முதலீட்டில் ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பது எப்படி?

முதலீட்டில் ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பது எப்படி?
Published on

முதலீட்டினைப் பரவலாக்குங்கள்; முதலீடு என்பது ஒரே இடத்தில் குவிக்கப்படும் போது, பணத்தினை இழக்கும் அபாயம் அதிகம். ஆங்கிலத்தில், Don't put all your eggs in a single basket, என்று கூறுவார்கள். அதாவது, உங்களுடைய எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடதீர்கள். பரஸ்பர நிதிகள் போன்ற முதலீடுகள் இத்தகைய பரவலாக்கத்தினை எளிமைப் படுத்துகின்றன.

  • முதலீட்டினைப் புரிந்து கொண்டு பின்னர் அதில் இறங்குங்கள்; இதனை தமிழில் ஆழம் தெரியாமல் காலை விடாதே என்று கூறுவார்கள். சில வகையான முதலீடுகளுக்கு மிகவும் திறனும், நாசூக்காக கையாளும் திறனும் வேண்டும். இல்லையேல், பணத்தினை இழக்க நேரிடும். உதாரணமாக, (IT Sector) நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற புரிதல் இல்லையெனில், அந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

  • கூட்டத்தோடு கோவிந்தா மாதிரியான முதலீட்டில் பணத்தை போடாமல் இருங்கள்: ஒவ்வொரு சமயமும் ஒரு முதலீட்டில் மக்களின் கவனமானது திருப்பப்படுகிறது. மக்கள் எல்லோரும் அந்த முதலீட்டை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி பணத்தை போடுகின்றனர். மிகவும் சமீபத்தில் பிட்காயின் (Bitcoin) சார்ந்த முதலீடுகள் இவ்வாறு மக்களை திசைதிருப்பி அதிக பணத்தை இழக்க வைத்தது. இரு தசாப்தங்களுக்கு முன்பு, சில நிதி நிறுவனங்கள் இவ்வாறு அதிக வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி மக்களின் பணத்தை சுருட்டி விட்டனர். எனவே எல்லா மக்களும் செய்கிறார்களே என்று நீங்களும் ஒரு முதலீடு செய்யாதீர்கள்.

  • முதலீட்டின் நிறை குறைகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்: ஒவ்வொரு வகையான முதலீட்டிலும் சில பல நிறை குறைகள் உள்ளன. உதாரணமாக நிலத்தில் செய்த முதலீட்டில் நீர்ப்புத்தன்மை மிகவும் குறைவு. நீங்கள் நில முதலீட்டில், பணத்தினைப் போட்டால் அவசர தேவைக்கு அதை பணமாக மாற்ற நினைத்தால், அந்த அவசரத்தில் நஷ்டத்தில் விற்க நேரிடும்.

  • அவசர கால நிதியை வைத்திருங்கள்: குறைந்த பட்சம் மூன்று முதல் ஆறு மாதத்திற்கான செலவுகளுக்கு அவசர கால நிதியை வைத்திருங்கள். அவ்வாறு வைத்திருக்காத பட்சத்தில் உங்களது அவசர தேவைகளுக்காக முதலீட்டில் கை வைக்க நேரிடும். அவ்வாறு கைவைக்கும் காலமானது, உசிதமான காலம் இல்லாத பட்சத்தில் மிகவும் பெரிய பண இழப்பை சந்திக்க நேரிடும்.

  • சுயமாக சிந்தித்து முதலீடு செய்யுங்கள்: யாரோ ஒருவர் தொலைக்காட்சியில் சொன்னார்கள், ஏதோ ஒரு நண்பர் சொன்னார் என்று மற்றவர்களை குருட்டாம்போக்கில் நம்பி முதலீடு செய்யாதீர்கள். எந்த ஒரு முதலீட்டையும் நீங்களே சுயமாக சிந்தித்து லாப நஷ்டங்களை புரிந்து கொண்டு இறங்குங்கள்.

  • முதலீட்டின் எதிர்கால குறிக்கோளினை கொண்டு முதலீடு செய்யும் இடத்தை தேர்ந்தெடுங்கள்: உங்களது குறுகிய கால பணத் தேவைகளுக்கு வங்கியில் வைப்பு நிதியே சிறந்தது. அங்கு உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும். அதை விட்டுவிட்டு குறுகிய காலத் தேவைகளுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் எடுத்தால், அதிக பணத்தினை இழக்க நேரிடும்.

  • எந்தவொரு முதலீடும் உங்களுடைய நிதித் திட்டமிடலில் விகிதாசாரத்தில் வரவேண்டும்: உங்களுடைய நிதி திட்டமிடல் விகிதாசாரத்தில் 2% முதல் 5 % தான் தங்கம் இருக்க வேண்டும் என்றால், தங்கம் விலை எவ்வளவு குறைந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று அதிக பணத்தை அதில் முதலீடு செய்ய வேண்டாம். எப்போதுமே உங்களுடைய நிதித் திட்டமிடலுக்கு ஏற்றவாறு உங்கள் முதலீட்டை வைத்திருங்கள்.

  • அபிமன்யு கதையை மறக்காதீர்கள்: அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்தில் எப்படி நுழைய வேண்டும் என்று தெரிந்து இருந்தது. ஆனால் அதிலிருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே எந்த ஒரு முதலீட்டிலும் அதில் எவ்வாறு நுழைவது, எவ்வாறு வெளிவருவது, அதன் நீர்ப்புத்தன்மை எப்படி என்று தெரிந்த பின்பு அதில் நுழையுங்கள். இல்லையேல் அபிமன்யு மாட்டிக்கொண்டது போல் பணத்தை இழக்க நேரிடும்.

  • உணர்ச்சி வயப்பட்ட மன நிலையில் முதலீடுகளில் இறங்காதீர்கள்: உங்களது நண்பர் ஒரு முதலீடு செய்கிறார், அதிகப் பணம் சம்பாதிக்கிறார் என்பதால் உணர்ச்சிவயப்பட்டு நீங்களும் அந்த முதலீட்டில் இறங்காதீர்கள். நமக்கு ஒத்து வருமா என்று பாருங்கள்.

  • குழப்பமான மனநிலையில் முதலீட்டில் இறங்காதீர்கள்: குழப்பமான மனநிலையில் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகும் வாய்ப்பு உண்டு. எனவே குழப்பமான மனநிலையில் முதலீடுகளை தவிர்த்து நல்ல நன்கு தெளிவு அடைந்த பின்பே முதலீட்டில் இறங்குவதை பற்றிய யோசியுங்கள்.

  • பதட்டத்தில் முதலீட்டில் இருந்து வெளியே வராதீர்கள்: திடீரென்று ஏதோ ஒரு சம்பவத்தினால் பலர் முதலீட்டில் இருந்து வெளியேறும் பொழுது நீங்கள் பதட்டத்தில் வெளியே வராதீர்கள். உதாரணமாக பங்கு சந்தை வீழ்ச்சி அடையும் போது பலர் பதட்டத்தில் வெளியேறுவார்கள். அவ்வாறு பதட்டத்தில் வெளியேறும்போது முதலீட்டில் பெரிய பணத்தை இழக்க நேரிடும். நீண்ட கால முதலீட்டாளராக , எந்த ஒரு பாதிப்பும் அடையாமல் பங்குகளை வைத்திருக்கும் போது நீண்ட காலத்தில் நல்லதொரு பணப் பெருக்கத்தை காண முடியும்.

உங்களது முதலீடுகள் வெற்றியடைய வாழ்த்துகள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com