
டாக்டர் ஜேம்ஸ் பார்க்கின்ஸன்ஸ் என்ற மருத்துவர் லண்டனில் 1817-ஆம் ஆண்டு இந்நோயை முதன் முதலில் கண்டுபிடித்தார்.
இந்நோய் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். மரபு நிலையும், சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களும் இணைந்து இந்நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.
மூளையில் நியூரான் எனப்படும் செல்கள் உள்ளன; அவை டோபமைன் என்னும் இரசாயனப் பொருளை உருவாக்குகிறது. நியூரான் செல்கள் செயலிழக்கும்போது மூளையில் டோபமைன் அளவும் குறைகிறது. இந்த திரவம் குறைவதால் உடல் உறுப்புகளின் இயக்கங்களும் பாதிக் கப்படுகின்றன. மூளையில் 80% அளவுக்கு திரவம் குறைந்த பின்பே இந்நோயின் அறிகுறி தோன்றும்.
நோயின்குறிகள்:
நோயின் முதல் அறிகுறி கையில் ஏற்படும் நடுக்கம். தொடக்கத்தில் கையில் ஒரு மாத்திரையை வைத்து எப்பொழுதும் உருட்டிக் கொண்டு இருப்பது போல் (pill-rolling motion) செய்து கொண்டிருப்பார்கள். இந்த நடுக்கம் ஏதாவது ஒரு வேலை செய்யும் பொழுது நின்று விடும். தூங்கும் பொழுதும் நடுக்கம் இருக்காது. இது நாக்கை பாதிக்கும் பொழுது பேச்சும் மாறுபடும். அதாவது குறைந்த தொனியில் முணுமுணுத்துக் கொண்டெ இருப்பார்கள். இது சரியாகப் புரியவும் செய்யாது.
அடுத்து முக்கியமான பிரச்னை உடலிலுள்ள தசைகள் எல்லாம் இறுகி மரக்கட்டைபோல ஆகிவிடும். இதனால் ஓரிடத்தில் உட்கார்ந்தால் எந்தவித அசைவுமின்றி மணிக்கணக்கில் அப்படியே உட்கார்ந்து கொண்டே இருப்பார். நிற்க வைத்தாலும் அதே நிலைதான். இதனால் நடையும் பாதிக்கப்படும். தான் செய்து கொண்டிருக்கும் வேலைகளை எந்தக் காரணமுமின்றி திடீரென்று நிறுத்தி விடுவார். உதாரணம் : உடை உடுத்தும் போதும், உண்ணும்போதும்.
இந்நோயின் விநோதம் என்னவென்றால் சில சமயங்களில் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார். அதே நேரத்தில் அவரைச் சற்று தள்ளிவிட்டால் வேகமாக ஓடுவார். அதேபோல் முகத்தில் எந்தவிதச் சலனமுமின்றி எதையாவது உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பார். கண் இமைகள் படபடவென்று அடிக்கும். வாயில் எச்சில் ஊறிக் கொண்டு இருக்கும். சருமம் வழு வழுப்பாக இருக்கும். முதுகெலும்பு குனிந்த நிலையிலேயே இருக்கும்.
இதரத் தொல்லைகள்:
* உணவு விழுங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். நெஞ்சு எரிச்சலும் ஏற்படலாம்.
* உண்ணும் உணவு குறைவதாலும், போதிய வேலை இல்லாமையாலும், மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு.
* சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் சிலருக்கு ஏற்படலாம். சிறிய அளவில் சிறுநீர் அடிக்கடிப் போகத் தோன்றும்.
* உடல் இறுக்கத்தாலும், நடுக்கத்தாலும், கலோரிச் சத்து அதிகம் செலவிடப்படுவதால், உடல் எடையும் குறையும்.
* இவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படும். வெளி உஷ்ணத்தை அதிகம் தாங்கிக் கொள்ள முடியாது.
* தூக்கமின்மை ஏற்படும்.
* உணவு உண்பது, உடை உடுப்பது, குளிப்பது போன்றவற்றுக்கு மற்றவர்களைச் சர்ந்திருக்க வேண்டியிருப்பதால் மனம் சார்ந்து குடும்பத்தார் களிடமிருந்தும் தன் நண்பர்களிடமிருந்தும் சற்று விலகியே இருப்பார்கள்.
இவர்கள் மனநலமும் பாதிக்கப்படும். மனப்பதற்றம், மனச்சோர்வு ஏற்படும். சிலருக்கு அறிவுத்திறன் வீழ்ச்சியும் சார்ந்திருக்கும். இந்நோய் மெதுவாக அதிகரித்துக் கொண்டே சென்று 10 - 15 வருடங்களில் நோயாளியை படுக்கையில் கிடத்திவிடும்.
எப்படிக் கண்டறிவது?
இந்நோயை எளிதில் கண்டுகொள்ள முடியும். இந்நோய்க்கான மற்ற காரணங்களைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை, சி.டி.ப்ரெயின் ஸ்கேன் தேவைப்படலாம்.
சிகிச்சை முறை:
* இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும். இதற்கு பலவிதமான மருந்துகள் உண்டு. ஆனால், அந்த மருந்தின் பக்க விளைவுகள் சில சமயங்களில் நோயை விட அதிகமாக இருக்கும். ஆகையால் இதற்கான மருந்தை மிக்க கவனத்துடன் கொடுக்க வேண்டும்.
* நோயோடு சேர்ந்த மற்ற பிரச்னைகளுக்கும் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். (உ.ம்.) மனச்சோர்வு, மலச்சிக்கல்.
* இயன்முறை சிகிச்சை: தசைகளின் இறுக்கத்தைக் குறைக்கவும், நடைப் பயிற்சி கொடுக்கவும் இயன்முறை சிகிச்சை மிகவும் அவசியம்.
* அறுவை சிகிச்சை : மருந்துகள் மூலம் குணமடையாதவர்கள் மற்றும் மருந்துகளின் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் அறுவை சிகிச்சை மூலம் இத்தொல்லையிலிருந்து விடுபட வாய்ப்புண்டு.
நல்ல உணவு, அன்பான உபசரிப்பு, இயன்முறை சிகிச்சை மற்றும் அவ்வப்போது தோன்றும் சில சிறு பிரச்னை களுக்கு ஏற்ப சிகிச்சை வழங்குதல்... இதுவே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பத்தார் செய்யும் மிகப் பெரிய உதவி.