முருகனின் அருள் பெற்ற முத்துசுவாமி

இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் 1776 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் திருவாரூரில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி தீட்சிதர், தாயார் சுப்புலட்சுமி. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகப்பெருமனின் திருநாமம் முத்துக்குமாரசுவாமி. அவருடைய அருளால் பிறந்த குழந்தை என்பதால் முத்துசுவாமி என பெற்றோர் பெயரிட்டனர்.
இவர் தன் தந்தையைப் போலவே வேதங்களிலும் மந்திர ஜபங்களிலும் சகல சாஸ்திரங்களிலும் வல்லவராக இருந்தார். தந்தையே இவருக்கு முதல் குரு. இனிமையாகப் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் தனித் திறமையுடன் விளங்கினார். சிதம்பரநாத யோகி என்பவரிடம் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை தீட்சையாகப் பெற்று, தினமும் உச்சாடனம் செய்து வந்தார். பிறகு தன் குருவுடனேயே காசிக்குச் சென்றார். அங்கே கங்கை நதியில் இவருக்கு ஒரு வீணை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. காசியில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் பயின்றார்.
காசியிலிருந்து திரும்பி குருவின் உத்தரவுப்படி திருத்தணி சென்று முருகப்பெருமானை தரிசித்தார். திருத்தணி மலையேறும்போது ஒரு கிழவர் எதிரில் வந்தார். முத்துசாமியை வாயைத் திறக்கச் சொல்லி, கற்கண்டை ஊட்டி விட்டு உடனேயே மயில் வாகனத்தில் இருக்கும் முருகப்பெருமானாகக் காட்சியளித்தார். திருத்தணி முருகனை கண் குளிர தரிசித்தார் முத்துசுவாமி தீட்சிதர். இந்த தரிசனத்திற்குப் பின் மாயா மாளவ கௌளயில் தன்னுடைய முதல் கிருதியை இயற்றினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைக¬ளை இயற்றினார். அவருடைய பாடல்களில் அவருடைய முத்திரையாக இறுதியில் குருகுஹ என்னும் வார்த்தை வரும். இவர் இயற்றிய 'வாதாபி கணபதிம் பஜே' என்னும் ஹம்சத்வனி ராகப் பாடல் மிகச் சிறந்த பாடலாக அவர் காலத்திலேயே புகழ் பெற்றது. இன்றும் சங்கீத வித்வான்களால் தங்கள் கச்சேரியில் தொடக்கப் பாடலாகப் பாடப்பெறும் பெருமை பெற்று விளங்குகிறது.
முத்துசுவாமி தீட்சிதர் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஒரு பாடலை இயற்றினார் 'ஸ்ரீ காந்திமதிம் சங்கர யுவதிம்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் அபூர்வ ராகத்தில் அமைந்த அபூர்வப் பாடலாகக் கருதப்படுகிறது. இவர் எண்ணற்ற கிருதிகளை இயற்றியபோதிலும், அவற்றுள் கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம், சிவ நவா வர்ணம், நவக்கிரகக் கிருதிகள் இன்றைக்கும் எல்லா வித்வான்களாலும் பாடப்பெற்று இவரின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன. இவர் தன்னுடைய சில கிருதிகளை மணிப்பிரவாளமாக தமிழும் சமஸ்கிருதமும் கலந்தும் இயற்றினார். அவருடைய படைப்பாற்றல் காரணமாக தன்னுடைய சமகாலத்தவர்களான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ ஷ்யாமா சாஸ்த்ரிகளுடன் சேர்த்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரகப் போற்றி வணங்கப்படுகிறார்.
இவர் எட்டையபுரத்தில் தன் கடைசி காலத்தில் வசித்தபோது அங்கு கடுமையான வறட்சி நிலவியது. அவர் உடனே அமிர்தவர்ஷிணி ராகத்தில் அம்பிகை மீது 'ஆனந்தாமிர்தகர்ஷினி' என்னும் கிருதியைப் பாடி மழை பொழிய வைத்தார். இவர் காலத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதம் இது. எண்ணற்ற மக்கள் பார்த்து அதிசயித்து ஆனந்தித்த காட்சி.

இவ சிவன் மீது பாடிய 'ஸ்ரீ விஸ்வநாதம்' என்னும் கிருதி இவருடைய கிருதிகளுக்கெல்லாம் சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு ஒரே பாட்டில் சிவனின் பெருமைகளை விளக்கும் வண்ணமாக அந்த கிருதி அமைந்துள்ளது.
தன் இள வயதில் மதராஸுக்கு வந்த தீட்சிதர் மேற்கத்திய சங்கீதத்தையும் கற்றுக் கொண்டார். இவர் தாளங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். மேற்கத்திய பாணியில் இவர் இயற்றிய 'நொட்டுஸ்வரங்கள்' பெரும்பாலும் சங்கராபரணம் ராகத்தில் அமைந்தவை, துள்ளல் நடையில் கேட்போரை நடனமாடத் தூண்டும் தாளக்கட்டில் அமைந்துள்ளவை. கர்நாடக சங்கீதம் கற்பவர்கள் ஆரம்ப காலத்தில் கற்கும் 'சக்தி சஹித கணபதிம்' போன்ற கீதங்களும் இவராலேயே இயற்றப்பட்டு புகழ் பெற்றுள்ளன.
1976 ஆம் ஆண்டு இந்திய அரசு முத்துசாமி தீட்சிதரின் உருவப்படம் பொறித்த தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவித்தது. அரிதான அதிகம் பாடப்படாத ராகங்களில் கூட பாடல்கள் இயற்றயுள்ளார்.
பங்குனி மாத கிருத்திகை நட்சத்திரம் நேற்று (26-03-2023) ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் ஜயந்தித் திருநாள். இசை ரசிகர்களாலும், வித்வான்களாலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இவர் தன்னுடைய 60வது வயதில் 1835 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார்.