வெளிநாட்டுக்கு படிக்கப் போறீங்களா?

வெளிநாட்டுக்கு படிக்கப் போறீங்களா?

மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முதலில் உடல் ஆரோக்யம் அவசியம்! அங்கு டாக்டர், மருந்து, மாத்திரைகள் எல்லாமே விலை உயர்வு மட்டுமல்ல; மருந்துச் சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்து வாங்கவும் முடியாது. அதனால் இங்கிருந்தே உங்கள் குடும்ப மருத்துவரிடம் பிரிஸ்கிரிப்ஷனுடன் மருந்து, மாத்திரைகள், வலி நிவாரணி களிம்புகள்,  ஆயின்மெண்ட்கள் எல்லாம்  பேக்செய்து கொள்வது அவசியம். அத்துடன் நாட்டு மருந்துகளான கடுக்காய் பொடி, முள்ளங்கி சூர்ணம், சுக்குப்பொடி, ச்யவன் ப்ராஷ் லேகியம் போன்ற வற்றை வாங்கி அதைப் பயன்படுத்தும் முறையையும் தெரிந்து கொண்டு எடுத்துச் செல்லுங்க.

தாய்மார்களே! தேவையான அளவிற்கு சாதத்திற்கு கலந்து கொள்ளும் பொடி வகைகள், ஊறுகாய், புளிக் காய்ச்சல், இட்லிப்பொடி, ரசப்பொடி, குழம்புப்பொடி போன்றவற்றை வீட்டிலேயே பங்குவமாகச் செய்து அனுப்பவும். ஊறுகாய்களில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு ஜிப்லாக் கவர்களில் போட்டு மேலே மற்றொரு கவரால் டபுளாக பேக் செய்து அடுக்கி அதைச் சுற்றிலும் மெலிதான கை துடைக்கும் டவல்,

வேஷ்டி துணிகளை இறுக்கமாகச் சுற்றி அசையாமல் வைத்து பேக் செய்யவும். பார்சல் செய்யும் இடத்தில் கொடுத்து ‘யு.எஸ்.பேக்கிங்’ என்றால், நன்றாக பேக் செய்து தருவார்கள். பெட்டி பலமுறை தூக்கிப் போடப்பட்டு நம் கையில் வந்து சேரும்போது அவற்றின் நிலைமை என்னவோ?

அங்கு சென்றவுடன் பெட் பாட்டில்கள் வாங்கி அதில் ஊறுகாய்களை நிரப்பி நல்லெண்ணெய் சுடவைத்து ஆறவிட்டு ஊறுகாய்கள் மேல் ஊற்றி கொள்ளச் செல்லவும். அது ஊறுகாய் வருடக் கணக்கில் கெடாமல் இருக்க உதவும். அவர்கள் அங்கு சென்று நம் இந்திய ஸ்டோர்களை கண்டு பிடித்து செட்டிலாகும் வரை தேவையான அரிசி, மளிகைப் பொருள்களை சின்னச் சின்ன பாக்கெட்களில் பாக் செய்து கொடுப்பது அவசியம். அவர்களுக்குப் பிடித்தமான ஸ்நாக்ஸ் மற்றும் இலேசான எடையுள்ள காரப்பொரி, அவல்பொரி, கார்ன்மிக்சர் போன்றவற்றை இரண்டு கிலோ வரை கொடுத்தனுப்பலாம்.

கனமான டி-ஷர்ட்டுகள் ஜீன்ஸ்களைத் தவிர்க்கவும். கனம் குறைவான தேவையான அளவு துணிகளை போதும். இன்டர்வியூக்கு இரண்டு செட் ஃபார்மல் டிரஸ் அவசியம் வாங்கிச் செல்லவும். அங்கு விலை அதிகம். மற்றபடி நவம்பர், டிசம்பர் சேலில் டிரஸ் வாங்கலாம். தரமும் சூப்பராக இருக்கும். சமைக்கும் பாத்திரங்களை நம்முடன் தங்கும் ரூம் மேட்களிடம் முன்பே பேசி ஆளுக்கு சிறிது என்று பங்கு போட்டு எடுத்துச் சென்றால் வெயிட் குறையும். குக்கர் முதல் அனைத்தையும் இலேசானவையாகப் பார்த்து வாங்கிச் செல்லவும்.

வெயிலுக்கும், குளிருக்கும் தேவையான உடைகள், படுக்கை விரிப்புகள் மிக அவசியம். நீங்கள் செல்லும் இடத்தின் தட்ப வெப்பநிலைக்கேற்ப அங்கேயே குளிர்கால உடைகள் வாங்குவது உத்தமம். பொருட்களை எடை போட்டு (சரியான எடை காட்டும் மிஷினில்) அடுக்கும்போதே அதில் உள்ள சாமான் வகைகளை குறித்துக் கொண்டு ஒரு பிரிண்ட்அவுட் போட்டு நீங்கள் ஒரு பாதியையும், உங்கள் செல்லத்திடம் ஒரு பாதியையும் அனுப்பினால் அங்கு சென்ற பிறகு செக் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

கையில் எடுத்துப் போகும் ஹேண்ட் லக்கேஜில் டாக்குமெண்ட்ஸை பத்திரப்படுத்திக் கொண்டு, அதன் ஜெராக்ஸை செக் இன் பேக்கில் வைத்து உங்கள் அட்ரஸ் விவரங்களையும் அதில் எழுதி வைக்கவும். நம் பெட்டியை கண்டுபிடிக்க கைப்பிடியில் அழுத்தமான கலர் ரிப்பனைக் கட்டி விடவும். ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்.

மேலை நாடுகளில் நிமிடத்திற்கு மிகக் குறைந்த காசில் செல்ஃபோனில் பேச வசதியுள்ளது. அங்கு சென்றவுடன் விசாரித்து அதுபோல் ஒரு செல்ஃபோனைப் பதிவு செய்து வாங்கி வீட்டிற்கு போவது எளிது. வாய்ஸ் மெயில், வாட்ஸப் கால் வழியாகவும் பேசலாம்.

சிறிய கடவுள் படங்கள், சின்ன ஸ்தோத்திர புத்தகங்கள் என அனுப்பி வைத்து, தினமும் கடவுள் வழிபாடு செய்யுமாறு அன்புடன் அறிவுறுத்துங்கள். நாம் செய்யும் பிரார்த்தனை, ஐந்து நிமிடமானாலும் அந்த நாள் மங்களகரமாகக் கழியும். மற்ற விஷயங்களில் கவனத்தைச் சிதற விடாமல் சிறப்பாகப் படிப்பை முடித்து வரவேண்டும் என்ற உறுதி அவர்களுக்கு இருக்க, உங்கள் அன்பும் ஆசியும் மிக முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com