எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

எதிர்பார்ப்புகளும்  ஏமாற்றங்களும்

லகின் மூன்றாவது இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளமிக்க நாடான கத்தார் உலகில் எண்ணெய் உற்பத்தியில் 14வது இடத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு 15 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. கத்தார் நாட்டு அதிபருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு லாபம் மட்டுமே 30 பில்லியன் டாலர். அப்படியானால் எவ்வளவு எனக் கேட்கிறீர்களா? 1 பில்லியன் என்பது 100 கோடி 1 டாலரின் மதிப்பு 82 ரூபாய். இப்போது பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நாட்டில் இருப்பது முடியாட்சி. இதன் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் அமது அல் தானி. உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவர். கால் பந்தாட்ட ரசிகர். தன் நாட்டில் உலக்கோப்பையை நடத்த வேண்டும் என்பது இவரின் கனவு.

2010ஆம் ஆண்டு ஃபிப்ஃபா 22 செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றது. வாக்கெடுப்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை கத்தார் தோற்கடித்தது. ஆனால் ஃபிஃபா அதிகாரிகளுக்கு 3.7 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து உரிமையை பெற்றதாக கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் லஞ்சப் புகார் உண்மையல்ல என்று நிரூபணம் ஆனது.

வழக்கமாக உலகக் கோப்பை தொடர் ஜூன், ஜூலையில் நடத்தப்படும். ஆனால் இந்த மாதங்களில் கத்தாரில் 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்பதால் குளிர்காலத்தில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்படி உலக கோப்பை போட்டியின் நாட்களையே மாற்றுமளவுக்கு உலக கால்பந்தாட்ட தலைமை குழுவில் செல்வாக்கு பெற்ற கத்தார் இதுவரை எந்த உலக கோப்பை தொடரும் இப்படியிருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடத்த மிக பிரமாண்டமாக திட்டமிட்டது. இந்த போட்டிகளுக்காகவே ஏழு மைதானங்களை கத்தார் கட்டமைத்துள்ளது.

100க்கும் அதிகமான புதிய விடுதிகள், ஒரு புதிய மெட்ரோ, புதிய சாலைகள் எல்லா 220 பில்லியன் டாலர்கள் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பில் இவை உருவாகின. உலக கோப்பை ஆட்டங்களைக் காண பல லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வருவார்கள். இறுதிப் போட்டிகளை காண உலகம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கத்தார் இப்போது பெரும் ஏமாற்றாத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் வரவில்லை. வருபவர்களும் முழுத் தொடரையும் காணத் தங்குவதில்லை.

காரணம்? கத்தார் இஸ்லாமிய ஷ்ரியா சட்டங்களைப் பின்பற்றும் நாடு. கால்பந்து போட்டிகளை பார்க்க ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகின்றனர். யாரும் பாகுபாடு காட்டப்படமாட்டார்கள் என கத்தார் உலக்கோப்பை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருந்தாலும் சட்டங்கள் தளர்த்தபடவில்லை. LOVE என்ற சொல்லே ஆபாசமானதாகக் கருதுப்படுகிறது. பெல்ஜியம் அணி வீரரான கெவின் டி புருய்னின் டி-ஷர்ட்டின் காலரில் 'Love' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியான 24 மணி நேரத்திற்குள், காலரில் ‘லவ்’ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்து ஆட்டத்தில் ஆடக்கூடாது என்று FIFA தெரிவித்துள்ளது. மேலும், இது போன்று விதியை மீறி செயல்படும் வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் FIFA எச்சரித்துள்ளது.

கத்தாரில், பொது இடத்தில் காதலர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்தாலும் சரி அல்லது ஆண், பெண் இடையேயானதாக இருந்தாலும் முத்தமிட்டுக் கொள்ளக்கூடாது. கத்தாரில் தன் பாலினத்தவர் உறவு சட்டவிரோதமாகும்.அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, மரண தண்டனை கூட விதிக்கப்படும் வகையில் இங்கே சட்டம் உள்ளது.

பழமைவாத இஸ்லாமிய நாடு என்ற வகையில், மதுபானம் என்பது கத்தாரில் பொதுவாக சொகுசு விடுதிகளில் உள்ள பார்களில் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குவாட்டரில் பாதி அளவு கொண்ட பீர் 13 டாலர் விலை இருக்கும். அரசு அதிகாரிகளிடையே நடந்த நீண்ட விவாதங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டிகளின்போது, போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு மற்றும் போட்டிகள் முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு உள்ளே குறிப்பிட்ட சில பகுதிகளில் மது வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது. கத்தார் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் பீர் அருந்த தடைவிதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரரான பீர் தயாரிப்பு நிறுவனமான (Budweiser) ‘பட்வைசர்’ இந்த தொடருக்காக தயாரித்து விற்பனைக்காக இறக்குமதி செய்த பல ஆயிரம் பீர் கேன்களை உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு, அன்பளிப்பாக வழங்கப்படும் என ட்வீட்டரில் அறிவித்துள்ளது.

இந்த விஷயங்கள் எல்லாம் சீசன் முழுவதும் ஜாலியாகக் கழிக்கலாம் என்று நினைத்து திட்டமிட்ட ஐரோப்பிய, அமெரிக்க கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாகயிருக்கிறது. அதுவும் குறிப்பாக இளம் காதலர்களுக்கு.

அடுத்த விஷயம் ஆஸ்திரேலிய நாட்டு கால்பந்து அணி வெளியிட்ட ஒரு வீடியோ. அந்த வீடியோவில், உலகக் கோப்பை இறுதி போட்டிகளுக்கான கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட சுமார் 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து இந்த அமைப்பு விமர்சனம் செய்துள்ளது.

கட்டடப்பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மோசமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக பலர் காயம் அடைந்ததாகவும் அல்லது பலர் உயிரிழந்து விட்டதாகவும் அந்த வீடியோவில் சொல்லப்படுகிறது. கத்தாரின் மனித உரிமை மீறல்கள் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டென்மார்க் கால்பந்தாட்ட வீரர்கள், முழுவதும் கறுப்பு கிட் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பல விஷயங்களை செம்மையாக திட்டமிட்ட கத்தார் அரசு இந்த கேளிக்கை விஷயத்தில் தவறி விட்டது. சரி இதனால் கத்தார் நாடு மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து பொருளாதார ரீதியால் திணருமா? நிச்சியமாக இல்லை. கத்தார், உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவளி மற்றும் எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ள நாடு. இதனால் நாடு, ஓர் உயர் வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதல் இடம் வகிக்கிறது. அதனால் இந்த போட்டிகளினால் எதிர் பார்த்த வருமானம் இல்லாததால் ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. தன் கனவு நிறைவேறியதால் மன்னர் மகிழ்ச்சியாயிருக்கிறார். அது போதுமே .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com