நவம்பர் (NOVEMBER)   மாதத்தினை  MOVEMBER  மாதமாக்கி....
ஒரு மகத்தான சேவை....!!!

நவம்பர் (NOVEMBER)   மாதத்தினை  MOVEMBER  மாதமாக்கி.... ஒரு மகத்தான சேவை....!!!

மக்கெல்லாம் அது நவம்பர் மாதம். ஆஸ்திரேலியா உட்பட சில வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சேவையாளர்களுக்கு அது MOVEMBER மாதம். பொதுவாக வெளிநாடுகளில் பெரும்பாலான ஆண்கள் எப்போதும் முகத்தில் மீசை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள். இந்த நவம்பர் இல்லை... இல்லை... இந்த மொவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட சேவையில் உள்ள ஆண்கள் மட்டும் முகச்சவரம் செய்து கொள்ளாமல் முகத்தில் மீசை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்த ஒரு மாதம் கழித்தே முகச்சவரம் செய்து கொள்கிறார்கள். அப்படியானால் அந்த ஒரு மாதம் முகச்சவரம் செய்து கொள்ளும் பணம் மிச்சம்தானே? அப்படி இல்லை என்கிறார் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று ஆறு ஆண்டுகளாக வசித்து வரும் சபரி கிரீஷ். நாம் அவரிடம் அலைபேசியில் பேசினோம்.

•• ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் தவிர்த்து, இந்த ஒரு மாதம் மட்டும் அதாவது “நவம்பரில் மீசை” என்பது அவர்களது சேவை திட்டச் செயல்பாடு. அங்கு மீசையினை MOUSTACHE மொஸ்டேஷ் என்கின்றனர். MOUSTACHE என்பதை “MO” ஆக்கி, NOVEMBER என்பதை VEMBER ஆக்கி, இரண்டையும் சேர்த்து “MOVEMBER” ஆக்கியிருக்கிறார்கள். இது ஓர் இயக்கமாகவே நடைபெற்று வருகிறது. அவர்களது நோக்கம்தான் என்ன?

•• புற்று நோயின் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தலைமுடி இழப்பு ஏற்படுவது இயற்கை. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வினை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்த துவங்கப்பட்டதே மொவம்பர் இயக்கம். இது ஆண்டுக்கொருமுறை நவம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்படும் நிகழ்வு. இந்த அமைப்பில் இணைந்திருக்கும் ஆண்கள் நவம்பர் மாதத்தில் முகச்சவரம் செய்யாமல் முடி வளர்த்து, அதற்கான பணத்தினை மொவம்பர் அமைப்புக்கு நன்கொடையாகக் கொடுக்கிறார்கள். இந்த இயக்கம் முதலில் எங்கு துவங்கப்பட்டது?

•• தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரத்தில் 1999ல் சில இளைஞர்கள் ஒன்று கூடி நவம்பர் மாதத்தினை MOVEMBAR என்று அறிவித்து, அந்த மாதத்தில் ஆண்கள் மீசை வளர்க்கும் யோசனையை தெரிவிக்கிறார்கள். MOVEMBAR FOUNDATION என்கிற அமைப்பினை உருவாக்குகிறார்கள்.

•• ஆண்டுதோறும் மொவம்பர் மாதத்துக்குப் பின் இந்த அமைப்புக்கு வந்து சேரும் நன்கொடை தொகையினைக் கொண்டு, இளைஞர்களுக்குப் புற்று நோய் பரிசோதனை நடத்தி, அதன் பின்னர் அதற்கான மிகச் சிறந்த சிகிச்சைகளையும் மேற்கொண்டு, இளம் வயதில் புற்று நோய் மரணத்தை தடுப்பதே அந்த அமைப்பின் நோக்கம் ஆகும்.

•• 1999ல் தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் எண்பது நபர்களுடன் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. அப்போது நாடு முழுவதும் பேசப்பட்டது. புற்றுநோய் ஏற்படுத்தும் முடி உதிர்தலை மனதில் வைத்து “முடிக்காக முடி வளர்ப்போம்” என்கிற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் தயாரித்து விற்பனை செய்து நிதி திரட்டினார்கள்.

•• 2௦௦3ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இரண்டு நண்பர்கள் சந்தித்து இது குறித்துப் பேசுகிறார்கள். முப்பது நபர்கள் அவர்களுடன் கரம் கோர்க்கிறார்கள். முகச்சவரம் செய்யாமல் மீசை வளர்த்து, சேமிக்கும் பணத்தைத் திரட்டி மொவம்பர் அமைப்புக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

•• ப்ரோஸ்டேட் கேன்சர், டெஸ்டிகுலர் கேன்சர், மன நோய், உடல் ஊனம் போன்றவற்றிற்கான சிகிச்சைக்கு உதவுவதே இந்த அமைப்பின் பணிகள் ஆகும்.

•• 2004ல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் செய்தி பரவுகிறது. அந்த ஆண்டு இறுதியில் மொவம்பர் இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 480 ஆக உயர்கிறது. அந்த ஆண்டில் திரட்டப்பட்ட தொகை 54000 டாலர்கள். பெறப்பட்ட தொகை PROSTRATE CANCER FOUNDATION OF AUSTRALIYAவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

•• 2௦௦5ஆம் ஆண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9795 ஆக உயர்கிறது. அந்த ஆண்டில் திரட்டப்பட்ட தொகை 1.2 மில்லியன் டாலர். 2௦௦6ல் MOVEMBER FOUNDATION இயக்கமானது ஆஸ்திரேலியாவின் அங்கீகாரம் பெற்ற தனி அமைப்பாக மாறுகிறது. ஆடம் என்பவரும் லியூக் என்பவரும் அதன் முழு நேர இயக்குநர்களாகப் பொறுப்பு ஏற்கிறார்கள். இந்த அமைப்பு நியூசிலாந்து நாட்டிற்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இரண்டு நாடுகளிலும் சேர்ந்து உறுப்பினர் எண்ணிக்கை 65924 ஆக உயர்கிறது. அப்போது அந்த ஆண்டில் 9.3 மில்லியன் டாலர்கள் திரட்டப்படுகிறது.

•• 2௦௦7ல் பிற நாடுகளுக்கும் பரவுகிறது. இயக்குனர் ஆடம் US சென்று PROSTATE CANCER FOUNDATION உடன் இணைந்தும், கனடாவில் PROSTATE CANCER CANADA என்கிற அமைப்புடன் இணைந்தும் பணியாற்ற ஏற்பாடுகள் செய்கிறார். ஜஸ்டின் என்பவர் UK சென்று THE PROSTATE CANCER CHARITY என்கிற அமைப்புடன் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்கிறார். பின்னர் ஸ்பெயின் நாட்டில் FEFOC அமைப்புடன் இணைந்து செயல்பட முடிவாகிறது. அப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக ஆகிறது. அந்த ஆண்டில் மட்டும் 21.5 மில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டது.

•• 2008ல் அயர்லாந்தில் IRISH CANCER SOCIETYயுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. 2௦16 இறுதியில் இருந்து ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஹாங்காங், ஜெர்மனி, அயர்லெந்து, நெதர்லேந்து, நார்வே, சிங்கப்பூர், தென் ஆப்பிரிகா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய இருபத்தியொரு நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து சேவையாற்றி வருகிறது.

•• கடந்த 2௦21ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின், அந்த ஆண்டு நிதி மட்டும் உலக அளவில் 121 மில்லியன் டாலர் தொகை திரட்டப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com