
தமிழ் இலக்கியத்தில் வரலாற்றுப் புதினங்களுக்கு சிறப்பிடம் பெற்றுத் தந்த அமரர் கல்கியின் பிறந்த தினம் செப்டம்பர் 9ஆம் தேதி.
தேசவிடுதலைப் போரில் பங்குபெற பள்ளிப் படிப்பை பாதியிலே துறந்தார். முதலில் ‘நவசக்தி’ என்னும் பத்திரிகையில் பணியாற்றிய கல்கி பின்னர் ‘ஆனந்தவிகடன்’ வார இதழுக்கு ஆசிரியரானார். தன்னுடைய நகைச்சுவையும் நையாண்டியும் கொண்ட எளிமையான நடையால், தமிழில் பொழுதுபோக்கு வாசிப்பை ஒரு இயக்கமாகவே மாற்றினார். அவருடன் தேவன், துமிலன், மாயாவி என்று ஒரு எழுத்தாளர் வட்டமே உருவானது. திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம், பொதுக் கட்டுரைகள், சிறுகதை, நாவல் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்தார். 1941ஆம் வருடம் கல்கி, சதாசிவமுடன் சேர்ந்து ‘கல்கி’ வார இதழ் தொடங்கினார். நா.பார்த்தசாரதி, ர.சு.நல்லபெருமாள், பிவிஆர் போன்றவர்கள் கல்கி மூலமாக உருவான எழுத்தாளர்கள். (இன்னும் நிறைய பேர் இப்பட்டியலில் உண்டு.)
திரை விமர்சனங்கள், கர்நாடகம் என்னும் பெயரில் இசை விமர்சனங்கள், அரசியல் கட்டுரைகள், தலையங்கம் என்று ‘கல்கி’ பத்திரிகையின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் கைவண்ணம் இருந்தது. ‘மனோகரா’ படத்திற்கு அவர் எழுதிய விமர்சனத்தில் ‘கலைஞரின் வசனத்தால் சிவாஜியின் நடிப்பு சிறக்கிறதா? சிவாஜியின் நடிப்பால் கலைஞர் வசனம் ஜொலிக்கிறதா?’ என்ற பொருள்பட எழுதியிருந்தார். (அவர் எழுதிய வரிகள் என் நினைவில் இல்லை). அதுபோல ‘சாம்சன் அண்ட் டிலைலா’ ஆங்கிலப் படத்திற்கு அவர் எழுதிய நையாண்டி விமர்சனம் ரசிக்கும்படி இருந்தது.
மாம்பழத்தை துண்டு துண்டாக நறுக்கிச் சாப்பிட்டாலும், முழு மாம்பழமாக சாப்பிட்டாலும், மிக்ஸியில் அரைத்து மாம்பழ ஜூஸாக சாப்பிட்டாலும், அதனுடைய சுவை அலாதியானது. அதைப் போலத்தான் கல்கி அவர்களின் படைப்புகளும்.
சிறுகதைகள் எழுதுவது எப்படி என்று அறிந்துகொள்ள கல்கியின் சிறுகதைகளைப் படிக்க வேண்டும். இலஞ்சம் வாங்க மறுக்கும் இளைஞனின் கதை ‘புது ஒவர்சியர்’, ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க சமூக சேவை செய்யும் இளைஞர்கள் கொண்ட ‘கணையாழியின் கனவு’, உயர்ந்த பதவியில் இருப்பவர் கண்பார்வை நம் மீது விழாதா என்று ஏங்கும் நபர்களைப் பற்றிய ‘கவர்னர் விஜயம்’ என்று யதார்த்தமும் நகைச்சுவையும் நிறைந்தவை அவரது சிறுகதைகள்.
சமூகக் கதைகளில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘அலைஓசை’, சுதந்திர போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. இந்த நாவல் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
சுதந்திர காலத்தின் காந்திய தத்துவங்கள், மதுவிலக்கு கொள்கைகள் வலியுறுத்தி எழுதிய நாவல் ‘தியாக பூமி’. இந்த நாவல் திரைப்படமாக வந்தபோது அரசினால் தடை செய்யப்பட்டது.
வரலாற்றுப் புதினத்தில் முத்திரை பதித்தார் கல்கி. அவர் எழுதிய வரலாற்று நாவல்களைப் படித்தவர்கள், அந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சியைப் படிக்கிறோம் என்றில்லாமல், அந்தக் கதையுடன் ஒன்றிப் போகும்படி எழுதியது கல்கியின் சிறப்பு எனச் சொல்லலாம். மகேந்திரவர்ம பல்லவன் காலத்தை ஒட்டி உருவாக்கிய ‘பார்த்திபன் கனவு’ வலிமையான சோழ சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்ற பார்த்திப சோழனின் ஆசையைப் பற்றியது. இதற்கு அடுத்து அவர் எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ வரலாற்றை ஒட்டியது. ஆனால், இந்தக் கதையின் நாயகியான ஆயனச் சிற்பியின் மகளே ஒரு கற்பனைப் பாத்திரம். ஒரு சாமானியப் பெண்ணிற்கும், இளவரசனுக்கும் இடையேயான காதல் கதை. இது ஒரு அற்புதப் படைப்பு. இதற்கு அப்புறம் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ தமிழில் வந்த வரலாற்றுப் புதினத்தில் முதன்மையானது என்று சொல்லலாம்.
கல்கி அவர்கள் தமிழ் இசைக்கு செய்த தொண்டு மகத்தானது. கர்நாடக கச்சேரிகளில் சமஸ்கிருதம், மற்றும் தியாகராஜர் பாடல்கள் கோலோச்சி வந்த நாட்களில் தமிழ் பாட்டுகள் பாடப் பட வேண்டும் என்று தமிழிசைக்காகப் பாடுபட்டார். அதற்காக, ‘தமிழிசைச் சங்கம்’ அமைக்க முன்னோடியாகத் திகழ்ந்தார். மீரா திரைப்படத்தில் கல்கி அவர்கள் எழுதிய பாடல்கள் அற்புதமானவை.
‘காற்றினிலே வரும் கீதம்’, ‘கண்டதுண்டோ கண்ணன் போல்’, ‘மாலைப் பொழுதினிலே...’ எளிமையான கருத்தாழம் மிகுந்த சொல்லாடல் இந்தப் பாடல்களில்.
1999ஆம் வருடம் அவரது நூற்றாண்டினை ஒட்டி, இந்திய அரசு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கெளரவித்தது.