பா.ஜ.க.வின்  புது வியூகம்

அரசியல்  சிறப்புக் கட்டுரை
பா.ஜ.க.வின்  புது வியூகம்

2024 மக்களவைத் தேர்தல் : ஒரு பார்வை

2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகள் கைக்கோர்த்து உள்ளதால் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு சற்று பயத்தையே கொடுத்து உள்ளது.

 2024ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என்று கணித்துள்ள பா.ஜ.க. அவற்றை கைப்பற்ற மாநில கட்சிகளின் தயவை நாட புதிய வியூகம் வகுத்துள்ளது.

சமீபத்தில் நடந்த குஜராத், இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 5 மாநில இடைத்தேர்தல்கள் முடிவுகள், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்டதால், இதன் முடிவுகளை நாடே எதிர்பார்த்தது. இதில், குஜராத்தில் பா.ஜ.க. வரலாற்று சாதனை வெற்றியை பெற்றது. ஆனால், இமாச்சலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இடைத்தேர்தல், மாநிலத்தில் ஆளும் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியது. குஜராத்தை தவிர பா.ஜ.க. எதிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இமாச்சலில் வென்றது மூலம் காங்கிரசுக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு 9 மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு பாடமாக அமைந்து உள்ளது.

அடுத்தாண்டு நடக்கும் 9 மாநில தேர்தல் வெற்றியை வைத்து மீண்டும் 2024ல் ஒன்றியத்தில் யார் ஆட்சியில் அமருவார்கள் என்று கணித்துவிடலாம். இதனால், இப்போது இருந்தே அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. மேற்கண்ட ஒன்பது மாநிலங்கள் மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் கூட, மக்களவை தேர்தலுக்கான வியூகங்களை அந்தந்த மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பாஜக, மக்களவை தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்டது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியை காட்டிலும், பல்வேறு மாநிலங்களின் மாநில கட்சிகளை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் பாஜக கடுமையான சவாலை எதிர்கொண்டது.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் மாநில கட்சிகள் 162 இடங்களை கைப்பற்றின. இத்தகைய சூழ்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் மோதுவதை காட்டிலும் மாநில கட்சிகளுடனான போட்டியை எப்படி எதிர்கொள்வது? என்பது பற்றி பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ், ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்சா, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அகாலி தளம் ஆகிய கட்சிகள் எதிர்கொள்ள வியூகம் அமைத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் 2014ல் நடந்த மக்களவை தேர்தல் முதல் தற்போது வரை வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், குஜராத், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்டளவில் பலம் உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் 12 மாநிலங்களில் சுமார் 350 மக்களவை ெதாகுதிகள் மாநில கட்சிகளுடன் மோத வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதால், அக்கட்சிகளுடனான சவாலை எதிர்கொள்வது குறித்து வியூகங்களை வகுத்து வருகிறது.

சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் இதற்கான முதல்கட்ட பணியை பா.ஜ.க. தொடங்கியது. ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி, ஜார்க்கண்ட முக்தி மோர்சாவை வளைத்து போட நினைத்தது. ஆனால், அந்த திட்டம் எடுபடவில்லை. இதேபோல், பீகாரில் நிதிஷ் குமார் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி அக்கட்சி எம்எல்ஏக்களை வளைக்க பாஜ திட்ட போட்டது. உஷாரான நிதிஷ் குமார், பாஜவை கழட்டிவிட்டு காங்கிரஸ், லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மீதான சிபிஐ வழக்குகளை காட்டி, அவரை வளைக்க பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது. இதனால், பாஜவுக்கு எதிராக எந்த கருத்தையும் ஜெகன் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். இதேபோல், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் பல மாநில கட்சிகளை தயவை நாடும் வகையில் பாஜ திட்டம் தீட்டி வருகிறது. மாநில கட்சிகள் ஆதரவு பா.ஜ.க. தனித்து நின்றால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வெற்றி பெறுவது மிக கடினம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தமிழ் நாட்டில் சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.வின் பிரிவுகளை இணைத்து தங்களை நிலை நிறுத்திக்கொள்ளலாம் என்ற  நம்பிக்கையை, இபிஎஸ்சின் பிடிவாதத்தால் மெல்ல இழந்து வருகிறது. வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்கிறது. தேர்தல் கமிஷனும் ஒத்துழைத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வராவிட்டால் பன்னீர் செல்வத்தை ஆதரித்து கட்சியை உடைக்கும் திட்டமும் தயாராகயிருக்கிறது என்கிறார்கள்  பா.ஜ.க.வின் மேலிட டெல்லி பார்வையாளர்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com