வாழ்க்கைத் துணை நலம் பேணுவோம்!

வாழ்க்கைத் துணை நலம் பேணுவோம்!

ருவருக்கு தன் நட்பு வட்டத்திலும் பணிபுரியும் இடத்திலும் பொது வெளியிலும் எத்தனையோ நண்பர்கள் இருக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியிடமோ/ கணவரிடமோ நட்புணர்வு பாராட்டா விட்டால் அத்தனை நண்பர்கள் இருந்தாலும் வீண்தான்.

இஷ்டம் போல பேசலாமா?

நாம் அலுவலகத்திற்கு ஃபார்மல் உடையிலும் திருமணம், விழா, கோயில் போன்ற இடங்களுக்கு பாரம்பரிய உடைகளிலும் பயணங்களின் போது கேஷுவல் உடையிலும் செல்கிறோம். ஆனால் வீட்டில் இருக்கும் போது நமக்கு சௌகரியமான ஆடைகளை அணிகிறோம். ஏனெனில் வீடு என்பது சர்வ சுதந்திரம் பொருந்திய ஒரு இடம். இங்கு எந்தக் கட்டுப்பாடுகளும் தேவை இல்லை. இஷ்டம் போல நாற்காலியில் கால்களை மடித்து அமர்வது,  சோபாவிலோ தரையிலோ கால்களை நீட்டி அமர்வது என நமது இஷ்டம் தான். அதே சமயம் தன் இல்லறத்துணையிடம், ‘இவர் என் கணவர்/ மனைவி தானே? என் இஷ்டம் போல பேசலாம், நடத்தலாம், எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என ஒருவர் சொல்லவோ நடந்து கொள்ளவோ முடியுமா? அப்படி இருந்தால் அந்த இல்லறம் இனிக்குமா?

அணுகுமுறையில் மாற்றம்

வெளியில் ஆயிரம் இம்சைகளை உதடுகளில் ஒட்ட வைத்த புன்னகையுடன் சகித்துக் கொள்ளும் நாம் வீட்டில் சின்ன சின்ன சம்பவங்களுக்கு பொறுமை இழந்து முகம் சுளிக்கிறோம். ‘’சே! என்னங்க இது? முத்தல் முருங்கைக்காயையும் சொத்தைக் கத்திரிக்காயையும் வாங்கிட்டு வந்திருக்கீங்க?’’ என மனைவியும், ‘’காப்பியா இது? கஷாயம் மாதிரி இருக்கு’’ என கணவனும் மனதில் பட்டதை அப்படியே கூறினால், கணவரின் முகம் வாடிப் போகும்; மனைவியின் மனதில் கசப்புத் தட்டும். அதற்கு பதிலாக, ‘’காய்கறி ஜோரா இருக்கு. முருங்கக்காய் இன்னும் கொஞ்சம் இளசா இருந்தா நல்லா இருக்கும்.’’  என மனைவியும், ‘’காபி சூப்பர்! இன்னும் கொஞ்சம் சர்க்கரை போட்டா ஏ ஒன்னா இருக்கும்’’ என நயமாக கணவரும் சொன்னால் அங்கே மேஜிக் நடக்கும்.

தம்பதியர் இடையே சச்சரவு வருவதற்கு முதல் காரணம் தனது இஷ்டம், தனது விருப்பம், தான் செய்வது/ சொல்வது தான் சரி என்ற மனப்பான்மை தான் விரிசலை உண்டாக்கும். ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றால், ஒருவரே இருவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்யாமல், மற்றவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்வதே முறை. ஒரு பொருள் வாங்குவது போன்ற சிறிய விஷயமாகட்டும், வீடு கட்டுவது போன்ற பெரிய பட்ஜெட் திட்டத்திலும் இருவருமே கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்று.

பரஸ்பர அன்பு பரிமாற்றம்

ணவர்/ மனைவி வேலைக்குக் கிளம்பும்போது சிரித்த முகத்துடன் வழியனுப்புவது, மாலை வீடு திரும்பியதும் இன்றைய நாள் எப்படி இருந்தது என்பது பற்றி சில வார்த்தைப் பரிமாற்றங்கள், உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அருகில் அமர்ந்து கைப்பிடித்து, ‘சீக்கிரம் சரியாயிடும். கவலைப்படாத’ என் அன்போடு கூறி மாத்திரையும் தண்ணீரும் தன் கையால் தந்தால் நோய் விரைவில் ஓடிவிடும். வீட்டு வேலைகளில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதல், வெளி வேலைகளையும் இருவரும் பங்கிட்டுக் கொள்ளுதல், குழந்தைகளின் பள்ளிக்கூட பீஸ், இ.பி பில் கட்டுவது, காய்கறி வாங்குவது கார் டூ வீலர் இன்சூரன்ஸ் கட்டுவது என  இருவரும் பகிர்ந்து செய்யலாம்.

ஜென்டில்மேன்/ ஜென்டில் உமன் அக்ரீமெண்ட்

ருவர் கோபமாக இருக்கும் சமயத்தில் மற்றவர் பொறுமையாக இருந்தாலே அங்கு சச்சரவிற்கு இடமில்லை. அதீத கோபமாக இருக்கும் நேரங்களில் கண்களை  மூடிக்கொண்டோ, இல்லை வேறு புறம் திரும்பிக்கொண்டோ கத்தாமல், தன் துணையின் முகம் பார்த்து பேச வேண்டும். கோபம் மட்டுப்படும். அதே சமயத்தில் துணைவர்/ துணைவி முகத்தில் ஆத்திரம் காட்டாமல் ஏளனம் இல்லாமல் அமைதியாக வைத்திருக்க வேண்டும். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால் பிரமாதமான பலன்களை தரும். எதிராளியின் கோபம் சட்டென வடிந்துவிடும். பதிலுக்கு பதில் பேசினால்தான் பிரச்சனை? பின்பு அவர் சகஜமான மனநிலையில் இருக்கும்போது ‘’அப்போ கோபத்தில் அப்படிப் பேசினாயே/ பேசினீங்களே’’ என இதமாக சொல்ல வேண்டும் இடித்துரைத்து அல்ல. யார் மீது தவறோ அவர் தயங்காமல் சாரி சொல்லி சமாதானத்திற்கு வழி தேடவேண்டும்.

செல்லப் பெயர் வைத்து அழையுங்கள்

சிலர் ஃபோனில் ‘ஃவைப், ஹஸ்பண்ட் என்று பெயர் கூட போடாமல் சேமித்து வைப்பார்கள். இருவரும் ஒரு பிரத்தியேகமான செல்லப் பெயர் வைத்து அழையுங்கள். இது திருமணமான இளம் தம்பதிகளுக்கு மட்டுமல்ல எந்த வயதிலும் செல்லப் பெயர் வைத்து அழைக்கலாம். அன்பிற்கு வயது ஒரு பொருட்டல்ல.

காதுகளையும், மனதையும் திறந்து வையுங்கள்

துணைவரோ துணைவியோ ஏதாவது பேச வந்தால் அதை முழுமனத்தோடு காது கொடுத்துக் கேளுங்கள். மனதில் இருப்பதை வெளியே கொட்டி விட்டாலே மன உளைச்சலில் பாதி சரியாகிவிடும். உடன் பணிபுரியும் நண்பர்களிடம் கூட சில அலுவலகத்துப் பிரச்சினைகளை சொல்ல முடியாது. அவற்றை தன் துணையிடம் பகிர்ந்து கொண்டால் மனச்சுமை குறையும். அது மிகப் பெரிய பலம் தரும்.

சின்னச் சின்ன பாராட்டு; பெரிய அன்பு

அடிக்கடி சின்ன சின்னதாக பாராட்டுங்கள். முக்கியமாக உடை அலங்காரத்தை, ‘’இந்த ஷர்ட் க்யூட்டா இருக்கு உங்களுக்கு, இந்த சுடிதார் உனக்கு சூப்பரா இருக்கு, இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு, அருமையா டிரைவ் பண்றீங்க, சாம்பார் தூள்’’ இது போல சின்ன சின்ன வாக்கியங்கள், பெரிய அளவில் துணையின் அன்பை ஈட்டித்தரும்.

விவாதம் செய்யுங்கள்

ம்பதியர் இருவரும் விவாதம் செய்யுங்கள். அரசியல், புத்தகம், சமூகம் இவற்றை அலசி ஆராயுங்கள், பொதுவாக இவற்றை நண்பர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வார்கள். தன் வாழ்க்கைத் துணையே தனக்கு சிறந்த நண்பன் எனக் கருதி இந்த விஷயங்களை அலசி ஆராயும் போது ஒரு அருமையான நட்புணர்வு தோன்றும். உங்களுடைய முன்னேற்றத்தின் மீது பொறாமைப்படாத ஒரே ஜீவன் வாழ்க்கை துணை மட்டுமே. என்ன தான் நெருங்கிய நண்பர் என்றாலும், அவர் 100% உங்களுடைய முன்னேற்றத்தைப்  பார்த்து சந்தோஷப்படுவார் என்று சொல்ல முடியாது. பொறாமைப்படாத ஒரே ஜீவன் நம் பெற்றோர்களுக்குப் பிறகு நம் வாழ்க்கைத் துணை தான்.

ரியல் ஹீரோ, ஹீரோயின்

ம் தமிழ் சீரியல்களில், பெண்களை குறிப்பாக மனைவியை, வில்லியாகவும் கணவனைக் காமெடியனாகவும் சித்தரித்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஒரு பெண்ணின் ஆதர்ச ரியல் ஹீரோ அவள் கணவனாகவும், ஆணின் ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோயினாக மனைவியுமே இருந்தால் வாழ்க்கை எப்போதும் இன்பமயம் தான். ஒருவரின் உணர்வுகளை மதித்து நடப்பது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, அவரவர் பிடித்ததை செய்ய அனுமதிப்பது இனிய இல்லறத்துக்கு வழிவகுக்கும். என்ன தான் கணவன் மனைவியே ஆனாலும் 100% அவரை புரிந்துகொண்டு நடப்பது என்பது இயலாத, தேவையில்லாத வேலை. அவரை அவரின் குறைகளுடன் மனதார ஏற்றுக்கொள்ளவதே புத்திசாலித்தனம். எட்டு மணி நேரம் உடன் பணிபுரியும் நபர்களுடன் இதமாக பழகத் தெரிந்த நமக்கு, நம் வாழ்க்கை முழுக்க கூட வரும் துணையிடம் இதமாக, இனிமையாக பழகுவது கஷ்டமா என்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com