“பாபா”வின் மறு அவதாரம்.

“பாபா”வின் மறு அவதாரம்.

12.12 (டிசம்பர் 12) யார் மறந்தாலும் ரஜினி ரசிகர்கள் மறவாத நாள். அதுதான் ரஜினி பிறந்தநாள்.

‘எப்பவும் தன் தலைவன் பிறந்தநாளை அபாரமாகக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள், இந்த ஆண்டு ‘‘பழைய மாஸ் இல்லைன்னாலும், இது ஒரு புதிய மாஸ், அதுவும் பாபா மாஸ். அரசியல் பஞ்ச் எதுவும் இல்லாத முதல் பிறந்தநாள்!’’ என்று வித்தியாசமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

20 ஆண்டுகள் கழித்து இன்றைக்கும் ‘பாபா’ ரீ-ரிலீஸ் செய்யும்போது படத்தின் மீதான அந்த மவுசு குறையவில்லை. சில திரையரங்குகளில் ஒரு காட்சியை ஹவுஸ் ஃபுல்லாக்கி ரசிகர்களின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மறுவெளியீடு செய்யப்பட்ட ‘பாபா’ படத்தின் முதல்நாள் வசூல் ரூ.1.4 கோடி எனக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் ‘2.O’ வசூலை இன்றைக்கும் யாராலும் எட்ட முடியவில்லை. 4 வருடங்கள் கழித்தும் தொட முடியாத சாதனையால் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

கொடி என்ன? தோரணம் என்ன? அவர் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்ன? அவர் வீட்டின் முன்பு திரளும் ரசிகர்கள் படை என்ன திரும்பின பக்கமெல்லாம் அவர் போஸ்டர்கள் என்ன? என தூள் கிளப்பும் நாள்தான் ரஜினியின் பிறந்தநாள். அவர் இனி அரசியலில் இல்லை. பஞ்ச் வசனங்கள் எடுபடாது. அவரிடம் எதிர்பார்ப்பு ஏதுமில்லை என்ற நிலையில் இந்த பிறந்தநாள்தான் அவருக்கு முதல் பிறந்தநாள் என்று சொல்லலாம். எதிர்பாராத விதமாக கடந்த 10-ந்தேதி பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தாலும் செய்தார் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். அதிலும் புதுப்படம் எப்படி அதிகாலை நாலேகால் மணிக்கு ரசிகர் ஷோவுடன் தொடங்குமோ அதேபோல் தொடங்க, அதேபோல் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, ஒரு பழைய படம், அதுவும் 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யும்போதே எல்லோராலும் ஒதுக்கப்பட்டு பெட்டிக்குள் போன படம், அநேக நஷ்டங்களை சந்தித்த படம். இப்போதும் வெளியாகி ரஜினிரசிர்களை ஹவுஸ் ஃபுல் ஷோ ஆக்கியதென்றால் அதை என்னவென்று சொல்வது? 

‘பாபா’ படம் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் வெளியிடப்பட்ட நிலையில், முதல் நாள் ரூ.1.4கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.

தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் திரையிடப்பட்டது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப் படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'மாயா மாயா ', 'சக்தி கொடு', 'கிச்சு கிச்சு' என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு, படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. இப்படி இந்தப்படம் தமிழகமெங்கும் 10ம் தேதி வெளியாக ரஜினியின் புதுப்படத்திற்கு எவ்வளவு மாஸ் காட்டுமோ, அதே மாஸ் இதற்கும் கிடைத்திருக்கிறது. தமிழ் திரையுலகமே இதைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறது.

20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அமெரிக்கா முதல் உலகெங்கும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப்படம் முதல் நாளிலேயே ரூபாய் இரண்டு கோடி வசூலைத் தாண்டி விட்டது. இதன் பின்னணியில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் இந்தப் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுகிறார்கள். பழைய மாஸ் அப்படியே இருக்கிறதா? என்று கோவையில் உள்ள ரஜினி ரசிகரும், லித்தோ பிரஸ் உரிமையாளருமான அபுவிடம் கேட்டோம்.

‘‘அவர் என்ன ஐடியாவில் பாபாவை திரும்ப ரிலீஸ் பண்ணினார் என்று தெரியவில்லை. ஒரு வேளை இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் ஆன்மீக ரீதியாக வெளியானதால் மக்களிடம் எடுபடவில்லை. இப்போது மக்கள் பெரும்பாலும் ஆன்மீகப்பாதைக்கு திரும்பி விட்டார்கள் என்று அவர் கருதியிருக்கலாம். அதனாலேயே இதைப் புதுப்பித்து இப்படி வெளியிட்டிருக்கலாம். அவர் கணக்கு தப்பவில்லை. கோவையில் பத்து தியேட்டர்களில் படம் ரிலீஸானதில் அத்தனை தியேட்டர்களும் ரசிகர்கள் ஷோ ஹவுஸ் ஃபுல். காலை 4.15 மணிக்கு படம் என்றால் கோவை கங்கா தியேட்டருக்கும் மதுக்கரைக்கும் 15 கிலோமீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் ரசிகர்கள் வந்திருக்கிறார் என்றால் அவர் எத்தனை மணிக்கு எழுந்து வந்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் ஒரு பழைய படத்திற்கு அப்படி வரவேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.

அவர் அரசியலுக்கு வரவில்லையானாலும், அரசியல் வசனம் பேசவில்லையானாலும் அவர் மீதான அபிமானமுள்ள ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். எப்பவும் பிறந்தநாளுக்கு தலைவருக்கு 100 போஸ்டர்கள் அச்சடிக்க வருமென்றால் இப்போது அதுவே ஐம்பதாக சுருங்கியிருக்கிறது. ஆனாலும் பழைய வீரிய வசனங்கள் அப்படியேதான் இருக்கிறது. என்ன அதில் அரசியல் பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லை. அதன்படி பார்த்தால் இந்த ஆண்டுதான் அரசியலற்ற ரஜினிக்கு முதல் பிறந்தநாள்!’’ என்றார்

இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களால் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களில் அரசியல் இல்லை என்றாலும், அதில் உள்ள பஞ்ச் வசனத்திற்கும் வீரியத்திற்கும் குறைவில்லை.

சாம்பிளுக்கு சில: உன்னைப்போல் எவரையும் கண்டதில்லை; உம்மைப் போல் எம் இதயத்தில் சுமந்ததில்லை. ரஜினியத்தவிர எவனையும் தெரியாது போடா. பாபா முடிவுரைக்கும் முன்னுரை எழுதுவாய்; முன்னுரைக்கும் முடிவுரை எழுதுவாய். ஒன்றே எம் குலம்; ஒருவரே எம் தலைவர், பாரீர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com