வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் உபரி பணத்தில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி ?

வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் உபரி பணத்தில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி ?

வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் உபரி பணத்தைக் கொண்டு அதிக லாபம் ஈட்ட முடியும்.  அந்த திட்டத்தின் பெயர் தன்னிச்சைப் பணமாற்றக் கணக்குகள்(Auto Sweep).

தன்னிச்சை பணமாற்றக் கணக்குகள் (Auto sweep) :

வங்கியில் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை, ஒரு குறிப்பிட்ட விளிம்புத் தொகை அளவிற்கு(Threshold) மேல் சென்றால், தன்னிச்சையாக வைப்பு நிதியாக மாற்றுவதற்கு , அந்த சேமிப்புக் கணக்கோடு, தன்னிச்சை- பணமாற்றம் (Auto sweep) என்ற வசதியை இணைத்துக் கொள்ள வேண்டும்.இத்தகைய சேமிப்புக் கணக்குகளுக்கு ஒவ்வொரு வங்கியிலும் வெவ்வேறு பெயர் கொண்டு அழைப்பார்கள்.உதாரணமாக, ஐடிபிஐ ஸ்வீப்-இன் சேவிங்க்ஸ் அக்கவுண்ட்

இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட விளிம்புத் தொகைக்கு மேல் உள்ள பணமானது, வைப்பு நிதியாக வைக்கப்படுகிறது (sweep out). அதன் மூலம் வைப்பு நிதிக்கு கிடைக்கும் அதிக வட்டியைப் பெற முடிகிறது. விளிம்புத் தொகைக்கு மேல் பணம் தேவைப்பட்டால், வைப்பு நிதி மூடப்பட்டு, சேமிப்புக் கணக்கிற்கு மறுபடி பணம் வைக்கப்படும் (sweep in).

இதன் மூலம், பணத்தின் நீர்ப்புத் தன்மை, சேமிப்பு வங்கி கணக்கைப் போல் காக்கப்படுகிறது. அதே சமயம். வைப்பு நிதிகளைப் போல், அதிக வட்டிப் பெற முடிகிறது. கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ?

உதாரணமாக, உங்களிடம் 50,000 ரூபாய் இருக்கிறது என்று கொள்வோம். விளிம்புத் தொகை ரூபாய். 10,000 க்கு மேல் உள்ள பணத்தை இவ்வாறு தன்னிச்சை பணமாற்றத்திற்கு என்று குறிப்பிட்டு விட்டால், மீதமுள்ள 40,000 ரூபாயானது வைப்பு நிதியாக மாற்றப்படும். 

உங்களுடைய 10,000 ரூபாய்க்கு சேமிப்பு கணக்கின் வட்டியான 4% வட்டி எடுத்துக் கொள்ளப்படும்.

மீதமுள்ள 40,000 ரூபாய்க்கு, வைப்பு நிதியின் வட்டியான 7% வட்டி எடுத்துக் கொள்ளப்படும்.

இப்போது, நீங்கள் வங்கி சேமிப்பிலிருந்து பணம் எடுத்தால் என்ன ஆகும்? 

நீங்கள் வங்கி சேமிப்பில் உள்ள விளிம்புத் தொகைக்குள் பணத்தை எடுத்தால், வைப்பு நிதியானது பாதிக்கப்படாது.

 உதாரணமாக, நீங்கள் 5000 ரூபாய் எடுத்தால், அது சேமிப்பு கணக்கிலிருந்து எடுக்கப்படும். 

வங்கி சேமிப்புக் கணக்கின் விளிம்புத் தொகையை விட, அதிகமான பணத்தை எடுத்தால், வைப்பு நிதியானது மூடப்பட்டு, உங்களுக்குப் பணம் வழங்கப்படும்.

உதாரணமாக, நீங்கள் 30,000 பணம் எடுத்தால், சேமிப்புக் கணக்கிலுள்ள விளிம்புத் தொகை 10,000 போக, வைப்பு நிதியை மூடி, 40,000 ரூபாய் மறுபடி சேமிப்பு கணக்கிற்கு வரும் (sweep in). இப்போது, மிஞ்சும் பணம் ரூபாய். 20,000. இதில் மறுபடி ரூபாய். 10,000 (விளிம்புத் தொகை - threshold) சேமிப்பு கணக்கில் ஒதுக்கிய பின்னர், மீதமுள்ள ரூபாய். 10,000 வங்கி வைப்பு நிதியாக மாற்றப்படும்.

 வைப்பு நிதியானது எவ்வளவு காலம் இருந்தது என்பதற்கு ஏற்ப வைப்பு நிதி வட்டி விகிதம் மாறுபடும். மேலும், முன்கூட்டியை வைப்பு நிதியை மூடுவதால், அதற்கு அபராத வட்டி குறைக்கப்பட்டு, உங்களுக்கு வட்டி வழங்கப்படும்.

 இத்தகைய திட்டத்தில் சேர்வதற்கு முன்னர், பின்வருவனவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். 

பொதுவாக விளிம்புத் தொகைக்கு உட்பட்டே செலவுகளை வைத்திருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு முடியாதெனில், இவ்வாறு வைப்பு நிதி அடிக்கடி மூடப்பட்டு, அபராத வட்டி காரணமாக, சேமிப்புக் கணக்கின் வட்டியை விட, பணம் குறைவாக வளரும்.

இவ்வாறு வைப்பு நிதியில் பணம் போடுவதால், சேமிப்புக் கணக்கு வட்டிக்கு கிடைக்கும் வரி விலக்கு(80TTA சேமிப்பு வங்கி வட்டிக்கு ரூபாய். 10,000 வரை வரி விலக்கு), வைப்பு நிதி வட்டிக்கு கிடைக்காது. எனவே, எது நமக்கு சரியானது என்பதைப் பார்க்க வேண்டும்.

சிலவகை வைப்பு நிதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு (உதாரணமாக 1 வருடம்) வைத்திருக்க வேண்டும். அத்தகைய காலம் வரை வைத்திருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். பணத்தின் நீர்ப்புத்தன்மை பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

உங்களது வங்கியில் உள்ள இந்த அருமையான பணம் பெருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com