புதிய தரிசனம்... பூக்கடை அக்கா!

புதிய தரிசனம்... பூக்கடை அக்கா!

ரியல் லைஃப் ஸ்டோரி!

வாவின் நிறுத்தத்தில் இருந்து திருமங்கலம் சிக்னல் செல்லும் சாலையில் வலது புறம் வேவ்ஸ் மற்றும் ஃபேஷன் லுக் கடைகளின் அருகில் ஒரு பேக்கரியும் அதன் மாடியில் ஒரு ஃபேன்ஸி டிரஸ் கடையும் இருக்கிறது. அந்தக் கடையில் நமக்கு ஒரு வேலையும் கிடையாது. கடைக்கு முன்னால் ஒரு அக்கா பூக்கடை வைத்திருக்கிறார். அவரைப் பற்றித்தான் இப்போது பேசப்போகிறோம்.

அவரது பெயரைக்கூட கேட்டுக்கொள்ளவில்லை நான். என் மகளுக்கு மல்லிப்பூவின் நடுவில் குட்டிக் குட்டியாக ரோஜாப்பூ வைத்துக் கட்டியிருந்தால் அதை தலையில் சூடிக்கொள்ள ரொம்பப் பிடிக்கும். நாங்கள் வசிக்கும் பகுதியில் அப்படிக் கட்டிய மல்லிச்சரம் பெரும்பாலும் கிடைக்காது. மறுநாள், பள்ளியில் ஒரு ஃபேன்ஸி டிரஸ் போட்டி இருந்தது, அதற்காக மோகினி ஆட்டம் டிரஸ் செட் வாங்கிக் கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் போது அந்த அக்கா, வாலண்டியராக...

“வாங்க மேடம், பூ வாங்கி வச்சுக்கோங்க மேடம் வாங்க மேடம்” என்று அழைத்தார்.

அவருக்கு முன்னால் இருந்த டேபிளை எட்டிப்பார்த்தேன். அதில் ஜாதி மல்லியும், பிச்சிப்பூவும், ரோஜா கலந்து கட்டிய மல்லிச்சரமும் பந்துகளாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

சரி, வாங்கினால் ஆச்சு என்று “முழம் எவ்வளவும்மா” என்றேன்.

“முஹூர்த்த நாள் இல்லைங்களே மேடம், அதனால மொழம் இருபது தான், வாங்கிக்கோங்க” என்றார்.

“சரி, இதுல ஒரு ரெண்டு முழம் தாங்க” என்று ரோஜா கலந்த மல்லிச்சரத்தை கை காட்டினேன்.

“மேடம் நீங்க வச்சுக்கிட வேணாமா? உங்களுக்கு தனியா ரெண்டு முழம் தர்றேனே” என்று என் முகம் பார்த்தார்.

“இல்லைங்கம்மா, எனக்கு இப்ப தேவைப்படாது, இது எம்பொண்ணுக்கு” என்றேன்.

அவர் என்னை கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்து விட்டு,

“அய்யே... சும்மா வச்சிக்கிங்க மேடம். பூ வேண்டாம்னு சொல்லாதீங்க, இந்த ஒரு முழத்துக்கு எனக்கு காசு கூட வேண்டாம்” - என்று பேசிக்கொண்டே ஒரு முழத்தை நறுக்கிக் கையில் திணித்தார்.

நான் அவரை அமைதியாகப் பார்த்து விட்டு, “ம்மா, அதையும் கவர்ல போட்டே கொடுத்துடுங்க, நான் இப்ப இதை வச்சிக்கிட்டா வேஸ்ட்டாத்தான் போகும், இப்ப வீட்டுக்குப் போனதும் உடனே கூந்தலை சுருட்டி மடக்கி தூக்கிக் கொண்டையா போட்டுப்பேன்.” - என்றேன்.

அவர் என் பேச்சை செவி மடுப்பதாக இல்லை. “இருங்க மேடம், இந்தப்பூ கொஞ்சம் வாடிப்போச்சுன்னு நீங்க வச்சிக்கிட யோசிக்கிறீங்க போல, இந்தா என் வீடு இந்த சந்துக்குள்ள தான். தோ, என் வீட்டுக்காரர் ஃப்ரெஷ்ஷா இப்பக் கட்டுன மல்லிச்சரம் எடுத்தாற போயிருக்கார். அதுல இருந்து உங்களுக்கு நறுக்கித் தரேன்.” என்றார் பிடிவாதமாக.

அதற்குள் பக்கத்துக் கடையில் சப்போட்டா வாங்கப் போயிருந்த என் கணவர் “என்னம்மா, கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டு பக்கத்தில் வந்து விட்டிருந்தார்.

“ஒரு நிமிஷம் இருங்க, பாப்பாவுக்கு பிடிக்கும்னு பூ வாங்கறதுக்காக நிக்கறேன். இது வாடி இருக்காம், வேற ஃப்ரெஷ்ஷா எடுத்துட்டு வரப்போயிருக்காங்க , இதோ... இங்க பக்கத்துல தாங்க, இருங்க வந்துரட்டும்” என்றேன்.

அவர் “ விடு, நீ பொறுமையா வாங்கிட்டு சொல்லு வரேன்” என்று அடுத்தபடியாக பலாப்பழம் வாங்கப் போய் விட்டார்.

நான் அங்கு நின்று பூ வருவதற்காகக் காத்திருந்தேன்.

அந்த பூக்கார அக்கா என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். “பொண்ணு என்ன படிக்குதுங்க மேடம்” என்றார்.

“சிக்ஸ்த் படிக்கிறா” என்றேன்.

“அப்டிங்களா, சரிங்க” என்று விட்டு அவர் தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

“எனக்கு ரெண்டு பசங்க மேடம்... என் பசங்க கூட நல்லா படிப்பாங்க” என்றார்.

நான், “ஓ, அப்படியா? என்ன படிக்கிறாங்க ரெண்டு பேரும்” என்று பேச்சைத் தொடர்ந்தேன்.

“மூத்தவன் டிப்ளமோ முடிச்சிட்டு மெக்கானிக்கல் எஞ்சினியரா வேலை பார்க்கறான். ரெண்டாமவன் பிளஸ்டூ முடிச்சிட்டு அப்படியே சி ஏ (CA) எழுதறானுங்க. மொதப்பரீட்சை (ஃபவுண்டேஷன்) நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணி முடிச்சிட்டான். ரெண்டாம் பரீட்சையும் நல்ல படியா பாஸ் பண்ணிட்டான் (இண்டர்மீடியட்), இப்ப இந்தா பக்கத்துல இருக்க ஆடிட்டார் ஆஃபீஸ்ல வேலைக்குப் போயிக்கிட்டே கடைசிப் பரீட்சைக்கு தயார் பண்ணிக்கிட்டு இருக்கான். எம் பையன் ரொம்ப நல்லா படிப்பானுங்க. அவனுக்காகத் தான் நாங்க இங்க மெட்ராஸுக்கு வந்ததே”

- என்றார்.

எனக்கு அந்தம்மாவின் பேச்சு ஈர்க்கவே...

“பரவாயில்லையேங்க, நல்ல பொறுப்பான பையன் தான். ரெண்டு எக்ஸாம் பாஸ் பண்ணிருக்கான்னா ஹார்ட் வொர்க் பண்ணிருப்பான்” என்றேன் ஆறுதலாக.

அவர் மீண்டும் பேச்சை நீட்டித்தார்;

“மேடம் நானும், எங்க வீட்டுக்காரரும் அவ்வளவா படிக்கலைங்க, பொழப்புக்காக ரொம்பக் கஷ்டப்பட்டோம். இப்பவும் பட்டுக்கிட்டு இருக்கோம். தோ பாருங்க, முஹூர்த்த நாளுங்கன்னா எல்லாப்பூவும் வித்துப்புடும். இந்த மாதிரி சாதாரண நாளுகள்ல பூ அப்படியே விக்காம தங்கிடும். வித்தா தானுங்களே பணம் கிடைக்கும். ஏதோ எங்க வீட்டுக்காரர் ஒரு ஸ்வீட் கடையில சூப்பர்வைஸரா இருக்காரு அதுல வர்ற வருமானமும், பூ விக்கற வருமானமும் வச்சு தான் வாயக் கட்டி வயித்தக் கட்டி சிக்கனமா இருந்து எம்மகனுங்கள படிக்க வைக்கிறோம். அவங்களுக்கும் அது புரிஞ்சு தான் நல்லா படிச்சானுங்க.

எம் மவன் ராத்திரி எல்லாம் உட்கார்ந்து உட்கார்ந்து படிப்பான். படிக்கும் போதே சொல்லுவான், ம்மா, நீ ராத்திரி பகல்னு பார்க்காம பூ கட்டி விக்கற, உன் கஷ்டத்த தீர்க்கற மாதிரி நான் நல்ல கம்பெனியில வேலைக்குச் சேருவேன். அதுக்கு ஏத்த மாதிரி நல்லா படிப்பேம்மான்னு சொல்லுவான். எங்க ஊரு ராசிபுரம்ங்க, அங்க தான் என் பையன் பிளஸ்டூ படிச்சான். அவன் தான் ஸ்கூல் பர்ஸ்டு. அவன் மேற்கொண்டு சி ஏ படிக்கறதுக்காகவே நாங்க இங்க வந்தோம். அவன் ஸ்கூல்ல டீச்சர்ஸ் சொன்னாங்க, மெட்ராஸ்க்குப் போங்க அங்க போனா சிஏ க்கு நல்ல கோச்சிங் கிடைக்கும்னு, அவங்க சொன்னாமாதிரியே செய்தோம், இந்தா முடியப்போகுது கோர்ஸு. கடைசிப் பரீட்சை நல்லபடியா எழுதிட்டான்னா போதும், பாஸ் பண்ணா மட்டும் பத்தாது மேடம், அதென்னாவோ பிக் ஃபோர் கம்பெனியாம்ல அதுக்கு செலக்ட் ஆகற மாதிரி ரொம்ப நல்ல மார்க் வாங்கனும் அவன்”

- என்று கவலையுடன் முடித்தார்.

நான் அந்த பூக்கார அக்காவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

பூ விற்பவராக இருந்தாலும் சி ஏ பரீட்சை குறித்து நல்ல தெளிவுடன் இருக்கிறாரே என்றிருந்தது.

“உங்க பையன் தான் நல்லா படிக்கிற பையனாச்சே... கவலையே படாதீங்க, நல்ல மார்க்கோட நல்லபடியா பாஸ் பண்ணி வருவான்” என்று புன்னகைத்தேன்.

“ஆமாங்க மேடம்... எனக்கும் நம்பிக்கை இருக்கு, ஆனாலும் பயமாவும் இருக்குங்களே! என்ன செய்ய?!”

“எம்புள்ள சொல்றான், அம்மா நீ பட்ட கஷ்டமெல்லாம் சீக்கிரம் தீர்ந்திடும்னு, கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனாக்க பாருங்க அவன் பெரிய பரீட்சை எழுதப்போறாங்கற பயம் மட்டும் எம்மனச விட்டுப் போக மாட்டேங்குது. அதனால அவனச் சும்மா படி, படின்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். அவன் கொஞ்ச நேரம் ஏதாச்சும் சும்மா இருக்காங்கற மாதிரி எனக்குப் பட்டுச்சுன்னா ஈவு இரக்கமில்லாம நான் கஷ்டப்பட்ட கதை, அவங்கப்பா படிக்காம பட்ட பாடு எல்லாத்தையுஞ்சொல்லி புள்ள மனச நோகப்பண்ணிடுறேன்...

இந்தா பாருடா கண்ணு, நீ இந்தப் பரீட்சையில நல்ல மார்க்குல தேறி வந்து நல்ல கம்பெனியில வேலை கிடைச்சுப் போகனும்னு தான் நாங்க இவ்வளவு பாடுபடறோம்டான்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அவனுக்கே சில நேரம் எரிச்சல் வந்துரும். ஆனா காட்டிக்க மாட்டான், ம்மா, பயப்படாதம்மா, நான் நல்லாத்தான் தயார் பண்ணிருக்கேன். நீ சும்மா பயந்துக்காதன்னு எனக்கு ஆறுதல் சொல்வான்.

ம்ம்...என்னவோ போங்க மேடம், இந்த ஊருக்குப் பிழைக்கனும்னு வந்துட்டோம். வந்தன்னைக்கு இருந்து நித்தமும் பாடு தான். ஆனாலும் நாளைக்கு எல்லாம் மாறிடும்ங்கற நம்பிக்கைய மட்டும் விட்டுடல. அதப் பிடிச்சிக்கிட்டு அப்படியே போய்க்கிட்டு இருக்கோம்.”

கேள்வியும் நானே, பதிலும் நானே ரேஞ்சில் பேசிக்கொண்டே சென்றவரைப் பார்த்து எதுவுமே பேசாது நான் மீண்டும் மனதார புன்னகைத்தேன்.

அவரது ஒளிமயமான எதிர்காலம் என் கண்முன்னே விரிந்தது.

பூக்கடைக்கார அக்கா, ஒருவேளை தான் கடை வைத்திருந்த அதே இடத்தில் தன் மகனது காரில் வந்து இறங்கி அங்கு கடை போட்டிருக்கும் வேறொரு பெண்ணிடம் பூ வாங்கி தலையில் வைத்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து காரிலேறி அதே சாலையில் விரைவது போன்றதொரு கற்பனை வந்து போனது எனக்கு.

அவர் அடுத்துச் சொல்லப்போவதைக் கேட்கத் தயாரானேன்.

அதற்குள், அவர் பேசி நிறுத்திய அந்த இடைவெளியில் அவரது கணவர் பளீரென்ற பவுடர் பூச்சும் சந்தனக் கீற்றுமாய் ஃப்ரெஷ்ஷாக பூப்பந்துகளைக் கொண்டு வந்தார்.

ஸ்வீட் ஸ்டால் சூப்பர்வைஸர்களின் டிரேட் மார்க் தோற்றம்.

கணவரிடமிருந்து பூக்கூடையை வாங்கிக் கொண்டவர் என் பக்கம் திரும்பி; “நம்ம கடைக்கு வாடிக்கையா வாங்க மேடம்” என்றவாறு ரெண்டுமுழம் பூவுக்கு மட்டுமே காசை எடுத்துக் கொண்டு மிச்சப் பணத்தைக் கையில் தந்தார்.

“மூணு முழத்துக்கு எடுத்துங்குங்க” என்றதற்கு...

“அட வச்சிக்கிங்க மேடம், பூவைத் தலையில தான் வையுங்களேன், பின்னூசி வேணும்னாக்கூட நாந்தாரேன்..” - என்று சின்ன ஹேர்ஃபின் ஒன்றையும் நீட்டினார்.

“அட, இப்ப பூவை வச்சுக்கலன்னா விடமாட்டீங்க போல!” என்றவாறு அதை வாங்கி தலையில் சூடிக்கொண்டேன்.

அந்த சிஏ பையன் பச்சை மையில் கையெழுத்துப் போடும் நாள் வெகு சீக்கிரத்தில் வரட்டும் என்று தோன்றியது.

என் பிரார்த்தனைகளில் இப்போது அதுவும் ஒன்றாகி விட்டது.

அந்தப் பூக்கார அக்கா யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவரது பெயர் கூட தெரியாது. கேட்டுக்கொள்ளவும் இல்லை.

ஆனால், தோன்றுகிறதே அவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்க வேண்டுமென்று..

அந்த உணர்வை மதிக்கிறேன்.

இது நேற்றைய புதிய தரிசனம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com