செல்ஃபோனில் பேசிக் கொண்டே நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் தீமைகள்

ஆரோக்கிய தகவல்
செல்ஃபோனில் பேசிக் கொண்டே நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் தீமைகள்

வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கு செல்ஃபோன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது இரண்டாவது முக்கியக் காரணம் என்கிறது ஆய்வுகள். இதே போல பேசிக்கொண்டே நடைப்பயிற்சி செய்வதும் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். சாலையோரங்களில் காலையும் மாலையும் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் பலர் கையில் செல்ஃபோனுடன் ரோடில் பேசிக்கொண்டே நடந்து செல்வதை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட நபர்கள், பின்னால் இருந்து வரும் வாகனங்களை கவனிக்காமல் போவதால் விபத்துகள் நேரலாம்.

‘இல்லை, நான் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வ தில்லை. வீட்டு மொட்டைமாடியில் அல்லது பூங்காவிலோ தான் நடப்பது வழக்கம்’ என்பவர்களும் நடக்கும் போது கட்டாயம் செல்ஃபோன் உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால் நடக்கும்போது உடல் நேராக இருக்க வேண்டும். நடப்பதற்கு உடல் தோரணை மிகவும் முக்கியம். முதுகெலும்பு நேராகவும் முதுகு செங்குத்தான பொசிஷனிலும் இருக்க வேண்டும். முதுகெலும்பு எக்காரணம் கொண்டும் வளையக்கூடாது. கையில் செல்ஃபோன் உள்ளிட்ட எந்த பொருட்களும் இல்லாமல் இரண்டு கால்களையும், கைகளையும் நன்றாக வீசி நடக்க வேண்டும். முக்கியமாக குதிகாலை நன்றாக தரையில் ஊன்றி நடக்க வேண்டும்.

செல்ஃபோனில் பேசிக்கொண்டே நடக்கும்போது என்ன ஆகிறது தெரியுமா? நம்முடைய உடல் பொசிஷன் மாறுபடுகிறது. வலது கையிலோ அல்லது இடது கையிலோ ஃபோனைப் பிடித்து பேசிக்கொண்டே நடக்கும் போது நம்மை அறியாமல் நாம் சற்றே  முதுகை முன்புறமாக வளைக்கிறோம். நம்முடைய கைகள் வீசி நடப்பது தடைபடுகிறது. முழங்கை மடிக்கப்படுவதால் விரைவிலேயே முதுகு, முழங்கை, கை விரல்கள், தோள்பட்டையும் வலிக்கத் தொடக்கி விடும். கழுத்தையும் ஒரு புறமாக  சாய்த்து நடப்போம். மிக விரைவிலேயே கைகளும் கால்களும் சோர்ந்து போய் நடப்பதை நிறுத்தி விடுவோம்.

பொதுவாக நடை என்பது மனதை ஆசுவாசப்படுத்தி, நிம்மதியை தரும் ஒரு பயிற்சி. செல்ஃபோனில் பேசிக்கொண்டே நடப்பதால் நடைபயிற்சியின் மூலம் இயற்கையாக நம் உடலுக்கு கிடைக்கும் முழு நன்மைகளும் நிச்சயம் கிடைக்காது. மேலும் நாம் எதிர் முனையில் கேட்கும் விஷயம் காரசாரமானதாகவோ, மனதை கவலை கொள்ளச் செய்யும் விதமாகவோ இருந்தால் நமது மனமும் பாதிக்கப்படும்.

எனவே நடக்கும் போது அழைப்பு வந்தால் நடப்பதை நிறுத்தி விட்டு சுருக்கமாக பேசுங்கள். முழுவதுமாக பேசி முடித்துவிட்டு பிறகு நடைப் பயிற்சி தொடர வேண்டும். அலைபேசியை அமைதி நிலையில் வைத்துவிட்டு நடப்பது நல்லது. வீட்டிலேயே மொபைலை வைத்துவிட்டு நடப்பது இன்னும் சிறப்பு.

நடைபயிற்சியின் போதாவது செல்ஃபோனுக்கு ஓய்வு தருவோமே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com