சாக்லேட் சீமா

சீமா...
கொரோனா தலை விரித்து ஆடிய நேரத்தில், வாரம் இருமுறை தனது காரை எடுத்துக்கொண்டு ரோடுகளில் பணியாற்றும் போலீசார், மற்றும் சிலருக்கு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர், பழங்கள், ஆப்பிள் எனக் கொடுத்து உதவியவர். குடத்திலிட்ட விளக்குபோல் புன்சிரிப்புடன் செயல்படுபவர்.
தவிர, தான் வசிக்கும் ஸொசைட்டி மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் கொரோனா நோயாளி களுக்கு இலவசமாக உணவு அளித்தவர். மனிதாபிமானம் மிக்கவர்.

சீமா...
தனது வீட்டிலுள்ளவர்களின் பிறந்ததினம், திருமண ஆண்டு விழா போன்ற சமயங்களில், சொஸைட்டியில் இருக்கும் செக்யூரிட்டிகள்; துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கும் கேக், சாக்லேட், சாப்பாடு எனக் கொடுத்து வருபவர்.
கணவரும் மற்ற சிநேகிதிகளும் இவரது திறமையைப் பாராட்ட, தற்சமயம் தனது சாக்லேட் பிஸினஸுடன் சமையல் தொழிலையும் வீட்டிலிருந்து ஆரம்பித்து இருக்கிறார்.
மிகவும் திறம்பட வீட்டிலிருந்தவாறே, குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதுடன் பிஸினஸும் செய்யும் இந்தப் பெண்மணியைப் பற்றி அறிய நேர்ந்தது ஒரு சுவாரசியமான கதை.
ஒருநாள் மாலை வாக்கிங் செல்கையில், எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பெண்மணிகள், பினாடா கேக் ரொம்ப டேஸ்ட்டி என்றும், புது மாதிரியாக இருந்தது எனவும் பேசினார்கள். அதென்ன பினாடா கேக்? விபரம் தெரிந்துகொள்ளும் ஆவலில், அவர்களிடம் இருந்து சீமா என்பவரின் நம்பரைப் பெற்று தொடர்புகொண்டேன். பேசப் பேச சீமாவிடமிருந்து பல சுவாரசியமான, சுவையான விஷயங்கள் கிடைத்தன.
சாக்லேட்டுகள் மட்டுமின்றி, பூரண்போளி, நிலக்கடலை லட்டு போன்ற பலவற்றைச் செய்து வருகிறார். ஆரம்ப காலத்தில், இவைகளைச் செய்து, சிறிய பொருட் காட்சிகளில் பொழுதுபோக்குக்காக வைத்தது, படிப்படியாக உயர்ந்துள்ளது. அனைத்துமே இவரது சொந்த கிரியேட்டிவிட்டி. இவருடன் ஒரு பேட்டி:-

சாக்லேட் தயார் செய்ய தூண்டுகோலாக இருந்தது எது?
மராத்திய டீ.வி. நிகழ்வில், சாக்லேட் செய்யும் முறையைக் கண்டு, கணவரின் பிறந்தநாளன்று, அவரது அலுவலகத்தில் கொடுப்பதற்காக, தேவையானப் பொருட்களை வாங்கி, வீட்டிலேயே சாக்லேட் தயார் செய்து கொடுக்க, ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. அனைவருக்கும் பிடித்துப்போனது. உடனடியாக இரண்டு ஆர்டர்கள் கிடைக்க, முதலில் சோம்பலடித்த நான், பிறகு செய்து கொடுத்தேன்.
மெல்ல – மெல்ல, நண்பர்கள்; மிகவும் நெருக்கமானவர்கள் வீட்டு நிகழ்வுகள்; Return gifts ஆகியவைகளுக்கு ஆர்டர் கிடைக்க, இத்தொழிலை வீட்டிலிருந்தே தொடங்கி விட்டேன். குழந்தைகளைக் கவனித்தல், அவர்களது படிப்பு, வீட்டு வேலை அனைத்தையும் செய்யவும் முடிந்தது.
மார்க்கெட்டில் கிடைக்கும் சாக்லேட் மாதிரி வெரைட்டி உண்டா?
உண்டு. தீம் based சாக்லேட்களும் செய்வேன். கொழுக்கட்டை shape இல் விநாயகச் சதுர்த்தி சமயத்திலும், பூக்குத்தி, சரவெடிகள் மாதிரி தீபாவளி நேரத்திலும் செய்வது வழக்கம். தவிர பார்பி டால் (Barbie Doll); பினாடா கேக் போன்றவைகளை செய்து கொடுக்கையில், கூடவே அதை உடைக்க சிறு மரச் சுத்தியலையையும் கொடுப்பதுண்டு.

மரச் சுத்தியா?
பினாடா கேக்; பார்பி டால் இவை கேக் என்று சொல்லப்பட்டாலும் இவை முழுக்க முழுக்க சாக்லேட்களால் ஆனவை என்பதால் இவற்றைக் கத்தியால் கட் செய்ய முடியாது. ஆகையால், சிறு மரச்சுத்தியால்தான் உடைக்க வேண்டும். லேசாக கேக் மீது ஒரு தட்டுத் தட்டினால் உடைந்துவிடும். இதனுள் ஒரு சிறு கிஃப்ட் கூட வைக்க முடியும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இது பிடிக்கும். ஒரு கிலோ எடை கொண்ட பினாடா கேக் விலை ` 1500/-.
பார்பி டால் கேக் குறித்த விபரம்?
இதில் Barbie பொம்மையை மட்டும் வெளியில் இருந்து வாங்க வேண்டும். இது ப்ளாஸ்டிக்கால் ஆனது. பொம்மைக்கு அணிவிக்கும் அழகான ட்ரெஸ், நகைகள், அனைத்துமே Sugarஐ உபயோகித்து என்னால் கிரியேட்டிவ் ஆக தயாரிக்கப்படுபவைதான்.Barbie Dollஇன் Standம் சாக்லேட்தான். கேக் சாப்பிட உதவும் spoonகளும் சாக்லேட்தான்.

தரமான சாக்லேட் செய்ய என்ன – என்ன தேவை...?
நல்ல தரமான ‘குக்கிங் சாக்லேட் ஸ்லாப்’கள் ரெடிமேட் ஆக கடைகளில் கிடைக்கும். இது விலை உயர்ந்ததாகும். ஒரு கிலோ எடை கொண்ட ‘ஸ்லாப்’ மூலம் மீடியம் சைஸில் 50 – 60 சாக்லேட்கள் தயாரிக்கலாம்.
தங்களின் குடும்பம் குறித்து...?
மராட்டிய மாநிலத்திலுள்ள ‘மீரஜ்’ என்ற இடத்தில் பிறந்து, வளர்ந்து, படித்தேன். திருமணத்துக்குப் பின் மும்பை வந்தேன். அருமையான இரு குழந்தைகள். கணவரின் ஒரு சம்பாத்தியத்தில் மும்பையில் வாழ்வது சிறிது சிரமம்தான். பசங்க வளர – வளர ஆகும் செலவுகளைச் சமாளிக்க, இந்த கைத்தொழில் உதவி வருகிறது. விளம்பரம் கிடையாது. ஒருவருக்கொருவர் சொல்வதின் வழியே பிஸினஸ் வளர்ச்சியடைந்து இருப்பது இறையருளே.
2011 ஆம் ஆண்டு, விளையாட்டாக, அதுவும் கணவரின் பிறந்த தினத்துக்கு அவரது அலவலக நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக சாக்லேட் செய்ய ஆரம்பித்தது. படிப்படியாக வளர்ந்து, சீமாவின் பிஸினஸ் இப்போது சமையலையும் இணைத்துக்கொண்டுவிட்டது.