
திரைப்படங்களில் ஏழைப்பங்களானாக உதவும் ஹீரோக்களைப் பார்க்கிறோம். உழைப்பின், கல்வியின் அவசியத்தை போதனை செய்யும் ஹீரோக்களையும் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அப்படியொரு இளைஞர் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்...
ஒடிசாவின் கன்ஞம் மாவட்டம், பெர்ஹாம்பூரை சேர்ந்தவர் 31 வயது நாகேஷ் பத்ரோ. சிறுவயது முதல் கல்வியில் சிறந்து விளங்கிய அவர் வறுமையின் காரணமாக 11-ம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடர முடியவில்லை. குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஆலையில் 2 ஆண்டுகள் தொழிலாளியாக பணியாற்றினார். பின்னர் ஊருக்கு திரும்பிய அவர் கடந்த 2012-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். வேலை செய்து கொண்டே தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். தற்போது பெர்ஹாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பகலில் வருகைதரு பேராசிரியராக நாகேஷ் பணியாற்றி வருகிறார்.
படிக்க விரும்பியும் வறுமையினால் படிக்க முடியாமல் போன தன்னைப் போன்ற மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வசிக்கும் பகுதியில் ஏழை மாணவ, மாணவியருக்காக இலவச டியூசன் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 4 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தலா ரூ.3,000 ஊதியத்தை நாகேஷ் வழங்குகிறார். தான் கல்லூரியில் வாங்கும் 12000 சம்பளத்தில் இந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் இரவு நேரத்தில் வேறு ஒரு பணி செய்கிறார்.
அது என்ன வேலை தெரியுமா? பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்தில் இரவில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக (போர்ட்டர்) வேலை செய்கிறார். நாகேஷ். ரயில் பயணிகளின் சுமைகளை தூக்கிச் செல்வதன் மூலம் அவருக்கு ஓரளவு பணம் கிடைக்கிறது. அந்த பணத்தையும் டியூசன் சென்டரை நடத்த நாகேஷ் செலவிடுகிறார்.
ஏன் இந்த போர்ட்டர் வேலை?
எனது பெற்றோர் கூலி தொழிலாளர்கள். அனைத்து வகுப்புகளிலும் நானே முதல் மாணவனாக விளங்கினேன். ஆனாலும் வறுமையின் காரணமாக என்னால் பள்ளிப்படிப்பைகூட நிறைவு செய்ய முடியவில்லை. ஜவுளி ஆலையில் கூலி வேலை செய்தேன். அதில் கிடைத்த பணத்தின் மூலம் முதுகலை வரை பட்டம் பெற்றேன்.
“மாலையில் டியூஷன் சென்டரில் சில வகுப்புகள் எடுத்துவிட்டு, அதன் பிறகு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் சுமை தூக்கும் வேலை செய்கிறேன்” என்கிறார் பகலில் பேராசிரியராகவும் இரவில் போர்ட்டாராவும் பணிசெய்து ஆச்சரியப்படுத்தும் நாகேஷ்.