வெடிகுண்டு, சூறாவளி பனிப்புயல் - இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள்

வெடிகுண்டு, சூறாவளி பனிப்புயல் - இவர்கள் எதற்கும்  துணிந்தவர்கள்

வாஷிங்டனிலிருந்து ஸ்ருதி

மெரிக்காவில் கிருஸ்துமஸ் காலத்தில் குளிரும் பனியும் இருப்பது வாடிக்கை. சாதாரணமாக இந்தக் காலத்தில்  “எங்கும் பனி மழை பெய்கிறது” பாடியபடி பூக்களாக உதிரும் பனித்துகளுக்கிடையே  ஜாலியாக நடக்கலாம். ஆனால், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவில் பனி பெரும் புயலாக தாக்கிக் கொண்டிருக்கிறது.   இன்று காலையில்  எழுந்ததும் வீட்டின் முன்னே 4 அடி உயரத்துக்கு  உறைந்த பனி. பயங்கர காற்று. நிற்க முடியவில்லை. மைனஸ் 20 டிகிரி குளிர்.  என்னவாயிற்று?  என்று பார்க்க டி.வி.யை  ஆன்செய்தால்  எல்லா ஊர்களிலும் விமானம் கான்சல், பயணிகள் தவிப்பு, பனிப்புயல், கார்கள் விபத்து என்றே செய்திகள் கொட்டுகின்றன.

“அமெரிக்காவெங்கும் ஐயாயிரம் விமானங்கள் கேன்சல்” என்றார்கள். விமான நிலையங்களில் பெரும் கூட்டம். பலரும் போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு விமான நிலையங்களிலேயே படுத்து தூங்குவதைக் காட்டினார்கள். அதைப் பார்த்ததும் இந்தியாவிற்கு போக திட்டமிட்டிருந்த எங்கள் நண்பரின் நினைவு வந்தது. அவருக்கு போன் செய்தபோது நேற்றிரவிலிருந்து நியூயார்க் விமான நிலையத்தில் இருக்கிறேன். இந்திய விமானங்கள்  கேன்சல், டிக்கெட்டை தள்ளிவைக்கபட்ட பயணத்துக்கு பயன்படுத்த முடியாது. ரிபண்ட் வாங்கிக்கொண்டு புதிய டிக்கட் வாங்கவேண்டும் என்கிறார்கள். புதிய டிக்கெட் 5 மடங்கு விலை. உடனே வீட்டுக்கு திரும்பவும்  முடியாது,,, டாக்ஸிகள் ஓடவில்லை. யோசிக்கிறேன் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படியொரு பனிப்புயலைப் பார்க்கிறேன்.   நான் வசிக்கும்  நகர் இருக்கும் மாநிலம் உட்பட  5 மாநிலங்களில் நியூயார்க், நியூஜெர்சி, மேரிலாண்ட், ரோட் ஐலாண்ட், விர்ஜினியா ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் அப்பகுதிகளில் அவசரநிலை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி சாலைகளில் நடமாட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

“நார் ஈஸ்டர்” என அழைக்கப்படும் இந்த பனிப்புயல் சில மணிகளில்  பாஸ்டன் பகுதியில் 2 அடி உயரம் வரை பனி படர்ந்து மூடக்கூடும் என்று அறிவித்தார்கள். அப்போதே , நியூயார்க்கின் சில பகுதிகளில் ஏற்கெனவே சுமார் 2 அடி வரை பனி மூடியிருந்தது.  ஆனால் இப்போது இப்புயல் 'பாம்போஜெனிசிஸ்' நிலையை அடைந்துள்ளதாக தேசிய வானிலை சேவை சொல்லுகிறது.   'பாம்போ ஜெனிசிஸ்' என்பது, குளிர்ந்த பனிக் காற்று வெப்பமான கடல் காற்றுடன் கலந்து வளிமண்டல அழுத்தத்தில் திடீரென வீழ்ச்சியை ஏற்படுத்துவதாகும். இதனால், பாம்ப் சைக்ளோன் (Bomb Cyclone) என அழைக்கப்படும் வெடிகுண்டு சூறாவளி ஏற்படுகிறது. கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும்  இருப்பதால்  யாரும் வீட்டிற்கு  வெளியே போக முடியவில்லை. சதாரணமாகவே அமெரிக்கர்கள் வாராவாரம் தான் மளிகை சமான்கள் வாங்கிக்கொள்வார்கள். இங்கு கிருஸ்மஸ் என்றால் வீடுகளில் நண்பர்களுடன் டின்னர். 3 , 4 குடும்பங்கள் சேர்து கொண்டாடுவார்கள். தோட்டத்தில் விறகு அடுப்பு மூட்டி அதில் சமைத்து சாப்பிடுவார்கள் இந்த வாரம்  கிருஸ்துமஸ் பார்ட்டி  நண்பர்கள் வீட்டில் டின்னர்  திட்டங்கள்  என்ற .  எல்லாம்  பிளானும் அவுட். பல வீடுகளில்  வீக்கிலி கிராசரி எதுவும்  வாங்கவில்லை.

வேறு எதுவும் செய்ய முடியாததால்  இந்த கிருஸ்துமஸ் டிவியுடன் கழித்தார்கள்.  நாங்களும்  டி.வி. முன்னே உட்கார்ந்திருக்கிறோம்.  எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், சிலர் பனியில் உற்சாகமாக நடனமாடுவதையும் நியூயார்க்கில் சென்ட்ரல் பார்க்கில், குழந்தைகள் பனிச்சறுக்கு வாகனங்களில் விளையாடியதையும் . வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் பனிக்கட்டியை பந்தாக உருட்டி, ஒருவர்மீது ஒருவர் எறிந்து, பனிப்பந்து சண்டைபோடுவதையும் காட்டி  இவர்கள் எதற்கும்  துணிந்தவர்கள்  என்று வர்ணிக்கிறார்   செய்தியை வழங்குபவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com