு நாளில் 6 முறை விதவிதமான நிவேதனங்கள்.'சப்பன்போக்'  (சப்பன் என்றால் இந்தியில் 56) என்ற  56 விதமான பண்டங்கள் சமைக்கப்படுகின்றன.   உலகத்திலேயே மிகப் பெரிய சமையலறை கொண்டது.  600 பேர் 240 விறகடுப்பில் மண் பாண்டங்களில் சமைக்கிறார்கள்.  புராணங்களில் பூரி பிரசாதத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பக்தர்களும் பிரசாதத்தை பக்தி சிரத்தையுடன் வாங்கி உண்கிறார்கள்.

அடுத்தது லோகநாதர் ஆலயம். ராமர் உருவாக்கிய சிவன் கோவில். அதன் பின் சகி கோபால் ஆலயம் -  சாக்ஷி கோபால் என்றும் சொல்லப் படுகிறது. கிருஷ்ணர் ஒருவருக்கு சாட்சி சொல்வதற்காக வந்து அப்படியே அங்கு சிலை வடிவில் நின்றதாக ஐதீகம்.  ஆளுயர புல்லாங்குழல் ஊதும் கருநிற கண்ணன் வடிவம்  மனத்தைக் கொள்ளை கொள்கிறது அத்தனை அழகு. அதையொட்டிய ராமர்‌ கோவிலையும் தரிசித்த பின் புவனேஸ்வர் நோக்கிப் புறப்பட்டோம். 

வழியில் ரகுராஜ்பூர் என்று ஒரு கிராமம்.   முழு கிராமமுமே ஒரிசாவின்  'பட்டசித்ரா' எனும் பிரசித்தி பெற்ற ஓவியம் வரையும் கலைஞர்களைக் கொண்டது.

மெல்லிய துணி ஒன்றாக மேல் ஒன்றாக மூன்றை ஒட்டி வரையும் துணியைத் தயார் செய்து கொள்கிறார்கள். மெல்லிய தூரிகை கொண்டு மிக மிக நுட்பமான ஓவியம் வரைகிறார்கள். பெரும்பாலும் கருப்பு வெள்ளையில். சில வண்ணங்களும் பயன்படுத்துகிறார்கள். எல்லாமே இயற்கை நிறம்.   ராமாயண நிகழ்வுகள், கிருஷ்ணர் கதைகள், தசாவதாரம் போன்ற புராண நிகழ்வுகள் அற்புதமாகத் தீட்டப்பட்டுள்ளன.  எதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது என்ற பிரமிப்புடன் ஒருவாறு தேர்வு செய்து வாங்கினோம்.

மாலையில் புவனேஸ்வரில் இருக்கும் ஏகப்பட்ட கோவில்களில் சிலவற்றைக் கண்டோம்- முக்தேஷ்வர், கௌரிகேதாஷ்வர். எல்லா கோவில்களுமே  மிக அற்புதமான நுண்ணிய வியக்கத்தக்க சிற்ப வேலைபாடுகளைக்  கொண்டுள்ளது. ஆனால்  பராமரிப்பு  போராததைக்  கண்டு கொஞ்சம் மனம் வருந்தியது உண்மை. இப்படிப்பட்ட ஒரு கலைச்சிற்பம்  மேற்கத்திய நாடுகளில் இருந்திருந்தால் உலகப் புகழ்பெற்றிருக்கும். ஆனால் இங்கோ கொட்டி கிடக்கும் கலைப் பொக்கிஷம் கேட்பாரற்று இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை 14ஆம் தேதி விமானம் இரவு தான் என்பதால் 'கட்டக் ' சென்றோம். புவனேஸ்வரும் கட்டக்கும் அருகருகே அமைந்துள்ள இணை நகரங்கள். துர்கா கோவில் மிக சக்தி வாய்ந்தது என்று கேள்விப்பட்டதால் அங்கு சென்றோம்.  கோவில் மிகச்சிறியதுதான். ஆனால் அம்பாள் எதிரில் ஒருவித சக்தி நம்மை சூழ்வதை உணர முடிகிறது. சிறிய பிரகாரத்தில் நவசக்திகள் மற்றும் சிவன் சன்னதி. கூட்டம் இல்லாத நேரமானதால் அமைதியாக அம்பாளின் கருணையும் அழகையும் சக்தியையும் உணர்ந்தபடி சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டுப் புறப்பட்டோம். அருகிலே மகாநதி ஓடுகிறது. மணலில் சிறிதும் தூரம் நடந்தால் மகாநதியை அடையலாம். 

கட்டக்கில் ஒரு தெரு முழுவதும் வெள்ளிக் கடைகள் அதன் விசேஷம் என்னவென்றால் 'தாரா காஷி' ( filigree) என்று அவர்கள் குறிப்பிடும் மிக நுண்ணிய வெள்ளி இழைகளால் வேலைப்பாடு செய்யப்பட்ட பொருட்கள். சிற்பமாகட்டும், ஓவியமாகட்டும் வெள்ளி பொருட்களாகட்டும் எல்லாமே மிக மிக நுண்ணியமாக செய்யப்பட்டதைப் பார்த்து வியந்தேன். நமது நாட்டு கலையை எண்ணிப் பெருமை கொண்டேன்.

புவனேஸ்வரில் இருந்து கட்டக் போகும் நடு வழியில் வரிசையாக நிறைய கடைகளில் ரசகுல்லா விற்கிறார்கள். இந்த ரசகுல்லாவிற்கு சமீபத்தில் GI tag கிடைத்துள்ளது. மேற்கு வங்காளமும் ஒரிசாவும் தங்களுக்குதான் இது சொந்தம் என்று போட்டியிட்டு கடைசியில் ஒரிசா வெற்றி பெற்றது. ஜகந்நாதரின் நிவேதனத்தில் முக்கிய இடம் இந்த ரசகுல்லாவிற்கு இருப்பதால்  மேற்கு வங்காளம் விட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.  எனவே காரை நிறுத்தி அந்த சுவையான ரசகுல்லாவையும் ருசித்துவிட்டு   இனிய எண்ணங்களோடும் விமான நிலையம் அடைந்தோம்.

பெரும்பாலான முக்கிய கோவில்களில் செல்போன் அனுமதியில்லை. அதனால் முக்தேஷ்வர் கோவிலில்தான் ஃபோட்டோ எடுக்க முடிந்தது. தோலில் செய்த பொருட்களுக்கும் (பெல்ட், கைப்பை) தடை.

சுத்த சைவ  உணவகங்கள் வேண்டுமென்றால்  சிறிது தேடித்தான் போக வேண்டி இருக்கிறது‌.  மசால் தோசை சுவையாகவும் சீக்கிரமாகவும் தருகிறார்கள். ஆனால் இட்லிக்கு நிறைய நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஆர்டர் தந்த பின் கணக்காக அந்த எண்ணிக்கை மட்டுமே தயாரிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com