டிவிட்டர் ஆப்புக்கு வந்து விட்டது ஓர் ஆப்பு!

டிவிட்டர் ஆப்புக்கு வந்து 
விட்டது ஓர் ஆப்பு!

லகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தில் அதிரடி நிர்வாக  மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்,  இந்திய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் புதிய மாற்றம் செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய  அரசு. 

இந்த புதிய விதிகளின்படி, “இனிமேல் ட்விட்டர், ஃபேஸ்புக், யூ டியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் இந்திய சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து சமூக ஊடக செயலிகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக, குறைகேட்பு மேல்முறையீடு குழுக்களை மத்திய அரசு அமைக்கும். பயனர்களின் புகார்கள் 30 நாட்களில் தீர்க்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

 ஏன் இந்த அரசியல் தலையீடு?

 சமீப ஆண்டுகளாகவே சமூக வலைதளங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன என்றும், பொய்ச் செய்திகள், வெறுப்பைத் தூண்டும் பதிவுகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொய்யான தகவல்கள், தனிநபர்கள் குறித்து அவதூறான கருத்துகள், ஆபாசப் பதிவுகள் போன்றவை அதிகரித்து வருகின்றன.  இதன் விளைவே  இந்த கட்டுபாட்டு விதிகள்.

இதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், குறைதீர்ப்பு அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் அதை கண்காணிக்க தனி அதிகாரிகளை உள்நாட்டிலேயே நியமிப்பதை கட்டாயமாக்கியது. 

ஆனால், இந்த குறைதீர்ப்பு அதிகாரிகளால் வழங்கப்படும் தீர்வுகள் பாரபட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயனாளர்களின் பதிவுகள் முறையான காரணம் இன்றி நீக்கப்பட்டால் என்ன செய்வது? என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

இந்த அதிரடி  மாற்றம் எல்லாம் சமூக ஊடகங்களைக் அரசு கைப்பற்றும் முயற்சியா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை முடக்கும் திட்டம் என்றும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. 

இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மாற்றம் செய்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பை, ராஜ்ய சபா எம்.பி-யும் முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த கபில் சிபல், "முதலில், அவர்கள் டிவி நெட்வொர்க்குகளைக் கைப்பற்றினர். இப்போது சமூக ஊடகங்களைக் கைப்பற்றப் போகிறார்கள்" என மத்திய அரசை சாடியுள்ளார்.

 நாம் ஒரே நடத்தை விதிகள், ஒரே அரசியல் கட்சி, ஒரே ஆட்சி முறை மற்றும் யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லாத நிலையை நோக்கி நகர்கிறோம். எப்போதுமே 'அரசுக்குப் பாதுகாப்பானது, மற்றவர்களுக்குப் பாதுகாப்பற்றது' என்பதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது. சாதாரண குடிமக்களுக்கு எஞ்சியிருந்த ஒரே தளம் சமூக ஊடகங்கள்தான். அதிலும் இனி அவதூறு கருத்துகள் என மக்கள் மீது வழக்கு தொடரப்படும்" என்கிறார் கபில் சிபில் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com