அன்றும் இன்றும் - சதத்தில் சதம் கண்ட சச்சின் டெண்டுல்கர்!

அன்றும் இன்றும் - சதத்தில் சதம் கண்ட சச்சின் டெண்டுல்கர்!

2012. பங்களாதேஷ் பௌலர் எறிந்த பந்தை, அநாயசமாக பெவிலியனுக்கு விரட்டிவிட்டு ஹெல்மெட்டை வானத்தை பார்க்கிறார், சச்சின் டெண்டல்கர். அரங்கமே கைதட்டலில் நிறைகிறது. எதிர்முனையில் இருந்து ரெய்னா ஓடி வந்து சச்சினின் தோளை தொட்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறார். இதுவரை எந்தவொரு கிரிக்கெட் வீரனாலும் நிகழ்த்த முடியாத சாதனை அது. ஆம். சச்சினின் நூறாவது செஞ்சுரி!

அப்போது சச்சினுக்கு வயது 38. 2011 உலகக் கோப்பை போட்டியின்போது நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தன்னுடைய 99வது செஞ்சுரியை பதிவு செய்திருந்தார். அதற்கு பின்னர் ஓராண்டிற்கு பின்னர்தான் வாய்ப்பு கிடைத்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக சச்சின் எடுத்த முதல் செஞ்சுரியும் அதுதான்.

138 பந்துகளில் சச்சின் தன்னுடைய செஞ்சுரியை அடித்திருந்தார். அதில் ஒரு சிக்ஸ் உள்பட 12 போர். அடுத்து வந்த பந்துகளில் அதிரடியாக ஆட ஆரம்பித்து 114 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனாலும், சச்சினின் செஞ்சுரி, இந்திய அணிக்கு வலு சேர்க்கவில்லை. ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி, பங்களாதேஷ் அணியிடம் தோற்றுப்போனது.

இதுவொரு சோதனையான காலகட்டம். எதையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் என்று சச்சின் வருத்தப்பட்டார். நன்றாக ஆடியும், அதிர்ஷ்டமில்லை. எத்தனை செஞ்சுரி அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, அவையெல்லாம் அணிக்கு எந்தளவுக்கு திருப்புமுனையாக இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியம் என்றார்.

பங்களாதேஷ் அணிக்கு அதுவொரு முக்கியமான திருப்பம். இந்தியா அணியை தோற்கடித்து ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடு மோதி, 2 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி பரிதாபகரமான தோல்வியை சந்தித்தது.

சச்சினின் கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டும் ஆசிய கோப்பை போட்டியாகவே இருந்தது. அதில் பாகிஸ்தான் அணியோடு மோதினார். 1989 டிசம்பர் எந்த பாகிஸ்தான் அணியோடு மோதி 52 ரன்கள் எடுத்து தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றை ஆரம்பித்த சச்சின், அதே பாகிஸ்தான் அணியோடுதான் கடைசிமுறையாக களத்தில் இறங்கினார்.

சச்சினின் கடைசி ஆட்டம், அவருக்கு கைகொடுக்கவில்லை. அன்றைய ஆட்ட நாயகனாக விராத் கோலி இருந்தார். 148 பந்துகளில் அவர் அடித்த 183 ரன்கள் இன்றுவரை அவருக்கான பெரிய ரெக்கார்டு. அன்று இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அவரே முக்கிய காரணமாகவும் இருந்தார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராவல் பிண்டி எக்ஸபிரஸ் அக்தர், சச்சினின் சாதனையை விராத் கோலி முறியடிப்பார். ஒரு நாள் போட்டிகளில் 110 செஞ்சுரி அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 71 செஞ்சுரிகள் அடித்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி முறியடித்து 75 செஞ்சுரி அடித்திருக்கிறார்.

விராத் கோலி, அடுத்த சச்சின் ஆக முடியாது. கிரிக்கெட் உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான், அது சச்சின் மட்டும்தான் என்கிறார்கள், சச்சின் ரசிகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com