30 ஆண்டுகாலத்துக்கு சம்பளமே இல்லாமல் வாழநேரிடும்!

எதிர் காலம் எப்படியிருக்கும்? எச்சரிக்கை மணி
கொரோனா தொற்றை தொடர்ந்து எழுந்த உக்ரைன் போரால் முன்னெப்போதும் இல்லாத நிலையில் உலகப் பொருளாதார நிலையில் ஒரு மந்த நிலை நிலவி வருகிறது. உலகின் பல நாடுகளில் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலை சாமானியனின் எதிர்காலம் குறித்த பல அச்சங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறது.
பணியிழப்புகள்
உலகெங்கும் பெரும் நிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள நஷ்டங்களை குறைக்க ஆள் குறைப்பு செய்ய ஆரம்பித்துவிட்டது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம், அதைத் தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் நீண்டகால பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் தயக்கம், நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் செய்த நிர்வாகத் தவறுகள் எனப் பல காரணிகளும் சேர்ந்துதான் இந்த சூழ்நிலைக்கு காரணம் என்கின்றனர்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியபிறகு சுமார் 50% பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார். ஒவ்வொருநாளும் 4 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ட்விட்டர் நஷ்டமடையும் நிலையில் இந்த முடிவைத் தவிர்க்க முடியவில்லை என்பது அவர் சொல்லும் காரணம்.
இப்படிப்பட்ட பணியிழப்புகள் ட்விட்டரில் மட்டுமல்ல; பிற நிறுவனங்களிலும் நடந்துவருகின்றன. சர்வதேச Fintech நிறுவனமான ஸ்ட்ரைப் (Stripe) 1,120 (14%) ஊழியர்களை கடந்தவாரம் பணிநீக்கம் செய்திருக்கிறது. முன்னணி டெக் நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், அமேசான், மெட்டா ஆகிய நிறுவனங்கள் புதிதாகப் பணியாளர்களை எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

இந்தியாவில் என்ன நிலவரம்?
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தில் அனைவரையும் அலுவலகம் வரவேண்டாம். வீட்டில் இருங்கள், பிறகு அழைப்போம் என்று அறிவித்துவிட்டது.
இந்தியாவில் இந்த வருடம் ஓலா, மீஷோ, அன்அகாடமி, பைஜூஸ், வேதாந்தா உள்ளிட்ட 44 முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 15,200+ பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளன. உதாரணமாக, இந்தாண்டு ஜனவரி மாதம் 4.6 பில்லியன் டாலர்கள் முதலீடு திரட்டிய இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், செப்டம்பரில் வெறும் 0.8 மில்லியன் டாலர்கள் மட்டுமே புதிய முதலீடு திரட்டியுள்ளன.
சம்பளமே இல்லாமல் வாழ நேரிடும்
உலக பொருளாதார நிலையை உற்று நோக்கி அறிக்கைகளை தரும் உலக நிதியாணையம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இன்றைய மில்லினியல் இளைஞர்கள் கவனத்தில் கொள்ளாத முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைக்கு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது வேகமாகக் குறைந்துவருகிறது. இன்னொருபுறம் மருத்துவ வளர்ச்சியின் காரணமாக, நம் வாழ்நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் 20 வருடங்களில் ஓய்வுபெறும் வயது என்பது 50 ஆகவும், நம் சராசரி ஆயுள்காலம் 80 ஆகவும் மாறலாம். அப்போது சுமார் 30 ஆண்டுகாலத்திற்கு ஒருவர் சம்பளமே இன்றி வாழ நேரிடும். இந்த Retirement Crisis-தான் இன்னும் 25 ஆண்டுகாலத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்” என்கிறது.
நிறுவனங்களாக ஓய்வுக்காலத்தை குறைப்பது இருக்கட்டும்; உலகம் முழுக்க இன்றைய இளைஞர்களே தங்கள் பணிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெற விரும்புகிறார்கள். FIRE (Financial Independence, Retire Early) என்ற பதம் அவர்கள் மத்தியில் இப்போதே ட்ரெண்டிங்கான ஒன்றாக இருக்கிறது. “இன்று நாம் நிறைய சம்பாதிக்கிறோம்... சேமிக்கிறோம்... அது போதும் நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்கு” என்ற எண்ணம் பரவலாகிக்கொண்டிருக்கிறது.
“ஒருவரின் பணி ஓய்வின் போது அதிகத் தொகை சேமிப்பாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து உயரும் விலைவாசி உயர்வு மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளைத் தாண்டி ஒளிமயமான ஓய்வுக் காலத்தை அனுபவிக்க முடியும். அதற்கு எவ்வளவு தேவை என்பதை சரியாகத் திட்டமிடாமல் இன்றைய இளைஞர்கள் முடிவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இது பெரிய ஆபத்தில் முடியும்” என்கிறார் திலிப் குமார் என்ற நிதி ஆலோசகர். அவருடைய கணக்கீடுகளின்படி பணி ஓய்வு தொடங்கிய முதல் ஆண்டில் செலவுக்கு எவ்வளவு தொகை தேவையோ, அதனைப் போல் 25 மடங்கு தொகை, தொகுப்பு நிதியாக ஒருவரிடம் சேர்ந்துவிட்டால், அவர் தாராளமாக முன் கூட்டியே பணி ஓய்வு பெறலாம் என்கிறார்.
பொதுவாக, சம்பளத்தில் / வருமானத்தில் 10% முதல் 30% வரை ஓய்வுக் காலத்துக்கு என முதலீடு செய்து வர வேண்டும். ஆனால், முன்கூட்டியே இளம் வயதில் பணி ஓய்வு பெறத் திட்டமிட்டால், சுமார் 50% முதல் 60% வரை சேமிப்பு மற்றும் முதலீடாக இருக்க வேண்டும். சம்பளம் / வருமானத்தில் எந்தளவுக்கு அதிகமாக சேமிக்கிறோமோ அந்த அளவுக்கு சீக்கிரமாக பணி ஓய்வு பெற முடியும் என்கிறார் இவர். ஆனால் இது இந்தியாவில் சாத்தியமா? என்பது மிகப்பெரிய கேள்வி.
சரியாக திட்டமிட்டால் சாத்தியமே
திட்டமிட்டால் சாத்தியமே என்கிறார் vbuildwealth நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.விஜயகுமார். சுமார் 25 வயதில் வேலைக்கு சேர்ந்து 45, 50 வயதில் பணி ஓய்வுப் பெற திட்டமிடுவது நல்லதுதான். ஆனால், அதற்கான முதலீட்டுத் திட்டத்தையும் இளமையிலேயே ஆரம்பித்து விடுவது அவசியமாகும். இந்த ₹1.5 கோடி, ₹2.35 கோடி போன்ற எண்களெல்லாம் பார்க்க மலைப்பாக இருந்தாலும், சரியாகத் திட்டமிட்டால், எளிதாக சேர்த்துவிடலாம். “திட்டமிட நல்ல நிதி ஆலோசகர்களை அணுகுங்கள்” என்கிறார்.