தச்சுத் தொழிலாளியின் மகள் பெற்ற தங்கப் பேனா...!!!

இந்த ஆண்டுக்கான பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி, தமிழ்நாடு மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரும் பரபரப்பைத் தொடங்கி வைத்துள்ளது.
ஆம். அரசு உதவி பெறும் பள்ளியான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்தமாக அறுநூறுக்கு அறுநூறு பெற்று எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த பிளஸ் டூவில் மட்டுமல்ல, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று, அப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அப்போதே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் நந்தினி.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையைப் பொருத்த வரையில், இதுபோல் 600/600 மதிப்பெண் பெறுவது, வரலாற்றுச் சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் மறுநாளே மாணவி நந்தினி, பெற்றோர்கள், பள்ளி ஆசிரியைகளை சென்னைக்கு வரவழைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி நந்தினியைப் பாராட்டி பரிசுகள் வழங்கியுள்ளார். மேலும் மாணவியின் கல்லூரி மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

"பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது மதிப்பெண்கள் நான் பெற்றிருந்த போதே, பிளஸ் டூ வில் நூற்றுக்கு நூறு பெற வேண்டும் என்று மனதுக்குள் உறுதி கொண்டிருந்தேன். பாடங்கள் எதுவும் அப்படியே மனப்பாடம் செய்ய மாட்டேன். பாடங்களை முதலில் நன்றாகப் புரிந்து கொள்வேன்.
பாடங்கள் அல்லாது அவைகள் சார்ந்த வெவ்வேறு தகவல்களையும் தேடித் தேடி படித்து அவைகளையும் மனதிலும் மூளையிலும் பதிந்து கொள்வேன். இவைகளைக் கலந்தே தேர்வுகளில் பதில் எழுதி விடுவேன். அவ்வளவு தான்.
நான் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவள். மேல் படிப்புகளிலும் நன்கு தேர்ச்சி பெற்று ஆடிட்டராகப் பணியாற்றுவதே என் நோக்கம்" எனக் கூறுகிறார் நந்தினி.
சமீபத்தில் சென்னையில், திரைப்பட தயாரிப்பாளர் வீரசக்தியின் "கருமேகங்கள் கலைகின்றன" திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, ஒரு "தங்கப் பேனா"வினைப் பரிசளித்தார் தயாரிப்பாளர் வீரசக்தி. பரிசாக அளித்த தங்க பேனாவை மாணவி நந்தினிக்கு அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ட்விட்டர் பதிவில், "திண்டுக்கல் வருவேன். எனக்குக் கிடைத்த "தங்கப் பேனா"வினை தச்சுத் தொழிலாளி மகள் நந்தினிக்கு பரிசாகத் தருவேன் நான்." என்று பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று 11.05.2023 வியாழக்கிழமை காலையில், திண்டுக்கல் மாணவி நந்தினி வீட்டுக்கு நேரில் சென்று, சாதனை மாணவி நந்தினிக்கு "தங்கப் பேனா" பரிசளித்தார் கவிப்பேரரசு வைரமுத்து.