ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி

தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா?

லத்த விமர்சனங்களுக்கிடையே தமிழக அரசில் உதய நிதி அமைச்சராகியிருக்கிறார். எழும் விமர்சனக்களில் முக்கியமானது “வாரிசு அரசியல்”.

தி.மு.க.வை பொருத்தவரை, கருணாநிதி மகன் ஸ்டாலின், மு.க.அழகிரி, மகள் கனிமொழி என்று அனைவரையும் நேரடி அரசியலில் ஈடுபடுத்தினார். இவர்களின் வரிசையில் கருணாநிதியின் பேரனும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினும் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு இப்போது முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கிறார். இப்படிப்பட்ட வாரிசு அரசியல் தமிழ் நாட்டில் மட்டும் தானா?... சற்று உற்று நோக்கினால் இந்த வாரிசு அரசியல் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளிலும் இருப்பது தெரியும்.

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்தை முன்பே அரசியல் களத்திற்குள் கொண்டு வந்தார். அந்த கட்சியில் விவி ராஜன் செல்லப்பாவின் மகன் விவிவிஆர் ராஜசத்யன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், பி.ஹெச் பாண்டியனின் மகன் பிஹெச் மனோஜ் பாண்டியன் என்று பல அரசியல் தலைவர்களின் வாரிசுகள் உள்ளனர். இந்த பட்டியல் மேலும் நீள்கிறது... மற்றொரு முக்கிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியிலும் இதேநிலைதான். பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இப்போது அந்த கட்சிக்கு தலைவராக உள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வாரிசு அரசியல் பிரச்னை எழுப்பப்படும்போதெல்லாம், “வாரிசாகயிருப்பதினால் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை, தகுதி உள்ளவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன” என்று அந்த கட்சி அறிகையை வெளியிடும். ஆனாலும் வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

வாரிசு அரசியல் என்பது தமிழ் நாட்டில் மட்டுமில்லை, இந்திய அரசியல் களம் முழுவதுமே வாரிசு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியில் தொடங்கி தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. வரையிலும் அது நீண்டுள்ளது என்பதுதான் உண்மை.

அப்படியானால் , தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது

‘வாரிசுகளின் அரசியல் வரவை தடுக்க முடியாது’ ஆனால், “இன்றைய நவீன தாராளவாத சமூகத்தில், தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கூட பண பலமும் அதிகார பலமும் இருந்து, அவற்றுடன் நன்கு செயல்படும் திறனும் ஒருசேர அமைந்தால் அரசியலில் அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை மறுக்க முடியாது,” என்கிறார் ஒரு மூத்த அரசியல் ஆய்வாளார்.

இன்றைய அரசியலைப் பொறுத்தவரை, அரசியல்வாதிகளுக்கு ஒரு பின்புலம் அவசியமாகிறது. ஜனநாயகத்தில் முதலாளித்துவத்தின் பலம் வலுவாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தலில் பங்கெடுக்க அது தேவைப்படுகிறது. அது ஜாதியாகவோ, பணமாகவோ அல்லது வாரிசாகவோ இருக்கிறது.

ஆனால், அரசியலில் வாரிசாகயிருப்பதினால் மட்டுமே ஒருவர் வெற்றி பெற்றுவிடமுடியாது. தனக்கு இருக்கும் பின்புலத்தை, எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? என்பது மட்டும்தான் வெற்றியைத் தரும்.

மக்கள் வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்கிறார்களா?

இதற்கு தமிழக அரசியலில் சிறந்த உதாரணங்கள் இருக்கின்றன.

எற்றுகொள்ளபட்டதற்கு உதாரணம் உதயநிதி ஸ்டாலின்.

போட்டி மிகுந்த சமூகத்தில் தனிமனிதராக அவரிடம் இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசியலில் தனது திறமையையும் காட்டியுள்ளார். கடந்த ஓராண்டில் தன்னால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைக் காட்டி, தன்னை நிரூபித்திருக்கிறார்.

நிராகரிக்கப்பட்டதற்கு உதாரணம் அழகிரி.

கலைஞர் குடும்ப வாரிசான அழகிரி தனித்திறன் இல்லாதால் தான் பெற்ற பதவியில் வெற்றி பெற முடியவில்லை.

“ஒருவர் தலைமையின் வாரிசாக இருப்பதாலேயே வாய்ப்பு கொடுப்பது எப்படி சரியில்லையோ, அதேபோல் ஒருவர் தலைமையின் வாரிசு என்பதாலேயே வாய்ப்பை நிராகரிப்பதும் தவறு என்கிறார் தமிழ் நாட்டின் முன்னணி நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர். அவருடைய அரசியலில் விமர்சனங்கள் இருந்தால் முன்வைக்க வேண்டும். மக்கள் அங்கீகாரம் உள்ளதா, கிடைக்கும் பொறுப்புக்கு உரிய திறமை உள்ளதா, நன்றாகச் செயல்படுபவரா என்பதைத்தான் கணக்கில்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

இப்போது எழும் கேள்வி உதயநிதி ஸ்டாலின் தன் செயல்பாட்டின்மூலம் தனக்குள்ள திறமையை நீருபிப்பாரா? என்பதுதான்.

ஒரு செங்கலை வைத்துக்கொண்டு ஒன்றிய அரசின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்கியதைப் போன்ற அவருடைய அரசியல் நடவடிக்கைகள் கட்சிக்குள் கவனம் பெற்றன. மக்களின் ஆதரவைப் பெற்றது. ஆனால் அது ஒரு அமைச்சரின் நிர்வாகப் பணிகளைச் செய்ய போதாது. அவர் நிறைய கற்க வேண்டும் என்கிறார் தி.மு.க. கட்சியின் ஒரு முன்னாள் மூத்த உறுப்பினர். ஆனால், இன்றைய சூழலில் ஆர்வமும் தன்முனைப்பும் இருந்தால் எதையும் எளிதாக கற்க முடியும் எனப்தை அவர் மறுக்கவில்லை.

கற்கள் கடினமானவை. எளிதில் கண்ணாடிகளை உடைக்க கூடியது. இன்று உதயநிதி ஸ்டாலின் ஒரு கண்ணாடிக் கூண்டில் சிக்கியிருக்கிறார். இனி அவரது செயல்பாடுகள் 360 டிகிரியில் ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் கவனிக்கப்படும்.

அதை உணர்ந்து அவர் தன் செயல்பாடுகளின் மூலம் தன் தந்தை, தாத்தா ஆகியோரின் திறமைகளில் ஓரளவாவது நிருபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com