அரசியல் கட்சிகளால் ஆளுநரை மாற்றமுடியுமா?

அரசியல் சிறப்புக் கட்டுரை
Governar R/N.Ravi, T.R.Baalu
Governar R/N.Ravi, T.R.Baalu

 

மிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்கவிருக்கும் மனுவில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர். பாலு நவம்பர் ஒன்றாம் தேதியன்று அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக்கொண்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளன.

Presidentof India Droupadi Murmu
Presidentof India Droupadi Murmu

 இதன் மூலம் ஆளுநரை மாற்ற முடியுமா?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் அம்மாநில ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இணை ஆட்சி நடத்த முற்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டும் அளவுக்கு அங்கே மோதல் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது. அதேபோல, தெலங்கானாவிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்திலேயே இருந்து வருகிறது.

 தமிழகத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது, பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று மதம், கலாச்சாரம், மொழி தொடர்பான கருத்துகளை முன்வைப்பது போன்றவற்றில் ஆளும் தி.மு.கவிற்கும் ஆளுநருக்கும் பிரச்னைகள் நீடித்து வருகின்றன.

 இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தன. அதில், "சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநர் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை; அது பற்றி கவலைப்படவுமில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழைமைவாதம் பேசுவது  அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. அவர் உதிர்க்கும்  கருத்துகளுக்கு எதிராகப் பலராலும் சொல்லப்படும் விளக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன்னை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவில்லை. வழக்கம் போல, தனது பேச்சுகளைத் தொடர்ந்து கொண்டே வருகிறார் ஆளுநர். தன்னைத்தானே

 இந்திய நாடாளுமன்றமாக, தன்னையே உச்சநீதிமன்றமாக, தானே இந்தியாவின் குடியரசுத் தலைவர் என - இன்னும் சொன்னால், இந்திய நாட்டின் மன்னராகவே அவர் நினைத்துக் கொண்டு பேசத் தொடங்கி இருக்கிறார்." என்று அதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. 

இந்த வாரத்திற்குள்ளாகவே டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து இந்த மனுவை அளிக்கப்போவதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுவரையிலான தி.மு.க. ஆட்சியின்போது உஜ்ஜல் சிங், கே.கே. ஷா, பி.சி. அலெக்ஸாண்டர், சுர்ஜித் சிங் பர்னாலா, சென்னா ரெட்டி, கிருஷண்காந்த், பாத்திமா பீவி, மீண்டும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் ஆளுநர்களாக இருந்துள்ளனர். ஆனால், ஆர்.என். ரவியுடன் ஏற்பட்ட மோதலைப் போல வேறு யாருடனும் தி.மு.க. ஒரு ஆளும்கட்சியாக முரண்பட்டதில்லை. 

இதற்கு முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் தன்னிச்சையாக ஆய்வுகளை மேற்கொண்டபோது, அதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது பன்வாரி லால் புரோஹித்தான் ஆளுநராக இருந்தார் என்றாலும், விரைவிலேயே அவர் மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

நீக்க முடியாது

ஆனால், குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதன் மூலம் இதைச் சாதிக்க முடியுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுரை குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார். குடியரசுத் தலைவருக்கு விருப்பம் இருக்கும்வரை ஆளுநர் அந்தப் பதவியில் நீடிக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் என்பது மத்திய அமைச்சரவையையே குறிக்கிறது. ஆகவே, மத்தியில் ஆளும் அரசுதான் மாநிலங்களில் ஆளுநர்களை நியமிக்கிறது.

"இப்படி செய்வதன் மூலம் ஆளுநரை நீக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இது ஒரு அரசியல்ரீதியான அழுத்தம். நாகாலாந்தில் இம்மாதிரி ஒரு அழுத்தத்தால்தான் அவர் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டார். ஆகவே, அரசியல் ரீதியான அழுத்தம் என்பது மிக முக்கியம்" என்கிறார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com