தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் பயனுள்ளதா?

தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 01 – செப்டம்பர் 07
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் பயனுள்ளதா?

செப்டம்பர் முதல் வாரம் ஊட்டச் சத்து வாரமாக அனுசரிக்கப் படுகிறதல்லவா?

எல்லோருக்குமே ஊட்டச்சத்து அவசியம் என்றாலும், இளைய  தலைமுறைக்கு, குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிக இளம் வயதில் கிடைக்கும் சத்துணவுதான் அவர்கள் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

தற்சமயம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலைச் சிற்றுண்டியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள், அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் குறித்து, பிரபல சத்துணவு நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் அவர்களைக் கேட்டோம். 

இது மிக நல்ல திட்டம் என்று வரவேற்றவர்,

“நல்ல சத்துணவும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் சிறு வயதிலேயே கிடைப்பது நல்லது. காலைச் சிற்றுண்டி நிறைய மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும்” என்றார்.

டாக்டர் தாரிணி கிருஷ்ணன்
டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

இதில் கிடைக்கும் சத்துக்கள் பற்றி சொல்லுங்கள்….

“பொதுவாக, கிச்சடி, வெண்பொங்கல், உப்புமா போன்றவை  காய்கறி சாம்பாருடன் வழங்கப்படுகின்றன.

அரிசி, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு என்றாலும் அதில் இரண்டு குறிப்பிட்ட அமினோ அமிலங்கள் குறைவாக இருக்கும். ஆனால், அதே போல் பருப்பு வகைகளிலும் வேறு இரண்டு அமினோ அமிலங்கள் குறைவாக இருக்கும். அரிசி பருப்பு சேர்த்து, பொங்கல், கிச்சடி தயாரிக்கும் போது, ஒன்றுக்கொன்று பேலன்ஸ் செய்து கொண்டு சரியான அமினோ அமிலங்கள் அவற்றில் சேரும். இது சிறந்த சத்துணவாகும்.

நம் முன்னோர்கள், அதனால்தான் அரிசி உளுந்து சேர்த்து இட்லி மற்றும் பயறு சேர்த்து, பொங்கல்  போன்ற உணவுகளை காலை உணவாக்கினார்கள்.

சாதம் பருப்பு, காய்கறிகள் கொண்ட சாம்பார், கலந்த சாதம் வகைகள், சுண்டல், முளைவிட்ட தானியங்கள் இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்தை அளிக்கும். அவர்களது ஐ.க்யூ அதிகரிக்கும். எலும்புகளும், தசைகளும் வலுப் பெறும். சட்னிகளில் இருக்கும் தேங்காய் , கறிகாய்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், நல்ல கொழுப்பு இவற்றை அளிக்கிறது “ என்று கூறும் டாக்டர் தாரிணி,

“வாரத்தில் இரு  நாட்களாவது சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும்  திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதுவும் வரவேற்கத் தக்கது” என்கிறார்.

மேலும், இளம் சிறார்க்கு சத்துணவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்று கூறும் தாரிணி,, இந்தியாவில்  வரும் 2030க்குள், பத்துவயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் சுமார் 2.4 கோடிப் பேர் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள் என்றும் கவலைப் படுகிறார்.

இந்த ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு, நகர்ப் புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப் புறங்களில் உள்ளதா, அதற்கான முயற்சிகள் என்ன எடுக்கப் படுகின்றன?

“கிராமங்களில், ப்ரைமரி ஹெல்த் சென்டர்  எனப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் விழிப்புணர்வுப் பணிகள் நடை பெறுகின்றன.

கோவை போன்ற நகரங்களில் சில கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மக்களை சந்தித்து ஊட்டச்சத்தின் அவசியத்தையும் அதன் குறைபாடுகளால் வரும் பிரச்னைகளைப்  பற்றியும் விழிப்புணர்வு அளிக்கும் நடைமுறை இருக்கிறது.

மத்திய அரசின்  MInistry of Health and Family Welfare ன் கீழ் வரும்  ஆஷா (Accredited Social Health Activist ) ஆர்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோரும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை கிராமப் புறங்களில் ஏற்படுத்தி வருகிறார்கள்.

தொலைக் காட்சிகள் மூலமும் மக்கள் சத்துணவின் அவசியத்தை அறிந்துகொள்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பல சத்துணவு நிபுணர்களும், சரிவிகித உணவு பற்றி சரியான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார்கள்.

சில சமூக வலைத் தளங்களில் அனுபவம் இல்லாதவர் களால் சத்துணவு பற்றி தவறான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவற்றை மக்கள் தவிர்த்துவிட்டு, இதில் அனுபவம் பெற்ற சத்துணவு நிபுணர்கள் சொல்லும் கருத்துக்களைப் பின் பற்ற வேண்டியது மிக அவசியம் என்கிறார் தாரிணி.

பல்வேறு துறையினரையும் சந்தித்து ஊட்டச்சத்து உணவுகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தாரிணி,  இதற்காக தனது வலை தளம் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும், இதுவரை 88 காணொளிகள்  பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தாரிணி கிருஷ்ணன் ஈஸி டயட் யூ ட்யூப் சேனல்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com