இனி வீடுதோறும் சித்ரவதைக் கூடங்கள்!

இப்போதுதான் பள்ளிகள் திறந்திருக்கும். நிறைய பேர் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருப் பார்கள். ஏராளமானவர்களின் வீடுகள் இனிமேல் எமலோகத்தின் சித்ரவதைக் கூடமாக மாற ஆரம்பிக்கும். ஆமாம், பிஞ்சுக் குழந்தைகள் தாய், தந்தை எனும் எமகிங்கரர்களிடம் மாட்டிக்கொண்டு படப்போகும் அவஸ்தையைத்தான் சொல்கிறேன். இப்படிச் சொல்வது யாரையும் புண்படுத்தவோ, அவமானப்படுத்தவோ இல்லை.
வாழ்க்கையில் கல்வி முக்கியம்தான். ஆனால் கல்வி மட்டுமே முக்கியமில்லை. பாடம், ரேங்க், புத்தகம் எனும் பட்டயங்களைக் காட்டி குதிரையைப் போல அவர்களை ரேஸில் ஓட விடும்போது மற்றவற்றை அவர்களால் எந்த அளவு பார்க்க முடிகிறது? முதல் ரேங்க் வாங்கியவர் கள்தான் இன்று வாழ்க்கையின் முன்னுக்கு வந்திருக்கிறார்களா? இன்று பிரபலமாக அல்லது வெற்றிகரமாக இருப்பவர்கள் அத்தனை பேரும் அவர்கள் படித்த காலத்தில் முதல் ரேங்க் வாங்கி இருக்கிறார்கள்?
பிறகு எதற்கு அத்தனை அடி, உதை, சித்ரவதை! முதல் ரேங்க்கிலிருந்து இரண்டாவது ரேங்க் வாங்கி விட்டார்கள் என்பதற்காக எத்தனை குழந்தைகள் வதைபட்டுக் கொண்டிருக்கின்றன. தெரியுமா? வேண்டாம். தாய்மார்களே... நீங்களெல்லாம் தாயாகவே இருங்கள். தயவுசெய்து கிங்கரர்களாக மாறாதீர்கள்.
ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும். முதல் வகுப்பு வாங்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். அது தவறில்லை. அதற்காக அவர்களை ஊக்குவியுங்கள். தேவையில்லாமல் நேரத்தை வீணடித்தால் கண்டியுங்கள். ரொம்ப பொறுமை இழக்கும் நேரம் வரும்போது ஒரு அடி கொடுங்கள்.
தன்னுடைய தாய் பார்க்கும் ஒரு பார்வையிலேயே அந்தக் குழந்தை ஐயையோ நாம் ஏதோ தப்பு செய்துவிட்டோம் போலிருக்கிறது என்று உணர்ந்து பதற வேண்டும். அப்படி வளர்க்கும் தாயே சிறந்த தாய் என்று சொல்லுவேன்.
அதை விட்டுவிட்டு உங்கள் கணவரோடு உங்களுக்கு ஏற்படும் பிணக்கு, நாத்தனார், மாமியார் மேல் ஏற்படும் கோபம் இவையெல்லாம் தீர்த்துக்கொள்ளும் இடம் குழந்தையின் முதுகு என நினைத்துக்கொள்ளாதீர்கள்.
நம் தலைமுறையைவிட இந்தத் தலைமுறைக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்குத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. கல்வியில் நாட்டமுள்ள குழந்தைகள் இயல்பாகவே நல்ல மார்க் வாங்குவார்கள். அவர்களை நன்கு, உற்சாகப்படுத்துங்கள். இரண்டாவது ரேங்க் வாங்கிவிட்டதற்காக உங்கள் குழந்தையை நடுங்க வைக்காதீர்கள்.
நம்முடைய குழந்தைகள் நல்ல குழந்தைகள். சக மனிதர்களை நேசித்து, அந்தந்த வயதிற்கு ஏற்ற ஆடல், பாடல் அனுபவங்களைப் பெற்று, அன்பு, சிரிப்பு, மகிழ்ச்சி இவற்றை அனுபவித்து வளரச் செய்யுங்கள். அது பக்குவப்பட்டு அனைத்து நிலைகளிலும் ‘பேலன்ஸ்’டாக வளரும். இப்படிப்பட்ட குழந்தைகளே வாழ்வில் எந்தத் துறையிலும் வெற்றி பெறுகின்றன.
நம்முடைய பிள்ளைகளை நம் பிள்ளைகளாகத்தான் வளர்க்க வேண்டுமே தவிர எதிர்வீட்டு பிள்ளை, பக்கத்து வீட்டுப் பிள்ளையாக நினைத்து வளர்க்கக்கூடாது. இந்த விஷயத்தில் தாய்மார்களின் எண்ணம் நிறைய மாற வேண்டும்.